Saturday, July 22, 2006

அ.அ.திருப்புகழ் -- 5 "தண்டையணி வெண்டையம்"

அருணகிநாதர் அருளிய திருப்புகழ் -- 5

"தண்டையணி வெண்டையம்"


http://www.musicindiaonline.com/p/x/zJbgYyr0Bt.As1NMvHdW

[மீண்டும் ஒரு நீள் பதிவு! விரித்துக் கூறாமல் அப்படியே சொல்லிவிட்டுப் போக மனம் வரவில்லை. அருள் கூர்க!சிறப்பு இணைப்பாக "திருமுருகனின் திருப்பெருவடிவம்" பற்றிய ஒரு விளக்கம் காண்க!]


ராகம்: சிம்மேந்திர மத்யமம்/தன்யாஸி
தாளம்: கண்டசாபு

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் --- தந்ததான

>>>>>>>>பாடல்>>>>>>>>

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் --- கொஞ்சவேநின்

தந்தையினை முன் பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொட மணைந்துநின் --- றன்பு போலக்

கண்டுறக டம்புடன், சந்தமகு டங்களும்
கஞ்சமலர் செங்கையுஞ் --- சிந்து வேலும்

கண்களு முகங்களுஞ் சந்திர நி றங்களுங்
கண்குளிர என்றன்முன் --- சந்தியாவோ?

புண்டரிக ரண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் --- கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் --- சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் --- கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமண முண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் --- தம்பிரானே !

-------------------------------------------------------------------------------------

------பொருள் விளக்கம்-------


"தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே"


மாதவம் செய்ததாலே மாசு மிக்க தாரகனும்
மரணிக்கும் போது காணுகின்ற பேறடைந்த
சீலமிகு இரத்தினத்தால் சீராக நிரப்பப்பட்ட
கோலமிகு காலணியும் தண்டை எனும் ஆபரணமும்,

நடனமிடும் வேளையினில் இனிய ஒலி செய்கின்ற
வெண்டையம் என்கின்ற வீரமிகு ஆபரணமும்,

பதினாலுலகும் எக்களித்த[க.அ.93]
பதித்த மணிகளால் அணி செய்த
திருவரையில் திகழுகின்ற
கிண்கிணி என ஒலி செயும் ஆபரணமும்,

பொன்னாலும் மணியாலும் புனைந்து கட்டிய
நான்கு வேதங்களின் கீதமிசைக்கும்
பொன்னடியிலும், திருவிடையிலும் திகழும்
சதங்கை எனும் நல் ஆபரணமும்,

வீரமிகும் பாதங்களில்
சீராக ஒலி செய்திடும்
நல்லோசை கேட்டிடவே
நாமகளும் அமர்ந்திருக்கும்
தண்கழல் எனும் தனி ஆபரணமும்,

கற்பென்பது பொதுவெனக் காட்டுதல் போலக்
கற்றிடும் அடியவரின் துயர் களைய
அற்புதமாய் ஒலி கிளப்பி அழகுறவே
ஆடிடும் சிலம்பு எனும் ஆபரணமும்,

சேர்ந்தங்கு இனிதாய் ஒலித்திட,

"நின் தந்தையினை முன் பரிந்து இன்ப அரி கொண்டு
நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலக் கண்டுற"


நடனத்தின் நாயகனாம் நடராசன் முன் நின்று
பண்புடனே வலம் வந்து பவுரி எனும் கூத்தாடலை
இன்பமுற ஆடியே இனிதே களிப்புற்று
அன்புடனே சேர்ந்து நின்றிட்ட நிலை போல
அடியவனும் கண்டின்று ஆனந்தம் அடைந்திடவே,

"கடம்புடன், சந்த மகுடங்களும், கஞ்சமலர் செம்கையும்
சிந்து வேலும், கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன் முன் சந்தியாவோ?"


அழகுறத் தொடுத்த கடப்ப மலர் மாலையும்,
எழிலுற அமைந்த மணி முடி மகுடமும்
கமல மலரொத்த சிவந்த திருக்கரங்களும்,
பகலென ஒளிவீசும் ஞான வேலாயுதமும்,
நிலவின் அருள் பொழியும் விழிமலர் பனிரன்டும்,
மலர்ந்து நகைபுரியும் ஆறு திருமுகமும்,
வளரும் மதி போலும் ஒளிச்சிதறல்களும்,
பலவும் காட்டியே என் விழிகள் குளிர்ந்திடவே
உலவும் இவ்வடியவன் முன் தோன்றி அருள் புரியாவோ?

"புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிர் அண்டமும்,
பொங்கி எழ, வெம் களம் கொண்ட போது"


தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும்
நான்முகனாம் பிரமனின் உலகமும்,
அதனையும் உள்ளடக்கிய வெளி அண்டங்களும்,
இதனால் நம் துயர் தீர்ந்ததென
மகிழ்வுடன் எழுந்து ஆரவாரம் செய்ய,
தகித்திடும் போர்க்களம் நீ புகுந்த போது,

"பொன்கிரி என அம் சிறந்து எங்கினும் வளர்ந்தும்
உன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர"


பொன்னாலான மலை போல அழகிற் சிறந்து
அளவற்ற தவஞ் செய்த சூரனுக்கு அருளிடவே,
அகிலமனைத்தையும் நின் திருமேனியில் அடக்கியே
மூவுலகையும் ஈரடியால் அளந்திடவே அன்றொரு நாள்
வாமனனாய் வந்த [பிரமனின் தந்தையாம்]
நாரணனும் தன்வடிவம் அதில் கண்டு வியத்தல் போலே,
----------------------------------------------------------------
[முருகனின் திருப்பெருவடிவம். [மாரியம்மன் தாலாட்டு மெட்டில்]]

ஐயன் திருவடிவில் ஆரார் அடங்கி நின்றார்!
உள்ளடியில் அத்துணை மலைகளும் அடங்கின!
திருவடியின் முற்பாதியில் கடல்களும்,
விரல்களிலே இடி, தாரகை, கிரகங்கள் அடங்கின!
வருணனும், குபேரனும், நிருதியும் இராக்கதரும்
மீதமுள்ள கால் பகுதியில் அடங்கி நின்றார்!
கணைக்காலில் முனிவர்களும், தெய்வமணிகளும்,
முழங்காலில் வித்தியாதரர் எனும் அறவோரும்
தொடையினில் இந்திரனும், அவன் மைந்தன் சயந்தனும்,
தொடைமூலத்தில் இயமனும்,
அரையின் முற்பக்கலில் அசுரரும்
விலாப்பகுதியினில் விண்னவரும்,
யாவருமே அடங்கி நின்றார்!
மூலாதாரத்தில் நாகர்களும்,
கோசநுனியினில் அமிர்தமும்,
உந்தியில் உயிர்களும், மார்பினிலே அனைத்துக் கலைகளும்,
முப்புரி நூலில் ஞானமும், நுனிமுடியில் அண்டங்களும்,
உள்ளங்கையினிலே போகப்பொருள்களும்,
தோள்களிலே திருமாலும், பிரமனும் அடங்கினர்!
கைவிரல்களிலே தெய்வப்பெண்டிரும்,
கண்டத்தில் நாதமும் அக்கினியும்,
திருவாயில் வேதங்களும், தமிழ்மறையும்,
பற்களிலே எழுத்துக்களும்,
நாவினிலே ஆகமங்களும்,இதழினில் எழுகோடி மந்திரங்களும்,
நாசியில் வாயுவுமே அடங்கி நின்றார்!
இருகண்களிலே சந்திர சூரியரும்,
செவிகளிலே ஒரு நூறு உருத்திரரும்,
நெற்றியிலே ஓங்காரமும்,
சென்னியிலே சிவபெருமானும் அடங்கி நின்றார்!
ஐயன் உருவினிலெ அனைவருமே அமர்ந்திருந்தார்!
கூடிக் களித்திருந்தார் குவலயத்தோர் மகிழ்ந்திடவே!
------------------------------------------------------------------------
"கொண்ட நடனம் பதம்"

அத்திருப்பெரும் வடிவு கொண்டு
நீ ஆடிய நடனப் பாதங்கள்

"செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி
நடனம் கொளும் கந்தவேளே!"


