Wednesday, March 25, 2009

"நீரே நீராய்!!"

"நீரே நீராய்!!"

ஆற்றங்கரையில் ஓர்நாள் அமர்ந்தேன்
நீரது வந்தென் கால்களைத் தொட்டது!

ஒருகை அள்ளி நீரைப் பார்த்தேன்
பார்த்ததும் வியப்பில் நானும் ஆழ்ந்தேன்!

நீரின் கண்களில் நீர்வரக் கண்டேன்
நீரே கண்ணீர் உகுத்தலும் கண்டேன்!

ஏனுன் கண்களில் நீரெனக் கேட்டேன்
நீரும் கண்ணீர்க் கதையினைச் சொன்னது!

என்நிலை எனக்குப் புரியவும் இல்லை
எள்ளிடும் பலரால் என்நிலை நொந்தேன்!

கொள்ளும் குடுவையின் அளவாய் எந்தன்
உள்ளம் மாறிடும் இழிநிலை ஏனோ?

சீராய்ச் செல்லும் என்னைத் தடுத்திட
நூறாயிரம்பேர் இங்கே உண்டு!

இதனால் நானும் கண்ணீர் உகுத்தேன்
நின்னிடம் சொல்லி தேறுதல் கொண்டேன்!

என்றிட்ட நீரை நானும் நோக்கி
ஆறுதல் மொழிகள் ஒருசில சொன்னேன்!

துளியாய்ப் பிறக்கும்! தன்னைக் கூட்டி
ஆறாய்ப் பெருகும்! கடலைச் சேரும்!

பிறப்பிடம் தன்னில் தன்நிலை மீறிட
தானாய் வழிந்து வெளியே ஓடும்!

விடுதலை அடைந்ததும் ஆணவமின்றித்
தன்வழி எதுவெனத் தானே அமைக்கும்!

பெருகிடும் நீரின் பாதையை அமைப்பது
நீரே அன்றி வேறெதும் இல்லை!

நேர்வழி சென்றிட எண்ணமிருந்தும்
தடைகளைக் கண்டு துவளாதோடும்!

வளைந்திட வேண்டின் வளைந்தும் செல்லும்
நேர்வழி கிட்டின் சீராய்ச் செல்லும்!

எவ்வழி சென்றும் இலக்கையே தேடும்
அவ்வழி ஒன்றே தனக்கென நாடும்!

தடைகள் இருந்தால் சற்றே தயங்கும்
தன்னின் வலிமை மேலும் கூட்டும்!

தன்வலி உணர்ந்ததும் சீறிப் பாயும்
தடைகளைத் தாண்டி கடமைகள் ஆற்றும்!

அடங்கிடும் நீரை அறிவிலி என்போர்
அவரே அறியார் நீரின் வலிமை!

தேங்குதல் கூடச் சீறிடத் தானே
தூங்குதல் இதற்கு என்றும் இலையே!

கொள்ளும் அளவையில் குழைந்தே நிற்கும்
ஆயினும் தன்னைக் காட்டியே வழியும்!

அடக்கிட நினைக்கும் பாத்திரம் அறியுமோ
அடங்குதல் இதற்குக் கிடையாதெனவே!

சீர்வழி இதுவெனத் தெரிந்திடும் போது
சீறிடும் இதனை அடக்குவர் எவரோ!

தெளிந்தே ஓடித் தாகம் தீர்க்கும்
குழம்பிடும் நிலையிலும் தன்நிலை உணரும்!

அனைத்தையும் கரைக்கும் ஆற்றலும் உண்டு!
அனைத்துடன் கலக்கும் தெளிவும் உண்டு!

கரைந்தும் கலந்தும், தன்நிலை மாறாத்
தெளிவுடன் மேலே தானே ஒளிரும்!

உலகம் வாழ்ந்திடச் செய்திடும் பண்பும்
உலகையே அழித்திடும் ஆற்றலும் உண்டு!

நீரின் இயல்பு குளிர்மை ஒன்றே
கொதித்திடச் செய்யினும் தண்நிலை திரும்பும்!

நீரின் போக்கை அணைகள் தடுக்கும்
அதனிலும் இதுவே சக்தியாய் மாறும்!

செல்லும் வழியினில் சோலைகள் விரிக்கும்
சொல்லிடும் மொழிகளில் இனிமை கூட்டும்!

மலையினில் வீழ்ந்து அருவியாய்ப் பொழியும்
கரையினுள் தங்கிக் குளமாய்த் திகழும்!

வாழும் உயிர்கள் வாழ்ந்திடச் செய்யும்
தாழும் நிலையிலும் ஊற்றாய்ச் சுரக்கும்!

எவ்வழி செல்லினும் கடலையே நாடும்
அவ்வழி தேடித் தன்பணி செய்யும்!

இதற்கென உணர்வுகள் இதனிலும் உண்டு
அதனைக் காட்டிடும் பண்பும் உண்டு!

நீரை உண்டால் ஆயுள் நிலைக்கும்
நீரே உண்டும் எம்கதை முடிக்கும்!

அடங்குதல் போலத் தெரியும் சிலநாள்
ஆயினும் அடங்குதல் வெளிக்கிடத் தானே!

நீரின் போக்கை நீரே செய்யும்
வேறெவர் இதனை அடக்கிடக் கூடும்!

நீரில் மாசுகள் கலந்திட்ட போதும்
நீரின் புனிதம் கெடுவதும் இல்லை!

நீரின் பெருமை இத்தனை சொன்னேன்
நீரே நீராய்ப் பொலிதலும் கண்டேன்

எனவே நீயும் கலங்கிட வேண்டா
நின்வழி சென்றிடத் தயங்கவும் வேண்டா!

நின்னின் பெருமை நினக்கே சொன்னேன்
மண்ணில் உயர்ந்தது நீரே என்றேன்!

நீரும் என்னைக் கனிவுடன் பார்த்தது
கைவழி நழுவித் தன்னுடன் சேர்ந்தது!

தன்வழி செல்லும் நீரினைப் பார்த்தேன்
களங்கம் இல்லா அதனுடன் கலந்தேன்!

********************************************

4 பின்னூட்டங்கள்:

மெளலி (மதுரையம்பதி) Thursday, March 26, 2009 6:49:00 AM  

மிக அழகாக வந்திருக்கிறது ஐயா...
நீரின் பெயரில் எழுதியிருந்தாலும், அதில் உள்ள கருத்துக்கள் உபதேச மணிகளாகவே என் கண்ணுக்குத் தெரிகிறது....:-)

VSK Thursday, March 26, 2009 7:50:00 AM  

மிக்க நன்றி ஐயா!
தங்கள் வரவும், பின்னூட்டமும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவி.கண்ணன் Thursday, March 26, 2009 10:47:00 PM  

"நீர்" சமைத்த கவிதை நன்று !

VSK Friday, March 27, 2009 12:10:00 AM  

அடுத்த பதிவு சமைத்த பதிவுதான் கோவியாரே!:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP