"அ.அ.திருப்புகழ்". -- 3 "முத்தைத்தரு"
""அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3""
"முத்தைத்தரு"
ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான
........பாடல்.......
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.
"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "
முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்கு
ஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனே
தேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்ட
தேவயானை எனும் கரிமகளின் நாயகனே!
"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"
அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட
சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்ற
சரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!
முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!
தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி
தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற
குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!
"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"
என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு
முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளான
சுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து
அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த
பிரமன் திருமால் இருவரும் கூட
முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து
நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,
"பத்துத்தலை தத்தக் கணை தொடு"
திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட
தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ
அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,
"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"
ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினை
மத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,
"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"
அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே
மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே
அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை,
"மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள்
என்மகனின் மறைவுக்குக் காரணமான
ஜயத்திரதனைக் கொல்லானேயாகில்,
அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என
சூளுரைத்த பத்தனைக் காக்கவென
'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்து
தன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்து
சூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே
வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனை
விரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,
"பத்தற்கு இரதத்தைக் கடவிய"
இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும்
அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத்
தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட
"பச்சைப் புயல்"
மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்
"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"
மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ
பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்
உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!
[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]
"தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"
தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாக
முத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த
நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து
பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும்
எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,
"கழுகொடு ..... கழுது ஆடத்"
பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன்
பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,
"திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"
எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும்
அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும்
ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,
"கொத்துப்பறை கொட்டக்"
கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற
பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,
"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்று எழ"
பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட
கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து
குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" என
கூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று
இட்டமுடன் மேலே எழுந்திடவும்,
"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"
தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும்
இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களை
வெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,
"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."
அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட
கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு
பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று
அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!
*************************************************************************************
[அருஞ்சொற்பொருள்: அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;
சுருதி:: வேதம்;
ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;
திகிரி: சக்கரம்;
பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்; பரிபுர:: சிலம்புகள் அணிந்த;
கழுது:: பேய்கள்;
சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;
கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்; முதுகூகை:: கிழக்கோட்டான்;
கொட்பு:: சுழலுதல்;
அவுணர்:: அரக்கர்;
குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை; பொரவல:: போர் செய்ய வல்ல;
பெருமாள்:: பெருமை மிகுந்தவர்]
*************************************************************************************
அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.
அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்.
"என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்.
"முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.
அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!
*************************************************************************************
'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.
இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.
பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*************************************************************************************
54 பின்னூட்டங்கள்:
அருமையான பாடலும் விளக்கமும் !
சிவாஜி இந்த படத்தில் நடித்ததாய் ஞாபகம் .
நன்றி
வணக்கம், கார்திக்வேலு,
சிவாஜி அல்ல, ......
டி.எம்.எஸ் நடித்துப் பாடி வெளிவந்த அருணகிரிநாதர் என்னும் படத்திலும் இப்பாடல் இடம் பெற்றது!
வருகைக்கு நன்றி!
திருவருட் செல்வர் படப்பாடல் - சிவாஜியின் நடிப்பும்... டிஎம் எஸ் சின் கனீர் குரலும் அந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் சிலிர்க்கும் ...).
*இந்த நாள் இனிய நாள்*
திருப்புகழின் முதல் பாடல் அருமையிலும் அருமை. ஒவ்வொரு வரியும் படிக்கப் படிக்கப் பரவசமாக இருக்கிறது. எத்தனைப் பொருட்செறிவு? எத்தனைச் சொல்லழகு? அற்புதம். அற்புதம்.
அழகாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் எஸ்.கே. முதல் எழுத்தாகிய மு என்பதற்கு பிரணவம் என்று பொருள் உரைத்தது மிகப் பொருத்தம். பெருநூல்கள் பெரும்பாலும் அகரத்திலோ மகரத்திலோ உகரத்திலோ தான் தொடங்கியிருக்கின்றன. மூன்றையும் சேர்த்து திருப்புகழ் முகரத்தில் தொடங்கியிருக்கிறது. :-)
டி.எம்.எஸ். நடித்து 'அருணகிரிநாதர்' திரைப்படத்தில் பாடிய இந்தப்பாடலில் சுட்டி:
http://www.musicindiaonline.com/p/x/gJfgFjerN9.As1NMvHdW/
நீங்கள் கட்டாயம் சுட்டி கொடுப்பீர்கள் என நMபிக்கையுடன் இருந்தேன், குமரன்!
மெய்யாக்கியதற்கு நன்றி!
நான் முன்னமே குறிப்பிடது பொல இது டி.எம்.எஸ் அவர்களால், நடித்துப் பாடி வந்த அருணகிரிநாதர் படத்திலும் வரும் பாடல், கோவி. கண்ணன்.
உண்மையில் பாடி ஆடி அடங்கியவர் நம் அருணகிரிநாதர்!!!
அருமையான முத்துப் பாடல்.
பாடலைப் பார்த்தவுடன்
டி.எம்.எஸ் குரல் கூடவே ஒலிக்கத் துவங்குகிறது.
மிக நல்ல விளக்கம்.
நன்றி எஸ்.கே.
ரகு ஐயா, இது நான் கேட்டிராத ஆனால், மிக ரசிக்கும் இருவரின் பாடல் என அறிந்து மகிழ்கிஒறேன்.
இத சுட்டி கொடுக்க முடியுமா?
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
வாரம் ஒருமுறை வாருங்கள்!!
குமரன் - தகவல் களஞ்சியமாக இருக்கிறீர்கள். அந்த தொடுப்பிற்கு சென்று இப்பொழுது தான் பாடலைக் கேட்டேன். எடுத்துப் போட்டதற்கு நன்றி ... பாடலை நினைவு படுத்திய எஸ்கே அய்யாவிற்கும் நன்றி
மிக்க நன்றி, மனு அவர்களே!
வாரம் ஒருமுறையாவது வாருங்கள்!
திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள்.எஸ்.கே எழுதிய உரையை படிக்கும்போது கணிணியே பக்தி மணம் கமழ்கிறது.
இந்தப்பாடலை வேகமாக பாடினால் தற்போதைய மேற்கத்திய இசைக்கு கூட பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது
பதிவின் தலைப்பு தமிழ்மணத்தில் குளறுபடி ஆகி வருகிறது,கவனித்தீர்களா?கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டு இந்த மாதிரி ஆகியிருக்கிறது என நினைக்கிறேன்.
வெறும் பாடலாகக் கேட்டுபழகிய காதுக்கு பாடல் அர்த்தத்துடன் படிப்பவது ஆனந்தம்.
பரவசமாக
பச்சோந்தி.
திருப்புகழில் எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது.. அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்தது நன்றாக இருக்கிறது..
"பக்கரை விசித்திர மணி" அடுத்து வருமா?
நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது, பொன்ஸ்!
இரண்டாவது பாடல்,
தொலைந்து போனதாய் நான் உங்களைக் கூப்பிட்ட பாடல், நாகைசிவா எனக்கு அனுப்பி உதவிய பாடல்,
அ.அ.தி. -- 2 "பக்கரை" தான்!!
அதையும் படித்துச் சொல்லுங்கள்!
நன்றி, செல்வன்!
ஆமாம்! கடைசி நேரத்தில் தலைப்பை மாற்றியதால் ஏற்பட்ட குழப்பம்!
வெறுமே 1,2, 3 எனப் போட்டால் மக்கள் பார்ப்பதில்லை என்பது, இப்போது பொன்ஸ் இட்ட பதிவாலும், தி.ரா.ச. ஐயா இன்னும் இரண்டாவதைப் பற்றி அறியாமலிருப்பதும் வைத்து,
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 2, 3 எனப் போடாமல்,
'அ.அ.திருப்புகழ் -- 3 "முத்தைத்தரு"'
எனப் போட்டேன்.
அப்படியே அதைக் கொட்டைஎழுத்தாக்கினேன்.
வந்தது வினை!
இருந்தும் அவ்வளவு ஒன்றும் மோசாமயில்லை!
அருமையான பாடலும் விளக்கமும்.
நன்றி
இப்பாடலை் இரு நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த எனக்கு இந்தப் பதிவு உதவியது.
நன்றி.
//நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது, பொன்ஸ்!//
:)))
இந்த வாரமே படிச்சது மாதிரி ஒரு நினைவு இருந்தது.. நீங்க போட்டீங்களா குமரன் போட்டாரான்னு சந்தேகம்.. உங்க பழைய பதிவுகள்ல இல்லையேன்னு கேட்டேன். புதுப் பதிவில வந்துடுச்சா?!! .. சரி சரி.. :))
மிகச் சிறந்த சேவை திரு எஸ்கே அவர்களே!
இந்தப் பதிவு என்னுடைய சந்தேகங்கள் சிலதை தீர்த்து வைத்திருக்கிறது.
'பக்கரை ..." பாடலை நேயர் விருப்பமாக கேட்ட பொன்ஸுக்கு நன்றி.
அருமையான பாடல் எஸ்.கே. இந்த பாடலை அடிக்கடி கேட்டு இருக்கின்றேன். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் படிக்க முடிந்தது. வருஷம் 16 இல்லை வேறு ஏதோ ஒரு படத்தில் கூட இந்த பாட்டின் பாதி வரிகள் வரும்.
நல்ல பாடல், அருமையான விளக்கம்.
வாழ்த்துக்கள்.
எஸ்.கே.
ஒரு சின்ன வேண்டுக்கோள், திரு. குமரன் அவர்கள் கொடுக்கும் பாடலுக்கு ஆன சுட்டியை உங்கள் பதிவில் கொடுத்தால் எதிர்காலத்தில் வரும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி., திரு. ஓகை.
சிலதுதான் தீர்ந்திருக்கிறதா?
வேறென்ன மீதி?!!
'பக்கரை' 2-வது பதிவு.
படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்./
மறக்காமல், தவறாமல் வந்து படித்துப் பாராட்டியதற்கு நன்றி, 'நன்மனம்'
தங்களுக்கு இது உதவியாய் இருந்ததற்கு அந்த முருகனுக்கு நன்றி!
உங்களுக்கும்தான், நயனன்!!
மிக்க நன்றி, நாகை சிவா.
நீங்கள் சொன்ன 'சுட்டி' கொடுப்பதை விரைவில் செய்து விடுகிறேன்.
கணினி அறிவு சற்றுக் குறைவு!
[மற்றதெல்லாம் என்ன ஒழுங்கு என சிபியார் கேட்பது காதில் விழுகிறது!]
குமரன் கொடுத்த சுட்டியை என் பதிவில் சேர்த்து மீண்டும் ரீ-பப்ளிஷ் செய்ய வேண்டும், சரிதானே?
இல்லை வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?
வணக்கம் சார்,
இந்த பாடலுக்குப் பொருள் தெரிந்து கொண்டமையில் மிக்க மகிழ்ச்சி. இது வரை வெறும் சொற்களாக ரசித்த இப்பாடலை இனி பொருளுடன் கேட்டு ரசிப்பேன்.
//[ommuruga41@yahoo.com]//
சார்! நீங்களா? வேறு ஒரு குழுமத்தின் மூலமாகத் தங்களை ஏற்கனவே அறிவேன். ஆனால் இது நாள் வரை அது தாங்கள் தான் என அறிந்திலன். அங்கு தாங்கள் ஆற்றிய பணி அளப்பிடற்கரியது என்று இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
ரசிப்புக்கும், நினைவில் கொண்டு சொன்னதற்கும், எனது மனமார்ந்த நன்றிகள்!
அதில் உங்கள் புனைப்பெயர் எது??!!!
என்னுடைய 'ஆறு' பதிவில் கூட அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே!!
//அதில் உங்கள் புனைப்பெயர் எது??!!!//
அதில் எனக்கு புனைபெயர் எதுவும் கிடையாது ஐயா. என்னுடைய சொந்தப் பெயரான மோகன் ராஜ் என்ற பெயரில் தான் அந்தக் குழுவில் இருந்தேன். 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்ற உண்மையைச் சென்ற ஆண்டு அறிந்து பரவசப்பட்டு எழுதியது இதோ.
திருவாசகத்துக்கு உருகியவன். இவ்வொலிப் பேழையை வெளிக் கொண்டுவருவதிலும், அதன் வாயிலாக இப் பரவச அனுபவத்தை நான் உணரத் தாங்களும் ஒரு காரணம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
//என்னுடைய 'ஆறு' பதிவில் கூட அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே!!//
மன்னிக்க வேண்டும். தவற விட்டுவிட்டேன். இப்போது தான் படித்தேன். தங்கள் ஆறு பதிவும் அருமை.
முத்தைத் திரு பத்தித் திருநகை...முருகா....அருமையான விளக்கம் SK. மீண்டும் படித்துக் கருத்திடுகிறேன்.
முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை என்ற முதல் வரியே மனம் முழுதும் நிரப்பிய பிறகு அடுத்தடுத்த வரிகளுக்குப் போக முடியாமல் நெஞ்சமும் தவிக்கம் ஆனந்தத்தைச் சொல்ல முடியுமா....இந்தத் திருப்புகழை எடுத்தால் முதலடியிலேயே நான் மூழ்கி விடுவதால் பின் செல்வது மிகக் கடினமாகி விடுகிறது என்பதே உண்மை. ஆனால் பாடலாகக் கேட்கையில் முன்னேற்றம் உண்டாகத்தான் செய்கிறது.
நல்முத்தைப் பழிக்கும் பார்த்தால் பற்றிக் கொள்ளும் அருட் புன்னகை தரும் தெய்வயானைத் திருமகளின் இறைவா! இந்தப் புகழை விளக்கி விரித்துச் சொன்ன SK அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
உங்கல்து கருத்தும், பாராட்டும், எப்போதுமே நல்விருந்து, ஜி.ரா.
மிக்க நன்றி.
முதல் வரிதான் முடித்திருக்கிறீர்கள்!
பின்னதும் வரட்டும்!!!
//நல்முத்தைப் பழிக்கும் பார்த்தால் பற்றிக் கொள்ளும் அருட் புன்னகை தரும் தெய்வயானைத் திருமகளின் இறைவா!//
இராகவன். வழக்கம் போல உங்கள் விளக்கத்திற்கு எதிர் விளக்கம். :-)
முத்தைத் தரு பத்தித் திருநகை என்பதில் பத்தி என்பதை நீங்கள் 'பற்றிக் கொள்ளும்' என்று பொருள் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எனக்கென்னவோ அது வரிசை என்ற பொருள் தரும் என்று தோன்றுகிறது. முத்தினை ஒத்த வரிசைப்பற்கள் கொண்ட திருநகை என்று பொருள் தோன்றுகிறது.
எப்போது அடுத்த அடிக்குப் போகிறீர்களோ அப்போது அந்த அடிக்கும் பொருள் சொல்லுங்கள். :-)
// முதல் வரிதான் முடித்திருக்கிறீர்கள்!
பின்னதும் வரட்டும்!!! //
புகழின் பின்னதும் வரட்டும். நமக்குப் பின்னதும் வரட்டும் என்கிறீர்களா SK? ;-)
இங்கு அருணகிரி காட்டும் போர்க்களக் காட்சிகளுக்கு ஒத்த காட்சிகளை இரண்டு நூல்களில் நான் கண்டுள்ளேன். ஒன்று கலிங்கத்துப்பரணி. மற்றொன்று சிலப்பதிகாரம். இரண்டிலும் போர்க்களக் கூத்துகள் படிக்கையில் நெஞ்சை உருட்டி வெருட்டி விடும். இங்கு திருப்புகழில் உருட்டி வெருட்டி மருட்டி பின்னர் பேரானந்தத்தைத் திரட்டி விடுகிறது.
எஸ்.கே ஐயா!
எதிர்பார்த்திருந்த ஒரு திருப்புகழ் பதிவு . எளிமையான விளக்கவுரையுடன் பதிவிட்டிருக்கின்றீர்கள். சுட்டி தந்த குமரனுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.
// குமரன் (Kumaran) said...
//நல்முத்தைப் பழிக்கும் பார்த்தால் பற்றிக் கொள்ளும் அருட் புன்னகை தரும் தெய்வயானைத் திருமகளின் இறைவா!//
இராகவன். வழக்கம் போல உங்கள் விளக்கத்திற்கு எதிர் விளக்கம். :-) //
விளக்கத்திற்கு எதிர் விளக்கம் நிச்சயம் இருக்கலாம். அது நமக்குள் எனும் பொழுது எதிரி விளக்கம் இல்லை என்பதை நானும் அறிவேன். நீரும் அறிவீர். :-)
// முத்தைத் தரு பத்தித் திருநகை என்பதில் பத்தி என்பதை நீங்கள் 'பற்றிக் கொள்ளும்' என்று பொருள் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எனக்கென்னவோ அது வரிசை என்ற பொருள் தரும் என்று தோன்றுகிறது. முத்தினை ஒத்த வரிசைப்பற்கள் கொண்ட திருநகை என்று பொருள் தோன்றுகிறது. //
பத்தித் திருநகை என்பதில் உள்ள ஒற்று மறந்ததா குமரன்? முத்தைத் தருகின்றன வரிசையான திருநகை என்றால் எப்படி? தொடர்ந்து சிரிப்பதை வரிசைச் சிரிப்பு என்று சொல்வது பொருத்தமாக இல்லை. அதே போல நீங்கள் சொல்லும் முத்துவரிசைப் பொருளும் சரியான தொடர்ச்சியாகத் தெரியவில்லை. முத்தைத் தரு - அங்கேயே முத்து முடிந்து போயிற்று. பத்தித் திருநகை என்பதை அடுத்த பதமாகக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
// எப்போது அடுத்த அடிக்குப் போகிறீர்களோ அப்போது அந்த அடிக்கும் பொருள் சொல்லுங்கள். :-) //
அடிக்கடி பொருள் சொல்வது SK. அடிக்கடி பொருள் சொல்வது நீங்கள். என்னை அடிக்கடி கொடுக்க அழைத்தால் எப்படி? :-))
SK,
அருமை.
தங்கள் தமிழும் விளக்கமும் மிக அருமை.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி.
SK அய்யா,
அருமையான விளக்கம். தங்களின் இப் பதிவு 2 - 3 தினங்களுக்கு முன் கண்ணில்பட்டது. வேலைப்பளுக்கள் காரணமாக உடனடியாகப் படிக்க முடியவில்லை. இன்று தான் ஆற அமர இருந்து 6 தடவைகள் படித்துச் சுவைத்தேன். அருமையான விளக்கம்.
உங்கள் தமிழ்ப்பணி தொடர எல்லாம் வல்ல கந்தன் அருள் பாலிப்பானாக.
உங்களது தொடரும் ஆதரவுக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க, வெற்றி!
SK அய்யா, TMS பாடி அருணகிரிநாதர் படத்தில் வரும் பாடல் ஷன்முகப்பிரியா ராகத்தில் அமைந்தது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராகத்தில் எங்கு யாரால் பாடப் படுகிறது?
சற்று விளக்கம் தாருங்கள்.
அன்புடன்
ஓகை.
நாம் அனைவரும் ரசிக்கும் TMS அவர்களின் பாட்டு ஒரு திரைப்பாடல்.
திருப்புகழுக்கு பல்லாண்டு காலமாய் முறைப்படி ராகங்கள்ல் அமைத்து, திருப்புகழ் அன்பர் கூட்டம் என்ற ஒரு அமைப்பு பாடி வருகின்றது.
டில்லியில் இருக்கும் திரு ராகவன் என்னும் அன்பர் இதனைப் பலருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அவர் பாடிய, கொடுத்த ராகத்தைத்தான் போட்டிருக்கிறேன்.
வருகைக்கும், கேள்விக்கும் நன்றி, ஓகை அவர்களே!
ஆருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றிகள் பல நண்பருக்கு.
சரி என்ககொரு ஐயம்
//தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ//
இராவணன் இவனது தந்தையின் தொண்டனல்லவா? இவ்விராவணின் தலைகொய்தவன் இராமனல்லவா? கதிரவனை மறைத்ததும் அவனல்லவா?
(கண்ணன்) அவனை புகழ வேண்டியவர் முருகனுடன் ஏன் தொடர்பு படுத்துகிறார் அருணகிரியார். தெரிந்தால் சொல்லுங்கள்
என்னார் ஐயா,
என்னால் இயன்றவரை தங்கள் ஐயம் தீர்க்க முற்படுகிறேன்.
இப்பாடலில் மூன்று நிகழ்வுகளை அருணகிரியார் சொல்லியிருக்கிறார்.
1. இராவணனின் 10 தலைகள் சிதறி வீழச் செய்தவன் [இராமன்]
2. ஒற்றைக்கிரி மத்தைப் பொருதியவன் [கூர்மாவதாரம்]
3. பட்டப்பகலில் வட்டத் திகரியில் இரவைக் கொண்டுவந்தாலும், அருச்சனனுக்குத் தேரோடியாய் வந்த எளியவன் [கண்ணன்]
இவை அனைத்துக்கும் காரனமானவன், மூலப்பொருளாம் நாராயணன்.
அவனைதான் 'பச்சைப் புயல்' என அழைக்கிறார் அருணகிரியார்.
[இப்பாடலிலேயெ எனக்கு மிகவும் பிடித்த சொல் இந்தப் 'பச்சைப்புயல். மீண்டும் ஒருமுறை விளக்கத்தைப் பார்க்கவும்]
//"பச்சைப் புயல்"
மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும் //
அந்தப் பச்சைப்புயல் நாரணன் முருகனுக்கு மாமன்.
அந்த மாமனும் 'மெச்சத்தகுபொருள்' என முருகனைப் புகழ்கிறார் அருணகிரியார்.
அதாவது, இதில் ஒரு அற்புதமான ஒப்பீடு செய்திருக்கிறார் அருணகிரியார்.
இராமன் அழித்தது 10 தலைகளை.
முருகப்பெருமான் அழித்ததோ 1000 தலைகளும், 2,000 கரங்களும் உடைய சிங்கமுகனை.
பாற்கடலைக் கடைந்தது ஒரு செயல் என்றால், 1008 அண்டங்கலையும், 108 யுகங்களாய் ஆண்ட சூரபதுமனைப் பிளந்தது பெருஞ்செயல்.
பகலை இரவாக்கியது ஒரு சில நேரத்திற்கு மட்டுமே செய்யப்பட்ட மாயை.
ஆனால்,முருகன் செய்ததோ, பல்லாயிரம் யுகங்களாய் மாயாவியாய் இருந்த தாரகனை.
எனவே, மாமனே மருமகனை மெச்சுகிறாராம்!
இப்படித்தான் சம்பந்தப் படுத்தி புகழ்கிறார் அருணகிரியார்.
மேலும் விளக்கம் வேண்டும்னில் கேட்கவும்.
நன்றி, வாரியார் ஸ்வாமிகளுக்கு!
மிக அருமையான விளக்கம் எஸ்.கே. பச்சைப்புயலுக்கும் அதன் முன்னர் வந்த சொற்றொடர்களுக்கும். இதுவரை அவற்றை பச்சைப்புயலைப் புகழ்வதாய் எண்ணியிருந்தேன். அவற்றின் உட்பொருளாக பச்சைப்புயல் மெச்சத்தகுபொருளின் புகழ்களே அவை என்பதை இன்று தான் புரிந்து கொண்டேன். :-)
நன்றி குமரன்!
திருப்புகழ் ஒரு ஆழ்கடல்!
அமிழ, அமிழ,... கிடைக்கும் முத்துக்களுக்கு அளவில்லை!
இதில் இன்னும் ஒரு அற்புதம்!
அதனால்தான், "முத்தைத்தரு" என்ற சொல்லை முருகன் முதலாக எடுத்துக் கொடுத்தாரோ!!
nalla padal,,
when i listern this song ,i got
murugan vaves touching me
i feel plus to murugapperuman for me
எத்தனை முறை கேட்டாலும், கேட்டுணர்ந்தாலும் அலுக்காத ஒரு இனிய திருப்புகழ் உங்களையும் உருக்கியது குறித்து மகிழ்கிறேன் ஐயா. முருகனருள் முன்னிற்கும்!
நீண்ட நாட்களாக இந்த பாடலுக்கு பொருள் வேண்டி அய்யன் முருகனிடமே மனதில் வேண்டினேன் .. அவனது அருள் இவ்வளவு விரைவில் கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை... முருகா உன் கருணையோ ... கருணை அய்யா...
பாடலுக்கு அருமையான பொருள் பதம் தந்து தித்திக்கும் தேன் பாகுவாய் அருந்த செய்த திரு. S.K அய்யாவிற்கு நன்றிகள். தங்கள் திருப்பணி தொடர அய்யன் குமரனின் அருள் வேண்டி அடியனும் பிராத்திக்கின்றேன்.
//தங்கள் திருப்பணி தொடர அய்யன் குமரனின் அருள் வேண்டி அடியனும் பிராத்திக்கின்றேன்.//
கந்தர் அநுபூதி எழுதி முடித்ததும், மீண்டும் திருப்புகழைத் தொடரலாம் என எண்ணி முருகனை நினைந்திருந்தேன். என்னப்பன் முருகனே உங்கள் வடிவில் வந்து இப்படி ஒரு அருளாசி தந்ததை நினைத்து, மனமுருகிப் போகிறேன் ஐயா. தங்களுக்கு என் பணிவன்பான வணக்கம். முருகனருள் முன்னிற்கும்.
திருப்புகழ்,திருக்குறள் போன்ற சங்க தமிழ் பாடலின் அர்த்தம் அறிய என்ன செய்ய வேண்டும். தற்போதைய தமிழ் படித்தால் புரிகிறது. சங்க தமிழை படித்ததும் புரிந்துகொள்ள எப்படி படிக்கனும்.?
திருப்புகழ்,திருக்குறள் போன்ற சங்க தமிழ் பாடலின் அர்த்தம் அறிய என்ன செய்ய வேண்டும். தற்போதைய தமிழ் படித்தால் புரிகிறது. சங்க தமிழை படித்ததும் புரிந்துகொள்ள எப்படி படிக்கனும்.?
Post a Comment