தில்லையிலும், கொடுங்குன்றத்திலும் முன்பெனக்குக்
காட்டியருளிய நின் திருமலர்ப் பாதங்களை
இந்தச் செந்தூரிலும் கொஞ்சும்படி ஆடிக்காட்ட
வந்திருக்கும் கந்தன் எனும் அழகனே!

"கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்"

மலையிற் பிறந்த சந்தனத்தை
கலையாகப் பூசிகொள்ளும்
மலைக் குறத்தியாம் வள்ளியாரின்
வளைக்கரத்தின் வாசம் நுகரும்

"கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!"

நீ உரைத்த தமிழ் உரைத்த
மாமுனியாம் அகத்தியனார் வணங்கிடும்
தனிப்பெருந் தலைவனே! குமரனே!
-----------------------------------------------------------------------------------

...அருஞ் சொற் பொருள்...

அரி:
பவுரி எனும் கூத்தாட்டு
சந்தொடம்: மகிழ்ச்சி [சந்தோஷம் என்பதன் திரிபு]
புண்டரிகர்: அரியின் நாபித்தாமரை மலர் மேல் இருக்கும் பிரமன்
பகிர் அண்டம்: அண்டத்தையும் உள்ளடக்கிய வெளி அண்டம்
வெங்களம்: சூடான போர்க்களம்
புண்டரிகர் தந்தை: திருமால் [பிரமனின் தந்தை]
கூர: உவகை அடைய
கும்பமுனி: அகத்தியர்
தம்பிரான்: தனிப்பெரும் தலைவன்
------------------------------------------------------------------------------------
அருணகிரி தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

33 பின்னூட்டங்கள்:

Unknown Saturday, July 22, 2006 4:02:00 PM  

SK,

One smaal doubt

இது திருப்புகழில் வருகிறதா இல்லை நீங்கள் சொல்லுவதா??

//கற்பென்பது பொதுவெனக் காட்டுதல் போலக்
கற்றிடும் அடியவரின் துயர் களைய
அற்புதமாய் ஒலி கிளப்பி அழகுறவே
ஆடிடும் சிலம்பு எனும் ஆபரணமும்,//

VSK Saturday, July 22, 2006 4:18:00 PM  

'சிலம்பு' என்று மட்டுமே இத்திருப்புகழில் உள்ளது.

சிலம்பு என்றதும் நினவுக்கு வருபவள் கற்பின் திருவுருவாம் கண்ணகி!

அதனைக் காலில் தான் அணிந்ததன் மூலம் கற்பென்பது ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவென முருகன் காட்டினான் என ஒரு விளக்கம் வாரியார் சுவாமிகளின் உரையில் கிடைத்தது.

மேலும், முருக்ன் திருவடியில் விளங்கும் சிலம்பு ஞானமயமானது. எப்போதும் அடியார் வினை அகல அது இனிய நாதத்தைத் தந்து கொண்டிருக்கும்.

"இனியநாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்!"
என இன்னொரு திருப்புகழ்ப் பாடலிலும் சொல்லியிருக்கிறார் அருணையார்.

இதனை ஒட்டியே பொருள் சொல்லியிருக்கிறேன்!

நன்றி, முதல் பின்னூட்டத்துக்கு, செல்வன்!

Sivabalan Saturday, July 22, 2006 4:25:00 PM  

SK அய்யா,

//...அருஞ் சொற் பொருள்...//

மிக அருமை....

மீன்டும் வருவேன்..

நன்றி.

VSK Saturday, July 22, 2006 4:29:00 PM  

////...அருஞ் சொற் பொருள்...//

மிக அருமை....//


அப்போ மற்றதெல்லாம்...?!!
:))
நன்றி, சிவபாலன்.

Sivabalan Saturday, July 22, 2006 4:33:00 PM  

SK அய்யா,
முழுமையாக படித்துவிட்டு மீன்டும் வருகிறேன்...
(this is jsut proxy)

VSK Saturday, July 22, 2006 4:43:00 PM  

மறந்து போனேன்!
மீண்டும் நன்றி, சிவபாலன் அவர்களே!

குமரன் (Kumaran) Saturday, July 22, 2006 4:51:00 PM  

நான் இன்னும் படிக்கலை. ஆனால் பாடலின் சுட்டி கொடுக்க வந்தேன். படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். :-)

http://www.musicindiaonline.com/p/x/zJbgYyr0Bt.As1NMvHdW/

VSK Saturday, July 22, 2006 4:59:00 PM  

என்ன சொல்லி போற்றுவேன்!
எப்படி நான் பாராட்டுவேன்!
வலையே வாழ்க1
வலைப்பூவே வாழ்க!
வலைப்பூ அன்பர்களே வாழ்க வாழ்க!

சுட்டி கேட்டு இன்புறும் அனைவரும் வாழ்க!
படிப்போரும் வாழ்க!

குமரன் அருள் இருக்க குறைகள் எனக்கேது!
குமரன் அருள் இருக்க குறைகள் நமக்கேது!

Unknown Saturday, July 22, 2006 5:24:00 PM  

அருமையான விளக்கம் எஸ்.கே

ஒரு சின்ன வரிக்கு இத்தனை சிரமம் எடுத்து தாங்கள் அனைத்து நூல்களையும் படித்து விரிவுரை அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோவி.கண்ணன் [GK] Saturday, July 22, 2006 8:21:00 PM  

[முருகனின் திருப்பெருவடிவம். [மாரியம்மன் தாலாட்டு மெட்டில்]]

sk,
இதற்கு நீங்கள் கூறிய விளக்கம் - விஷ்வ ரூப தரிசனம் பற்றியது தானே ?

VSK Saturday, July 22, 2006 8:39:00 PM  

ஆமாம், கோவியாரே.
அது பற்றிய விளக்கத்தை கந்தபுராணத்தில் படித்தேன்.

கூடவே சொல்லலாம் என்று தோன்றியது.

நன்றி.

கோவி.கண்ணன் [GK] Saturday, July 22, 2006 8:47:00 PM  

//sk said கந்தபுராணத்தில் படித்தேன்.//

கந்த புராணத்தைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. அது

"கந்தபுராணத்தில் உள்ள புளுகு போல் எந்த புராணத்திலும் இல்லை"

சென்ற வாரம் கந்தபுராணம் படித்தபோது, இது ஓரளவுக்கு உண்மை என்று நினைக்கிறேன் (சொந்த கருத்து).

VSK Saturday, July 22, 2006 9:05:00 PM  

மாற்றிச் சொல்லுகிறீர்கள், கோவியரே!
அது அப்படி அல்ல!
'கந்தபுராணத்தில் உள்ள அழகு வேறு எந்த புராணத்திலும் இல்லை' என்றுதான் பழமொழி!

அருணகிரிநாதருக்கும், கச்சியப்ப சிவாச்சாரியாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இருவருக்கும் முருகனே முதலடி எடுத்துக் கொடுத்தான் என்பதே அது!

அது மட்டுமல்ல!
ஒவ்வொரு நாளும் எழுதி முடித்த பின்னர் குமர்க்கோட்டத்து முருகன் காலடியில்
வைத்துச் செல்வாராம்.
மறுநள் காலையில் முருகன் திருத்தி வைத்த ஏடுகளை எடுத்து பின்னர் தொடங்குவாராம்.

இதை நம்பிக்கை என்று நான் சொல்லுவேன்;
நீங்கள் புளுகு என நினைத்திருக்கலாம்!

இன்னொரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வும் உண்டு.
பிறகு சொல்கிறேன்.
நன்றி.

கோவி.கண்ணன் [GK] Saturday, July 22, 2006 9:22:00 PM  

//அது மட்டுமல்ல!
ஒவ்வொரு நாளும் எழுதி முடித்த பின்னர் குமர்க்கோட்டத்து முருகன் காலடியில்
வைத்துச் செல்வாராம்.
மறுநள் காலையில் முருகன் திருத்தி வைத்த ஏடுகளை எடுத்து பின்னர் தொடங்குவாராம்.//
இது பற்றி தெரியும் :))

ஆனால் திருப்புகழும், கந்த புராணமும் தமிழில் இருந்தாலும்... முருகனை தமிழைத் தாண்டி அழைத்துச் சென்றதில் வெற்றி அடைந்திருக்கின்றன
:))

நாகை சிவா Sunday, July 23, 2006 1:22:00 PM  

//குமரன் அருள் இருக்க குறைகள் எனக்கேது!
குமரன் அருள் இருக்க குறைகள் நமக்கேது! //
குமரன் அருள் மட்டும் இல்லை அவன் அப்பன் அருளும் உமக்கு என்று உண்டு.

