Wednesday, October 11, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 7 "விருந்தோம்பல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 7 "விருந்தோம்பல்"

"அடுத்த வாரம் வா. ஒங்க அண்ணாத்தையப் பத்தி ஒரு அதிகாரம் சொல்றேன்" என்று சொன்னதால் சற்று அதிகமான ஆர்வத்துடனேயே மன்னாரின் இடம் நோக்கி விரைந்தேன்.

"தெர்யுமே! கரீட்டா வந்துருவேன்னு! அண்ணாத்தையிப் பத்தின்னு சொன்னதும் பறந்தடிச்சுகினு வந்த்ருவேன்னு இப்பத்தான் கபாலி கையில சொல்லிக்கினே இருந்தேன். சொல்லி வாய் மூடல. நீ வந்து குதிக்கறே" என்று சொல்லி பெரிதாக சிரித்தான் மயிலை மன்னார்.

"ஆமாம் மன்னார்! ஒரு வாரம் போனதே தெரியலை. அண்ணி வேற ஊருக்கு போயிருந்தாங்க. அதனால நானும் என் அண்ணாவும் மட்டும்தான். ரொம்ப ஜாலியா இருந்தது. அண்ணியும் இருந்திருந்தா இன்னும் நல்லாவே இருந்திருக்கும். ஆனா, இது போல எங்க அண்ணனை எனக்கு எனக்கே மட்டும்னு கிடைச்சது ஒரு மறக்க முடியாத அனுபவம். ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றேன் நான்.

"இப்ப நீ சந்தோசமா இருக்கேன்ற. சரி, அது எதுனால? நீ போன நேரத்துல உங்கூட மூஞ்சி காட்டாம, இல்ல, சண்டை போட்டுக்கினு இருந்தாரு ஒங்க அண்ணாத்தைன்னு வையி. ஒனக்கு இம்மாம் சந்தோசம் வந்திருக்குமோ? நீ விருந்தாளியாப் போயிருக்கே. ஒன்னை எப்படி ஒபசரிக்கணும்னு ஒங்க அண்ணாத்தைக்குத் தெரிந்சிருக்கு. அதான் சரியான ரூட்டு. இத்தப் பத்தி, இதுமாரி, வந்தவங்களை ஒபசரிக்கறது இம்மாம் முக்கியம்னு நம்ம ஐயன் சொல்லியிருக்காரு. இன்னிக்கு அதான் பாடம். எளுதிக்கோ!" என்றான் மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.

அதிகாரம் 9. "விருந்தோம்பல்"

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. " [81]

இப்ப நீ கண்ணாலம் கட்டிக்கினு, பொண்டாட்டி புள்ளைங்களோட சம்பாரிச்சு சொத்து சேத்துக்கினு, குடியும் குடுத்தனமா இருக்கேன்னா அது எதுக்காவ? இன்னும் நாலு நகை வாங்கிப் பொட்டில வெச்சுப் பூட்றதுக்கா? இல்லை ஃபாஷனா ரெண்டு காரு வாங்கி ஊரு சுத்தறதுக்கா? அத்தெல்லாம் வோணான்ல நானு. அத்த வுட முக்கியமா நீ இன்னா பண்ணணும்னா, ஒன்னை மதிச்சு, ஒன் வூடு தேடி வர்றாங்க பாரு விருந்தாளிங்க, அவுங்களை நல்லபடியா கெவனிச்சு, வேண்டியத்தப் பண்ணி அவுங்களை சந்தோசமா பாத்துக்கறதுக்குத்தான் இதெல்லாம்.
இதுல முக்கியமா கெவனிக்க வேண்டியது ஒண்ணு இருக்கு. ரொம்ப கில்லாடியா "இல் வாள்வது எல்லாம்"னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு. நீ ஒர்த்தன் பண்ணா மட்டும் போறாது. மொத்தக் குடும்பமும் இதுல ஒனக்கு ஒதவியா இருக்கணும். அப்போதான் இது சொகப்படும். நீ மட்டும் நல்லா கவனிச்சுகினு , ஒன் பொண்டாட்டி மூஞ்சிய தூக்கி வெச்சுக்கினு இல்ல ஒன் புள்ளைங்க மாடிய வுட்டு கீளேயே எறங்கி வராம அவங்களோட பேச்சு கொடுக்காம இருந்துச்சுன்னு வையி, மவனே, அத்தினியும் ஃபணால்தான். அல்லாருமா சேர்ந்து இதுல ஒத்துளைக்கணும்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று." [82]

வந்திருக்கற விருந்தாளி ஹால்ல ஒக்காந்து டீ.வீ பாத்துக்கினு இருக்காங்க. அப்போ உள்ளேர்ந்து ஒரு கொரலு. 'என்னாங்க! ஒங்களத்தானே! ஒரு நிமிசம் இங்க உள்ளே வந்துட்டுப் போங்க'ன்னு ஒன் பொஞ்சாதி கூப்புடுது. நீ இன்னான்னு உள்ளே போறே. 'சூடா கொஞ்சம் கேசரி கெளறியிருக்கேன். ஒங்களுக்கும் பசங்களுக்கும் மட்டும். இங்கியே சாப்புட்டுட்டு போங்க. அவுகளுக்கெல்லம் பத்தாது'ன்றாங்க. நீ இன்னா பண்ணுவே! 'என் செல்லம்! ஒன்னியப் போல ஆரு என்னை கவனிப்பாங்கன்னு' கொஞ்சிட்டு அப்பிடியே லபக்குன்னு முளுங்கிட்டு பூனை மாரி டீவீ பாக்க போயிருவியா? கூடாது. விருந்தாளியா வந்தவங்க வெளில காத்துருக்கையில, நீ மட்டும் துண்றது அது தேவலோவத்து அமிர்தமே ஆனாலும் சாப்டாதே. அத்தவுட நாத்தம் புடிச்ச வேலை வேற ஒண்ணும் இல்லை.

"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. " [83]

இப்பிடி அன்னாடம் ஒங்கிட்ட வர்ற விருந்தாளிங்களை நல்லபடியா கவனிச்சேன்னா, ஒன்னோட வாள்க்கை என்னிக்கும் கெடாம இருக்கும். ஒரு கஸ்டமும் வரது ஒனக்கு. தர்மத்தோட பெருமை அது.

"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்." [84]

சந்தோசமா சிரிச்சுக்கினு வர்ற விருந்தாளியை 'வாங்க வாங்க'ன்னு கூப்ட்டு ஒபசரிக்கறவன் வூட்ல லெச்சுமி சாமி வாயெல்லாம் பல்லா சிரிச்சுக்கினு வந்து ஒக்கார்ந்துருவாளாம். ' செய்யாள்'னா தாமரை மேல இருக்கற லெச்சுமி. நம்ம ஐயன் ஒரு நாத்திகன், சாமி பூதம்லாம் கெடையதுன்னு சொல்றங்களே , அவுங்களுக்கெல்லாம் நான் எடுத்து வுடற பாட்டூ இத்தான். இன்னும் சிலது இருக்கு அத்த அப்பால பாக்கலாம். சரியா. அந்த லெச்சுமி ஒண்ணும் சும்மா உம்முன்னு வராதாம். நல்லா சிரிச்சு, மனசெல்லாம் சந்தோசமா வந்து குந்திக்குவாளாம்!

"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். " [85]

மிச்சில்னா, மீந்ததுலன்னு அர்த்தம். மிசையறதுன்னா சாப்டறது. வந்தவங்களை நல்லா வயிறார சாப்பிடப் பண்ணி, அவுங்கள்லாம் சாப்ட்டு முடிச்சபறம், மீந்ததை ஒரு குடும்பம் சாப்ட்டுச்சுன்னா, அவன் நெலத்துல வெதை போடாமலே பயிர்லாம் விளையுமாம்.
இது கொஞ்சம் அறிவுக்கு பொருந்தாத மாரித்தான், ஓவராத்தான் தோணும். அல்லாம் ஒண்ணுக்கு பத்தா மொளைக்கும்னு வெச்சுக்கணும் நாம. ஒண்ணுமே போடலேன்னாலும் மொளைக்கும்னா, ஒண்ணு போட்டேன்னா? பத்தா மொளைக்கும். ஒனக்கு ஒண்ணு போறுமா? பத்து வோணுமா? மூளை இருந்தா புரிஞ்சுக்கோ!

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு." [86]

வந்தவங்களையெல்லாம் நல்ல ஒபசரிச்சிட்டு, அவுங்கள்லாம் போனதும், கதவ அடைச்சு தாப்பா போட்டுட்டு, ரெஸ்டு எடுக்கப் போவாம, அடுத்தப்பல ஆராச்சும் வர்றாங்களன்னு காத்திருக்கறவனை பாத்து மேலே இருக்கற சாமிங்க எல்லாம் சந்தோசப்படும். ஒன் நேரம் முடிஞ்சு நீ அங்கே போறப்ப, வாய்யா நல்ல மனுசான்னு ஒனக்கு கம்பளம் விரிச்சு வரவேப்பாங்க.
தோ! இப்ப நீ இங்க வந்துருக்கே. எங்கூட பேசிக்கிட்டே 4 மசால்வடையும் டீயும்...... அத்தாம்ப்பா இங்க கெடைக்கும்,....... அத்த துண்ற! அப்பால போயிருவே. சரி இங்கனே நின்னா நமக்கு காசு பூடும்னு, நான் நவுர மாட்டேன். அட்தாப்ல, சிங்காரம் வருவான். அவனும் துண்ணுட்டுப் பூடுவான். என்னிக்காவது காசு கொடுங்கடா பாவிங்களான்னு ஒரு நா கேட்ருப்பேனா? ஒடனே பாக்கெட்டைத் தடவாதே ! ஒன் துட்டை நீயே வெச்சுக்கோ. இப்படித்தானே ஒங்க அண்ணாத்தை கெவனிச்சுக்கிட்டாரு? உண்டா இல்லையா சொல்லு? உண்டா! சரி, சரி அட்த்ததுக்கு போலாம்.

"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்." [87]

இத்த, 'இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை'ன்னு பதம் பிரிக்கணும். அப்ப்டீன்னா இன்ன அர்த்தம்? இதுக்கு இன்னா அளவு பலன் கிடைக்கும்னு சொல்ல ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு பொருளு.
இன்னா சொல்றார்னா, நீ ஒர்த்தருக்கு இன்னா அளவுக்கு பண்றியோ, அத்தப் பொருத்துத்தான் அததோட பலன் ஆயிப் போவும்.சுமாரா கெவனிச்சியா, அதுக்கு ஒரு மாரி, நல்லா கெவனிக்கறியா அதுக்கு இன்னோரு மாரியா புண்ணியம் சேரும்.

"பரிந்தோம்பிப் பற்றேற்றம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தவர். " [88]

வந்து போற விருந்தாளிகளைல்லாம் ஏனோதானோன்னு ஒபசரிச்ச்சு அனுப்பிட்டு, பொட்டியில பணத்தைப் பூட்டி வெச்சு இன்னா ஆவப்போவுது? கட்சீக்காலத்துல, இம்மாம் பணமும் ஒன்னியப் பாத்து சிரிக்கும். இன்னாடா பிரயோசனம் என்னாலன்னு. ஐயோ, இவ்னுக்கு இது செஞ்சிருக்கலாமே அவனை அங்க கூட்டிக்கினு போயிருக்கலாமேன்னு வருத்தப் படறதுதான் மிஞ்சும்.

"உடைமையும் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. " [89]

பணத்தை வெச்சுக்கிட்டு விருந்தாளிங்களுக்கு ஒண்ணும் செய்யாதவன் தான் ஒலகத்துலியே பெரிய ஏளைன்றாரு ஐயன். இது எவன் பண்ற வேலை? புத்தியில்லதவந்தான் பண்ணுவான். இப்பிடி ஒர்த்த்னைப் பார்த்தேன்னா, அவன் ஏளை மட்டுமில்ல, முட்டாளும் கூடன்னு புரிஞ்சுக்கோ.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. " [90]

அனிச்சம்பூன்னு ஒண்ணு இருக்காம். நீயோ நானோ பாத்தது கூட இல்லை. இந்த டயனோசரஸ் மாரி காணாமப் பூடுச்சுன்னு நெனைக்கிறேன். ஐயன் பார்த்திருக்காரு. சொல்றாரு. அந்தப் பூவை மோந்து பார்த்தாலே வாடிப் பூடுமாம்.
அத்தப் போல, உனக்குப் புடிக்கலேங்க்றதுக்காவ, வந்துருக்கற விருந்தாளியப் பார்த்து கேலியா ஒரு லுக்கு வுட்டேன்னு வையி; ஒடனே அவன் மூஞ்சில்லாம் சுருங்கி, ஒடம்பு குன்னிப் பூடுவான்.
அதனால சிரிச்ச மூஞ்சியா அவனை வரவேற்கணும்.

"அவ்ளோதான். இப்ப இதுமாரி ஒனக்கு ஒங்க அண்ணாத்தை வூட்லியும் ஒங்க ராசா, கீதாப்பொண்ணு வூட்லியும் நடக்கக் கொண்டித்தானே இப்ப சிரிச்சுக்கினு இருக்கே நீயி ! அதான்யா பெர்ய மன்சனுக்கு அளகு! ஒரு தேங்ஸ் சொல்லிட்டேல்ல நீ அவங்களுக்கெல்லாம்?" என உரிமையுடன் கேட்டு விட்டு,

"சரி, சரி, நான் மேல 86-ல சொன்னேன்றதுக்காவ ரோஷமா போயிறாத. நாயர்ட சொல்லியாச்சு" என்றவாறு சிரித்தான் மயிலை மன்னார்.

நானும்தான்!

23 பின்னூட்டங்கள்:

Unknown Wednesday, October 11, 2006 3:42:00 PM  

இந்த மயிலை மன்னாரு எதாவது திமுக, அதிமுக மாதிரி கட்சியில் சேர்ந்தா தமிழாலெயே எல்லாத்தையும் அடிச்சு பெரிய ஆளாகிடுவாரு போல:))

VSK Wednesday, October 11, 2006 4:03:00 PM  

அதான் தே.மு.தி.க.ல இருக்கானே செல்வன், நம்ம மன்னார்!!


ஹஹஹஹஹஹ !!!

Unknown Wednesday, October 11, 2006 4:21:00 PM  

//அதான் தே.மு.தி.க.ல இருக்கானே செல்வன், நம்ம மன்னார்!!//

ஆபிசில் களுக்கென்று சிரித்து விட்டேன் எஸ்.கே:)))

டைம்லி ஜோக்

VSK Wednesday, October 11, 2006 4:28:00 PM  

பாருங்க! உங்களால கூட இந்த இரு கழகங்களைத் தாண்டி சிந்திக்க முடியலை!
ம்ஹூம்! என்ன கொடுமை இது செல்வன்!
:))
இதான் மாறணும்!

இலவசக்கொத்தனார் Wednesday, October 11, 2006 6:15:00 PM  

ஆஹா! இம்மாம் மேட்டர் இருக்குதா இதுல? தெரியா பூடிச்சே... ஆரெல்லாம் இங்க வந்து குந்திக்கினு இதெல்லாம் பட்சிகினு போனாங்கன்னு ஒரு லிஸ்டு ஒண்ணு போட்டீன்னா நா இன்னா பண்லாமுன்னு இருக்கேன்னு சொல்றேன் கேளு.

அப்டியே இத்த பட்ச்சவன் வூட்டாண்ட அல்லாம் போயி, டீவில சொல்ற மாதிரி 'அதிகமில்லை செண்டில்மென்' நாலு நாள், நாலே நாளு நாள் தங்குனா நம்ம பொளப்பும் அப்டியே ஓடிக்கும் பாரு. இன்னா சொல்றே? நீ மட்டும் லிஸ்ட கண்டி குடு, வர்ரதுல ஒரு பங்கு உன்னாண்ட தரேம்பா....

savepozhichalur Wednesday, October 11, 2006 11:11:00 PM  

மிக நல்ல பதிவு.

VSK Wednesday, October 11, 2006 11:46:00 PM  

மன்னார் சொல்லுகிறான்,

இது மாரி அல்லக்கயில பைய இடுக்கிக்கினு வூடு வூடா போறவன் பேரு விருந்தாளி இல்ல.
அதுக்கு வேற ஒரு பேரு இருக்கு.
நம்ம கொத்தனாரு தம்பிக்கு இன்னா ஆயிருச்சி இப்ப?
வூட்ல குந்திக்கினு இருக்காரா பெஞ்சு மேல?

லிஸ்டு வோணுமாமில்ல லிஸ்டு?
வரச் சொல்லு மயிலாபூராண்டை!
நல்லா லிஸ்டு கொடுக்கறேன்.

எம்மாம் கஸ்டப்பட்டு இவ்ளோ சொல்லிருக்கேன்.
அத்தப் பத்தி ஒரு வார்த்தை காணும்.
லிஸ்டு வோணுமாம் லிஸ்டு.

என்று கொதிக்கிறான் மன்னார் !

எப்படி வசதி கொத்தனாரே?
:)

கோவி.கண்ணன் [GK] Thursday, October 12, 2006 12:11:00 AM  

எஸ்கே ஐயா!

குறள் விளக்கம் நன்றாக இருக்கிறது...!

விருந்தும், மருந்தும் 3 நாள்களுக்கு மேல் இருந்தால் நிலைமை மோசம் ஆகிவிடும் என்கிறார்களே...!

அதுபற்றி ஐயன் ஒன்றும் சொல்லவில்லையா ?

இலவசக்கொத்தனார் Thursday, October 12, 2006 12:22:00 AM  

//இது மாரி அல்லக்கயில பைய இடுக்கிக்கினு வூடு வூடா போறவன் பேரு விருந்தாளி இல்ல.
அதுக்கு வேற ஒரு பேரு இருக்கு.//

இன்னைக்கு என்னாபா ஆச்சு? இப்போதான் நம்ம சொவப்பு பதிவாண்ட போய் வரேன் அங்க என்னமோ பேரை சொல்லு ஊரை சொல்லுன்னு டபாச்சினுகிறாங்கோ. அப்பாலிகா இங்கிட்டு வந்தா நீயும் பேரு பேருன்னு கூவிக்கினு கீற, இன்னாபா நடக்குது? ஒன்னுமே பிரியல.

சரி விடு. அந்த சேசய்யர் சொன்னா மாரி ரோசாவை இன்னா சொல்லி வலிச்சா இன்னா? அது ரோசாதானே...

//நம்ம கொத்தனாரு தம்பிக்கு இன்னா ஆயிருச்சி இப்ப?
வூட்ல குந்திக்கினு இருக்காரா பெஞ்சு மேல?//

இன்னாடா நாமலும் வுடாம வூடு கட்டிக்கினேகீறோம், சும்மா இந்தாளு சுகுரா வண்டி ஓட்ட வளி சொல்லிக்கினானேன்னு கண்டுக்கினு போலான்னு வந்தா இன்னாத்துக்குப்பா இந்த டென்சனாவுரே? மெய்யாலுமே நம்மள வூட்டாண்ட இஸ்துகினு போயி சோறெல்லாம் போட மாட்டானுங்களா?

நெனச்சேன், இந்தா மாதிரி எலவச விசயமெல்லாம் இந்த தேர்தல் முடியங்காட்டி காணாத பூடுமுன்னு. சரியாத்தாம்பா கீது. ஆமா, இந்தம்மா போயி அய்யா வந்தபின்னாடி இந்த கோயிலாண்ட அன்னதானமெல்லாம் கண்டினியூவா இல்ல ஸ்டாப்தானா? கொஞ்சம் கேட்டு சொல்லுபா.

//லிஸ்டு வோணுமாமில்ல லிஸ்டு?
வரச் சொல்லு மயிலாபூராண்டை!
நல்லா லிஸ்டு கொடுக்கறேன்.//

ஏரியா தாண்டி வந்து லிஸ்டு வாங்க நா என்ன கேனையனா? சும்மா கபாலியாண்ட குட்தனுப்பு மாமே. நமக்குள்ளே இந்த சின்ன அட்சீசு கூட இல்லாங்காட்டி பின்ன இன்னாத்துக்கு மாமேன்றது மச்சான்றது?

//எம்மாம் கஸ்டப்பட்டு இவ்ளோ சொல்லிருக்கேன்.
அத்தப் பத்தி ஒரு வார்த்தை காணும்.
லிஸ்டு வோணுமாம் லிஸ்டு.//

தோடா! இவரு பெர்ரீய மொதலமைச்சரு. இவரு வாராவாரம் வந்தா வெளா நடத்தி, நீதான் ராசா சூரியன் சந்தரன்னு பாட்டெல்லாம் பாடறோம் வா. அப்டியே பாடுனாலும் நீ இன்னா வரி வெலக்கு மாரி மாமூல் வெலக்கா தரப்போற? வண்ட்டாரு பெரூசா கேல்வி கேட்டுக்கினு....

VSK Thursday, October 12, 2006 12:30:00 AM  

விருந்தாளியை எப்படி உபசரிக்கணும்னு ஒரு பதிவு போட்டா நீங்க வந்து ஏடாகூடமா கேள்வி கேக்கறீங்க எப்படி அவங்களை 3 நாளுக்கு மேல தஙகாதபடி துரத்துவது என்று!
:))
இது பற்றி நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை கோவியாரே.
:)

மேலும், இது விருந்தோம்பல் பற்றி ஐயன் சொன்னது.
விருந்து துரத்தல் என்பது பற்றி அல்ல!
அது பற்றி ஏதாவது கருத்து இருந்தால் சொல்லுங்களேன்!

VSK Thursday, October 12, 2006 12:33:00 AM  

மிக்க நன்றி, Mr.savepozhichalur .

பொழிச்சலூரைக் காக்க திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

உங்கள் புனைப்பெயர் பார்த்துக் கேட்டேன்!
:))

இலவசக்கொத்தனார் Thursday, October 12, 2006 12:52:00 AM  

வூட்டாண்ட விருந்தாலிங்கோ வந்தா, அவங்களை நேக்கா நானும் என் பேமிலியும் சேர்ந்து கவின்சிக்கணும். இந்த கவின்சிக்கரதுன்னா இன்னான்னா, ஒருத்தன் வூட்டாண்ட வரசொல்லோ வாடா வாடான்னு பல்பு போட்டா மாரி சிரிச்சுக்கினே கூப்டணும். நம்ம காட்டி காலைல ஓப்பன் பண்ணுன சோடா மாரி மூஞ்ச வெச்சுக்கினா வந்த பார்ட்டியும் டப்புனு ஆப் ஆயிடுவான்.

அப்படி வந்த பார்ட்டிக்கு, ஒன் வூட்ல இருக்குற சாமாங்கள மொதல்ல குடு. அவங்களுக்கு போக மிச்சம் மீதி இருந்தா மட்டும் நீ தின்னுக்கினு கெடா. (ஆமாம் அவுங்க மிச்சம் மீதி வெக்காம கொட்டிக்கினாங்கன்னா நான் இன்னா மேன் பண்றது?)இந்த பார்ட்டி திண்ணய காலி பண்ணிக்குனு போனா, கடைய மூடாம அடுத்த கிராக்கி மாட்டுதான்னு பாத்துகினே இருக்கனும்.

இந்த மாரி எல்லாஞ் செஞ்சேனாசொல்லோ, என் வூட்டாண்ட லெச்சுமி வந்து குந்திக்குவா, எனக்கு அல்லா புன்னியமும் வரும். எவ்ளோ புன்னியமுன்னு கேட்டாக்கோ, நான் எப்டி குடுக்கரேன்னோ அத்தே மாரி புன்னியம் வரும். இங்க மட்டும் இல்லாத அப்பீட் வாங்கிக்கினு அங்க போகசொல்லோ, நம்ம பெருசுங்க எல்லாம் நம்மள தனியா கண்டுக்கினு வாடா ராசான்னு கொரலுவுடும்.

இது மாரி செய்யாம போனே ஒங்கதி நம்ம பாலு கத ஆயிடும். அவந்தானே எப்பம்பாரு பை நிறயா முட்டாய் வெச்சுக்குனு பச்ச புள்ளைக்கு கூட குடுக்காம ரவுசு விடுவான். இப்பம் என்ன ஆச்சு? சுகர் வந்து ஒரு முட்டாய் கூட திங்க முடியாம போச்சு. வாங்கி வெச்ச முட்டாய் எல்லாம் கெட்டும் போச்சு. போகும் போது கொண்டா போக போறான்? அதான் போற வரவனெல்லாம் அவன லூசு லூசுன்னு கலாய்ச்சுக்கினேகீறான். அந்த மாரித்தான் வாத்யாரே நம்ம கையில மாட்டற பணமும். அடுத்தவனுக்கும் சேத்து செலவு செய்யாம இருந்தே, அப்டியே வேஸ்ட்தான்.

இத்ததானேப்பா சொன்னே. ஒரு வாட்டி சொன்னா பிரியாதா? என்னமோ டெஸ்டு வெஸ்டுன்னுக்கிட்டு. அவரு தாடி வெச்சுக்கினு சொன்னாராம், இவரு பீடி வலிச்சுக்கினு சொல்ல வண்டாரு. சர்தாம்பா.

ஆமா, ஒங்க வூட்டாண்ட ஆளுங்க வந்து குந்திக்கினு இருக்காசொல்ல நீ என்ன இங்க வந்து ஐடியா குடுத்துக்கினு கீற? போவியா!

இலவசக்கொத்தனார் Thursday, October 12, 2006 11:09:00 AM  

இன்னாப்பா? பதிவாண்ட வந்து கொரலு விட்டா பதிலுக்கு ரியாக்சன் தராமா இருக்கறது கூட விருந்தோம்பலுன்னு தாடிக்காரரு சொல்லிகிறாரா?

அவருதானே சொல்லிகிறாரு கற்க கசடர கற்றபின் பொஸ்தகத்தை விற்க அரைவெலைக்குன்னு. அதாம்பா, அந்தா மாதிரி எதோ ஒண்ணு, சும்மா குன்ஸா சொன்னேன். கத்துக்குடுக்கரா மாதிரி நடந்துக்கப்பா....

VSK Thursday, October 12, 2006 11:23:00 AM  

இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் மறுமொழி இட்டுவிட்டு, காலங்காலையில் வந்து 'கொரலு' இடுவது, அதுவும் குறள் பதிவில், முறையா கொத்தனாரே!
:)

உங்களுக்கு ஏற்கெனெவே பதில் உரைத்தாகிவிட்டது!
நல்ல அவசரக்காரர் போங்கள்!

VSK Thursday, October 12, 2006 11:30:00 AM  

மன்னார் என்னைப் பார்த்து சிரிக்கிறான்.
"நா இன்னா சொன்னேன்? நா கொதிச்சுப் போனதா ஒரு கொரல் விடு. அந்தாளு அத்த நம்பிக்கினு வந்து தெறமயா எளுதுவாருன்னு சொன்னேனா இல்லியா?
இப்ப இன்னா ஆச்சு பாரு.
சும்மா ரவுண்டு கட்டி குறளுக்கு விளக்கம் கொடுத்திருக்காரு.
இத்தான் போட்டு வாங்கறதுங்கறது.

அப்பப்ப ரவுசு பண்னும் அது! நீ கண்டுகாத!"

மிக நல்ல விளக்கம் கொத்தனாரே!

இராம்/Raam Thursday, October 12, 2006 11:51:00 AM  

மன்னாரு,

ஒரு வணக்கம் வச்சிக்கிறேன் உனக்கு...

அனிச்சம் மலருக்கு நீ கொடுத்த விளக்கம் சோக்கா இருத்திச்சு நைனா....:-))))

உன்னை பேட்டி எடுத்து போடுற நம்ம sk ஐயாவுக்கும் நன்றி.

Iyappan Krishnan Thursday, October 12, 2006 12:10:00 PM  

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு." [86]


-- wrong meaning SK --

VSK Thursday, October 12, 2006 12:40:00 PM  

//-- wrong meaning SK --//

இருக்கட்டுமே! இருந்தால் என்ன?
எவ்வளவு பிழைகள் இருக்கிறதோ, அதற்குத் தகுந்த மாதிரி பாராட்டுத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாமே!

:)

இலவசக்கொத்தனார் Thursday, October 12, 2006 12:53:00 PM  

வாத்தி,

//-- wrong meaning SK --// அப்படின்னு சொன்னா மட்டும் எப்படி? நீங்க உங்க விளக்கத்தை குடுங்க. அதுக்கு மன்னார் என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம். ஒரு வெண்பாவை பல பரிணாமங்களில் இருந்து பார்க்கும் போது பல வகை பொருட்கள் தோன்றுவது இயற்கைதானே. எல்லா விதமான interpretationsஉம் தெரிந்து கொள்வது நல்லதுதானே.

Iyappan Krishnan Thursday, October 12, 2006 1:59:00 PM  

"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு."


முதல்ல செல்விருந்து வருவிருந்துன்னா என்னன்னு பாக்கணும்.

இன்னைக்கு செல்விருந்துன்னா கைல "செல்" வச்சிருக்கவனுக்கோ இல்லை " செல் " ல சாப்டற களியோன்னு சந்தேகம் தான் வரும் இல்லையா ?

உங்களின் படி வருவிருந்திலேயே செல்விருந்து அடங்கி விடுகிறது. வந்தவர்கள் போகாமல் இருந்தால் அப்புறம் அவர்கள் விருந்தினர்கள் இல்லை. அப்புறம் என்ன செல்விருந்தோம்பி? வருவிருந்து? அதிகமாக தேவையில்லாமல் இரண்டு வார்த்தை உபயோகிக்க கூடாதென்பதற்காகவே எல்லாவற்றையும் ஒன்றரை வரிகளில் திணித்து அற்புதமான வெண்பாக்களை தந்த தெய்வப் புலவர், எதற்காக இப்படி சொன்னார்.. இதன் உண்மை அர்த்தம் என்ன சிந்தித்துப் பாருங்கள்..

அந்தக் காலத்தில் பலப் பெரியோர்கள் உஞ்சவிருத்தி மேற்கொண்டு இருப்பார்கள். இதுவும் தவறாகப் பிட்சை எடுப்பது என்று அர்த்தம் கொள்ளப்பட்டு வருகிறது. உஞ்சம்= பொறுக்குவது. அதாவது அறுத்த வயலில் உதிர்ந்த நெல் மணிகளைப் பொறுக்கி அதில் உயிர் வாழ்வது. இந்த வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தவர் குசேலர். அடுத்தவகை இதற்கும் சற்று மேலானது. கபோத விருத்தி. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாமலா போய் விடுவான் (அட தப்பா நினைக்காதிங்க.. இது குடிக்கிற தண்ணி தான், அடிக்கிற தண்ணி இல்லை) என்று வாழ்வது. நாளை தேவை என்று எதையும் சேமித்து வைக்காதிருப்பது.

இதை அடுத்த நிலை அகர விருத்தி எனப்படுவது. அதாவது மலைப்பாம்பு போல் அதிகம் உணவுக்கு என்று நகர்ந்து போகாமல் தன்னை நாடி வரும் உணவை உண்பது. இந்த வகை சார்ந்த பெரியோர்கள் அவர்கள் விருப்பம் போல் பல இடங்களுக்கு யாத்திரையாய் சென்று கொண்டே இருப்பார்கள். உணவு வேண்டும் என்று யாரிடமும் யாசிப்பவர்கள் இல்லை இவர்கள். நம்மை தேடி வராமல் அவர்கள் விருப்பம் போல் சென்று கொண்டே இருப்பவர்கள். இந்த வகையில் வாழ்ந்தவர் பட்டினத்தார்.

இல்லறத்தான் வீட்டிற்கு வந்து விருந்துண்பவர்களோடு மேற்சொன்னது போன்ற பெரியோர்களையும் சேர்த்து உபசரிக்க வேண்டும். அது அவனின் தலையாயக் கடமை.

"வாசல் தாண்டி வாராப் பிச்சைக்கு இங்கு ஆசைப்படுவதில்லை அய்யனே" என்கிறார் பட்டினத்தார்.


http://iyappan.blogspot.com/2004/12/kaathodu-thaan-naan-pesuven-2.html

அன்புடன்
ஜீவா
இவர்களைத்தான் செல்விருந்து என வள்ளுவர் குறிப்பிட்டார் என்பது வாரியார் கருத்து. எனக்கும் இது தான் சரின்னு படுது.

VSK Thursday, October 12, 2006 2:27:00 PM  

அப்படி ஒரு விளக்கமும் படித்திருக்கிறேன், ஜீவ்ஸ்.

அதற்காக மன்னார் சொன்னது தவறு என்று எப்படி சொல்ல முடியும்?

வாரியார் அது போல ஊர் ஊரா போறவர். அதனால் அப்படி ஒரு உதாரணம் சொன்னார்.

மன்னார் கடைமுனையில் நின்றுகொண்டு, போற, வர்ற நண்பர்களை உபசரித்து அனுப்புபவன். அவன் இப்படி சொல்லுகிறான்.
:))

பொருள் மாறியதாக எனக்குத் தோன்றவில்லை.

நல்ல விளக்கத்துக்கு நன்றி.

குமரன் (Kumaran) Friday, October 13, 2006 4:11:00 AM  

எஸ்.கே. விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டுன்னு சொல்றாரே; இங்கே வேளாண்மைன்னா என்ன?

செய்யாள் என்றால் அது இலக்குமியாகத் தான் இருக்க வேண்டுமா? வேறு தெய்வமாகவோ வேறு ஏதாவது உருவகமாகவோ இருக்கலாமே என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வேறு என்ன என்று தெரியவில்லை. அது வரை வள்ளுவர் காலத்திலேயே இலக்குமியை வழிபட்டிருக்கிறார்கள்; அவளை செல்வத்தின், மங்கலத்தின் அதிபதியாகக் கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேன்டியது தான். ஆக இலக்குமியும் சங்க கால தமிழ்க்கடவுள் தான். இல்லையா? :-) (இராகவனின் கவனத்திற்கு)

நல்விருந்து வானத்தவர்க்கு – ஆக சொர்க்கம் என்ற நம்பிக்கையும் வானத்தில் தெய்வங்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையும் வள்ளுவர் காலத்தில் இருந்திருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது வடக்கிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் தெற்கிலும் ‘வானத்தவர்’ என்று பன்மையில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இங்கேயும் பல தெய்வ வணக்கம் இருந்தது புலப்படுகிறது.

இனைத்துணைத்து என்பதொன்றில்லை குறள் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் விளக்குங்கள். வேள்விப் பயன் என்றும் வந்திருப்பதால் ஆர்வம் அதிகமாகிறது. வேள்வி என்பது வடக்கிலிருந்து வந்ததாயிற்றே. அதனைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்?

பரிந்தோம்பி குறலும் புரியவில்லை. விளக்குங்கள்.

ஆக மடவார் என்பது இங்கே பெண்களைக் குறிக்கவில்லை. முட்டாள்களைக் குறிக்கிறது. நன்று.

VSK Friday, October 13, 2006 11:26:00 AM  

'வேளாண்மை' என்பதை வேள் ஆண்மை எனப் பிரிக்கலாம்.

வேள் என்பது உயர்த்தலை, வளர்த்துவதைக் குறிக்கும்.

கந்தவேள் என்பதைக் கவனிக்கவும்.

இங்கு வேளாண்மை என்பது உதவி செய்தல் என்னும் பொருளில் வருவதாக இருக்கிறது.
நிலத்திற்கு உதவி செய்து அது வளரச் செய்வதும் வேளாண்மை என்பது இப்போது விளங்கும்.

நெய் ஊற்றி ஒரு தீயை வளர்த்து அதனை மந்திரங்களால் உருவேற்றி மேலும் வளரச் செய்வதால் தான் அதற்கு வேள்வி என்று பெயரும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.



செய்யாள் என்னும் சொல்லை இலக்குமி என்னும் பொருளில் வேறொரு இடத்திலும் வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்" [167]

அழுக்காறு[பொறாமை] உடையவனை திருமகள் வெறுத்து ஒதுக்கி, கூடவே தன் சகோதரியான மூதேவியிடமும் காட்டிக் கொடுத்து விடுவாளாம்!

எனவே இங்கு செய்யாள் [தாமரை மலரில் வாசம் செய்பவள்] இலக்குமி எனப் பொருள் கொள்க!


'இனைத்துணைத்து'== இன்ன அளவினது,
'என்பது ஒன்றில்லை',== 'என்ற சொல்ல முடியாது;
'விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்'= விருந்தினரை நாம் எவ்வண்ணம் உபசரிக்கிறோம் என்பதன்; தகுதி குறித்து அது அமையும்.

என்று வருகிறது.

இதனை ஒரு கடமையாக நினைக்காமல் ஒரு வேள்வி எனச் செய்தல் வேண்டும் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.

விருந்தினரை சும்மா ஒரு பேருக்கு, 'வந்தியா, வா! போய் கொட்டிக்கோ என்று சொல்லுவதும் ஒரு வகையில் உபசரிப்புதான்.

ஆனால் அது அவர்களை அனிச்சம்பூ மோப்பக் குழைவது போல, வாட்டிவிடும் என்பதால், மலர்ந்த முகத்துடன், 'முகன் அமர்ந்து' உபசரிக்க வேண்டும் எனச் சொல்லுகிறார்.

உங்கள் 'வேளாண்மை' கேள்விக்கும் இதில் பதில் இருக்கிறது!

கடைசியாக, 88!
இதிலும் வேள்வி வருகிறது!!

விருந்து ஓம்பி வேள்வி தலைப் படாதவர்
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர்

அன்புடன் உபசரித்து, அதனால கிடைக்கக்கூடிய இன்பமெனும் பயனை அடையாதவர்கள், [அதனைச் செய்யாமல், பணம் செலவழிந்து விடுமே என்று அஞ்சி பெட்டியில் பூட்டி வைத்து சேர்த்து வைத்துக் கொண்டிருந்தால், கடைசிக் காலத்தில் அந்த பூட்டிய பெட்டியைப் பார்க்கும் போதெல்லாம், அது நம்மைப் பார்த்து ஏள்னமாகச் சிரித்தல் கண்டு,] ஐயோ, அப்போது செய்ய வேண்டிய நல்ல செயலாகிய விருந்தோம்பல் எனும் யாகத்தைச் செய்து புண்ணியம் சேர்க்காமல் போனோமே என வருந்துவார்கள்.

வேள்வியின் பயன் புண்ணியம்.
விருந்தோம்பலும் ஒரு வேள்வியே, யாகமே, அதனாலும் புண்ணியம் வந்து சேரும் எனச் சொல்லியிருக்கிறார்.

இதெல்லாம் மயிலை மன்னார் சொன்னதுதான்!
'நான் மொதல்ல சொன்னது மதுரை தம்பிக்கு புரியலை போல! அதுனால, இத்தெல்லாம், உன் நடையில மாத்தி எளுதிப் போடு' என்றான்.

நீங்க அவனை இதையெல்லாம் கேட்டதில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி!

மற்ற கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி சொல்லச் சொன்னான்!

ரொம்ப நன்றி, குமரன்!

//ஆக மடவார் என்பது இங்கே பெண்களைக் குறிக்கவில்லை. முட்டாள்களைக் குறிக்கிறது. நன்று//

இதில் ஒண்ணும் உள்குத்து இல்லையே, குமரன்?!!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP