Monday, July 31, 2006

உறவுகள் [தேன்கூடு போட்டிக்கு!]

உறவுகள் [தேன்கூடு போட்டிக்கு!]

என் இனிய உறவுகளே!

உறவுகள் புனிதமானவை!
அவை ஏதோ நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்படுவன அல்ல!
நம் விருப்பத்துக்கும் கட்டுப்படாதவை அவை.
நம்புங்கள்!
இது இறைவன் வகுத்த வழி!
இயற்கை நமக்களித்த கொடை!
தாய் - தந்தை, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை, கணவன் - மனைவி, நண்பன் - தோழி, மற்றும் எல்லா உறவுகளுமே இப்படித்தான்.
நாம் கேட்டுப் பெறுவன அல்ல -- நம் மேல் சுமத்தப்படுகிற..... இனிய பாரம்!

உணர்வுகள் அப்படியல்ல!
கண நேரச் சலனத்தின் விழுதுகள் அவை!
உணர்வுகளால் தோன்றிய உரங்களே, உறவாய் மலர்வது போல ஒரு மயக்கம் வரலாம்.
சிந்தித்துப் பார்த்தால், அந்த உணர்வுகள் தோன்ற, நம்முள் ஏற்பட்ட உறவே அடிப்படை என்பது புரியும்.

ஒருத்தி ஒருவனை மணக்கும்போது கூடவே வருகின்ற, அமைகின்ற உறவுகள், அவள் வேண்டி வந்ததல்ல!
அவனுக்கும் அப்படித்தான்.
அங்குதான் இறைவன் -- இயற்கை உறவுகளை வகுக்கிறான், விதிக்கிறான்.

உறவால் வரும் உணர்வா, இல்லை உணர்வால் வரும் உறவா என்று பார்த்தால், முன்னதற்கே வலிமை அதிகம்.
உறவால் உணர்வுகளும், உணர்வால் உறவுகளும் அவ்வப்போது காயப்பட்டாலும், முன்னது எளிதில் ஆறுகிறது; ஆற வேண்டும்.
இதை மாற்றி, உணர்வுகளை உச்சாணிக்கொம்பில் ஏற்றி, அதன் பேயாட்டத்திற்கு சலங்கை கட்டும்போது, ஆறா ரணங்களை -- தழும்புகளை அல்ல! -- அவை கட்டாயமாக ஏற்படுத்தி விடுகின்றன.

உறவுகள் உணர்வுகளை அழிப்பதில்லை.
ஆனால், உணர்வுகளின் உந்துதல்களால் உறவுகள் ஒதுக்கப்படுகின்றன; நசுக்கப்படுகின்றன.
உறவை மதித்து, உணர்வை மிதித்தால், மனித நேயம் மலரும்.
உணர்வுகள் உறவால் பலம் பெறுதல் வேண்டும்.
உறவுகள் சாவதில்லை, எந்த நிலையிலும்!
காலம் விதித்த கணக்கு அது!
காலன் வந்தாலும் மறைவதில்லை.
இன்றும் மறைந்த நம் உறவுகள் நம் மனதில் நிறைந்துதான் உள்ளனர்.

உணர்வின் மயக்கம் நிரந்தரமானது அல்ல.அதனை நிலைப்படுத்த பாடுபடவேண்டாமே!
உறவுகளுக்கு உள்ளர்த்தங்கள் கிடையாது; தெரியாது.
உள்ளபடி முகத்துக்கு நேராகவே சொல்லிவிடும்.
உணர்வுகளுக்கு உண்டு.
ஆதாயம் தேடி அலையும் பேய் அது!
பலன் இல்லை என்றால், பல்லை உடைக்கவும், பரிகாசம் பண்ணவும் தயங்காது.
கடைசியில் மிஞ்சுவது, வருத்தமும், வேதனையும்தான்.

அற்ப உணர்வுகளுக்காக, உறவையா அழிப்பது?
உறவையா வெறுப்பது?
கட்டையில் போகும்வரை, கட்டாயம் உறுத்தும்; வருத்தும், நம்மை.

நான் என்பதை மறந்து, நாம் என்பதை வளர்த்தால் நன்மையே விளையும்.
உறவென்ற சூரியனால், உணர்வென்ற பனியை உருகச் செய்யுங்கள்.
உறவை மதித்தால், மனிதரை மதிக்கும் மனோநிலை தானே மலரும்.
மகிழ்ச்சியும் உண்டாகும்.
உணர்வுகளால் எவரையும் பலமாக அடிக்க முடியும், உறவென்ற கவசம் இல்லாதவரை.
உறவைக் கழித்து, உணர்வைக் கூட்டி, பகைமையைப் பெருக்கி, வாழ்வை அழிக்கலாமா?
இறுதியில் மிஞ்சுவது பூஜ்யம்தான்.
இன்று உலகின் பல இடங்களில் நாம் காணுவது உணர்வுகளால் எற்படும் அவலங்களே!


உணர்வைப் பெரிதாய் எண்ணி,உறவுகளை அவமதிக்காதீர்கள்.
உலகம் "மனப்பூர்வமாக" உங்களைப் பெரிதாக எண்ணாது.

"பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்" என்றான் கீதையில் கண்னன்.
"பலனை எதிர்பாராமல், உறவை உயர்த்துவோம்" என்பேன் நான்.

இருப்பது சில காலம்.
பார்ப்பது சில பேரை.
இதில் உறவென வருவது ஒரு சிலரே!
இவர்களை வருத்தி, நாம் மட்டும் உயர்ந்தால், நாளை நம் சந்ததியினர் பெருமையாகப் பேச மாட்டார்கள் நம்மை.
நினைவில் கூட கொள்ள மாட்டார்கள்.
இன்றும் 'அம்மா, அப்பா' என்று நெகிழ்வுடன் நினைவு கூர்வது அன்பினால் மட்டும் அல்ல --உறவை ஒட்டி வளர்த்த பாங்கினால்தான்!

நானூறு கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், ஒரு நானூறு பேரைத்தான் நமக்கு நன்றாகத் தெரியும்.
அதிலும் ஒரு நாற்பது பேரே நம்முடன் அன்றாட வாழ்க்கையில் பங்கு கொள்பவர்கள்!
நமக்குத் தெரிந்த இந்த மக்கள், நன்றாக வாழ நாம் உதவலாமே!
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, உறவைத் தாறுமாறாய்ப் பேசித்திரியும் சிலரும் அதில் இருக்கக்கூடும்.
இருந்துவிட்டுப் போகட்டும்.
தொடர்ந்து நாம் நன்மையே செய்தால், நிச்சயம் மாறுவார்கள் ஒரு நாள்!
அவர்களைத் திருத்துவதாக எண்ணி, அதே தவறை, வேறு விதத்தில் நாம் செய்யத் தேவையில்லை.

மீண்டும் சொல்கிறேன்.
உறவுகள் புனிதமானவை' .
உணர்வால் காயப்படுத்த வேண்டாம் அதனை.
எல்லோருடனும் அன்பெனும் உறவை வளர்க்கப் பாடுபடுவோம்.

இதனை......
நாளை என ஒத்திப் போட வேண்டாம்.
ஒருவேளை... நாளையச் சூரியன் நமக்கு உதிக்காது போய்விடலாம்.
இன்றே செய்வோம்!
இன்புற்று வாழ்வோம்!
உறவுக்குக் கை கொடுப்போம்.
உணர்வினை உறவோடு பிணைப்போம்.

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே! -- அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே!"
நன்றி டி.ஆர்.]

59 பின்னூட்டங்கள்:

Unknown Monday, July 31, 2006 11:38:00 PM  

சூட்டோட சூடா பதிவு போட்டுடீங்க போல.

இது அட்டென்டன்ஸ் பின்னூட்டம் மட்டுமே.

கோவி.கண்ணன் [GK] Monday, July 31, 2006 11:43:00 PM  

எஸ்கே ஐயா,
உறவுகள் உணர்வுகள் பிண்ணி முடிச்சி போட்டு என்னையும் சிக்க வச்சிட்டிங்க :))

என் ஓட்டு உங்களுக்குத் தான் :)

VSK Monday, July 31, 2006 11:44:00 PM  

மீண்டும் வருவேன்னு சொல்லிட்டு போடாம இருக்கலாமா??
சிக்கிரம் படிச்சுட்டு சொல்லுங்க!
வசன கவியா எழுதியிருக்கேன்!

Unknown Monday, July 31, 2006 11:47:00 PM  
This comment has been removed by a blog administrator.
Unknown Monday, July 31, 2006 11:48:00 PM  
This comment has been removed by a blog administrator.
Unknown Monday, July 31, 2006 11:49:00 PM  
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் Monday, July 31, 2006 11:51:00 PM  

வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.