இன்னும் பதிவை படிக்கவில்லை. சேமித்து செல்கின்றேன். ஆழ்ந்து படித்து உள்வாங்கி விட்டு மீண்டும் வருகின்றேன்.

VSK Sunday, July 23, 2006 1:39:00 PM  

நானும் முதல் நன்றியைச் சொல்லி காத்திருக்கிறேன், திரு. நாகை சிவா !

G.Ragavan Monday, July 24, 2006 3:09:00 AM  

மீண்டும் ஒரு தமிழருவி...அழகருவி...தெளிந்து வழிந்து..முருகனை நீராட்டி..அந்த நீரால் எங்களையெல்லாம் புனிதப்படுத்தியிருக்கிறது.

தண்டையணி திருப்புகழ் திருச்செந்தூரில் முருகப் பெருமானின் நடனக் காட்சியைக் கண்குளிரக் கண்ட அருணகிரியால் பாடப்பட்டது. சந்தத்தைப் பாருங்கள்...அடடா!

அதற்குச் சிறப்பான விளக்கம். குறுக்கித் தருகிறவர்களும் உண்டு. விரித்துத் தருகின்றவர்களும் உண்டு. நீங்கள் இரண்டாம் வகை. ஆகையால்தான்...எதையும் விட முடியாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன்.

VSK Monday, July 24, 2006 10:58:00 AM  

சுருக்கமான வருகைக்கு நன்றி, ஜி.ரா.
விரிவான கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!.

தி. ரா. ச.(T.R.C.) Monday, July 24, 2006 10:39:00 PM  

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் --
கண்களு முகங்களுஞ் சந்திர நி றங்களுங்
கண்குளிர என்றன்முன் -
ஸ்.கே. அருணகிரியார் முருகனை பாதத்திலிருந்து ஆரம்பித்து முகம் வரை வர்ணனை செய்துமகிழ்கிறார்.இதுதான் பாதாதி கேச வர்ணனை என்பதோ.எனக்கு மிகவ்ம் பிடித்தப் பாட்டு. டி.எம்.ஸ் படத்தில் பாடி கேட்டதுண்டு.முழு ப் பொருளையும் இன்றுதான். அறிந்துகொண்டேன்.இது முதல் தவணை. மீண்டும் வருவேன். அன்பன் தி ரா.ச

VSK Monday, July 24, 2006 11:29:00 PM  

திருப்புகழில் தங்கள் முதல் வரவால் மனமகிழ்ந்தேன்!
உவகையுற்றேன்!
சரியாகப் பிடித்து, பாதாதி கேச வருணனை என அழகுறச் சொன்னதற்கு மிக்க நன்றி, தி.ரா. ச. அவர்களே!
தங்கள் சிங்கைப் பயணம் இனிதே நடந்திருக்கும் என நம்புகிறேன்!

இலவசக்கொத்தனார் Tuesday, July 25, 2006 12:19:00 AM  

எஸ்.கே.

அருமையான பாடல். அழகான விளக்கம். சில புதிய வார்த்தைகளும் கற்றுக் கொண்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அதன் அவசியத்தை உணர்கிறேன்.

இலவசக்கொத்தனார் Tuesday, July 25, 2006 12:19:00 AM  

//அழகுறத் தொடுத்த கடப்ப மலர் மாலையும்,
எழிலுற அமைந்த மணி முடி மகுடமும்
கமல மலரொத்த சிவந்த திருக்கரங்களும்,
பகலென ஒளிவீசும் ஞான வேலாயுதமும்,
நிலவின் அருள் பொழியும் விழிமலர் பனிரன்டும்,
மலர்ந்து நகைபுரியும் ஆறு திருமுகமும்,
வளரும் மதி போலும் ஒளிச்சிதறல்களும்,
பலவும் காட்டியே என் விழிகள் குளிர்ந்திடவே
உலவும் இவ்வடியவன் முன் தோன்றி அருள் புரியாவோ?//


மிகவும் அருமை ஐயா. வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

VSK Tuesday, July 25, 2006 12:40:00 AM  

மிக உணர்ந்து, படித்துப் பாராட்டிய இ.கொ. அவர்களே!
உங்களுக்கு மிக்க நன்றி.
அப்படியே அந்த "திருப்பெரு வடிவம்" குறித்த உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்!

Sivabalan Tuesday, July 25, 2006 11:13:00 PM  

SK அய்யா,

// கஞ்சமலர் //

இன்னம் கொஞ்சம் விளக்கம் தேவை.

உவமையா? இல்லை அப்படி ஒரு மலர் இருந்த்தா?

கோவி.கண்ணன் Tuesday, July 25, 2006 11:48:00 PM  

// கஞ்சமலர்
இன்னம் கொஞ்சம் விளக்கம் தேவை.
உவமையா? இல்லை அப்படி ஒரு மலர் இருந்த்தா?//

கஞ்சமலர் என்றால் அந்த மலரில் 'மருந்துக்கு' கூட தேன் இருக்காது அவ்வளவு கஞ்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் :))

VSK Wednesday, July 26, 2006 12:03:00 AM  

தாமரை மலருக்கு இன்னொரு பெயர் கஞ்ச மலர்.

இன்னொரு தகவல்!

இதிலிருந்தே காஞ்சி எனும் பெயர் வந்தது!

காஞ்சு எனத் தாமரையை வழங்குவர்.
தாமரையை ஒத்த விழியாளைக் காஞ்சனா எனச் சொல்வர்.

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர் செய்து
கன்றச் சிறையிடு மயில்வீரா

என பிரணவத்தின் பொருள் அறியாது படைப்புத் தொழிலைச் செய்த பிரமனைச் சிறையிட்ட மயில் வீரனைப் போற்றி இன்னொரு திருப்புகழும் உண்டு.

இந்தப் பாடலில் புண்டரிகம், கஞ்சம் என இரு இடங்களில் தாமரையை வைத்திருக்கிறார், அருணையார்!

Sivabalan Wednesday, July 26, 2006 12:17:00 AM  

SK அய்யா,

//தாமரை மலருக்கு இன்னொரு பெயர் கஞ்ச மலர்.
இன்னொரு தகவல்!
இதிலிருந்தே காஞ்சி எனும் பெயர் வந்தது!//

அருமையான விளக்கம். மிக்க நன்றி.

Sivabalan Wednesday, July 26, 2006 12:20:00 AM  

கோவி.கண்ணன் சார்,


//கஞ்சமலர் என்றால் அந்த மலரில் 'மருந்துக்கு' கூட தேன் இருக்காது அவ்வளவு கஞ்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்//

நீங்கள் சொன்ன விளக்கம் அருமை.

VSK Wednesday, July 26, 2006 12:35:00 AM  

//கஞ்சமலர் என்றால் அந்த மலரில் 'மருந்துக்கு' கூட தேன் இருக்காது அவ்வளவு கஞ்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்//


தாமரையில் தேன் இல்லை என்று சொன்ன உங்களை......

கோவி.கண்ணன் Wednesday, July 26, 2006 11:45:00 AM  

//தாமரையில் தேன் இல்லை என்று சொன்ன உங்களை......//
அர்சிக்கப் போகிறீர்கள் தானே. :))

கவிதைப் பக்கத்தில் வந்து அர்சித்துவிட்டு செல்லுங்கள் ! :))

குமரன் (Kumaran) Sunday, July 30, 2006 5:04:00 PM  

மீண்டும் ஆழ்ந்து படித்தேன் எஸ்.கே. மிக்க நன்றி.

Sivabalan Tuesday, August 01, 2006 9:37:00 PM  

SK அய்யா,

//அரி: பவுரி எனும் கூத்தாட்டு //

இதைப் பற்றி ஏதேனும் சிறு குறிப்பு கூறமுடியுமா?

VSK Tuesday, August 01, 2006 9:44:00 PM  

அது ஒரு வகையான குதித்து ஆடும் ஆட்டம் என்றுதான் தெரியும்.

அதற்கு மேல் தெரியவில்லை.
வேண்டுமானால் தேடிச் சொல்கிறேன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP