வாழும் புன்னகையே! வருத்தம் விடு!
வாழும் புன்னகையே! வருத்தம் விடு!
வாழும் நாட்களிலே சோதனைகள் சில வரலாம்!
பாழும் உலகிதென்று வேதனையும் நாம் படலாம்!
மீளும் வழி ஏதென்று முயற்சிகள் செய்திடலாம்!
நாளையது மறந்து போய் நாட்களும் நகர்ந்திடலாம்!
ஆனால்.......,
வாழும் நாட்களே வேதனையாய்ப் போனதிங்கு!
பாழும் உலகினையே பழித்திங்கு வாழ்ந்திட்டாய்!
மீளும் வழி கிடைத்து முன்னேற்றம் அடைந்திட்டாய்!
நாளும் வளர்ந்திடவே நாள்தோறும் உழைத்திட்டாய்!
அடுத்த வீட்டுத் திண்ணையிலே அலங்காரமாய் வீற்றிருந்து
மிடுக்காய்ப் சொல்விடுத்து ஊராரைக் கவர்ந்திட்டு
துடுக்காய் வாழ்ந்தே துணையின்றிப் போய்ச்சேர்ந்த
அடுக்கான கதையென்று ஆயிரம் இங்குண்டு!
தன் நினைவில் திடம் வைத்து
தன் மனதில் அதை வளர்த்து
தன் காலம் முடியுமட்டும்
தன் நோக்குப் போல் வாழ்ந்து
தன்னோடு சிலரையும்
அதுபோலப் பாவித்து
தான் போன பின்னாடி
தன் நட்பைத் துணைக்கழைத்து
சென்றிட்ட அத்தைகள்
ஆயிரம் இங்குண்டு!
ஒவ்வொரு நிகழ்வுமே ஒரு நினைவை கொண்டு வைக்கும்
அவ்வாறு இதுவென்று அளவிட்டு மனம் பதைக்கும்
பாவியவள் கதையின்று என்கதையை ஒத்ததென்று
ஒருவாறு உள்ளமும் உணர்ந்தே துடித்துவிடும்!
ஆனால்.....,
உன்கதையோ அதுவல்ல!
எம் கதையை ஒத்ததல்ல!
தம்மோடு இணைத்திங்கு
விம்மிவிடும் நிகழ்வல்ல!
கட்டிய மனைவியிங்கு
முட்டியிலே அடிபட்டு
கட்டுகள் போட்டே
கட்டிலில் கிடக்கின்றாள்!
அன்றொரு நாள் அது போன்ற
துன்பமான நிகழ்வொன்றை
இன்று நான் ஒப்பிட்டு அவள்
துன்பம் உணர்கின்றேன்!
ஆனால்....,
நீ பட்ட பாடுகளை
நீள்கவிதையில் நீ வடிக்க,
மீளாச் சோகமன்றி
வேறொன்றும் உணரவில்லை!
உன் வலியின் தாக்கமது
என் மனதைத் தொட்டாலும்
நான் உணராக் காரணத்தால்
அனுதாபம் கொள்ளலன்றி
ஒரு வகையும் தெரிந்திலனே!
தெரிந்தவர் வீட்டினிலே சாவொன்று நிகழ்ந்தது
விரைந்தங்கு சென்றிட்டேன் மறைந்தவரின் நட்பெண்ணி
"பிரிந்தவர் உறவுக்கு பேரிழப்பு அது" என்று
புரிந்தாலும் எனை அதுவும் பலமாகத் தாக்கவில்லை
வருத்தத்தைத் தெரிவிப்பது மட்டுமே அல்லாமல்
வேறெதுவும் செய்யாமல் திகைத்தங்கு நின்று விட்டேன்
அவரவர் வலியின் பாரம்
அவரவர் வலியின் கோரம்
அவரவர் வலியின் சோகம்
அவரவரே உணர்ந்திடுவர்!
அடுத்தவர் என்னதான் அகமுடைந்து போனாலும்
தடுக்க இயலவிலையே எனத் துவண்டு போனாலும்
விடுத்தங்கே செய்வதெல்லாம் அனுதாபம் காட்டலன்றி
அடுத்திங்கே செய்வது என்னவென யாரறிவார்!
எனவே........,
தோழி நீ கலங்காதே! துவண்டிங்கு போகாதே!
வாழுகின்ற காலமட்டும் நாமிங்கு கூடி நிற்போம்!
வழித்துணையாய் வந்திடுவோம்! வலியதனைக் குறைத்திடுவோம்!
வீழுகின்ற நாட்களினிப் போனதென்று நீ உணர்வாய்!
எதிர்நீச்சல் போட்டின்று இன்னல்களைத் துரத்தி நின்றாய்!
புதுவாழ்வு கண்டிடவே புத்தொளியாய்ப் பூத்துவிட்டாய்!
இதுவரையில் பட்ட துன்பம் போதுமடி உந்தனுக்கு!
இதமாகச் சொல்கின்றேன்! இன்பமுறச் சிரித்திடுவாய்!
அனுதாபம் கண்டிங்கு அஞ்சி நீ நிற்காதே!
உன் சோகம் தனை உணர்ந்து சொன்னதென்று புரிந்திடுவாய்!
மென்மேலும் வளர்ந்திடவே வாழ்த்துகின்ற ஊக்கமிது!
இனிமேலும் கலங்கி நீ துன்பமதைக் கொள்ளாதே!
"வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வண்கணார் இல்" எனும்
வள்ளுவன் வாக்கினை மனதில் கொண்டு......
வாழும் புன்னகையே! வருத்தம் விடு!
[வாழும் புன்னகை வித்யாவின் சோகமும் வருத்தமும் உணரப்படுபவை அன்று!
மாறாக, இப்படியா? என அலற வைக்கும் கோரம்!
அவர் மனவருத்தத்துடன் எழுதிய பதிவினைப் பார்த்ததும் என் மனதில் தோன்றியதை வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்,
ஆக்கபூர்வமான கருத்துகள் மட்டுமே இடவும் என அன்புடன் வேண்டிக் கோள்கிறேன்!
நன்றி!
வணக்கம்!]
19 பின்னூட்டங்கள்:
//வாழும் புன்னகை வித்யாவின் சோகமும் வருத்தமும் உணரப்படுபவை அன்று!
மாறாக, இப்படியா? என அலற வைக்கும் கோரம்!
அவர் மனவருத்தத்துடன் எழுதிய பதிவினைப் பார்த்ததும் என் மனதில் தோன்றியதை வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்,//
நண்பர் SK அவர்களே....
உங்களை போல் எனக்கும் மிகப் பெரிய வருத்தம் தான், எனவே சகோதரியிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கையான"வாழும் புன்னகையே!வருத்தத்தை விடு" என்னும் வரிகளுடன் நானும் அதே கோரிக்கையை வைக்கின்றேன்...
//ஆக்கபூர்வமான கருத்துகள் மட்டுமே இடவும் என அன்புடன் வேண்டிக் கோள்கிறேன்! //
நண்பர்களே..
திரு.SK அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்து ஆக்கப்ப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்குமாறு நானும் கோரிக்கை வைக்கின்றேன்...
அன்புடன்...
சரவணன்.
//தோழி நீ கலங்காதே! துவண்டிங்கு போகாதே!
வாழுகின்ற காலமட்டும் நாமிங்கு கூடி நிற்போம்!
வழித்துணையாய் வந்திடுவோம்! வலியதனைக் குறைத்திடுவோம்!
வீழுகின்ற நாட்களினிப் போனதென்று நீ உணர்வாய்!//
//மென்மேலும் வளர்ந்திடவே வாழ்த்துகின்ற ஊக்கமிது!
இனிமேலும் கலங்கி நீ துன்பமதைக் கொள்ளாதே!//
வழி மொழிகிறேன்.
எஸ்.கே ஐயா!!
அருமையான மடல்.
உடனே படித்துவிட்டு
உடனே பதிலிட்ட சரணனே !
என் நிலையை உடனறிந்து
என்னோடு பகிர்ந்திட்ட
உன்னதத்தைப் போற்றுகின்றேன்
உளமார நன்றி சொல்வேன்!
உணர்ந்திங்கு சொன்னதனை
உளமாரப் பாராட்டி
உடனே பதிலளித்த
உம் உள்ளம் நான் உணர்ந்தேன்.
போற்றலெல்லாம் போகட்டும் புன்னகைக்கே!
////தோழி நீ கலங்காதே! துவண்டிங்கு போகாதே!
வாழுகின்ற காலமட்டும் நாமிங்கு கூடி நிற்போம்!
வழித்துணையாய் வந்திடுவோம்! வலியதனைக் குறைத்திடுவோம்!
வீழுகின்ற நாட்களினிப் போனதென்று நீ உணர்வாய்!//
கருத்தாழமிக்க வரிகள்...
உம் போல எனக்கு கவிதை
வடிக்க தெரியாது,
படிக்க மட்டுமே தெரியும்
உளமாற பாராட்டிய
உள்ளமதற்க்கு நன்றி....
அன்புடன்...
சரவணன்.
மீண்டும், மீண்டும் நன்றி!
எழுதியதற்கு அல்ல!
புரிதலுக்கு!
உங்களின் இப்பதிவின் மூலம் வாழும் புன்னகை வித்யாவிற்கு -
-"மென்மேலும் வளர்ந்திடவே வாழ்த்துகின்ற ஊக்கமிது!
இனிமேலும் கலங்கி நீ துன்பமதைக் கொள்ளாதே!"
வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலார் உம் கவியடியில், நீ
வாடிய பூவுக்கு வடித்த கவிதையதை
படித்திங்கு விழுந்துவிட்டேன் உம் காலடியில் !
கட்டியவர் கட்டுடன் இருக்க,
அடிபட்டவர் நீர் என நினைத்து நின்றாலும்
அடுத்தவர் சோகம் அளவிடமுடியாதென்று,
தொடுத்திங்கே கவிப்பூமாலையதை பெண்ணாகி புண்ணான
புன்னகைப் பூவுக்கே மாலை அணிவித்த உமக்கும்,
நீர் பெற்ற துன்பமெல்லாம் நீராவியாக்க, விரைவில்
வருவான் வடிவேலன் ! முடிப்பான் தன் வேலை !
உணர்ந்திங்கு சொன்னதனை
உளமாரப் பாராட்டி
உடனே பதிலளித்த
உம் உள்ளம் நான் உணர்ந்தேன்.
நன்மனம் அவர்களே!
போற்றலெல்லாம் போகட்டும் புன்னகைக்கே!
ஏந்திழையாள் படும் துன்பம்
கண்டு மனம் பொறுக்கவில்லை
எழுத்தினிலே சொல்லவன்றி
ஏது செய்ய இயலுமிங்கு?
புரிதலுக்கு நன்றி ஐயா!
பொன்னான கோவியாரே!
வேலனும் வந்திடுவான்
துயரிங்கு துடைத்திடுவான்!
sk உங்களை வழிமொழிகின்றேன்
உங்கள் கவிதை, கவிதையின் கருப்பொருள் இரண்டுமே
ப்ரமாதம்
அன்புத்தோழிக்கு எனது ஆறுதல்களும்.
என்னை இதுவரை எத்தனை பேர் திட்டியிருந்தும் ஆறுதல் சொல்லி ஒரு பதிவாவது நீங்கள் போட்டது உண்டா?ஒரு கவிதையாவது பாடியது உண்டா?
உங்கள் பேச்சு கா:-)
நானே திட்டியிருக்கேனே என்றுதான் போடவில்லை, செல்வன்!
மேலும், உங்கள் சோகம் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதே!
என்னைத் திட்டாததா உங்களைத் திட்டிவிட்டாரகள்?!!
அதனால்தான் போடவில்லை!!
வாழும் புன்னகையின் சோகம் நம்மால் அனுதாபப் பட மட்டுமே கூடியது!
அதன் வலி அவர் ஒருவரே உணர்வார்!
நாம் அனுபவிக்கவில்லை அதை!!
அனுபவிக்காவதை எப்படி உணர முடியும்
அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும்!
அதைத்தான் சொல்லியிருக்கிறேன்!
இதுக்கெல்லாம் கா விட்டா எப்படி?!
படிக்கணும்னா போங்க!
கா விட்டுட்டு எல்லாம் போக வேண்டாம்!
:))
பதிவைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாததற்கு நான் தான் கா விட வேண்டும்!!
:)
அது சும்மா ஜோக்குக்கு எழுதியது எஸ்.கே
சொன்ன மாதிரி நீங்கள் வாங்காத திட்டா?என்னை இதுவரை யாரும் திட்டியதில்லை.நல்ல விதமாகத்தான்(!) விமர்சனம் செய்துள்ளனர்:)
திட்டு வாங்கினால் தான் நாம் எழுதுவதை நாலு பேர் படிக்கிறார்கள் என அர்த்தம்:)
உங்கள் கவிதை எமோஷனலாக எழுதப்பட்டுள்ளது.வழக்கம்போல் தமிழ் துள்ளி விளையாடுகிறது.
அந்த தமிழுக்கு நான் என்றும் அடிமை.என் அப்பன் முருகனும் அடிமை.
சொந்த செலவில் சூனியம்!!
வலியும் வேதனையும்
உணரமுடியாது
தனக்கேற்படும் வரை
அவள் ஒரு போராளி. மன வலிமை மிக்கவள். பல தடைகளை தகர்த்தெறிந்தவள். அவளது எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துக்கள்.
கவிதையை உண்ர்ந்தேன்!
தங்களது தார்மீக ஆதரவுதனில் எனக்கும் பங்குண்டு என்பதனால் நானும் கலந்து கொள்கிறேன்.
//
சொந்த செலவில் சூனியம்!!
வலியும் வேதனையும்
உணரமுடியாது
தனக்கேற்படும் வரை//
இது அனைவர்க்கும் பொருந்தும்!
உங்களது தார்மீக ஆதரவுக்கும், வரவுக்கும் மிக்க நன்றி, பொட்"டீ"கடையாரே!
நண்பர் SK அவர்களே....
நான் தற்போதுதான் வித்யாவுடன் கைபேசியில் பேசினேன். தன்னை இன்னமும் சில (வலைப்பதிவு)மனிதர்கள் சகமனுசியாக கூட ஏற்றுக்கொள்ளவில்லையென வார்த்தைகள் வெடித்தன...
அதைப்பற்றி அவளே ஒரு பதிவிடுவிதாக சொல்லியுள்ளாள்.
Post a Comment