VSK Monday, July 31, 2006 11:57:00 PM  
This comment has been removed by a blog administrator.
கோவி.கண்ணன் [GK] Tuesday, August 01, 2006 12:05:00 AM  

தூற்றலும் சாற்றலும் சொல்லில் முடக்குவது உறவில்லை !
சீற்றமும் ஏமாற்றம தந்து சீர்கெடுப்பது உணர்வில்லை !
ஏற்றமும் சுற்றமும் எல்லாமும் தருவது உறவென்றால்
மாற்றத்தை போற்றி மனமுவந்து மகிழவைப்பது உணர்வன்றோ ?

உயிரா? உணவா ? - உறவா ? உணர்வா ?
உணவின்றி உயிரில்லை ! உயிரின்றி உணவுக்கிடமில்லை !
உணர்வின்றி உறவுகள் உயர்வதில்லை, உறவின்றி உணர்வுகளில்லை !
உண்ர்ந்து உண்டாக்கிய உயிர்க்கவிக்கட்டுரை !

வாழ்க எஸ்கே ! வளர்க தமிழ்த் தொண்டும், நற்பண்புகளும் மென்மேலும் !

VSK Tuesday, August 01, 2006 12:35:00 AM  

போட்டிக்கெனவோ, ஓட்டுக்காகவோ எழுதவில்லை.
என் மனதில் வெகுனாட்களாக இருந்துவந்த சில எண்ணங்களைச் சொல்ல இந்த தலைப்பு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. எழுதி அனுப்பியும் விட்டேன்.
உங்க கருத்தை நீங்கள் தாராளமாய்ச் சொல்லலாம், செல்வன்.
உறவுகள்தான் நேரேயே சொல்லும்னுதான் போட்டிருக்கேனே!

அதில் பொருட்குற்றம் எனக்கு இல்லை, செல்வன்.
இப்போதும் பல இடங்களில் நம் மீது சுமத்தப்படும் பாரம்தான் மனைவியோ, கணவனோ.
காதல் செய்தால் கூட எல்லாம் வெற்றி பெறுவதில்லை.
வெற்றி பெற்றால் அது ஒரு இனிய பாரமாய் ஆகிப்போகிறது, உறவுகள் சம்மதிக்கும்போது

நண்பனோ, தோழியோ கூட அப்படித்தான்.
நாம் விரும்பும் அனைவரும் நம்க்கு நண்பராவதில்லை.
விரும்பாத சில பேரால், சந்தர்ப்ப வசமாக, உணைச்சிக்கு ஆளாகிறோம்.
கெட்ட பெயரையோ, பழக்கங்களையோ சம்பாதித்துக் கொள்கிறோம்.

VSK Tuesday, August 01, 2006 12:35:00 AM  

இப்போதுதான் பார்த்தேன்!
ஏன் உங்க பின்னூட்டங்களை எடுத்து விட்டீர்கள் செல்வன்!
எனக்கு அதிலொன்றும் தவறாய்த் தெரியவில்லையே.
தெரியாமல் அதற்கு பதில் வேறு சொல்லிவிட்டேன்!

VSK Tuesday, August 01, 2006 12:42:00 AM  

ஓட்டுபோடுங்க, வேணாம்னு சொல்லலை, கோவியாரே!.
ஆனா இது அதுக்காக எழுதவில்லை. சுற்றி நடக்கும் சில நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இத்தலைப்பு வரவே உடனே எழுதிவிட்டேன்.
மற்றபடி பரிசுக்குன்னு எழுதலை.
அத்க்காக வேண்டாம்னா சொல்லப்போறோம்!!

VSK Tuesday, August 01, 2006 12:44:00 AM  

மொத மொதலா வந்துருக்கீங்க, சரளாக்கா!
அதுவே சந்தோஷம்.
கூடவே படிச்சுட்டும் எழுதுங்க!

VSK Tuesday, August 01, 2006 12:46:00 AM  

நான் சொன்னதை அழகுற கவிதையில் வடித்து வேறு பாராட்டி விட்டீர்கள்.
செழுமையாக இருந்தது, கோவியாரே!

இலவசக்கொத்தனார் Tuesday, August 01, 2006 12:47:00 AM  

// சரளாக்கா said...
நானும் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டேன் //

நானும்!

VSK Tuesday, August 01, 2006 12:48:00 AM  

வாழ்த்து[க்]களுக்கு நன்றி, துளசி. கோபால் !
கோவி.கண்ண்னுக்கு சொன்னதைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

VSK Tuesday, August 01, 2006 12:54:00 AM  

//// சரளாக்கா said...
நானும் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டேன் //

நானும்! //



ஏன் இப்படி எல்லாரும் 'உறவைக்' கண்டு அட்டென்டன்ஸ் மட்டும் கொடுத்துட்டு ஓடறீங்க!
இது என்ன 'கயமைத்தனத்துல' சேத்தி?!!
கூட ரெண்டு வார்த்தையும் சொல்லலாம்ல!

உங்கள் நண்பன்(சரா) Tuesday, August 01, 2006 1:06:00 AM  

இதுவும் அட்டென்டன்ஸ் பின்னூட்டம் தான் ,

படித்துவிட்டு மீண்டும் வருவேன்,(SK-க்காக மூன்று வார்த்தைகள்)



அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) Tuesday, August 01, 2006 1:31:00 AM  

மீண்டும் சரவணன்,
திரு.SK,

உங்கள் மீதும் , உங்களின் தமிழின் மீதும் மாறாப் பற்றுள்ளவன் நான்,
இந்த பதிவின் மூலம் உங்களின் தமிழ்ப் புலமையை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்,

மிகவும் அருமையான எழுத்து நடை, அனுபவித்து ரசித்து படித்தேன்,

இதுவரை நான் போட்டியில் ஓட்டுப் போட்டதில்லை(ஒருவேளை இன்னும் ஒட்டுப் போடும் வயசு வரலையோ..),
நான் வலைப் பதிவிற்க்கு புதியவன் , எனவே அடுத்த மாதத்திலிருந்து வாக்களிக்கலாம் என்று இருக்கின்றேன்,(உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எங்கு, எப்படி வாக்களிப்பது போன்ற விவரங்களை இனிமேல் தான் பார்க்க வேண்டும்),

"பின்னூட்டக் கவி" (முதலிலேயே "பின்னூட்ட நாயகன்"பட்டம் கொடுத்தாயிற்று)
திரு.கோவி அவர்களின் பின்னூட்ட கவிதையும் அருமை


வெற்றிபெற வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன்.

வெற்றி Tuesday, August 01, 2006 1:37:00 AM  

SK அய்யா,
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஜயராமன் Tuesday, August 01, 2006 1:46:00 AM  

SK

பலமுறை படிக்க வைக்கிறது. அர்த்த புஷ்டியாக இருப்பதால். உறவுகளின் முக்கியத்துவத்தை இவ்வளவு உணர்வுபூர்வமாக பதிந்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உறவுகளின் உன்னதத்தை மறந்து நான் என்பது மிகுந்து சமுதாய கட்டின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் நவீன நாகரீக குறைகளை சரி செய்யும் ஒரு கூக்குரலாக நான் இதை பார்க்கிறேன். உறவு நிரந்தரம் அல்ல, உணர்வே நிரந்தரம். இன்று நீ, நாளை யாரோ போன்ற துடுப்பில்லா படகு வாழ்க்கையை சுட்டி திருத்தும் எண்ணங்களாக நான் இதை பார்க்கிறேன்.

மேலும் பின்னொரு முறை படித்து பின் பின்னூட்டம் இடுகிறேன்.

பரிசுக்காக எழுதியது போல் தெரியவில்லை. யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் நல்ல ஒரு பதிவை சுடச்சுட கொடுத்ததற்கு நன்றி

கோவி.கண்ணன் Tuesday, August 01, 2006 2:13:00 AM  

//உணர்வுகளால் எவரையும் பலமாக அடிக்க முடியும், உறவென்ற கவசம் இல்லாதவரை.//

சரியான ஆனி !

//நானூறு கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், ஒரு நானூறு பேரைத்தான் நமக்கு நன்றாகத் தெரியும்.
நமக்குத் தெரிந்த இந்த மக்கள், நன்றாக வாழ நாம் உதவலாமே!//

நல்ல கேள்வி ! பதில் தெரிந்தவர்கள் மகிழ்ச்சியானவர்கள் :))

//"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே! -- அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே!" //

முத்தாய்பாக முடித்திருந்தது நன்றாக இருந்தது !

எல்லோரும் இன்புற்றுருப்பதன்றி வேறொன்றும் வேண்டுவதற்கு அறியேன் பராபரமே ! :) :) :) :)

Hariharan # 03985177737685368452 Tuesday, August 01, 2006 3:47:00 AM  

எஸ்.கே ஐயா,

ஆகா இக்கவிதை மாதிரியே நிஜத்திலும் உறவுகள் இருந்தால் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்ற ஏக்கத்தை தங்களது பதிவு ஏற்படுத்தியது.

ஆனால் நிஜம் வேறு மாதிரியிருப்பதாகவே உணர்கிறேன் நான்.

//உணர்வுகளால் எவரையும் பலமாக அடிக்க முடியும், உறவென்ற கவசம் இல்லாதவரை//

பலநேரங்களில் உறவுக் கவசம் பாரபட்சமாக இறுக்கி நசுக்கவும் செய்யும்.

//உறவை மதித்தால், மனிதரை மதிக்கும் மனோநிலை தானே மலரும்.//

இப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியவில்லை. பல சமயங்களில் உறவுகள் better to be alone than in a bad company என்பதையே கோடிட்டு நினவூட்டுகின்றன.

//உறவுகளுக்கு உள்ளர்த்தங்கள் கிடையாது; தெரியாது.உள்ளபடி முகத்துக்கு நேரேயே சொல்லிவிடும்.//

எனக்கு தூக்குத்தூக்கி படத்தில் வரும் "கொண்டு வந்தால் தங்கை" மாதிரி வசனம் நினவுக்கு வருகிறது.

எந்த உறவாயினும் அது சிறப்பதும் சீரழிவதும் பரஸ்பரமானது.

பாரபட்சங்கள், ஆதாயம் சார்ந்த விருப்பு, வெறுப்பு நிறைந்த இன்றைய உலகில் வெறுமனே ஒருதரப்புத் தொடர் முயற்சி வெறும் ஒருகை ஓசை. இனிமையான சுரம் தோன்றும் வாய்ப்பு மிகக்குறைவே!

புதுமை விரும்பி Tuesday, August 01, 2006 4:28:00 AM  

வரவேற்புகள்; போட்டிக்கான முதல் படைப்பை அனுப்பியதற்கு. வாழ்த்துக்கள்; முதல் பரிசை
வெல்வதற்கு. மீண்டும் உங்கள் படைப்பை முழுதாய் படித்துவிட்டு வருகிறேன்.

VSK Tuesday, August 01, 2006 9:59:00 AM  

சொன்னபடி மீண்டும் வந்து பாராட்டிய உங்களுக்கு நன்றி, உ.நண்பரே!
கோவியார் அற்புதமாக எழுதுகிறார்.

VSK Tuesday, August 01, 2006 10:01:00 AM  

வாழ்த்துக்கு நன்றி, திரு.வெற்றி.

என்ன, இப்பொழுதெல்லாம் அடிக்கடி காண முடிவதில்லை.?

படிப்பு மும்முரமா?
இல்லை, திருத்தம்பலேச்வரத்தில் முனைப்பா?!!

VSK Tuesday, August 01, 2006 10:04:00 AM  

சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள், திரு. ஜெயராமன்.

உறவென்ற உண்மையை, உணர்வின் பெயரால், உலுக்கத் துடிக்கும் சிலரைப் பார்த்ததால் எற்பட்ட எண்ணங்களே அவை!
தலைப்பைப் பார்த்ததும் கொட்டிவிட்டேன்!

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

வாசுவையும் கேட்டதாகச் சொல்லவும்!! :)

கோவி.கண்ணன் Tuesday, August 01, 2006 10:06:00 AM  

//SK said...
சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள், திரு. ஜெயராமன்.
//
பெருசுங்க நல்லவே தலையாட்டுதுங்க :))

VSK Tuesday, August 01, 2006 10:07:00 AM  

எனக்கும் பிடித்த வரிகளையே நீங்களும் தேர்வு செய்து புகழ்ந்திருப்பது, மனதுக்கு இதமாய் இருக்கிறது, கோவியாரே!

அன்பின் வழியது உயிர்நிலை!
நன்றி.

கோவி.கண்ணன் Tuesday, August 01, 2006 10:09:00 AM  

//பின்னூட்டக் கவி" (முதலிலேயே "பின்னூட்ட நாயகன்"பட்டம் கொடுத்தாயிற்று)
திரு.கோவி அவர்களின் பின்னூட்ட கவிதையும் அருமை

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.//

சரவணன் புல்லரிக்க வைக்கிறார்... அதாவது திட்டினா முகத்துக்கு நேரா திட்டனுமாம் ... என் பதிவில் செய்கிறார் :))

பாராட்டினா பின்னாடி பாராட்டனுமாம் அதான் இங்கே வந்து செய்கிறார்

உநா ... நான் காணாப் போனேன் :))

கப்பி | Kappi Tuesday, August 01, 2006 10:09:00 AM  

அருமை எஸ்கே ஐயா..
உறவுகளையும் உணர்வுகளையும் இணைத்து அருமையான கவிதை படைத்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

//இது என்ன 'கயமைத்தனத்துல' சேத்தி?!!
கூட ரெண்டு வார்த்தையும் சொல்லலாம்ல!
//
நான் சொல்றேன் சார்..

"கூட ரெண்டு வார்த்தை"

கோவி.கண்ணன் Tuesday, August 01, 2006 10:13:00 AM  

//
SK said...
எனக்கும் பிடித்த வரிகளையே நீங்களும் தேர்வு செய்து புகழ்ந்திருப்பது, மனதுக்கு இதமாய் இருக்கிறது, கோவியாரே!

அன்பின் வழியது உயிர்நிலை!
நன்றி. //

இருவரும் மாறி மாறி அருள் 'புரிந்துகொள்கிறோம்'

VSK Tuesday, August 01, 2006 10:13:00 AM  

நீங்கள் குறிப்பிடுவது உண்மையே!
ஒரு சில உறவுகள் அப்படியும் இருக்கிறார்கள்!
ஒரு சில நல்ல உணர்வுகளும் துணை வருதலும் உண்டு.
நான் குறிப்பிட்டிருப்பது, பொதுப்படையாக.
உறவோடு உணர்வு கலத்தல் சிறப்பு;
அதை விடுத்து வெறும் உணர்வுகளுக்கு மட்டும் அடிமையாகி,
உறவை ஒதுக்காதே என்பதை!
ஒருகை ஓசையை விடுத்து அனைவரும் முயன்றால் இனிய சுரம் பிறக்காமலா போகும்?

பின்னூட்டத்துக்கு நன்றி, திரு.ஹரிஹரன்!

VSK Tuesday, August 01, 2006 10:16:00 AM  

எனக்கு மிகவும் பிடித்த ஒரு கருத்து என்பதால், தலைப்பைப் பார்த்ததும் உடனேஎழுதிவிட்டேன்! :)

மற்றபடி, பரிசை எண்ணி எழுதவில்லை.

நன்றி, திரு. புதுமைவிரும்பி!

நாகை சிவா Tuesday, August 01, 2006 10:57:00 AM  

எஸ்.கே!
நல்லா இருக்கு உங்க படைப்பு.
ஆனால் உங்கள் கருத்துகளுடன் மாறு படுகின்றேன்.
உறுவுகளுக்காக உணர்வுகளை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் அந்த உறவுகள் நம் உணர்வை மிதிக்கும் போது ஏற்படும் வலிக்கு மருந்தே கிடையாது. அந்த வலியை கண்ட பிறகு உறுவுகள் மேலேயே ஒரு வெறுப்பு வருகின்றது. அனைத்து உறுவுகளையும் சொல்லவில்லை. காயப்படுத்திய உறுவுகளை தான் சொல்கின்றேன்.

VSK Tuesday, August 01, 2006 11:04:00 AM  

நீர் அடித்து நீர் விலகாது என்று கேள்விப்பட்டிருப்பீர்களே!
பெரும்பாலான உறவுகள் அப்படி இருப்பதில்லை.
நம் நலனில் அக்கறை கொண்டு, உரிமையுடன் நமக்கு எடுத்துச் சொல்லி, வேண்டும்போது நம்மிடமிருந்து அதே உரிமையுடன் தங்களுக்கு வேண்டியதையும் வாங்கி செல்வார்கள்!
அதுதான் உறவின் அழகே!
பாதகம் செய்பவர் சிலர் இருப்பார்கள். அவர்களையும் அரவணைத்தால் நன்மையே விளையும் என நினைக்கிறேன், திரு. நாகை.சிவா.

உணர்வால் நம்மை நசுக்குபவர்களே அதிகம்.

Unknown Tuesday, August 01, 2006 5:38:00 PM  

உணர்ந்து எழுதியிருக்கீங்க.. ஆனா, நான் பார்த்தவரை உறவுகளை மட்டுமல்லாமல் நட்பையும் சேர்த்து வளர்க்கவேண்டும். உறவால் பிரச்சனை வரும்போது நட்பு கைகொடுக்கலாம்.

Sivabalan Tuesday, August 01, 2006 9:03:00 PM  

SK அய்யா,

//அன்பெனும் உறவை வளர்க்கப் பாடுபடுவோம்.//


நல்லாயிருக்கு...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

நீங்களும் கடவுச் சொல் கேட்காதீங்க....

VSK Tuesday, August 01, 2006 9:13:00 PM  

நான் ஏன் கேக்கப்போறேன், சிபா!
அதான் தெரியுமே!!
கோவியார் சொன்னார்!

நன்றி உங்கள் பாராட்டுக்கு!

Sivabalan Tuesday, August 01, 2006 9:20:00 PM  

SK அய்யா,

நான் அவரிடம் யாரிடமும் பகிந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்... சரி விடுங்க...


உண்மையாகவே நல்லாயிருக்கு...

இந்த முறை நிச்சயம் வாக்களிப்பேன்...

VSK Tuesday, August 01, 2006 9:41:00 PM  

நான் சும்மா சொன்னேன்! அவர் ஒன்றும் சொல்லவில்லை! நேற்று உங்கள் பதிவில் கலாய்த்தாரே, அதைச் சொன்னேன்!

கோவி.கண்ணன் Tuesday, August 01, 2006 10:11:00 PM  

// Sivabalan said... நான் அவரிடம் யாரிடமும் பகிந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்... சரி விடுங்க...//

சிபா ... நீங்கள் பெருந்தன்மையுடன் சொன்னாலும் என்னிடம் 'பெறும்'தன்மை இல்லை...அதாலால் கடவுச் சொல்லை பெரும்தன்மையுடன் நானும் வேண்டாம் என்று சொல்கிறேன்...

சும்மா தமாஸ் பண்ணினது அது ... சிபாவையும் ... எஸ்கேவையும் வம்பு வளக்காவிட்டால் ... வேறு யாரை வம்புவளர்ப்பது :)))

மனதின் ஓசை Wednesday, August 02, 2006 12:04:00 AM  

SK,
ஒரு விளக்க் கட்டுரை போல் நன்றாக இருக்கிறது..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown Wednesday, August 02, 2006 7:47:00 AM  

எஸ் கே, உங்கள் கட்டுரையைப் படித்தேன். என்னுடையக் கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

உணர்வு என்பது மதிக்கப் பட வேண்டிய விஷ்யம்.
இங்கு தாங்கள் குறிப்பிட விரும்புவது உணாச்சிகள் என கருதுகிறேன்.

உணர்வில்லாதவன் மனிதன் அல்ல. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து மயங்குபவன் த்ன்ணுர்வை இழக்கிறான் என்பது என் கருத்து. தங்கள் விளக்கம் தேவை.

VSK Wednesday, August 02, 2006 10:19:00 AM  

நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள், நண்பர் தேவ்!
உறவின் எழுப்பாடு உணர்வு.
உணர்வின் விழுப்பாடே உணர்ச்சிகள்.
உதாரண்த்துக்கு ஒன்று சொல்கிறேன்.
தீ தொட்டால் சுடும் என்பது சூடு எனும் தொடு 'உணர்வு'.
தொட்டதும் வருவது சுடு 'உணர்ச்சி'.
தீயின் உணர்வு என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை ஆக்கபூர்வமாக வளர்ப்பது அதனுடனான 'உறவு'.

உறவின் மூலம் நாம் நன்மை அடைய முடியும்; நன்மை செய்ய முடியும்.
உணர்வு, உணர்ச்சி இரண்டையும் ஒரே அளவில்தான் நான் பார்க்கிறேன்.
இரண்டுக்கும் நடுவே சற்றுதான் இடைவெளி.

தமிழுடன் உறவு கொண்டு, தமிழுணர்வை வளர்த்து, உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தமிழன்னைக்குத் தொண்டு செய்வதும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம்.

கருத்துக்கு நன்றி.

