"மரணமில்லாப் பெருவாழ்வு!" [தேன்கூடு போட்டி
"மரணமென்பது மாண்டு போவதா?"
"கரணம் பலவும் கரைத்துக் குடித்திடினும்
நாரணன் பெயரை நாவில் உரைக்கீரேல்
மரணம் வருங்காலையில் மற்றென் பயன்"என்று
சரணராம் சங்கரரும் அன்றே உரைத்திட்டார்.
"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" வென
போதகராம் பட்டினத்தாரும் பாங்காகச் சொல்லிவைத்தார்
"பாதகங்கள் பலசெய்தும் பச்சைமயில் வாகனனின்
பாதங்களை மறவேன்" என அருணகிரியும் அருளிட்டார்.
இப்படி இவர்கள் சொல்லிவைத்த வார்த்தைகளை
எப்படியோ படித்துவிட்டு, 'போகின்ற காலத்தில்
தப்பாமல் சொல்வோம்'என மனதுக்குள் நிச்சயித்து
'அப்பாடா!' என்றிருந்தேன் அப்போது ஓர் நினைவு!
மாண்டுபோவதுதான் மரணமெனில்
ஆண்டாண்டாய் மாண்டதெல்லாம்
மறுபடியும் பிறந்ததெல்லாம்
அடுக்கடுக்காய் நினைவில் வந்து
திடுக்கிட்டு எழுந்து நின்றேன்!
இனிவருவதனைத்தும்
என்வாழ்வில் நிஜமாய் நடந்தவை!
உண்மை!உண்மையன்றி வேறில்லை!
"சத்தியமாய்ச் சொல்லுவதை
சத்தியமாய் நம்பிடப்பா!"
மரணத்தின் வாசனையே
தெரியாத வயதினிலே
நான் வளர்த்த நாய்க்குட்டி
நசுக்குண்டு போனது.....
அப்போது மாண்டு போனேன்!
அடுத்த சில நாட்களிலே
கொடுத்தவாக்கை நினைவில்கொண்டு
அழகான குட்டியொன்றை
அப்பாவும் கொணர்ந்தபோது....
மறுபடியும் மீண்டு வந்தேன்!
படித்திருந்த வேளையினில்
பாவையொருத்தியைப் பார்த்துவிட்டு
ஒருதலையாய்க் காதலித்தேன்
வேறொருவன்பின் அவள் போனாள்!...
அப்போது மாண்டு போனேன்!
என்மேலும் நேசங்கொண்டு
எனையொருத்தி நாடிவந்து
என்னோடு பழகிடவே
இன்பமாக வந்தபோது....
மறுபடியும் மீண்டு வந்தேன்!
என்பேரைச் சொல்லிவைக்க
என்மகனும் வருவான் என
தன்னுதிரம் சிந்தியே
கண்போல வளர்த்திட்ட
என் தந்தை மாண்டுபோனார்
என்படிப்பு முடியும் முன்னே!...
அப்போது மாண்டு போனேன்!
மருத்துவனாய்த் தேர்வுபெற்று
மகிழ்ச்சியுடன் வந்தன்று
மாதாவின் காலடியில்
மண்டியிட்டு நின்றபோது
"மரித்த உன் தந்தை இன்று
மனமகிழ்வாய் இருப்பார்"என
மாதரசி சொன்னபோது......
மறுபடியும் மீண்டு வந்தேன்!
நினைவு தெரிந்த நாள் முதலாய்
நிழல் போலக் கூட வந்து
நெடுங்காலம் பழகிட்ட
நண்பனவன் ஓர் நாளில்
நேசம் மறந்தங்கு
நகர்ந்திட்ட நொடியினிலே......
அப்போது மாண்டு போனேன்!
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பென்று
உணர்த்திடவே வந்தது போல்
மணக்க மணக்க உதவிடவே
நண்பர்குழாம் நின்ற போது...
மறுபடியும் மீண்டு வந்தேன்!
காசுபணம் பெரிதென்று
பாசத்தை மறந்தன்று
ஏசிவிட்டு என் உறவும்
தூசெனவே சென்ற வேளை....
அப்போது மாண்டு போனேன்!
பாசத்தை நினைவில் வைத்து
நேசத்தை நெஞ்சில் வைத்து
நேசித்தவள் இல்லம் சென்று,
யோசித்த அவள் உறவை
பேசிமுடித்த என் தமக்கை!...
மறுபடியும் மீண்டு வந்தேன்!
கடல்தாண்டி வந்திங்கு
கால் பதியும் நேரத்தில்
காலனவன் வந்தங்கு
கண்மணியாம் என் தாயைக்
கூட்டிச்சென்ற நேரத்தில்
கடைசிமுகம் பாராமல் நான்
கதறிட்ட வேளையினில்...
அப்போது மாண்டு போனேன்!
பித்துப் பிடித்தது போல்
தனித்தன்று திரிந்தபோது
செல்வழியில் ஓர் மாது
இன்முகத்துடன் எனை நோக்கி
என்கவலை போக்கிடவே
இன்சொற்கள் சொல்லிச் சென்றாள்!...
மறுபடியும் மீண்டு வந்தேன்!
இப்படியே ஓராயிரம்
நினைவலைகள் மீண்டு வந்து
என் மனதில் மோதியதில்
எனக்கொன்று தெளிவாச்சு!
சாவென்றும் பிறப்பென்றும்
புவியினிலே ஒன்றில்லை!
ஒவ்வொரு நாளிலுமே
புதிதாய்ப் பிறக்கின்றோம்
மறுபடியும் மரிக்கின்றோம்!
இருக்கின்ற வேளையினில்
இசைவாக வாழ்ந்திட்டால்,
இல்லாத சில பேர்க்கு
இயன்றவரை உதவிட்டால்,
இன்றையப் பொழுதினிலெ
இன்சொற்கள் பேசிட்டால்,
இன்று புதிதாய்ப் பிறந்தோமென
இன்பமாய் நினைந்திட்டால்,
என்றுமே எனக்கு மரணமில்லை!
புனரபி ஜனனம்
புனரபி மரணம்
நாரணனை நாடுங்கள்!
நல்லவராய் வாழுங்கள்!
மரணமென்பது மாண்டுபோவதா?
இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
மனிதத்தை மறப்பதே மரணம்!
தேன்கூடு போட்டியிங்கு
தந்தது ஒரு வாய்ப்பு!
என்மனதில் உள்ளதனை
உண்மையாக உரைத்திட்டேன்!
பரிசினை எதிர்பார்த்து
படிக்கவில்லை இப்பாட்டு!
என் மனது பாரம்
இறங்கியது இன்றெனக்கு!
நன்றி!
வணக்கம்!
அன்புடன்,
எஸ்.கே.
91 பின்னூட்டங்கள்:
நல்லா எழுதி இருக்கிங்க எஸ்.கே
தங்கள் கவிதைநடை மற்றும் உள்ளடக்கம் எனக்கு மெளனியின் "சாவில் பிறந்த சிருஷ்டி" என்ற கதையை நினைவுபடுத்தியது. அக்கதை பேசும் கருத்து வேறு.
(நீங்கள் படித்ததுண்டா? இல்லையெனில் அவசியம் படித்துப் பார்க்கவும்)
ஒப்பிட்டபடி
பச்சோந்தி
//என் மனது பாரம்
இறங்கியது இன்றெனக்கு!//
எஸ்.கே அய்யா, நேரமின்மையின் கரணமாக முழுவதும் மீன்டும் படிக்க வேண்டும். பிறகு பின்னூட்டமிடுகிறேன்
//புதிதாய்ப் பிறக்கின்றோம்
மறுபடியும் மரிக்கின்றோம்!//
ஒவ்வொரு தூக்கமும் ஒரு குட்டி மரணம் தான்.
எப்படித்தான் முடிகிறது உங்களால் இப்படிக் கொட்டிட!
அருமையாக இருக்கிறது.
SK,
// சாவென்றும் பிறப்பென்றும்
புவியினிலே ஒன்றில்லை!
ஒவ்வொரு நாளிலுமே
புதிதாய்ப் பிறக்கின்றோம்
மறுபடியும் மரிக்கின்றோம்! //
வாழ்வின் நிகழ்வுகளோடு அழுத்தம் திருத்தமாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.
போட்டிக்கான வாழ்த்துக்கள்...
//"மரணமென்பது மாண்டு போவதா?"
"கரணம் பலவும் கரைத்துக் குடித்திடினும்
நாரணன் பெயரை நாவில் உரைக்கீரேல்
மரணம் வருங்காலையில் மற்றென் பயன்"என்று
சரணராம் சங்கரரும் அன்றே உரைத்திட்டார்.//
SK ஐயா,
உங்கள் துயர் தருணங்களை, நினைவலைகளின் தூண்டுதலால் மீட்டு எழுதியிருக்கிறீர்கள். கவிதை நடை அருமை. மேலும் உண்மை சம்பவங்கள் என்பதால் பொருள் பொதிந்துள்ளது.
மரணம் காலச் சுழற்சியில் சூரியனையே மறைக்கும் கிரணம் போன்றது ... இருள் சிறிது நேரம் தான். கிரணம் விலகும் பொது வைர மோதிரத்தை தருவது போல ஒரு பேரொளிக்கு பின் நிசத்த அமைதியை அது ஏற்படுத்துகிறது.
ஆனால் கிரணங்கள் கால இடைவேளையில் எப்போதும் ஏற்படுவது பிறவிகளும், பிறவிக்குள் துன்பமும் வந்து செல்வது இயற்கை.
SK,
//காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே//
அருமை.
//கடல்தாண்டி வந்திங்கு
கால் பதியும் நேரத்தில்
காலனவன் வந்தங்கு
கண்மணியாம் என் தாயைக்
கூட்டிச்சென்ற நேரத்தில்
கடைசிமுகம் பாராமல் நான்
கதறிட்ட வேளையினில்...
அப்போது மாண்டு போனேன்! //
சோக வரிகளை நேர்த்தியுடன் சொல்லியிருக்கிரீர்கள்.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..
SK அய்யா,
என்ன சொல்லிப் பாராட்டுவதென்று எனக்குப் புரியவில்லை. பல வேதனையான சங்கதிகளையும், மகிழச்சியான சங்கதிகளையும் அழகாகவும் , எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் கவியாக்க உங்களால் எப்படி முடிகிறது எனப் பல தடவைகள் வியந்திருக்கிறேன். கவிதையின் பல வரிகள் நெஞ்சைக் கனக்க வைக்கின்றன.
/* சாவென்றும் பிறப்பென்றும்
புவியினிலே ஒன்றில்லை!
ஒவ்வொரு நாளிலுமே
புதிதாய்ப் பிறக்கின்றோம்
மறுபடியும் மரிக்கின்றோம்!
இருக்கின்ற வேளையினில்
இசைவாக வாழ்ந்திட்டால்,
இல்லாத சில பேர்க்கு
இயன்றவரை உதவிட்டால்,
இன்றையப் பொழுதினிலெ
இன்சொற்கள் பேசிட்டால்,
இன்று புதிதாய்ப் பிறந்தோமென
இன்பமாய் நினைந்திட்டால், */
அருமை.
/* மரணமென்பது மாண்டுபோவதா?
இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
மனிதத்தை மறப்பதே மரணம்! */
நானும் இக்கருத்துடன் உடன்படுகிறேன். மனிதநேயங்கள் தொலைந்து போனதனால் தான் இன்று உலகின் பல பாகங்களிலும் சண்டையும் சச்சரவும். யேசு பிரானும், புத்தபெருமானும் , நாயன்மார்களும் மீண்டும் இங்கு வந்தால் தான் உலகம் இக் கருத்தைப் புரிந்து கொள்ளுமோ?
/* படித்திருந்த வேளையினில்
பாவையொருத்தியைப் பார்த்துவிட்டு */
/* என் தந்தை மாண்டுபோனார்
என்படிப்பு முடியும் முன்னே!... */
/* நண்பனவன் ஓர் நாளில்
நேசம் மறந்தங்கு
நகர்ந்திட்ட நொடியினிலே...... */
இப்படியான சம்பவங்கள் என் வாழ்விலும் நடந்ததனால், நானும் உங்களைப் போல் இச் சமயங்களில் மரணித்திருக்கிறேன்.
ஆக, அருமையான கவிதை. தேன்கூடுப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//படித்திருந்த வேளையினில்
பாவையொருத்தியைப் பார்த்துவிட்டு
ஒருதலையாய்க் காதலித்தேன்
வேறொருவன்பின் அவள் போனாள்!...
அப்போது மாண்டு போனேன்!
என்மேலும் நேசங்கொண்டு
எனையொருத்தி நாடிவந்து
என்னோடு பழகிடவே
இன்பமாக வந்தபோது....
மறுபடியும் மீண்டு வந்தேன்!
//
நானும்தான் எஸ்.கே! மாண்டு மீண்டிருக்கிறேன்.
//
கடைசிமுகம் பாராமல் நான்
கதறிட்ட வேளையினில்...
அப்போது மாண்டு போனேன்!
//
இது வேதனையான மரணம்தான். :(
//இருக்கின்ற வேளையினில்
இசைவாக வாழ்ந்திட்டால்,
இல்லாத சில பேர்க்கு
இயன்றவரை உதவிட்டால்,
இன்றையப் பொழுதினிலெ
இன்சொற்கள் பேசிட்டால்,
இன்று புதிதாய்ப் பிறந்தோமென
இன்பமாய் நினைந்திட்டால்,
என்றுமே எனக்கு மரணமில்லை!
//
ஆம்! உமக்கு என்றுமே மரணமில்லை.
அருமையான கவிதை தந்திருக்கிறீர். வாழ்த்துக்கள் எஸ்.கே!
முதலில் வந்து படித்துப் பாராட்டியதற்கு நன்றி.திரு. !
அடிக்கடி வாங்க!
மற்றதையும் படித்துச் சொல்லுங்க!
'ஒப்பிட்டவரை' உள்ளளவும் நினை!
மிக்க நன்றி, பச்சோந்தி!
மௌனியின் சில கதைகளைப் படித்திருக்கிறேன்.
இதைப் படித்ததில்லை.
படித்துவிட்டு சொல்கிறேன்.
வழக்கம் போல் தமிழ் துள்ளி விளையாடும் கவிதை.உங்கள் வாழ்வின் நெகிழ்ச்சியான,மகிழ்ச்சியான கட்டங்களை பிறப்பு இறப்போடு ஒப்பிட்டு எழுதியது மிகவும் அருமையாக இருந்தது.உங்களை பற்றி மேலும் அறியவும் உதவியது.பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்
கரணத்தைக் கிரணமாக்கி அருமையாக ஒப்பீடு செய்து அருமையாகக் கருத்தும் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி, கோவி.கண்ணன்.
ஆம், மனசு அவர்களே!
அதைத்தான் வள்ளுவரும்,
'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு'
என அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
உறங்குவது போலும் சாக்காடு எனத்தான் முதலில் தலைப்பு வைக்க நினைத்தேன்!
பிறகுதான் மாற்றினேன்.
மிக்க நன்றி!
நானும்தான் வியக்கிறேன்!
எப்படி முடிகிறது உங்களால் இப்படி அருமையாய்ப் பாராட்ட என!
மிக்க நன்றி, சந்த்ரவதனா அவர்களே!
கனவுகளைப் பற்றி எனக்கும் சில கருத்துகள் உண்டு!
உங்கள் பதிவில் வந்து இடுகிறேன்.
முதன்முதலாக வந்து பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி, இளவஞ்சி [வாத்தியார்] அவர்களே!
பாராட்டி வழக்கம் போல் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி, சிவபாலன் அவர்களே!!
நன்கு படித்து மகிழ்ந்து அனுபவித்து எழுதிப் பாராட்டியதற்கு நன்றி, வெற்றி!
கலாய்ப்பில்லாமல், கனிந்து பாராட்டி, வரிகளை தொடுத்து கருத்து சொல்லி வாழ்த்தியதற்கு....
சொல்ல வார்த்தைகள் இல்லை!
மிக்க நன்றி, சிபியாரே!
வந்த நாள் முதல், இந்த நாள் வரை
வானம் மாறவில்லை! -- உங்களது
அன்பான பாராட்டுகளும், வாழ்த்துகளும் மாறவில்லை,!
மிக்க நன்றி, செல்வன்!
my 2 cents on death
மரணம் பற்றிய மனிதனின் அச்சமே மதம் தோன்ற காரணம் என்பது என் கருத்து.இறப்புக்கு பின் அவ்வளவுதான் என்பதை எந்த மனிதனாலும் தாங்க இயலுவதில்லை.தன் உயிர் அத்தனை வெல்லக்கட்டி அவனுக்கு.
பிரஞ்சத்தின் முன் மனிதன் வெறும் தூசே.
வேதாந்தம் தோன்றியதன் காரணம் வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட மரணபயமாக இருக்கலாம், செல்வன்!
மதம் தோன்றியதற்கு, இவ்வுலக சிந்தனையே காரணம் என நான் கருதுகிறேன்.
ஒரு கூட்டத்தை, சமுதாயத்தை ஓர் வழியில் திருப்புதற்கே மதங்கள் தோன்றியிருக்கலாம்.
பின்னர் அது சுயநலமாய் மாறிப்போனதுதான் பெரிய சோகம்.
தங்களுடைய கவிதை நன்றாக இருந்தது ஆனால் தலைப்பு என்னை உலுக்கியது. ஏன்னென்றால், வள்ளலார்
பாட்டின் தலைப்பை நிங்கள் பயன்படுத்தியதால். அவர் நமக்காக எழுதிய பாட்டு. நாம் அவரைப் போன்று
இன்பப்பேறு அடைவதற்க்கா எழுதிய பாட்டு. அதுதான் உண்மையான மரணமில்லா பெருவாழ்வுப் பாட்டு.
ஆகையால் உண்மை உணர்ந்து தயவு செய்து உங்கள் தலைப்பை மாற்றி அமைக்கவும். நன்றி. சங்கடம்
கொடுத்திருந்தால் மன்னிக்கவும். உங்கள் கவிதையை தற்செயலாக பார்க்க நேர்ந்து தொடர்பு கொண்டனம்.
இதோ அந்த பொன்னா பாட்டின் முகவரி.
http://www.vallalar.org/index.php?option=com_thiruarutpa&mode=0&Itemid=2&tid=6&aid=6134&lang=tm
"புனரபி ஜனனம்
புனரபி மரணம்"
இதற்கு உண்மையான பொருளை தெளிவாக உரைத்து மரணம் என்ற மகத்துவத்தை உணர்த்தி விட்டீர்கள். மரணம் இல்லையென்றால் பிறப்பும் இல்லை, உள்ளது மரிக்க புதியது பிறக்க வழி பிறக்கிறது. அப்படி தினசரி செத்துப் பிழைத்தால் துன்பம் ஏது?
மனமார்ந்த நன்றிகள் ஐயா.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி, திரு. சற்குருபாதம் அவர்களே!
வள்ளலாரை நனும் சற்று அறிந்திருக்கிறேன்.
அவரது 'அருட்பெருஞ்சோதி அகவலைப் பாராயணமும் செய்திருக்கிறேன்.
அந்த 'தனிபெருங்கருணைக்கு' மாசு தேடும் வண்ணம் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.
வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வையும் படித்திருக்கிறேன்.
அவர் எழுதியது 'மரணமிலாப் பெருவாழ்வு' [சுட்டியை மீண்டும் ஒருமுறை பார்க்கவும்]
என் தலைப்பு 'மரணமில்லாப் பெருவாழ்வு' [['ல்' சேர்த்து]
வள்ளலாரின் தலைப்பை நான் கொடுக்கவில்லை, ஒரு விதத்தில்.
நான் சொல்லியிருக்கிற கருத்தும் கிட்டத்தட்ட இதனை ஒட்டியே அமைந்துளது என நினைக்கிறேன்.
மேலும் , தேன்கூடு போட்டி விதிகளின் படி எதையும் மாற்றலாகாது என்று இருக்கிறது.
எனவே, என் விளக்கம் உங்களுக்கு சமாதானம் இல்லையெனில், 20 தேதிக்குப் பின் தலைப்பை மாற்றி விடுகிறேன்.
உங்கள் எண்ணத்தைச் சொல்லவும்.
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
தங்களது புரிதலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, மா. சி.
இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
உள்ளத்தைத் தொட்டப் பதிவு எஸ்.கே. உள்ளதை உள்ளபடி சொல்ல உங்களுக்கு இயற்கையாக வருகிறது.
'உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பத்கை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது'
'படிக்காதமேதை'யில், சிவாஜி, காம்பினேஷனில் வரும் அற்புதமான பாடல் என்னை மிகவும் பாதித்த ஒன்று.
அந்த 'பஜகோவிந்தம்' முதல் பாடலின் என் தமிழாக்கத்தைப் பற்றி ஏதாவது சொல்வீர்கள் என எண்ணீனேன்!! :)(
மிக்க நன்றி, குமரன்.
சொல்லத்தான் நினைத்தேன் அந்த வரிகளைப் படிக்கும் போது எஸ்.கே. ஆனால் முழு பதிவையும் படித்து பின்னுட்டங்களையும் படித்து முடித்த போது அது மறந்து போனது. :-)
பஜகோவிந்தத்தின் முதல் பாடலுக்கு அருமையான மொழிபெயர்ப்பு. பஜகோவிந்தத்தின் கருத்துகள் பலவற்றை இந்தக் கவிதையில் கண்டேன்.
ரொம்ப வித்தியாசமான சிந்தனை. அதை வெளிப்படுத்திய விதமோ அதை விட அழகு.
வேற என்ன சொல்வது.அவன் அருள் முன்னிற்கும்.
என்னங்க, இப்படி சொல்லிட்டீங்களே!
ரொம்ப மகிழ்வாய் இருக்கிறது!
மிக்க நன்றி, இலவசக் கொத்தனாரே!!
அவன் அருளில்லாமல் ஏது!
"கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல
மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி!"
நான் ரசிக்கும் இன்னொரு பாட்டை நினைவு படுத்தியதற்கு நன்றி, திரு. M.G.R [ரகு]!
கண்டிப்பாக மயில் வரும்!
பொதுவா எனக்குக் கவிதை நடையில் இருக்குறதைப் படிக்கக் கொஞ்சம் கஷ்டம்தான்.
ஏன்னா, அவ்வளவாத் தமிழ் தெரியாது.
ஆனாலும், இது சுலபமாப் புரிஞ்சுக்கற மாதிரி இருந்ததாலே படிச்சேன்.
செத்துச் செத்துப் பிழைக்கறதுதான் மனித வாழ்வுன்னு புரியுது.
'அய்யோ, ஆடிப்போயிட்டேன், உயிர்போய் உயிர்வந்தது 'ன்னெல்லாம் சொல்றோம் இல்லையா?
நிஜமாகவே ஒருதரம் கிள்ளிப் பார்த்துக்கிட்டேனுங்க!
'நான் காண்பதென்ன கனவா இல்லை நனவா?
என் பதிவில் இன்று பின்னூட்டம் இட்டது
விண்ணுலக மங்கையா,
இல்லை,
மண்ணுலக நங்கையா'
அப்படீங்கற "நவராத்திரி' சிவாஜி வசனம்தான் நினைவுக்கு வந்தது!
ரொம்ப நன்றிங்க!
இல்லைன்னா, KBஸ் பாடின,
'கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?'ங்கற பாட்டைக் கூட சொல்லலாம்!!
:))
:))
//இல்லைன்னா, KBஸ் பாடின,
'கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?'ங்கற பாட்டைக் கூட சொல்லலாம்!! //
சொல்லலாம்தான்.... ஆனா....அடுத்த வரி பிழையாப்போகுமே
'குழந்தையின் வடிவிலே யார்வந்தது?'
50+ குழந்தைன்னா Okay :-))))
நான் சொன்னது உங்க மனசை!!
:)
என்ன இங்கே ஒரே இளமை துள்ளலா இருக்கு :)
மற்றொரு பதிவில் வந்து வயதானவன்னு சொல்லிவிட்டு
இங்கு வந்து 'துள்ளி விளையாடுகிறேன்' எனச் சொல்லி,கலாய்த்து
கூடவே பாராட்டியதற்கு மிக்க நன்றி, கோவி.கண்னன்!
SK Sir,
ஒரு சீரியஸ் கேள்வி
சங்கு தாங்கி நிற்பவர் மகாவிஷ்னுவா ? சங்கரனா ?
மஹாவிஷ்ணு.
அவர்தான் சங்கு சக்கர கதாபாணி.
//SK said...
மஹாவிஷ்ணு.
அவர்தான் சங்கு சக்கர கதாபாணி. //
சங்கரனும் மகாவிஷ்ணுவும் இருவருமே சரியான பதில்.
பாதி சரியாக சொன்னதால் வெறும் பாதி 'பார' தான் (ட்டுக்கள்) இல்லை
:)
மகாவிஷ்ணு போர் முரசு ஒலிக்குமுன் ஏந்தியது சங்கு
சங்கரன் உண்ட ஆலகால விசத்தை தாங்கியது அவருடைய சங்கு
'சங்கறுப்பது எங்கள் குலம் .. சங்கரானாறுக்கு ஏது குலம்' ஏபி நாகராஜனின் திருவிளையாடல் வசனம்.
சங்கு - என்பது தொண்டை
ஆலகால விசம் பாற்கடலில் வந்த போது அதை எடுத்து சங்கரன் விழுங்க... அதைத் அவரின் சங்கில் கைவைத்து தடுத்தாள் உமையாள்.. ஆல விசம் கீழே செல்லாமல் சங்கு தாங்க நின்றார் சங்கரர்.
இந்த நிகழ்சி எனக்கு கிறித்துவ தத்துவத்தையும் ஞாபகப்படுத்துகிறது. அதாவது ... உலக மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக தான் இரத்தம் சிந்துவதாக சொன்னார் ஏசு நாதர்.
எனக்கு ஏதோ விசயம் தெரியும் என்பதற்காக இந்த கேள்வியை எழுப்பவில்லை. அவரவர் வழி அவர்க்கே என்றதால் பின்னூட்டம் போடுவதற்கே யேசனையாக இருந்தது. இருந்தாலும் ஏதாவது விவாதம் நடத்தவேண்டுமே. sk என்பதற்கு எக்ஸ்பான்சன் தெரியவர அந்த பெயரில் ஒரு 'பிட்ட' போட்டுப் பார்த்தேன் அவ்வளவு தான் :))
'சங்கு' இருப்பவர் எல்லாம் சங்கரன் என்றால் இங்கு எல்லோருமே சங்கரன்கள்தான்!
உங்கள் கேள்வியை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும்!
//சங்கு தாங்கி நிற்பவர் மகாவிஷ்னுவா ? சங்கரனா ? //
'சங்கு' தாங்கி நிற்பவர் விஷ்ணு மட்டுமே
சங்கில் 'விடம்' தாங்கி நிற்பவர்தான் சங்கரன்.
அடுத்த முறையாவது சரியான கேள்வி கேட்கவும்!!
:))
சங்கரன் என்ற சொல்லை வைத்து நீங்கள் சொல்விளையாட்டு ஆடுகிறீர்கள். ஆனாலும் பேசாமல் ஒதுங்கிப் போக முடியவில்லையே.
சம் + கர: என்பதே சங்கர: என்று ஆனது. மகிழ்ச்சியை உண்டுபண்ணுபவன் என்று பொருள். அதனால் யார் யாரெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சங்கரர்கள் தான். :-) ஆனால் சங்கரர்கள் எல்லாம் மகிழ்ச்சியைக் கொடுப்பார்களா? :-) இளைஞர்கள் எல்லாம் குமரர்கள் தான்; ஆனால் குமரர்கள் எல்லாம் இளைஞர்களா? என்பதைப்போல் தான் அது. :-)
//அடுத்த முறையாவது சரியான கேள்வி கேட்கவும்!!
//
ஆமாம் கேள்வியை போட்டுவிட்டுதான் யோசித்தேன். கேள்வி கொஞ்சம் சறுக்கிடுச்சி ... ஆனால் நான் சொல்ல வந்த விசயம் அதுதான் :(((
ஒரு வேளை இப்படி கேட்டிருக்க வேண்டும்
சங்கின் மூலம் காத்து நிற்பவர் யார் என்று கேட்டிருக்க வேண்டும்.
:(((
ஆடிமாதம் ஆத்திகம் தவிர என்னிய மாதிரி ஆளுங்களோட பதிவு படிக்க கூடாதுன்னு ஏதும் விரதம் இருக்கா ?
:((((
கோவி 'சங்கரன்' என்ற சொல்லை வைத்து ஆடியதல் அவர் வழியிலேயே செல்லும்படி ஆயிற்று.
மற்றபடி நீங்கள் சொன்ன ஷம்+கரன் என்ற விளக்கம்தான் சரியானது, குமரன்!
நன்றி.
உங்கள் தமிழோடு விளையாடுவது ஒரு சுகமான அனுபவம், கோவி.
சும்மா கேளுங்க!
அத்துடன், கொஞ்சம் வேலை மும்முரத்தால் வர முடியவில்லை.
இன்றைக்குள் எல்லாவற்றுக்கும் ஈடு கட்டிவிடுகிறேன்!
:))
//ஆனால் சங்கரர்கள் எல்லாம் மகிழ்ச்சியைக் கொடுப்பார்களா? :-) இளைஞர்கள் எல்லாம் குமரர்கள் தான்; ஆனால் குமரர்கள் எல்லாம் இளைஞர்களா? என்பதைப்போல் தான் அது. :-)//
பெயர் தெரிந்தவுடன் ஆளாளுக்கு விளையாடுறீங்களே!!
நடத்துங்க சாமி!
:))
நான் சங்கு - சங்கரன் என்று சொல்லவில்லை.
சங்கு தொண்டை என்று தான் சொன்னேன்.
குமரன் சங்கரன் தான் - மகிழ்சியை கொடுப்பவர்
சங்கர் குமாரரும் - சங்கரன் தான் - மகிழ்சியை கொடுப்பவர்
கண்ணன் ? :((((
சங்கை வைத்து சங்கரனைச் சேர்த்து விளையாடினோம் எனத்தான் சொல்லுகிறேன்!
ஆனந்தத்தின் மொத்த உருவே கண்ணன் தானே!
இதில் ஏதேனும் ஐயம் உண்டோ!
//சங்கு தாங்கி நிற்பவர் மகாவிஷ்னுவா ? சங்கரனா ?
//
பெயரில் தாங்கி நிற்பவன் சங்கரன்,
கரத்தில் தாங்கி நிற்பவன் பார்த்தசாரதியான மஹாவிஷ்ணு!
(கோவியாரே, உங்களைப் போலவே இவ்விருவரும் ஒன்றுதானே, பிறகென்ன இக்கேள்வி)
//இளைஞர்கள் எல்லாம் குமரர்கள் தான்; ஆனால் குமரர்கள் எல்லாம் இளைஞர்களா?//
குமரன்,
தங்கள் வயதைப் பற்றியும் இதிலேயே சொல்லி விட்டீர்கள்.
:))
//உங்கள் தமிழோடு விளையாடுவது ஒரு சுகமான அனுபவம், கோவி.
சும்மா கேளுங்க!//
திருவிளையாடல் படத்தில் சிவன் அதாவது சங்கரன்... கோபமாக நெற்றிக்கண்ணைத் திறந்து நக்கீரனை எரித்துவிட்டு பின் உயிர்பித்து ... 'உங்கள் தமிழோடு விளையாடவே நாங்கள் இங்கு வந்தோம்' enpaar
அதற்கு நக்கீரன்
'தமிழ்மேல் உள்ள பற்றின் காரணமாக அவ்வாறு நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் என்று கூறினேன் என்னை மண்ணியுங்கள் தவறு இருந்தால் ' என்று தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசுவார்.
சிபியார் வந்து விட்டாரா!
இனிமே அவ்வளவுதான்!
கோவி. இனி உங்க பாடு; அவர் பாடு!
சமாளிங்க பார்ப்போம்!
ரெண்டும் ரெண்டு வல்லிய கையு!
ஆண்டவா!
அதே! அதே!
கோவி, சரியா பிடிச்சுட்டீங்க!
// SK said...
சிபியார் வந்து விட்டாரா!
இனிமே அவ்வளவுதான்!
கோவி. இனி உங்க பாடு; அவர் பாடு!
//
அது எப்படி வரம் கொடுத்தவங்க தலையில் கைவைப்பது தானே மரபு :))
//அது எப்படி வரம் கொடுத்தவங்க தலையில் கைவைப்பது தானே மரபு :))
//
சபாஷ் கோவியாரே!
கூட்டணிக் கொள்கையை எள்ளளவும் பிசகாமல் புரிந்து கொண்டீர்.
//ஆலகால விசம் பாற்கடலில் வந்த போது அதை எடுத்து சங்கரன் விழுங்க... அதைத் அவரின் சங்கில் கைவைத்து தடுத்தாள் உமையாள்.. ஆல விசம் கீழே செல்லாமல் சங்கு தாங்க நின்றார் சங்கரர்//
தன் சங்கை (தொண்டையை) அரணாக வைத்து ஆலகால விஷத்தை நிறுத்தி
தேவர்களைக் காத்ததால்தான் பரமசிவன் சங்கரன் என்று ஆனாரோ
எஸ்.கே?
//அது எப்படி வரம் கொடுத்தவங்க தலையில் கைவைப்பது தானே மரபு :)) //
//சபாஷ் கோவியாரே!
கூட்டணிக் கொள்கையை எள்ளளவும் பிசகாமல் புரிந்து கொண்டீர்.//
கோவியாரே!
இப்படித்தான் வருவாள்
மோகினியும்!
எரிந்து போவான்
கை வைக்க நினைத்தவனும்!!!!
ஜாக்கிரதை!
:)
வரம் கொடுத்தவனுக்கு எப்படி சமாளிப்பது என்பதும் தெரியும்!!
//சங்கரன் என்ற சொல்லை வைத்து நீங்கள் சொல்விளையாட்டு ஆடுகிறீர்கள். ஆனாலும் பேசாமல் ஒதுங்கிப் போக முடியவில்லையே.
சம் + கர: என்பதே சங்கர: என்று ஆனது. மகிழ்ச்சியை உண்டுபண்ணுபவன் என்று பொருள். அதனால் யார் யாரெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சங்கரர்கள் தான். :-) //
இதற்கான விளக்கத்தை குமரன் மிக அழகாக மேலே கொடுத்திருக்கிறார் பாருங்கள், சிபியாரே!
//கோவியாரே!
இப்படித்தான் வருவாள்
மோகினியும்!
எரிந்து போவான்
கை வைக்க நினைத்தவனும்!!!!
ஜாக்கிரதை!
:)
//
இன்று ஆளாளுக்கு பெயரை வைத்து விளையாட ஆரம்பித்து விட்டீர்கள்.
:)
வரம் கொடுத்தவர் வரத்தை சமாளிக்கும் திறனும் உடையவராகத்தானே இருப்பார்.
:))
//கோவியாரே!
இப்படித்தான் வருவாள்
மோகினியும்!
எரிந்து போவான்
கை வைக்க நினைத்தவனும்!!!!
ஜாக்கிரதை!//
அசுரன் வேண்டுமானல் எரிந்து போவான் !
கிருஷ்ணனா வருவது மோகினியாக அல்லவா ?
அது சரி
காமத் தீயில் எரிந்தது சங்கரனா ? கிருஷ்ணனா ?
எந்த மோகினியைச் சொல்கிறீர்கள் எஸ்.கே? ஜகன் மோகினியையா? அந்தப் படத்தைப் பார்த்து நான் சிறுவயதில் ரொம்பப் பயந்துட்டேன். :-)))
காமத்தீயை[மன்மதனை] எரித்தது சங்கரன்.
காமத்தீயாய் வந்து அழித்தது நாரணன் எனும் மோகினி!
அருமையான மனதை தொட்ட கவிதைப்பதிவு..
மிக அழகாக எழுதுகிறீர்கள்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
மகிழ்வோடு நன்றி சொல்லி வாழ்த்துக்கு வணங்குகிறேன், 'மனதின் ஓசை' அவர்களே!
//SK said...
காமத்தீயை[மன்மதனை] எரித்தது சங்கரன்.
காமத்தீயாய் வந்து அழித்தது நாரணன் எனும் மோகினி!
//
காமத்தீயை அம்பில் வைது எறிந்தது மன்மதன்
காமத்தீயில் எரிந்தது சங்கரன்
காமத்தீயை அணைக்க சங்கரனை அணைத்தது மோகினி
இந்த காமத்தீயில் பிறந்தது ஹரிஹர சுதன் - ஐய்யப்பன்
//குமரன் (Kumaran) said...
எந்த மோகினியைச் சொல்கிறீர்கள் எஸ்.கே? ஜகன் மோகினியையா? அந்தப் படத்தைப் பார்த்து நான் சிறுவயதில் ரொம்பப் பயந்துட்டேன். :-)))//
அடுப்புக்குள் காலைவிட்டு வெள்ளை ஜகன் மோகினி எரிக்கும் ...நானும் பார்த்திருக்கிறேன்... விட்டலாச்சாரியார் படம்... ஜெயமாலினி காலத்து ஆளா நீங்கள் ?
ஜகன் மோகின் படம் வந்தப்ப நான் குட்டிப் பையன் கோவி.கண்ணன். ஜெயமாலினி எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் படம் பார்த்து பயந்தது மட்டும் நினைவில் இருக்கிறது.
எஸ்கே,
மிக நல்ல எழுத்து நடை. கற்பனை வளம் இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு நல்ல நடை வராது. மிகுந்த பாராட்டுக்கள். பிடியுங்கள் ஒரு குத்தை.
//கற்பனை வளம் இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு நல்ல நடை வராது. //
????
:-))))
உங்கள் கதையை எங்களுக்கு சொல்லி எம்மனதில் மேலும் ஒரு இடம் பிடித்த அன்பரே வாழ்க நீர் என்றென்றும்.
எஸ்கே அய்யா... எதாவது பின்னூட்டம் வரும் (மேலே எழுதியதற்கு) ... கச்சேரியை ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன் ஏமாற்றிவிட்டீர்கள் :(((
உன் பேனா ... முரணா ? விளக்கியிருக்கிறேன். உங்கள் பார்வைக்காக.
http://govikannan.blogspot.com/2006/07/vs.html
//பிடியுங்கள் ஒரு குத்தை. //
// ???? :-)))) //
குமரன் இப்பத்தான் புரியுது இது உள்குத்துன்னு ... :)))
வித்தியாசமான விதத்தில் பாராட்டிய பா.கணேசன் அவர்களே!
மிக்க நன்றி!
உங்கள் கேள்வியை குமரன் கலாய்த்திருக்கிறார்!
நீங்கள் வந்து சொல்லுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
என் கருத்தைச் சிறிது நேரம் கழித்துச் சொல்லுகிறேன்!
கதையையே மாற்றிவிட்டீர்கள் கோவி.!
மன்மதந்தான் காமதேவன்!
தவத்தில் ஆழ்ந்திருந்த சிவனை பார்வதியை மணக்கவைக்க வேண்டும் என்பதற்காக,
பிரமனும், மற்ற தேவர்களும் வேறு வழியில்லாமல், எரிவான் எனத் தெரிந்தே
காமனை அனுப்பி வைக்கின்றனர்!
பயத்துடனேயே, மன்மதனும் அம்பை எறிகிறான்.
கண் விழித்துப் பார்த்ததுமே எரிந்தான் காமன்.
பின் பார்வதியை மணந்து முருகனைப் பெற்று........
அது தான் கந்த புராணம்!
நீங்கள் சொல்வது பாற்கடலில் வந்த ஆலகால விடத்தை
சிவன் எடுத்து விழுங்க,
பார்வதி கணவனின் சங்கைப் பிடித்து நிறுத்தி,
அங்கேயே தங்கச் செய்தாள்!
பின்னர் வந்தது அமிர்தம்!
அசுரர்களை ஏமாற்ற, சங்கன்[விஷ்ணு]
மோகினி வடிவெடுத்து தேவர்களுக்கே அதைக் கொடுத்த பின்னர்,
ஐயப்ப அவதாரம் வர வேண்டி, ஹரி, ஹரனின் சக்திகள் ஒன்றாகி பம்பைக் கரையில் எழுந்த குழந்தையே ஹரிஹரசுதன்!
இரண்டையும் கலந்து விட்டீர்களே!!
இப்போது தொடங்கலாம்!1
:))
நீங்க வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி, ஜீவா அவர்களே!
எஸ்கோ அய்யா... நீங்கள் சொல்வது கந்தபுராணம் ... அதில் காமன் அம்பை எரிந்தான் ... காமத் தீயை எறித்தான் ... நெற்றிக்கண்ணால் எறிந்தான். (அது முதல் கதை)
நான் சொன்னது இரண்டாவது ஐயப்ப அவதாரம்.
வரன் கொடுத்தவன் தலையில் கைவைக்க அசுரன் ஓடிவர ... ஓடி ஒளிந்த சங்கரனை காப்பாற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரமாக வந்து அரக்கனை அழித்து பின் சங்கரன் மோகினி அழகில் மயங்க ( இங்கு நான் காமன் விடுபட்டதால் நானே சேர்த்தேன்) சமயம் பார்த்து செயல்பட்டு காமன் எய்த அம்பினால் .. ஹரி ஹரனை இணைந்தார்கள். இந்த புராணத்தில் காமனை வேண்டுமென்றெ இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஒரு வேளை தகாத உறவென்று காமன் இல்லாமலே (காமன் இல்லாத காமம் ??) புராணத்தை எழுதிவிட்டார்களோ. யாம் அறியேன் பராபரமே.:)))
//நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை! வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!//
எஸ்கே அய்யா ... இந்த வரியை என்னுடைய 'குண்டு வெடிப்பு' பதிவில் பின்னூட்டத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். :))))))))
கற்பனை வளம் அபாரம்.
தங்கள் சித்தம்!
என் பாக்கியம்!
மிக்க நன்றி, கோவி.
கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது ? குழந்தையின் வடிவிலே யார் வந்தது ?
சங்கர் என்றால் சிவன் ; குமார் என்றால் மைந்தன் ; சிவமைந்தன்
அதாவது பழனி மலை முருகன் - ஆகவே .... மருத்துவர் ஒரு சித்த மருத்துவர் ; சித்தம் தெளியவைக்கும் மருத்துவர் :)))))))))
//SK said...
கதையையே மாற்றிவிட்டீர்கள் கோவி.!
//
இதற்கு நான் போட்ட பின்னூட்டத்தை காணவில்லை :(((
நான் குறிப்பாக பாராட்ட விரும்பியது உங்களுடைய எழுத்து நடையை. கில்லி தரணியின் திரைக்கதை போல.
மிக்க நன்றி, ராபின் ஹூட் அவர்களே!
முதன்முறை வருகிறீர்கள் என நினைக்கிறேன்!
நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன், பா. கனேசன்!
குமரன் வந்து பதில் சொல்லுவார் எனக் காத்திருந்தேன்
கற்பனை வளம் மனதில் சுரந்தாலும், எழுத்தில் அப்படியே வடிப்பது கடினம் என்பதைத்தானே குறிப்பிட்டீர்கள்?
பாலசந்தர் கணேசன். நானும் புரிந்து கொண்டேன் நீங்கள் சொன்னதை. அது சும்மா கலாய்ப்பதற்காக. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஒரு தடவை ஞானப்பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டார் என்பதற்காக கனேசனை கலாய்கிறாரா குமரன் ... ம் . ம் நடக்கட்டடும் . :))
//ஒரு தடவை ஞானப்பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டார் என்பதற்காக கனேசனை கலாய்கிறாரா குமரன் ... ம் . ம் நடக்கட்டடும் //
நல்ல திருவிளையாடல்தான்.
Post a Comment