"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" "வான் சிறப்பு"
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- "வான் சிறப்பு"
"நான் கொஞ்சம் அவசரமாப் போகணும். சும்மா உன்னைப் பார்த்து நாளாச்சேன்னு வந்தேன்" என்றேன் மயிலை மன்னாரிடம்.
"அதான் கானடால்லாம் போயிட்டு அண்ணாத்தையெல்லாம் பாத்துட்டு வந்தியே! அத்தப் பத்தி ஒங்கூட பேசலாம்னு பாத்தா வந்தவொடனியே ஓடறேன்ரியே! இன்னா சமாச்சாரம்?" என்று முறைத்தான் மன்னார்.
"தப்பா நெனச்சுக்காதே மன்னார். நம்ம சிறில் வந்து ஒரு தலைப்பைக் குடுத்து ஏதாவது எழுதுங்கன்னு சொல்லியிருக்காரு. அதைப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும். இன்னொரு நாள் சாவகாசமா வந்து எல்லா விஷயமும் சொல்றேனே" என்று நழுவ முயற்சித்தேன்.
விடுவானா மன்னார்!
அப்டி இன்னா ஒரு தலப்பு? சொல்லு!" என்றான்.
'மழை' என்கிற தலைப்பில் கதையோ கவிதையோ எழுதணுமாம். எனக்கு ஒண்ணும் தோணலை. அதான் இப்படியே கொஞ்சம் பீச் பக்கம் காலார போனா எதனாச்சும் தோணாதா என்று போகிறேன்" என்றேன்.
"ப்பூ! இதுதான் விசயமா? இதுக்கா இப்டி பம்மிக்கினு கெடக்கே நீ?" என்று சற்று ஏளனமாகப் பார்த்துவிட்டு,"அதான் நீ வயக்கமா ஒரு அய்யன் பதிவு போடுவியே அதுலியே போட்றவேண்டியதானே! அத்த வுட்டு இன்னாமோ சொணங்கிக்கினு கீறியே! ஒரு தனி அதிகாரமே நம்ம அய்யன் இத்தப் பத்தி எளுதியிருக்காரு தெர்யுமா?" என்று மிதப்பாகப் பார்த்தான் என்னை.
"அப்படியா! இது நல்ல யோசனையாய் இருக்கே! என்னன்னு சொல்லு கேட்போம்." என்று அவசர அவசரமாக தாளையும் பேனாவையும் எடுத்தேன்.
"ரொம்ப தூரம் போவ வேணாம்! ரெண்டாவது அதிகாரத்துலியே இதத்தான் சொல்லியிருக்காரு அய்யன். பேரு வான் சிறப்பு. எளுதிக்கோ. ஒனக்கு ஒண்ணுன்னா நா வுட்ட்ருவேனா கண்ணு" எனச் செல்லமாக சீண்டினான் மயிலை மன்னார்!
இனி வருவது குறளும் அதற்கு அவனது விளக்கமும்.
"அதிகாரம் 2 "வான் சிறப்பு"
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. [11]
இப்போ நீ இருக்கே. நானும் இருக்கேன். ஆனா, நாளைக்கி நீயோ நானோ இருப்போம்னு சொல்ல முடியுமா? முடியாது இல்லியா? ஆனா, இந்த தேவர்னு சொல்றாங்களே , மானத்துல இருக்காங்கன்னு சொல்வாங்களே அவனுங்கல்லாம் ஏதோ அமிர்தம்னு ஒண்ணைக் குடிச்சிருக்காங்களாம். அதனால சாகாம இருப்பாங்களாம். ஆனா, நீயோ, நானோ, இல்லை இந்தா நிக்கறானே கேப்மாரி, கண்ணாயிரம், இன்னும் அல்லாரும் அப்டி இருக்க மாட்டோம். செத்துப் போயிருவோம். ஆனா, இந்த ஒலகம் சாகுமா? சாவாது. ஏன்னா நீ போனா ஒன் புள்ளைங்க, அது மாரி இன்னும் எத்தினியோ பேரு இருந்துகினேதான் இருப்பாங்க. அதனால இந்த ஒலகம் சவறதிக்ல்லை. அது ஏன்னு கேளு. ஏன்னா, மளை எப்பவும் தவறாம பெஞ்சுகினே இருக்கறதாலத்தான் அல்லா உசுரும் வாளூது. அதனால நமக்கெல்லாம் அமிர்தம் எதுன்னா இந்த மளைதான். அப்டீன்னு சொல்றாரு இதுல. அந்த மளைதான் மானத்துலேர்ந்து அமிர்தமாக் கொட்டுதாம்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை. [12]
இன்னாடா துப்பாக்கின்னு அல்லாம் சொல்றாரேன்னு மயங்காதே. துப்பார்க்குன்னா, சாப்ட்றவனுக்குன்னு அர்த்தம்.
துப்பாய துப்பாக்கின்னா, நல்ல பதார்த்தத்தை உண்டுபண்ணின்னு பொருளு. இன்னா சொல்றார்ன்னா, மளை இல்லாம பயிர் பண்ண முடியாது. சமைக்கறதுக்கும் தண்ணி வோணும். அப்பப்ப விக்கிச்சின்னு வையி, அதுக்கும் இந்த தண்ணிதான் வோணும். அப்டி அல்லாத்துக்குமா இருக்கறதுதான் மளையாம்.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. [13]
பெய்ய வேண்டிய நேரத்துல மளை பெய்யலைன்னு வெச்சிக்கோ, மவனே, இன்னாதான் இம்மாம் பெரிய கடல் இந்த பூமியை சுத்தி இருந்தாலும், அவன்/அவன் பசி பட்டினின்னு துடிச்சிப் பூடுவானாம்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். [14]
காலாகாலத்துல மளைங்கற பெரிய பொதையலு பெய்யலேன்னு வெச்சுக்கோ, நிலத்த சாகுபடி பண்ற எவனும் இந்த ஏரு, கலப்பை இத்தெல்லாம் எட்த்துக்கினு வயவெளிக்கு போவமாட்டானாம். மளை இல்லாட்டி இன்னாத்த பயிரு பண்றது? நீயுந்தான் இன்னாத்த சாப்ட்றது?
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [15]
மளை பெய்யலேன்னா அத்தினி பேரும் காலி. ஒரு வருசம் மளை இல்லேன்னு வெச்சுக்கோ, அவ்ளோதான், அவன்அவன் ஐயோ அம்மான்னு துடிச்சிப் போயிருவான். அடுத்த வர்சமே போட்டு ஒரு தாக்கு தாக்கிச்சின்னு வையி, அல்லாரும் ஆகா ஓகோன்னு கூத்தாடுவான். இப்டி ரெண்டையும் செய்யக் கூடியதுதான் இந்த மளையோட பெருமை.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. [16]
மானத்துல மேகம் தெரண்டு 'சோ'ன்னு மளை பெய்யாங்காட்டி, இந்த நெலத்துல ஒரு புல் பூண்டு கூட தல தூக்க முடியாது, தெரிஞ்சுக்கோ!
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். [17]
மளை எங்கேர்ந்து வருதுன்றே? கடல் நீரு ஆவியாகி, அது மேகமாயி, திருப்பியும் அந்தக் கடலுக்கே மளையாத் தருது. அப்டி தர்றதுனால்தான் கடல்ல இத்தினி முத்து, பவளம் மீனுன்னு பலதும் நமக்கு கிடைக்குது. அப்டி இல்லைன்னா, கடல்ல இருக்கற செல்வம்லாம் குறைஞ்சு போயிடும்.அய்யன் இதுல ஒரு பெரிய தத்துவம் சொல்லியிருக்காரு.
நம்ம சிவக்குமாரு தம்பி இந்த பொருளாதாரத்தைப் பத்தி ஒரு தொடரு எளுதிக்கினு இருக்காரே, அவருக்கு இது புரியும். சும்மா பணத்த பெட்டிலியே பூட்டி வெச்சா அது எதுக்கும் ஒதவாது. எடுத்து வெளியே வுடணும் அப்போதான் அது ஒண்ணுக்கு பத்தாகும். அது மாரித்தான், கடல் தண்ணியே திருப்பியும் மளையா வந்து ஒண்ணை பத்தாக்குதாம்! புரியுதா?
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. [18]
தை பொறந்தா பொங்கலு, ஆடி மாசம் கூளு ஊத்தறது, பொம்மைக்கொலு வெச்சு ஆடிப் பாடறது, தீவாளி, ரம்ஜான், கிரிஸ்துமஸுன்னு சும்மா மாசா மாசம் கொண்டாடரோமே, நோட்டு புஸ்தவத்த எடுத்துக்கினு டொனேசன் வசூல் பண்ண வந்துருவாங்களே, அது அத்தினியும் நின்னு போயிரும், இந்த மளை பெய்யலீன்னா. அப்புறமா அல்லா சாமிக்கும் வெரும் தட்டுதான். பூசையும் கிடையாது. பண்டிகையும் கிடையாது! அல்லாத்துக்கும் மளைதான் துருப்பு சீட்டு மாரி!
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். [19]
மேல சொன்னேனே அது போல, ரசீது புஸ்தவத்தை எடுத்துக்கினு எவனாவது வந்தான்னா நீயும் நானும் இன்னாத்தை குடுக்கறது, இங்கியே பஞ்சம் அவுத்துப் போட்டுக்கினு ஆடிச்சின்னா? போடா போக்கத்தவனேன்னு வெரட்டி வுட்ருவோமில்ல? மளை பெய்யலேன்னா தானமாவது, தருமமாவாது? ஒண்ணும் கெடையாது. அல்லாம் நின்னு பூடும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. [20]
அவன் எந்த ஊரு ராசாவா இருந்தாலும் சரி, தண்ணி இல்லேன்னா அவன் ஆட்சி காலி. பெரிய அரசியல் தத்துவத்தை சர்வ சாசாதாரணமா அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டே இருக்காரு நம்ம அய்யன். அதேபோல, காவேரி, கொள்ளிடத்துல தண்ணி வந்துக்கினே இருக்கணும்னா, மளைன்னு ஒண்ணு பெஞ்சாத்தான் கண்ணு....... தெரிஞ்சுதா, மளையோட அருமை.
என்று மூச்சு விடாமல் முடித்தான் மன்னார்.
"போ! போயி இத்த ஒங்க சிறில் அண்ணாத்தைகிட்ட நான் குடுத்தேன்னு சொல்லு" என்று சொல்லி, இனிமே நீ எங்கே பீச்சுக்கு போறது? பேசாம நம்ம நாயர் கடை டீ, மசால் வடையைத் துன்னுட்டு வூடு போயி சேரு. அடுத்த வாரம் வா. ஒங்க அண்ணாத்தையப் பத்தி ஒரு அதிகாரம் சொல்றேன்" என்று நாயரை நோக்கினான் மயிலை மன்னார்.
நாம் வந்த வேலை இவ்வளவு சுளுவாய் முடிந்து விட்டதே என அன்புடன் அவன் தோளில் கை போட்டு, மசால் வடையைச் சுவைக்கலானேன்!
14 பின்னூட்டங்கள்:
எஸ்கே ஐயா...!
மழையின் சிறப்பை அற்புதமாக சொல்லியிருக்கிங்க மன்னாரும் நீங்களும்.
எனக்கு புடிச்சது இது...! //அதனால நமக்கெல்லாம் அமிர்தம் எதுன்னா இந்த மளைதான்//
நானும் கூட ஆகாய தீர்த்தம் என்று கவிதையில் சொல்லியிருப்பது நினைவு வருகிறது.
பாராட்டுக்கள் !
முதலில் வந்து பாரட்டியதற்கு மிக்க நன்றி, கோவியாரே!
இன்னா நைனா இது, தமிளில கொரலு வுட்டாலே திடறான், நீ இன்னாடான்ன சும்மா துப்பாக்கி குண்டுன்னுகிட்டு. வந்து வாரிக்குனு பூடப்போறான். சாக்கிரதையா இரு மாமு.
அத்தெல்லாம் விடு. நான் கூட ஒரு கொரள் வெளக்கம் சொல்லிக்கிரேம்பா, அத்தப் பத்தி கூட நீ சொல்லின்கீறயா அதான் நம்ம ஸ்டோரி கூட சொல்லிக்கினு போவலாமுன்னு வந்தேன்.
//விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. [16]//
இதோ கீது பாரு, இத நம்ம பக்கத்து வீட்டாண்ட ஒரு கயித படிச்சிக்கினு இருந்துதா, நமக்கு இன்னா பிரிஞ்சிது தெரியுமா?
ஒரு பசு மட்டும் வந்தாங்காட்டி வெச்சுக்கோ இந்த புல்லு எல்லாம் தலை கூட காட்ட முடியாது பூடும். அத்த மாதிரி விசும்பலோ அயுகையோ கண்ணுல தண்ணியோ மட்டும் வந்துச்சு, மவனே நீயும் அந்த புல்லு மாதிரி அப்பீட்டு. தல கூட வெளிய காட்ட முடியாது. கேர்புல் ராசா.
இத்தத்தான் அந்த தாடிக்காரர் சொல்லிக்கிராருன்னு நினச்சேம்பா. நீ என்னவோ படா சோக்கா சொல்லிக்கீற போ.
அய்யே தாடிக்காரருன்னு நான் நம்ப சிம்பு அப்பாவ சொல்லலபா, அந்த அய்யா அய்யான்னு கூப்படராங்களே அவரு சொன்னேன். என்னாது, அய்யான்னு தமில பாதுகாக்கராரே அவுரா. சர்தாம்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரல. வுடரேன் ஜூட்.
கடவுள் வாழ்த்தில் ஆரம்பித்த வள்ளுவர் பெருந்தகை 54 வது அதிகாரத்தில் ஊழ்வினையைப் பற்றி ஒரு தனி அதிகாரம் எழுதி அறத்துப்பாலை முடித்தார்.
மழை அதிகாரத்தை அவர் 2வ்து அதிகாரமாக வைத்ததற்குக் காரணமே கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகமாகப் போற்றவேண்டியது மழையைத்தான் என்று சுட்டிக்காட்டவேதான் என்று இந்தச் சிற்றடியவனின் எண்ணம்
அது சரிதானா என்று உங்கள் நண்பர் மன்னாரிடம் கேட்டுவிடுங்கள் அய்யா!
ரவுசு வுடரதுக்கும் ஒரு இல்லாங்காட்டியும்!
ஆர்ட்டே வந்து ரவுசு வுடறதுன்னு தெரிஞ்சுக்கினு வுடணும்மா.
பக்கத்து வூட்டுல ஒரு கயித ந்னு சொன்னதுமே ஒன் பவுசு தெரிஞ்சு போச்செ!
மொதல்ல தப்பு தப்பா புரிஞ்சுக்கறத வுடு கண்ணு!
விசும்புன்னா அளுதுக்கினே விசும்பறது இல்லை.
விசும்புன்னா மேகம்
மேகத்துலேந்து தண்ணி வரல்லேன்னா, ஒரு புல் பூண்டு கூட மொளைக்காதுன்னுதான் அய்யன் சொல்லியிருக்காரு.
அவரைப் போயி தாடிக்கார்ன், அய்யான்னு சொல்லி இருக்கியே.
வா! இந்தப் பக்காம் வராமலியேவா பூடுவே!
அப்ப வெச்சுக்கிறேன் 'கச்செரி'!
மன்னிக்கவும், கொத்தனாரே!
உங்கள் மறுமொழியை மன்னாரிடம் காட்டினேன்.
அவன் சொன்னதை அப்படியே பதியச் சொல்லி உத்தரவு போட்டு விட்டான்!
:)
ஆசிரியர் ஐயா சொன்னால் தவறாக இருக்கக் கூடுமோ.?
நீங்கள் சொன்னது முற்றிலும் சரி
என்று மிகவும் மனமகிழ்ந்தான் மன்னார்.
"நீர் உயர வரப்புயரும்!"
மிக்க நன்றி ஐயா!
அமிழ்தம் சாப்பிடுவதால் உலகம் அழியாமல் இருக்கிறது என்ற உருவகம் அருமை. இதுவரை இப்படிப் படித்ததேயில்லை.
//அப்டி இல்லைன்னா, கடல்ல இருக்கற செல்வம்லாம் குறைஞ்சு போயிடும்.//
தத்துவ ரீதியாக புரிகிறது. உருவகத்தில், எப்படி நீர் ஆவியாகா விட்டால் கடலில் செல்வங்கள் குறையும்.
அன்புடன்,
மா சிவகுமார்
ரொம்ப நாள் கழிச்சு விகடன் எடுத்துப் பார்க்கறேன், நம்ம மன்னாரு மாதிரியே ஒருத்தர் அங்கே சென்னைத் தமிழ்ல குறளுக்கு விளக்கம் சொல்லீட்டு இருக்காரு நீங்க ரொம்ப நாளா இதைப் பண்ணீட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களைப் பார்த்துதான் விகடன்ல இப்போ போட்டுட்டு இருக்காங்களா தெரியல.
ஆனா விகடன் விளக்கம் நம்ம மன்னார் அளவுக்கு இல்லை.
மிக்க நன்றி, மா. சிவகுமார்.
நான் அதை தத்துவமாகச் சொல்லவில்லை.
இயல்பியல் வழக்கிலேதான் சொல்லியிருக்கிறேன்.
சுழற்சி, மறு சுழற்சி என்ற வகையில், உருவகமாகவும், கடல் நீர் அப்படியே இருந்தால், அதன் வளம் குன்றித்தான் போகும்.
நிலத்தை உழவன் ஆண்டுதோறும் புரட்டிப் போடுதல் போல, இந்த நீர் ஆவியாகி, மேகமாகி, மீண்டும் மழையாகி, அமிலங்களையும், தாதுப்பொருட்களையும் கொண்டு கடலில் சேர்ப்பதால், செல்வம் வளர்கிறது; இல்லையெனில் குறைந்து கொண்டே போகும் என்னும் கருத்தில் சொல்லியிருக்கிறேன்.
உங்களைச் சுட்டிக் காட்டிய குறளில் இருந்தே ஒரு வினாவை எழுப்பி உங்கள் அடக்கத்தை மேலும் காட்டியிருக்கிறீர்கள்!
வாழ்த்துகள்!
அப்படியா?
நான் இன்னும் பார்க்கவில்லை அதை.
நன்றாக இருக்கிறது எனப் பாராட்டியதற்கு நன்றி, திரு.குமரன் எண்ணம்
//ரொம்ப தூரம் போவ வேணாம்! ரெண்டாவது அதிகாரத்துலியே இதத்தான் சொல்லியிருக்காரு அய்யன்.//
:)
தோஸ்த் ரொம்ப நாள் ரெஸ்ட் எடுத்துக்கீனு வந்திருக்காப்ல..இந்தவாட்டியும் எப்பவும் போல கலாசிட்டாப்புல...
என் நன்றியை சொல்லிடுங்க எஸ்.கே ஐயா ;)
விகடன் குறித்து உங்க கிட்ட சொல்லனும்னு குறள் விளக்கப் பதிவுக்கு காத்துக்கிட்டிருந்தேன்...குமரன் முந்திவிட்டார் ;)
பாருங்களேன் கப்பி.
அது யாராவது மன்னார் சிஷ்யப்புள்ளையா இருக்கும்னு நினைக்கிறேன்.!
:))
மன்னாரின் விளக்கங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன எஸ்.கே. அதிலும் முதல் பாவிற்குச் சொன்ன விளக்கம் சிறப்பிலும் சிறப்பு.
'துப்பு' என்றால் உணவு, நல்ல என்று இரு பொருள் உண்டா? அதற்கு தூய்மை என்றொரு பொருளும் உண்டல்லவா?
வாரி என்றால் கடல் என்றிருந்தேன். வாரி என்றால் புதையல் என்றொரு பொருளும் உண்டா?
எழிலி என்றால் மேகமா? அது காரணப்பெயர் என்றால் பெயர் விளக்கம் சொல்லுங்கள்.
ஒழுக்கு என்றால் என்ன?
ஹிஹி இன்றைக்குக் கேள்வி கேட்கும் மன நிலை போலும். வெறும் கேள்விகளாகவே வருகின்றனவே. :-)
'நல்ல' என்ற சொல்லை, 'தூய்மை, உணவு' என்ற பொருளில் தான் சொல்லியிருக்கிறேன், குமரன்.
சொன்னவன் மயிலை மன்னார் என்பதை நினைவில் கொள்ளவும்!
உணவு, என்பதை பதார்த்தம் என்றும், தூய்மை என்பதை'னல்ல' என்றும் அவன் சொன்னதை எழுதினேன்!
தூய்மையான சட்டை என்பதை நல்ல சட்டை என்ற பொருளிலும் சொல்வார்கள் அல்லவா?
அடுத்து, 'வாரி' என்னும் சொல் 'நிறைய உள்ள ஒன்றைக்' குறிக்கும்.
மற்றெல்லா இடங்களை விடவும் கடலில் நீர் அதிகம் இருப்பதால் அதை வாரி என்று சொல்வார்கள்.
அதே போல் நிறைய செல்வம் உள்ளவனால் தான் 'வாரி வாரிக்' கொடுக்க முடியும்.
சாதாரணமாகச் செய்தால் அது அபிஷேகம்.
அதையே குடம் குடமாகச் செய்தால் அது தீர்த்தவாரி.
அது போல ஒரே நேரத்தில் நிறையச் செல்வம் வந்தால் அது புதையல் தானே!
அந்தப் பொருளில் மன்னார் சொல்லியிருப்பான் என நினைக்கிறேன்!
அடுத்து, சாதாரணமாக இருப்பவரை விட சற்று அழகு 'எழும்பி நிற்பவரை' எழில் மிகுந்தவன்/ள் என்று சொல்லுவோம் இல்லையா?
அது போல எது எழும்புகிறதோ அது எழில்.
இங்கு கடலில் இருந்து நீர் ஆவியாகி எழும்பி மேலே செல்வதால் அது எழிலி என்று நீங்கள் சரியாகச் சொன்னது போல எழிலி என்று வள்ளுவரால் சொல்லப் பட்டிருக்கிறது.
ஒழுக்கு என்றால் தொடர்ந்து வருவது.
ஆற்றில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்தால் அது ஒழுக்கு எனப்படும்.
விட்டு விட்டு வருவது சொட்டு.
அதுவே தொடர்ந்து விடாமல் சொட்டிக் கொண்டிருந்தால், ஒவ்வொரு சொட்டும் சேர்ந்து ஒழுக்கு ஆகிறது.
ஓட்டை வீட்டில் மழை அப்பப்போ சொட்டும் அல்லது ஒழுகும்!
மழை காரணமாக ஆற்றில் இடைவிடாது நீர் வருவதால் அதை ஒழுக்கு என விளித்தார்.
எனக்குத் தெரிந்தத அளவில் சொல்லி இருக்கிறேன்.
தெரிந்தவர்கள் வந்து திருத்துமாறு வேண்டுகிறேன்
Post a Comment