நாகை சிவா Wednesday, August 02, 2006 11:08:00 AM  

//தமிழுடன் உறவு கொண்டு, தமிழுணர்வை வளர்த்து, உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தமிழன்னைக்குத் தொண்டு செய்வதும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம்.//
இத தான் சந்துல சிந்து பாடுறது சொல்லவாங்களோ?
:))))
ரொம்ப சீரியஸா போயிகிட்டு இருக்கு, அதான்.
:))))

Unknown Wednesday, August 02, 2006 11:40:00 AM  

நல்லதொரு விளக்கம் நன்றி எஸ்.கே

கோவி.கண்ணன் Wednesday, August 02, 2006 11:43:00 AM  

//நாகை சிவா said... இத தான் சந்துல சிந்து பாடுறது சொல்லவாங்களோ?
:))))//

தம்பி சிவா ! நான் கேட்க விரும்பியதை நச்சின்னு கேட்டு ஆச்சரிய படவெச்சிட்டிங்க :))

VSK Wednesday, August 02, 2006 12:48:00 PM  

//SK,
ஒரு விளக்க் கட்டுரை போல் நன்றாக இருக்கிறது..வெற்றி பெற வாழ்த்துக்கள்.//


விளங்கினால் மகிழ்ச்சியே!

நன்றி, மனதின் ஓசை'.

VSK Wednesday, August 02, 2006 12:52:00 PM  

////நாகை சிவா said... இத தான் சந்துல சிந்து பாடுறது சொல்லவாங்களோ?
:))))//

தம்பி சிவா ! நான் கேட்க விரும்பியதை நச்சின்னு கேட்டு ஆச்சரிய படவெச்சிட்டிங்க :)) //


ஏங்க, ஊர்க்காரவுகளே!

பிரச்சினை பண்ண வர்றீகளா?

சந்தும் இல்லை; சிந்தும் இல்லை.

தேவ் கேட்டதுக்கு எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்.

அவ்வளவுதான்!

ஆளை விடுங்க சாமி!

கோவி.கண்ணன் Wednesday, August 02, 2006 12:55:00 PM  

// SK said... ஆளை விடுங்க சாமி! //
இப்ப போறோம் ! பின்னாலயே வர்றோம் :)

ilavanji Wednesday, August 02, 2006 12:57:00 PM  

SK,

அமர்க்களமா போட்டியை ஆரம்பிச்சு வைச்சிருக்கீங்க! :)))

வாழ்த்துக்கள்!

VSK Wednesday, August 02, 2006 1:09:00 PM  

//
இளவஞ்சி said...
SK,

அமர்க்களமா போட்டியை ஆரம்பிச்சு வைச்சிருக்கீங்க! :)))//

எல்லாம் வாத்தியாரய்யாவைப் பாத்து கத்துக்கிட்டதுங்க!


வர்றேன்னு வேற ஜம்பமா சொல்லிட்டேன்.

அதான் பதிவைப் பாத்ததும் பாய்ஞ்சுட்டேன்! :)

வந்து வாழ்த்தினதுக்கு ரொம்ப நன்றிங்க!

கோவி.கண்ணன் Thursday, August 03, 2006 11:08:00 AM  

//எல்லாம் வாத்தியாரய்யாவைப் பாத்து கத்துக்கிட்டதுங்க!//
எல்லாம் வாத்தியாரய்யாவைப் பாத்துக் கத்துக்கிட்டாங்களா ? அது எப்படி சொல்லலாம் ? கண்டனம் !!!
நான் வைத்தியர்ஐயாவைப் எதிர்த்துப் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன் :))

VSK Thursday, August 03, 2006 11:12:00 AM  

நான் என்னைப் பற்றி சொன்னேன்.

நீங்கள் உங்களைப் பற்றி!

இதில் ஏன் கண்டனம், கோவியாரே!?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) Tuesday, August 08, 2006 5:32:00 AM  

உங்க கருப் பொருளோட என்னால் ஒத்துப் போக முடியாவிட்டாலும் நன்றாக இருந்தது உங்கள் நடை.

மதுமிதா Tuesday, August 22, 2006 3:44:00 PM  

மிக நீண்ட வசன கவிதை

அனைத்தையும் கொட்டி விடவேண்டுமெனும் வேகம் தொடர்கிறது.

///
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, உறவைத் தாறுமாறாய்ப் பேசித்திரியும் சிலரும் அதில் இருக்கக்கூடும்.
இருந்துவிட்டுப் போகட்டும்.
///

யதார்த்த உண்மை

VSK Tuesday, August 22, 2006 4:36:00 PM  

நீளம் சற்று [மிக??] அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

நீங்கள் சொன்னது போல, மனதில் இருந்தவற்றைக் கொட்டித்தான் இருக்கிறேன்.

புரிதலுக்கும், வருதலுக்கும் நன்றி, மதுமிதா அவர்களே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP