"அருணகிரிநாதரின் திருப்புகழ்" -- 11 "சந்ததம்"
இந்த வாரம் ஒரு எளிமையான, இனிமையான, பொருள் பொதிந்த, சுருக்கமான திருப்புகழ்!
" பாடல்"
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
"பொருள்"
"சந்ததம் பந்தத் தொடராலே"
தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!
கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ
சொர்க்கம் நரகம் பூதலம் என்னும்
மூவுலகும் சுற்றிவரும்.
கயிற்றினை அறுத்துவிடின்
கட்டுகளும் விட்டுவிடும்
பசுவென்னும் ஆன்மாவும்
பஞ்ச சங்கிலி அறுந்திடவே
பரமான்வைப் பரவி நிற்கும்.
அது போல,
தொடராக வந்து நிற்கும்
கட்டிங்கே அமைவதினால்,
"சஞ்சலத் துஞ்சித் திரியாதே
"
கட்டுண்ட ஆன்மாவும்
காலா காலமும்
உள்ளம் மடிந்து
துன்பம் அடைந்து
உணர்வு மடிந்து
உழலாமல் இருப்பதற்கு,
"கந்தன் என்று என்று உற்று
உனைநாளும் கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ"
கலியாணப் பந்தலிலே
கால்கள் கட்டியிருக்கும்
குழந்தைகளும் அதைச் சுற்றி
களிப்புடனே ஆடிடுவர்
கம்பில்லா குழந்தை அங்கே
தான் சுழன்று ஆடுகையில்
தலை சுற்றிக் கீழே வீழும்
அது போல,
உயிர்களுக்கும் ஆன்மாவிற்கும்
உறுதுணையாய்க் கம்பமாய்
உறுப்பவனே கந்தனாவான்
அவன் தாளைப் பற்றியவர்
உலகின்பம் அடைய மாட்டார்.
கந்து என்றால் தறியாகும்
ஆனையைக் கட்டுதற்கு அது பேராகும்
கந்தன் என்றால் அது போன்றே
நம் கயிற்றை அவன் பிணைப்பான்.
கந்தனைக் கண்டு அவன் தாள்பற்றி
இன்பம் அடைந்திடும் வழியென்றோ?
"தந்தியின் கொம்பைப் புணர்வோனே"
திருமாலின் கண்ணின்றே அவதரித்த
அமுதவல்லியெனும் பெண்ணாளும் குழந்தைவடிவாகி
சூரனிடம் பயந்து ஒளிந்திருந்த
இந்திரன்பால் சென்றடைய விண்ணவர்கோனும்
ஐராவதமெனும் தன்யானையிடம் அதை அளிக்க
அன்புடன் துதிக்கையால் தூக்கிச் சென்று
கற்பகவனத்தினிலே ஆசையாய் வளர்த்திடவே
சூரனை வதைத்தபின்னர் இந்திரனும்
வீரனுக்கு பரிசாக கொடுத்திட்ட தெய்வமகள்
தெய்வயானையை மணம் செய்த முருகோனே!
"சங்கரன் பங்கில் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே."
உமையொருபாகம் அளித்து மகிழ்கின்ற
சிவசங்கரியின் அருங்குமரா!
செந்திலையும் கண்டியையும்
ஆள்கின்ற கதிர் வேலா,
திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை
மணந்திட்ட பெரியோனே!
-------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்
சந்ததம் = தினந்தோறும்
பந்தம் = கட்டு, கட்டுப்பாடு
சஞ்சலம் = துன்பம்
துஞ்சி = அடைந்து
கந்து+அன் = கந்தன்
கந்து = யானையைக் கட்டும் தறி
தந்தி = தந்தம் உடையதால் யானை
கொம்பு = [இங்கு] பூங்கொம்பு போன்ற தெய்வயானை
சங்கரன் பங்கு = உமை, பார்வதி, சிவனிடம் ஒரு பாகம் பெற்றவள்
சிவை பலா = உமையின் மைந்தன்
------------------------------------------------------------------------------------------------
வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
17 பின்னூட்டங்கள்:
அருமையான பாடல். முதல் முறை நான் இதனைக் கேட்டது ஜேசுதாஸ் பாடி. உள்ளம் உருகும் வகையில் பாடி இருப்பார். சுட்டி கிடைத்தால் தருகிறேன்.
SK அய்யா
பாடலுக்கு நன்றி
எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளீர்கள்..
நன்றி
//கயிற்றினை அறுத்துவிடின் கட்டுகளும் விட்டுவிடும் பசுவென்னும் ஆன்மாவும் பஞ்ச சங்கிலி அறுந்திடவே பரமான்வைப் பரவி நிற்கும். //
ஐயா...!
சைவ சமய கருத்துக்களான பசு பதி பாசம் நினைவுக்கு வருகிறது !
http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.12/
select the respective song
//தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்//
ஐங்கயிறுகளை அழகாக விளக்கியுள்ளீர்கள் sk.
ஆன்மாவைக் கட்ட ஐந்து கயிறு வேண்டும் - "நம சிவாய" என்ற பஞ்சாட்சரமோ அந்த ஐங்கயிறு!!
//கந்தன், கந்து = யானையைக் கட்டும் தறி//
ஸ்கந்தன், கந்தன் பற்றி ராகவனும் சொல்லி இருந்தார். நீங்கள் சொன்னவுடன் இன்னும் நன்றாக நினைவில் ஏறி விட்டது!
சிவபாலன் தெரியும்;
சிவைபாலன்=இன்று அறிந்து கொண்டேன்! நன்றி sk!
உங்கள் "சந்ததம்" திருப்புகழ் பாடலைப் பார்த்தவுடன்,
"சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை" - "சிந்தனை செய் மனமே" பாடலும் நினைவுக்கு வந்தது!
கன்டிப்பாகத் தாருங்கள், இ.கொ.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசு!
நன்றி.
மிக்க நன்றி, சிபா.
சிவபாலன் தெரியும்!
சிவைபாலன் தெரியுமா?
அருஞ்சொற்பொருள் இணைத்திருக்கிறேன்.
தவறாது பார்க்கவும்..
//சைவ சமய கருத்துக்களான பசு பதி பாசம் நினைவுக்கு வருகிறது //
அதனை ஒட்டியே இதுவும் அமைந்திருக்கிறது, கோவியாரே!
நன்றி.
// http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.12/
select the respective song //
சுட்டிக்கு மிக்க நன்றி, திரு. கிருஷ்ணா.
நன்றியெல்லாம் இதற்கு விளக்கம் ஏற்கெனெவே அளித்த பெரியோரையே சாரும்.
நான் வெறுமனே அதனைப் படித்து என் பாணியில் சொல்லுகிறேன்.
அவ்வளவே.
வருகைக்கு நன்றி, ரவி.
//ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!//
எஸ்கே ஐயா...!
ஐந்து கயிறு என்று சொல்லிவிட்டீர்கள்.
என்னவென்று சொன்னீர்களாயானால் அது 'திரியும்' கயிறா, உறுதியான கயிறா என்று கொள்வேன் !
எஸ்.கே. எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் இதுவும் ஒன்று. திருப்பரங்குன்றின் திருப்புகழ்!
இந்தப் பாடலைக் கே.பி.சுந்தராம்பாள் பாடியும் ஏசுதாஸ் பாடியும் கேட்டிருக்கிறார். ஏசுதாசும் நல்ல பாடகர்தான். ஆனால் பாடலின் ஆழம் தெரியாதவர். ஆகையால் இசைச்சிறப்பு மட்டுமே ரசிக்க முடியும். சுந்தராம்பாளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உள்ளம் உருகி உணர்ந்து பாடியிருக்கிறார்கள். என்னிடம் அந்த ஒலிப்பேழை இப்பொழுது இல்லை. தேடிப்பார்க்க வேண்டும்.
நல்ல விளக்கம் ஐயா. இந்தப் பாடலில் ஒரு சொற்பொருட் சிறப்பு உள்ளது. நீங்கள் அதைக் கவனியாது விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
தந்தியின் கொம்பைத்தான் சொல்கிறேன். கொம்பு என்பது ஒரு மரத்தின் கிளை. ஆக ஒரு மரம் படர்வது அதன் கொம்புகளால். அதாவது கொப்புகளால் கிளைகளா. அப்படி வெள்ளானைக்குக் கொப்பாய் இருந்து வளர்க்கக் கண்ட தெய்வானையைப் புணர்ந்தவந்தான் தந்தியின் கொம்பைப் புணர்வோனே! இல்லையா?
முருகா! முருகா! முருகா!
அதெல்லாம் சொல்லத்தானே நீங்க வரணும் என்பது, ஜி.ரா.?!!
:)
விட்டதை முடித்துக் கொடுக்க நீங்களெல்லாம் இருக்கும் போது முருகனருளால் எனக்கென்ன குறை?
மேலும், அருஞ்சொற் பொருளில் அதனைச் சொல்லியிருக்கிறேன் என நினைத்தேன்
//தந்தி = தந்தம் உடையதால் யானை
கொம்பு = [இங்கு] பூங்கொம்பு போன்ற தெய்வயானை//
நன்றி.
ஆன்மாவைக் கட்டும் ஐந்து கயிறுகளா? எவை எஸ்.கே?
நானும் பலமுறை யேசுதாஸ் பாடிக் கேட்டிருக்கிறேன். அதற்கு முன்பு புத்தகங்களிலும் ஆலய சுவற்றில் எழுதிவைத்தவற்றிலும் படித்திருக்கிறேன்.
ஆன்மா ஐந்து கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறது.
அவற்றை அறுத்து நம்மைக் கதி சேர்க்க முருகன் திருவடியை நாட வேண்டும்.
அத்ற்கும் அவன் துணைதான் வேண்டும்.
சரி, கோவியாரும் கேட்டிருக்கிறார். நீங்களும் கேட்கிறீர்கள், என்ன அந்த ஐந்து கயிறு என்று.
உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.
பஞ்ச இந்திரியங்களின் கட்டுக்குள் அகப்பட்டு துன்புறும் ஆன்மாவை ரவி[KRS] சொன்னது போல பஞ்சாக்கரத்தின் உதவியால் முருகனின் ஞானவேல் அறுக்கும், வேண்டுவோர்க்கு!.
இது ப்ற்றி விரிவாக விரைவில் எழுத உள்ளேன்.
முருகனருள் முன்னிற்கும்.
SK அய்யா,
//சிவை பலா = உமையின் மைந்தன் //
என்னுடைய பேருக்கு கூட ஒரு விளக்கமா!! நன்றாக உள்ளது.
நானும் உமையின் மைந்தன் என்பதில் தான் மகிழ்ச்சி.
//"தந்தியின் கொம்பைப் புணர்வோனே"
திருமாலின் கண்ணின்றே அவதரித்த
அமுதவல்லியெனும் பெண்ணாளும் குழந்தைவடிவாகி
சூரனிடம் பயந்து ஒளிந்திருந்த
இந்திரன்பால் சென்றடைய விண்ணவர்கோனும்
ஐராவதமெனும் தன்யானையிடம் அதை அளிக்க
அன்புடன் துதிக்கையால் தூக்கிச் சென்று
கற்பகவனத்தினிலே ஆசையாய் வளர்த்திடவே
சூரனை வதைத்தபின்னர் இந்திரனும்
வீரனுக்கு பரிசாக கொடுத்திட்ட தெய்வமகள்
தெய்வயானையை மணம் செய்த முருகோனே!//
எஸ்கே ஐயா,
ஒற்றை வரிக்கு ஒரு கதையையே சொல்லி முடிக்கிறீர்கள் ! இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
எப்படி இவ்வளவு கதைகளை நினைவு வைத்து இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறீர்கள் ?
பாடலின் பொருள் இது என்று மட்டும் சொல்லிவிட்டுச் செல்லாமல் பின்புலமாக ஒரு நிகழ்வையும் சொல்லுவதுதான் உங்கள் எழுத்தின் சிறப்பாக நான் கருதுகிறேன்.
கவிதை நடையுடன் பொருள் மாறாமல் நீங்கள் படைக்கும் திருப்புகழ் விளக்கம் திருமுருகனுக்கு தமிழமுத படையல் என்றால் மிகையல்ல.
Post a Comment