"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "
"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "
இப்பாடல் சற்று கடினமான பாடல். விரித்துப் பொருள் சொல்ல வேண்டிய பாடல். பதிவு சற்றே நீளமாக இருக்கும். அருள் கூர்ந்து அருணகிரியார் மேலிருக்கும் அன்பினால், விரிவாகப் பொருள் சொல்லத் துணிந்தேன். இதனைப் பதிவெடுத்து, சிறிது சிறிதாகப் படித்து உணர்ந்தால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!
*************************************************************************************
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 4"
"உனைத்தினந் தொழுதிலன்"
ராகம் -- சாவேரி
தாளம் -- ஆதி
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன -- தனதான
>>>>>>>>>>>பாடல்>>>>>>>>>>>>
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை
உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன -- தருள்மாறா
உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் -- மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு -- பொருபோதே
கலக்கு றுஞ்செய லொழிவற அழிவறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தி லென்பய மறமயில் முதுகினில் -- வருவாயே
வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் -- புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை -- யுடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுனி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ -- மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண -- பெருமாளே.
****************************************************************************************************
இப்பாடலின் இரண்டாம் பகுதிக்குப் பொருள் சொல்லி, பின்னர் முதற் பாதியை உணரலாம்!
"வினைத்தலம் தனில் அலகைகள் குதிகொள"
சீறுகின்ற வீரர்கள் தீரமுடன் போரிடும் வீரமிகு போர்க்களத்தில்
கோரமிகு பேய்களும் குறைவில்லா மகிழ்வுடனே குதித்துக் கூத்தாடவும்,
"விழுக்கு உடைந்தும், மெய் உகு தசை கழுகு உண"
தோலுக்கு உள்ளிருக்கும் நிணமென்னும் சதை உடைந்து
உடலினின்று சிந்துகின்ற தசையென்னும் மாமிசத்தை
கொடிய வல்லூறு எனும் கழுகுகள் கொத்தித் தின்னவும்,
"விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா"
அள்ளி முடியும் வழக்கமிலாக் காரணத்தால்
விரிந்து கிடக்கின்ற தலைமுடியினையுடைய
அவுணர் எனும் இராக்கதக் கூட்டங்களை
அழித்திடவே போர்புரியும் வேலாயுதப் பெருமானே!
"மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடு உழு
நறைவிரைத்த சந்தன ம்ருகமத
புயவரை உடையோனே"
இனிய குரலுடன் அழகிய பண் பாடும்
குயிலினை ஒத்த மொழியினைப் பேசிடும்
கொடியினை நிகர்த்த இடையினையுடைய
குறிஞ்சிப்பெண்ணாம் வள்ளிமலைக்காரியின்
பொலிந்த குங்குமம் திளைந்த மார்பில்
வலிந்து பரவி, மணந்த சந்தனமும்
உயர்ந்த மானின் உடலினின்று விளைந்திடும்
கஸ்தூரியென்னும் வாசனைப்பொருளும்
படிந்து நிற்கும் தோளினை உடையோனே!
"தினத்தினம் சதுர் மறைமுனி முறைகொடு"
நல்வேதம் உணர்ந்திட்ட நான்முகனாம் பிரமனும்
வல்விதியில் சொன்னபடி நாள்தோறும் முறைப்படியே
"புனல் சொரிந்து அலர் பொதிய"
நன்நீரைக் கொண்டுவந்து திருமஞ்சன நீராட்டி
வாசமிகு பூக்களால் அருச்சனை செய்யவும்,
" விணவரொடு சினத்தை நிந்தனை செயும் முனிவரர் தொழ மகிழ்வோனே"
வானுறையும் விண்ணவரும், சினம் ஒழிந்த முனிவோரும்
உனைப்பணிந்து அடிதொழவும், உளம்மகிழச் சிரிப்பவனே!
"தெனத்தெனந்தன என வரியளி நறைதெவிட்ட
அன்பொடு பருகு உ யர் பொழில் திகழ்"
'தெனத்தெனந்தன'வென ரீங்காரம் செய்திடும்
வரிகளையுடைய வண்டுகளும் மலர்ந்திருக்கும் பூவின்
தேனினைத் தெவிட்டும் அளவினிலே மகிழ்வுடன் உண்ணும்
விண்ணினை எட்டும் உயர் சோலைகள் திகழும்,
"திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே"
திருப்பரங்குன்றமெனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
சரவணபவ எனும் பெருமைக்கு உடையவரே!
"உனைத் தினம் தொழுதிலன்"
முத்தி அடைந்திட முதல் படியாக
சத்திச் சரவணனை இருகை கூப்பி
பத்தியுடன் எப்போதும் பயனுறவே நானும்
துதித்திடும் செயலினைச் செய்ததுமில்லையே!
"உனது இயல்பினை உரைத்திலன்"
நாவு படைத்ததன் பயனறியாமலே
தாவும் மயிலேறி சங்கடங்கள் தீர்க்க வரு ம்
தேவயானைத் துணைவனைப் போற்றிடும்
மேவுகுணங்களைசொன்னதுமில்லையே!
"பல மலர்கொடு உன் அடி இணை
உறப் பணிந்திலன்"
கலி வந்து வாட்டிடுகையில் என்செய்வோமென
நலிந்தோரெல்லாம் நடுங்கி நிற்கையில்
'மலர்போலும் சிவனது பாத மலருண்டு
மலரிட்டு வணங்கிட நறுமலரும் உண்டு
குளிர்ந்த நீர்க் குளியாட்டலும் உண்டு'என
எளியவர்க்கு அருளிடும் கண்ணபிரான் உரைத்தபடி
விடியுமுன்னர் எழுந்திருந்து தூய நீராடி
கூடையினை நாபிக்குக் மேலேந்தி சோலை அடைந்து
முந்தை வினையழிக்கும் இறைவனது நாமம் சொல்லி
செடியினிலே பூத்திருக்கும் நறுமலரைப் பறித்து
வடிவான மாலைகளும் தனி மலரும் சேர்த்துவந்து
அடியார்க்கு அருளிடும் பரமனது நாமம் செப்பி
திருவடியிற் பொருந்துமாறு நெற்றியினை வைத்து
இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்புயெனும்
எட்டங்கமும் படுமாறு நிலத்தில் வீழ்ந்து
உனை வணங்கும் நெறியினையும் புரிந்தேனில்லையே!
"ஒரு தவம் இலன்"
மன்னு பிறவி தந்த உந்தன் கருணையினை எண்ணி எண்ணி
உன்னை நினைந்தே உள்ளும் உடலும் உருகி உருகி
என்பெலாம் கரைந்திடவே கண்ணீர் விட்டு அழுது அழுது
அன்புமயமாகி அசைவற்று ஓரிடத்திலே நினைந்து நினைந்து
இன்பத்தவத்தினையே ஓர் கணமேனும் செய்தேனில்லையே!
"அருள்மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்"
உள்ளன்பு பூண்டு வெளிவேடம் காட்டாமல்
கள்ளமிலா மனத்துடன் உனைப் பணியும்
வெள்ளமெனப் பெருகிடும் அருளை வழங்கிடும்
நின்னடியார் இருக்கின்ற இடம் நாடி அவர் பாதம்
பணியும் திண்மையும் அறிந்தேனில்லையே!
"விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்"
கால்கள் பெற்ற பயன் நீ இருக்கும் மலைகளையும்
வேலவனின் கோயிலையும் வலம் வந்து பணிதலே என்னும்
சீலமிகு வழியினையும் செய்தேனில்லையே!
"உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன்"
உன்புகழைப் பாடுதலே உவப்பிலா இன்பமெனில்
திருப்புகழைப் பாடிடுதல் எத்துணை பேரின்பம்!
இப்புகழை உணராமல் வாழ்நாளை வீணாக்கி
நின்புகழை விருப்புடன்பாட விரும்பினேனில்லையே!
[இவையனைத்தும் செய்யாமல் இப்பொழுதைக் கழித்ததாலே]
"மலைபோலே கனைத்து எழும் பகடு அது பிடர்மிசை வரு
கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறடு கதைகொடு பொருபோதே"
மலை போலும் உருவுடன், சினத்துடன் கனைத்து எழும்
எருமையின் மீதேறி அடங்காக் கோபத்துடன்
காலனின் தூதுவர்கள் கையில் பாசக்கயிறேந்தி
கொல்லுகின்ற கதையெனும் ஆயுதமும் தாங்கியே
வெல்லுதற்காக என்னெதிரே வேகமாக வரும்போது,
"கலக்குறும் செயல் ஒழிவற அழிவறு"
'என் செய்வேன்'எனக் கலக்கம் எனை வாட்டிடும் வேளையில்
'யானிருக்க பயமேன்'என என்கவலை அனைத்தினையும்
அழிந்தும் ஒழிந்தும் போகுமாறு செய்திடவும்,
"கருத்து நைந்து அலம் உறுபொழுது
அளவைகொள் கணத்தில் என் பயம் அற"
பயத்திலும், சோகத்திலும் என்வசமிழந்து உளம் நலிந்து
நான் வருத்தம் கொண்டிடும் வேளையினில்
என்னிடம் ஏற்பட்ட இப்பயங்கள் நீங்கிடவும்,
"மயில் முதுகினில் வருவாயே"
குறையிலாத திருமயிலின் முதுகினில் நீ அமர்ந்து
விரைந்து வந்து எனக்கு அருளிட வேண்டும்!
___________________________________________________________________________________________________________
அருஞ்சொற்பொருள்:
பகடு: எருமைகிடா
மறலி: எமன்
உழையினர்: தூதுவர்
அலம்: மனக்கவலை
<strong>அளவைகொள் கணத்தில்: அளவுபடுகின்ற ஒரு கணப்பொழுதில்
வினைத்தலம்: போர்க்களம்
<strong>அலகை: பேய்
விழுக்கு: சதை
குஞ்சியர்: தலைமுடியை உடையவர்
அவுணர்: இராக்கதர்
கொடிச்சி: கொடி போன்ற இடை உடையவள்
நறை: வாசனை
ம்ருகமத: கஸ்தூரி மான் உடலினின்று வரும் கஸ்தூரி எனும் வாசனைப் பொருள்
சதுர்மறைமுனி: பிரமன்
புனல்: நீர்
அலர்: மலர்
அளி: வண்டு
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*************************************************************************************
...
49 பின்னூட்டங்கள்:
திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்.
முழுதும் படித்தபின் இன்னும் வரும் என நம்புகிறேன், குமரன்!
நன்றி.
SK அய்யா ...வெறும் விளக்கம் என்றில்லாமல் ...உங்கள் உணர்வுகளையும் கலந்து எழுதியிருப்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது.
அழகு தமிழில் எதைக் கூறினாலும் அதன் சொற்சுவைக்காகவும் பொருட் சுவைக்காகவும் போற்றுவேன்.
தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருளைத்த
முந்துத்தமிழ் சக்திமகன் முருகன் வந்தான்
பல் முளைக்கும் முன்னே எனக்கு கவிதைத் தந்தான்
கந்தான் வந்தான் கவிதைத் தந்தான்
இந்த பாடல் ... கூட எனக்கு மிகவும் பிடித்தப்பாடல். படமும் பெயரும் மறந்துவிட்டது. இன்னமும் நான் திருவருள் படப்பாடல்களை விரும்பிக் கேட்கிறேன் ... சிறுவயது ஞாபகம் தான்.
மிக அருமையாக தெளிவுறை எழுதிய உங்களுக்கு பாரட்டுக்கள்.
தமிழைத் தமிழ் பாராட்டும்போது மகிழ்வாய் இருக்கிறது. மிக்க நன்றி, கோவியாரே!
//மிக அருமையாக தெளிவுறை எழுதிய உங்களுக்கு பாரட்டுக்கள்.//
எ.பி. வந்து கொண்டே இருக்கிறார்!! உஷார்!
தெளிவுரை
பாராட்டுகள்
பின்னூட்டம் முழுதும் படித்தபின் இன்னும் வரும் என எதிர்பார்த்தேன் :)))
படித்தேன்.
படிக்கிறேன்.
படிப்பேன்.
உணர்ந்தேன்.
உணர்கிறேன்.
உண்ர்வேன்.
மகிழ்ந்தேன்.
மகிழ்கிறேன்.
மகிழ்வேன்.
SK. மீண்டுமொரு அருமையான பதிவு.
திருப்பரங்குன்றத்துத் திருப்புகழைத் திருத்தமிழில் திறமுடன் திறவாயொப்பி திருவுள் திருந்தினீர். நன்றி.
இந்தப் புகழில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "புனல் சொரிந்து அலர் பொதிய" என்ன நயம். ஆகா! ஓசைமுனி என்று பாம்பன் சுவாமிகள் சொல்லாமலா சொன்னார்.
திருப்புகழைப் படிக்கப் பலர் வருகின்றீர்கள். கந்தர் அநுபூதிக்கும் வருகை தாருங்கள். ஒவ்வொரு செவ்வாயும் போட்டுக்கொண்டிருக்கிறேன். விளம்பரம் அல்ல. ஆனால் அருணகிரியினைப் படித்துவக்கும் அன்பர்களுக்கு கந்தரநுபூதியும் உவக்கும் என்ற நம்பிக்கையில் விடும் அழைப்பு இது.
SK
அற்புதமான ஒரு விளக்கவுரை நம் தமிழ்வேதமாம் திருப்புகழுக்கு. இதில் தமிழ் மணக்கிறதா இல்லை முருகன்புகழ் மணக்கிறதா என்று தீர்மானம் செய்ய முடியாதபடி அழகாக இருக்கிறது தங்கள் உரை.
வள்ளி என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு கொடி என்று பொருள். அதனால், வள்ளியை கொடிச்சி என்று தமிழ்படுத்துகிறார்.
மேலும் எழுதுங்கள்
நன்றி
அருமையான கண்ணதாசனின் பாடலைச் சொல்லி மேலும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள், கோவியாரே!
இன்னுமொன்று!
//பொருளைத்த//
பொருளுரைத்த!!
எ.பி.யார் வருகிறார்!
இ.கொ. அவர்களே!
நன்றி சொன்னேன்!
நன்றி சொல்லுகிறேன்!
நன்றி சொல்லுவேன்!
திருப்புகழைப் படிக்து
திருப்தியுடன் பாராட்டி
திகட்டாத தீந்தமிழில்
திளைக்க வைத்த, ஜி.ரா. அவர்களே
திணறி நிற்கிறேன்!
நன்றிகள் பல!!
கந்தர் அனுபூதியை களித்து வருபவன் என்ற வகையில் நானும் அனைவரையும் வேண்டிக் கேட்பதுவும் அதுவே!
அனைவரையும் ஜி.ரா. அவர்களின் கந்தர் அனுபூதி பதிவுக்கு செவ்வய் தோறும் அழைக்கிறேன்!
உணர்ந்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி, திரு. ஜயராமன்!
சும்மா 'கொடிச்சி' எனச் சொல்லவில்லை!
'அழகிய கொடிச்சி' எனவேறு சொல்லுகிறார்!!
என்ன மாதிரியான கருத்துகளை எப்படியெல்லாம் அழகுதமிழில் வடித்திருக்கிறார் என்பதை காணுகையில், ஜி.ரா. சொன்னதுபோல 'ஓசைமுனி'தான் நம் அருணகிரியா!
// என்ன மாதிரியான கருத்துகளை எப்படியெல்லாம் அழகுதமிழில் வடித்திருக்கிறார் என்பதை காணுகையில், ஜி.ரா. சொன்னதுபோல 'ஓசைமுனி'தான் நம் அருணகிரியா! //
SK, அருணகிரியா ஓசைமுனி.....இறைவன் அருள் வந்து மோத மோத
அதையுணர்ந்து தமிழில் அருணகிரி ஓத ஓத
நமக்கு இந்தச் செல்வங்கள் கிடைத்துள்ளன. அனைத்தும் முருகனருள்.
எஸ்.கே. இதை நேற்றே படித்தேன். பின்னூட்டம் போட முடியவில்லை.
குமரன் எங்க இந்த பாடலின் சுட்டியை இன்னும் காணவில்லை.
இந்த பாடலை ஒலி வடிவில் நேற்றுக் கேட்டேன். உங்கள் பதிவில் பாடலை படித்துக் கொண்டே கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் இறைப்பணி.
SK அய்யா,
அருமையான விளக்கம். எளிமையாகவும், சுவையாகவும், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை. அன்பர் இலவசம் சொன்னதையே நானும் சொல்கிறேன்.
/* படித்தேன்.
படிக்கிறேன்.
படிப்பேன்.
உணர்ந்தேன்.
உணர்கிறேன்.
உண்ர்வேன்.
மகிழ்ந்தேன்.
மகிழ்கிறேன்.
மகிழ்வேன். */
Dear Sri SK,
Your efforts are fabulous! Santhk Kavich Chakravarthi Arunaglrinathar enai aatkonda vitham- ennai Iyappan meethu thirup pugazh ezhutha vaiththar.Kindly visit www.ravisanth.blospot.com to view some of these works. My email id: ravisanth@hathway.com. Regards, Su.Ravi
நாகை. சிவா.,
குமரனிடம் இருந்தால் அவர் கொடுத்திருப்பார்!
எனக்கு கொடுக்கத் தெரியாது!
பொன்ஸ் கை விட்டு விட்டர்!
நீங்கள் கேட்டேன் என்ச் சொல்லுகிறீர்கள்!
தயவு செய்து சுட்டி கொடுக்கவும்!!
மிக்க நன்றி!1
மிக்க நன்றி, வெற்றி!
I am unable to access your blog, Mr. ravi.
Your link doesn't work for me.
Thanks for your appreciation.
I AM interested in reading the Iyappan thiruppugazh.
எங்கே ஆளை பிடிக்க முடியவில்லை, ரொம்ம்ம்ம்ம்ப பிசியோ :((
:)))))))))
கடைசியாக ஒரு பதிவில் வந்து 'கொங்கோதேர் வாழ்க்கை அஞ்சரைதும்பிக்கு' விளக்கம் கொடுத்தபிறகு காணவே இல்லை
எஸ்.கே.
என்ன பிரச்சனை என்றால், என்னிடம் சுட்டிக் கிடையாது. நான் தரையிறக்கம் செய்து தான் கேட்டேன். எதாவது ஒரு சைட்டில் அந்த பாடலை upload செய்து விட்டு சுட்டி தர முயல்கின்றேன்.
மிகவும் நன்றி.
நிறைய விஷயங்களை விவரித்துச் சொல்லியிருந்தேன்!
எல்லாரும் சுருக்கமாக மறுமொழி இட்டிருக்கிறீர்கள்!
திகட்டி விட்டதோ?!!
:))
//SK said...
மிகவும் நன்றி.
நிறைய விஷயங்களை விவரித்துச் சொல்லியிருந்தேன்!
எல்லாரும் சுருக்கமாக மறுமொழி இட்டிருக்கிறீர்கள்!
திகட்டி விட்டதோ?!!
:))
//
வள்ளலாரின் 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்ற சொல்லும்,
'கடமையைச் செய்' என்ற கீதையின் வாசகமும் ஒரே நேரத்தில் ஞாபகம் வருகிறது :)))
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா .. இந்தப் பாடல் எப்படி ? .....:))
ஆம்! முருகன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்கத்தான் செய்கிறது.
அதுதான் விவரித்துச் சொல்லிவிட்டிருக்கிறேன்!
சரியான நேரத்தில் பொன்னான மொழிகளைக் காட்டியதற்கு நன்றி, திரு. ரகு.
வேலைப் பாடுவதல்லாமல் வேறென்ன வேலை?
சொன்னது கோவியார் என்பதைக் கவனியாமல் தவறிப்போய், மாற்றிச் சொல்லிவிட்டேன்!
மன்னிக்கவும் கோவியாரே!
மிக்க நன்றி!
உள்ளமெலாம் உன் புகழை.......!
//சொன்னது கோவியார் என்பதைக் கவனியாமல் தவறிப்போய், மாற்றிச் சொல்லிவிட்டேன்!
மன்னிக்கவும் கோவியாரே!//
பெயர் மாறலாம்.... பொருள் ஒன்று தானே...ரகுராமன் கண்ணன்றோ !
மண்ணிப்பா ... ? கோவியார் என்றும் கோவி..யார்... அதுவும் தாங்களையா ?
:))))
'தன்னை' உணர்ந்தவர்க்கு மெய்ஞானம் தேவையா ?
பக்தியை கடந்தவர் ... மீண்டும் பக்தியை நாடினால் அது ஏற்றமா ? இறக்கமா ?
SK அய்யா,
அருமை.. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்...
அருஞ்சொற்பொருள் அருமை...
மிக்க நன்றி..
கொஞ்சம் வில்லங்கமான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்!
[என்ன வில்லங்கம் என்பதைக் கடைசியில் சொல்லுகிறேன்!]
'தன்னை' உணர்ந்தவர்க்கு மெய்ஞானம் தேவையில்லை.
ஆனால், அவர் 'தன்னை' உணர்ந்தாரா என்று எப்படி சொல்லுவது?
கண்டவர் விண்டிலை
விண்டவர் கண்டிலை
என்பதுதானே மெய்ஞானம்!
உணர்ந்தவர் சொல்லமட்டார், சொல்லத்தெரியாத நிலையில் ஆழ்ந்திருப்பார்.
பக்திக்கு ஏது எல்லை?
காலமெல்லாம் காதல் வாழ்க என்னும் நிலைதானே பக்தி.
பக்தியைக் கடந்தவர் என யாரைச் சொல்லமுடியும்.
மெய்ஞானியைச் சொல்லலாம்!
ஆனால், அவர்தான் சொல்லமாட்டாரே!
இதைத்தான் வில்லங்கம் எனச் சொன்னேன்!
நம் பார்வையில் பிறரைக் காணும், மெய்ஞானி, பக்திமான் என்னும் தோற்றங்கள் எல்லாம் பாரதி சொன்னது போல, வெறும் 'தோற்றப் பிழைகளே"!!
இப்போது கடைசி வில்லங்கத்திற்கு வருவோம்!
இது ஒரு பொதுவான கேள்வியா, இல்லை குறிப்பிட்ட எவரையாவது மனதில் கொண்டு கேட்கப்பட்ட கேள்வியா?!!
பொதுவானதென்றால், மேலெ சொன்ன பதில் பொருந்தும்.
இன்னார் என்றால் கூட எனக்குத் தெரிந்ததை சொல்ல விழைவேன்.
நல்ல கேள்வி!
முன்பெல்லாம் முதலிலேயே வருவீர்கள்!
'முருகனருள் முன்னின்ற' பின்னர் வருகை தாமதமாகிறது!!
:)
உரிமையுடன் சொல்லுகிறேன்.
தவறாக எண்ண வேண்டாம்!
மிக்க நன்றி, ரசிப்புக்கும், பாராட்டுக்கும், திரு. சிவபாலன்!!
அருமையான பாடல் எஸ்.கே. இது தான் முதன்முறையாக நான் இந்தப்பாடலைப் படிப்பது.
//
சீறுகின்ற
வீரர்கள்
தீரமுடன்
போரிடும்
வீரமிகு
போர்க்களத்தில்
கோரமிகு பேய்களும்
குறைவில்லா மகிழ்வுடனே
குதித்துக்
கூத்தாடவும்//
ம்ம்ம். எதுகையும் மோனையும் கொஞ்சிக் குலாவுகின்றனவே? :-)
அது மட்டும் இல்லாமல் போற்க்களத்தைச் சொல்லுவதற்கேற்ற சந்தமும்.
//"பல மலர்கொடு உன் அடி இணை
உறப் பணிந்திலன்"
கலி வந்து வாட்டிடுகையில் என்செய்வோமென
நலிந்தோரெல்லாம் நடுங்கி நிற்கையில்
'மலர்போலும் சிவனது பாத மலருண்டு
மலரிட்டு வணங்கிட நறுமலரும் உண்டு
குளிர்ந்த நீர்க் குளியாட்டலும் உண்டு'என
எளியவர்க்கு அருளிடும் கண்ணபிரான் உரைத்தபடி
விடியுமுன்னர் எழுந்திருந்து தூய நீராடி
கூடையினை நாபிக்குக் மேலேந்தி சோலை அடைந்து
முந்தை வினையழிக்கும் இறைவனது நாமம் சொல்லி
செடியினிலே பூத்திருக்கும் நறுமலரைப் பறித்து
வடிவான மாலைகளும் தனி மலரும் சேர்த்துவந்து
அடியார்க்கு அருளிடும் பரமனது நாமம் செப்பி
திருவடியிற் பொருந்துமாறு நெற்றியினை வைத்து
இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்புயெனும்
எட்டங்கமும் படுமாறு நிலத்தில் வீழ்ந்து
உனை வணங்கும் நெறியினையும் புரிந்தேனில்லையே!
//
சிறந்த விளக்கம்.
அது சரி. கண்ணபிரான் எப்போது அப்படி உரைத்தார் என்று சொல்லுங்கள் எஸ்.கே. நான் படித்திருப்பேன்; ஆனால் இப்போது நினைவிற்கு வரவில்லை.
மற்ற வரிகளுக்கும் கருத்து சொல்ல வருவீர்களென நம்புகிறேன். :))
நன்றி, குமரன்.
முதல் இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறேனே!
கண்ணன் இப்பூவுலகை விட்டு த்வாபர யுகத்தில் செல்லும்போது முனிவர்களெல்லாம் எங்களுக்கு இனி என்ன கதி எனக் கேட்டபோது இப்படிச் சொன்னதாக வாரியார் விளக்கத்தில் படித்தேன். அதையே சொல்ல வந்தேன்.
//'தன்னை' உணர்ந்தவர்க்கு மெய்ஞானம் தேவையில்லை.
ஆனால், அவர் 'தன்னை' உணர்ந்தாரா என்று எப்படி சொல்லுவது?//
பிறருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஓரளவுக்கு உணரவைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அதை வைத்துச் சொல்லலாமா ? ஞானிகளை அவர்கள் இருக்கும் உயிருடன் இருக்கும் போதே ஞானிகள் என்று சொல்வதில்லையா ?
//கண்டவர் விண்டிலை
விண்டவர் கண்டிலை
என்பதுதானே மெய்ஞானம்!//
நீங்கள் சொல்வது மரணம் பற்றியது.. அது மெய்ஞானத்துக்கு பொருந்ததாது.கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை என்று மெய்ஞானத்திற்கு சொன்னால் ... ஒரு கடுகளவு சமய தத்துவங்கள் கூட நமக்கு கிடைத்திருக்காது. சரியா ?
//உணர்ந்தவர் சொல்லமட்டார், சொல்லத்தெரியாத நிலையில் ஆழ்ந்திருப்பார்.// இதை சமாதி நிலை என்று சொல்வார்கள்.... இது ஒரு தற்காலிக அனுபவம்... இதிலிருந்து வெளியில் வந்திருக்கிறார்கள். இது மெய்ஞானம் அல்ல. மெய்ஞானம் என்பது ... எனக்கு தெரிந்தது ... தெளிந்த அறிவுநிலை. அதை அனைத்தும் 'அறிந்த' என்ற பொருளில் சொல்லமுடியாது... அனைத்தும் 'உணர்ந்த' என்று சொல்லலாம்
//பக்திக்கு ஏது எல்லை?
காலமெல்லாம் காதல் வாழ்க என்னும் நிலைதானே பக்தி.
பக்தியைக் கடந்தவர் என யாரைச் சொல்லமுடியும்.//
பக்தி எது எல்லை ? பக்தி மட்டுமே நோக்கம் ... மெய்ஞானத் தேடல் என்ற உள்வுணர்வு இல்லை என்றால் ... பக்திக்கு எல்லை இல்லைதான்.
//நம் பார்வையில் பிறரைக் காணும், மெய்ஞானி, பக்திமான் என்னும் தோற்றங்கள் எல்லாம் பாரதி சொன்னது போல, வெறும் 'தோற்றப் பிழைகளே"!!//
பார்வையால் தோற்றத்தை வைத்து சொன்னால் அது தோற்றப்பிழைதான்.
//இது ஒரு பொதுவான கேள்வியா, இல்லை குறிப்பிட்ட எவரையாவது மனதில் கொண்டு கேட்கப்பட்ட கேள்வியா?!!//
எவரையும் குறிப்பிட்ட சொல்லவில்லை... உண்மையான மெய்சிலிர்ப்பு ... பக்தியில் இல்லை ... அதைக் கடந்த தேடலில் தான் இருக்கிறது என்று எங்கேயோ படித்தேன்.
என் கேள்விகள் குழப்பமாக இருந்தால் மண்ணிக்கவும். கேள்வியின் தன்மை உணர்ந்த தாங்கள் இத்தகைய கேள்வியை யாரையாவது மனதில் வைத்தும் அதுவும் வில்லங்கமாக கேட்டேனா என்றது ஏன் ?
SK அய்யா,
செந்தமிழ் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதற்காக கடைசியில் வந்து முன் நிறுத்தும் முயற்சி...
இனி,
முதலில் ஒரு Proxy அப்பறம் ஒரு Attendance...
அன்புக் கோவியாரே!
கோவிக்காமல் படிக்கவும்!
வில்லங்கம் எனச் சொன்னதைத் தவறகக் கொள்ள வேண்டாம்!
சற்றுக் கடினமான கேள்வி என்பதையே குறித்தேன்.
சற்றுத் தவறினாலும் வேறு பொருளில் போய் முடியும் வாய்ப்பிருப்பதால்!
நிற்க,
//ஞானிகளை அவர்கள் இருக்கும் உயிருடன் இருக்கும் போதே ஞானிகள் என்று சொல்வதில்லையா ?//
ஞானிகள் தங்களை எப்பொழுதுமே அவ்வாறு கூறிகொள்ள மட்டார்கள் எனவே நான் கருதுகிறேன்.
மற்றவர் கூறினாலும், சட்டை செய்யாது சென்றிடுவர்.
//நீங்கள் சொல்வது மரணம் பற்றியது.. அது மெய்ஞானத்துக்கு பொருந்ததாது.//
மரணம் மட்டுமல்ல. மெய்ஞானத்தை குறித்தும் அப்படிச் சொல்லியே படித்திருக்கிறேன்.
மரணத்துக்கும் அது பொருந்தும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
//ஒரு கடுகளவு சமய தத்துவங்கள் கூட நமக்கு கிடைத்திருக்காது. சரியா ?//
மெய்ஞானத் தத்துவத்தையும், அதை அடையும் வழிகளியும் மட்டுமே கூறுவரே அன்றி, உண்மையான மெய்ஞானத்தை யாராலும் சொல்லமுடியது என்பதே உண்மை.
அவரவர் கண்டு, அறிந்து, அனுபவிக்கும் போது விஞ்சுதல் இல்லை!
சில அரைகுறைகள் வேன்டுமானால் சொல்வதற்கு முயலுவர்.
ஆனால், அனுபவம் நாமே உணர வேண்டிய ஒன்று.
அந்த நிலையைக் கூறுதலும் இயலாது.
//
இதை சமாதி நிலை என்று சொல்வார்கள்.... இது ஒரு தற்காலிக அனுபவம்... இதிலிருந்து வெளியில் வந்திருக்கிறார்கள். இது மெய்ஞானம் அல்ல.//
சமாதியையும் தாண்டிய மோன நிலையே மெய்ஞான ஒளி, உணர்வு.
// மெய்ஞானத் தேடல் என்ற உள்வுணர்வு இல்லை என்றால் ... பக்திக்கு எல்லை இல்லைதான்//
பக்தியில் வரும் சிலிர்ப்பு ஒரு காரணத்துடன் வருவது. எக்ஸ்டஸி [Ecstacy]எனச் சொல்லுவர் அதை.
அதையும் தாண்டியதே மெய்ஞான நிலை எனப் படித்திருக்கிறேன். அதை உணர, அனுபவிக்க மட்டுமே முடியும். விரித்துக் கூற இயலாது.
//இத்தகைய கேள்வியை யாரையாவது மனதில் வைத்தும் அதுவும் வில்லங்கமாக கேட்டேனா என்றது ஏன் ?//
நான் முன்னமே சொல்லியது போல, முடிந்த அளவிற்குப் பதிலுரைக்கவே, யாரையாவது மனதில் கொண்டு கேட்டிர்களா எனக் கேட்டேன். வேறொரு அர்த்தமும் இல்லை. தவறெனில் வருந்துகிறேன்.
முயற்சி திருவினையாக்கும், சிவபாலன்!
வருகையும், பதிவும் நன்றாகவே இருக்கின்றன!
நன்றி
//ஞானிகள் தங்களை எப்பொழுதுமே அவ்வாறு கூறிகொள்ள மட்டார்கள் எனவே நான் கருதுகிறேன்.
மற்றவர் கூறினாலும், சட்டை செய்யாது சென்றிடுவர்.//
நானும் அதைத்தான் எழுதினேன்... தட்டச்சில் விடுபட்டுவிட்டது.., அதாவது ஞானிகள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் தாங்களை ஞானிகள் என்று சொல்லாமலே.. நாம் ஞானிகள் என்று புரிந்துகொள்கிறோர்ம்.. அழைக்கிறோம்.
மெய்ஞான உணர்வு இது என்று எதையும் அறுதியிட்டுக் கூற இயலாது ஒப்புக்கொள்கிறேன்.
இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், இராமலிங்க வள்ளலார், ஆதிசங்கரர் மற்றும் பலருக்கு கிடைத்தது வேறு வேறு அனுபவங்கள். அதன் மூலம் அவர்கள் அடைந்த சித்தாந்தகளை வேறுவேறு பார்வையாகத் தான் சொல்கிறார்கள். நான் கேட்டது பக்தியைப் பற்றி ... பக்தி முக்திதருமா ? அந்த முக்தி மோட்சம் தருமா ? அந்த முக்தியும் மெய்ஞானமும் ஒன்றா ?
முக்தியும் மோக்ஷமும் ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள். இரண்டிற்கும் விடுதலை என்று பொருள்.
//குமரன் (Kumaran) said...
முக்தியும் மோக்ஷமும் ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள். இரண்டிற்கும் விடுதலை என்று பொருள்.
//
மோட்சம் என்றால் சுவர்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முக்தி என்பது இறைவன் அடி என்று சொல்கிறார்கள்
குமரன் சொல்லியிருப்பது சரியே.
சில சொற்களுக்குத் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன், கோவியாரே!
நான் சில நாட்களாக எழுத எண்ணிவரும் "உண்மை நெறி விளக்கம்" என்னும் தொடரில் இதைப் பற்றிக் கூறவிருக்கிறேன், முருகனருள் முன்னின்றால்!
//இதைப் பற்றிக் கூறவிருக்கிறேன், முருகனருள் முன்னின்றால்! //
ஆத்திகரான உங்களுக்கு அதில் என்ன சந்தேகம் :))))
நன்றி, கோவியாரே!
விரைவில் எதிர்பாருங்கள்!
உங்கள் கேள்விகளுக்கு அதில் விடை கிடைக்கலாம்!
55 பதிவுகள் வரும்
//விரைவில் எதிர்பாருங்கள்!
உங்கள் கேள்விகளுக்கு அதில் விடை கிடைக்கலாம்!
55 பதிவுகள் வரும்//
எழுதுங்க எழுதுங்க... வளச்சி வளச்சி கேள்வி கேட்பேன் :)))) 55 பதிவுகளை மெகா சீரியல் ரேஞ்சுக்கு 55 வாரம் இழுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)))
திருப்புகழை மிக அழகாக சொல்கிறீர்கள்.ஒரு வரியை பல வரிகளில் அழகாக விவரித்து அதன் புகழுக்கு மேலும் அணிசேர்க்கிறீர்கள்.தமிழ்க்கடவுளை(முருகனை) தமிழ் மறையால்(திருப்புகழால்) தமிழ்ஞானி (உங்கள்)கவிதை உரையுடன் படிக்கும்போது முக்கனியை சுவைத்த திருப்தி கிடைக்கிறது.
புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.பதிவில் மணப்பது திருப்புகழா,முருகன் அருளா,உங்கள் தமிழா என பிரிக்கத் தெரியவில்லை.
எல்லாம் முருகன் அருளன்றி வேறேது, செல்வன்!
போற்றுவார் போற்றல் போகட்டும் குமரனுக்கே!
நன்றி!
Post a Comment