Friday, January 30, 2009

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]


”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்!

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில், தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள் ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பகவான் ரமணரின் பாடல்கள்:


1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!


2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.


3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.


4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம் இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.


5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.


6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது, நெய்வீழ்ச்சி போல் , சிந்தாமல், சிதறாமல், ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.


8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhaavam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அனனிய பாவம் [bhaavam].

அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

இனி, ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்தக் கருத்துகளை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்து, திங்களன்று மீண்டும் தொடரலாம்!

குருவே துணை!

*****************

[தொடரும்]

Thursday, January 29, 2009

"உந்தீ பற!” -- 6

"உந்தீ பற!” -- 6

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்

விட்டிடா துன்னலே யுந்தீபற

விசேடமா முன்னவே யுந்தீபற. [7]


விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்

விட்டிடாது உன்னலே உந்தீ பற

விசேடமாம் உன்னவே உந்தீ பற.

தியானம் செய்தலில் பல்வகை உண்டாம்
நீரின் வீழ்ச்சி பலவிதமாகும்

சிந்திச் சிதறிப் பட்டுத் தெறித்து
நீரின் வேகம் போலது வீழும்

நெய்யின் வீழ்ச்சியோ சீராய் நிகழும்
மேல்முதல் கீழ்வரை ஒழுங்காய் ஒழுகும்

சிந்துதல் சிதறுதல் இதனில் கிடையா
இவ்வகை நிகழும் தியானமே உயர்வாம்.


எண்ணை, அல்லது நெய்யை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றும்போது கவனித்தால், அதன் ஒழுக்கு ஒரே சீராய் சிந்தாமல், சிதறாமல் நிகழ்வது தெரியவரும்.

நீரருவி விழுகையில், அப்படி இராது.

அப்படி, ஒரு நெய்யொழுக்கின் வீழ்ச்சி போல, கவனம் சிந்தாமல், அலைபாயாமல் தியானம் செய்வது நிகழவேண்டும்.

இதுவே உயர்ந்ததாம்.


அனியபா வத்தி னவனக மாகு

மனனிய பாவமே யுந்தீபற

வனைத்தினு முத்தம முந்தீபற. [8]


அனிய பாவத்தின் அவன் அகம் ஆகும்

அனனிய பாவமே உந்தீ பற

அனைத்தினும் உத்தமம் உந்தீ பற.


புறமொரு தோற்றம் கண்ணால் கண்டு
அதனில் அளவிலாக் காதல் கொண்டு

அதனை அங்ஙனம் எண்ணீயபடியே
நிகழ்த்திடும் தியானம் அன்னியம் ஆகும்

அகத்துனுள் ஒரு தனி உருவினை நிறுத்தி
அதனை உள்ளுள் ஒளிரச் செய்து

அவ்வுருதன்னில் கருத்தினை உன்னும்
அனனிய தியானம் அனைத்திலும் உயர்வாம்.


வெளியே கண்ணுக்கு முன்னே தெரிகின்ற தனக்குப் பிடித்தமான கடவுளரின் உருவத்தைக் கண்ணாரக் கண்டு, உருகி, அந்தத் தோற்றத்தின் மீது பக்தி கொண்டு மெய்யுருகித் துதிப்பது அன்னிய பாவம்[bhaavam] என வகைப்படும்.

அதே தோற்றத்தைத் தன் மனத்துக்குள் நிலை நிறுத்தி,மனக்கண்ணால் அதனைக் கண்டு பக்தி செய்வது அனனிய பாவம்[baavam] எனச் சொல்லப்படுகிறது.

உள்ளில் இவ்வாறு எண்ணி தியானம் செய்வதே, இந்த அனனிய பாவமே
உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறது.

‘தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளில் தேடிக் கண்டுகொண்டேன்’ என்பதும் இதுவே!

*************

[திங்களன்று மீண்டும் தொடரும்] [நாளை இதுவரை கற்றதை ஒரு பார்வை பார்க்கலாம்!]

Wednesday, January 28, 2009

"உந்தீ பற!” - 5

"உந்தீ பற!” - 5

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”


[முந்தைய பதிவு]


எண்ணுரு யாவு மிறையுரு வாமென

வெண்ணி வழிபட லுந்தீபற

வீசனற் பூசனை யுந்தீபற. [5]


எண் உரு யாவும் இறை உரு ஆ[கு]ம் என


எண்ணி வழிபடல் உந்தீபற


ஈசன் நல் பூசனை உந்தீபற.


எவ்வகைத் தோற்றம் மனதில் எழினும்
அவ்வகை இறையென எண்ணிப் போற்றிக்


காணும் யாவினும் இறையுருக் கண்டு
வழிபடும் பூசனை அவற்றுள் கொண்டு


இறைவழிபாடு இவ்விதம் செய்து
ஈசன் அவரே என்றே உணர்ந்து


நாளும் நினைவுடன் பூசனை செய்யின்
ஈசன் மகிழ்வான் இதுவே திண்ணம்.


காணுகின்ற எதனையும் இறைவன் உருவாக எண்ணி, எண்ணுகின்ற, காணுகின்ற எதனையும் இறைவன் என்றே எண்ணி, அத்தனையையும் இறையாகவே வழிபாடு செய்வதே, ஈசன் வழிபாடு என்று உணர்க.


வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்

விழுப்பமா மானத முந்தீபற


விளம்புந் தியானமி துந்தீபற. [6]


வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்கு உள் செபத்தில்

விழுப்பம் ஆனதமும் உந்தீ பற

விளம்பும் தியானம் இது உந்தீ பற.



ஈசன் நாமம் உரக்கச் சொல்லி
அவனது புகழைப் பாடுவர் சிலரும்


உதடுகள் மட்டும் அசைந்திடும் வண்ணம்
திருப்பெயர்ச் சொல்லிச் செபமும் செய்வர்


இதனினும் உயர்ந்தது அடி நாக்கிடத்தில்
எதனும் அசையா திருநாமம் செபித்தல்


தியானம் என்னும் மேல்நிலைப் படிக்கு
இதுவே வழியாம் என்றே உணர்க.


‘வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்’ என ஒரு பாடல்வரி உண்டு.

அதைப் போல, சத்தம் போட்டு இறை புகழ் பாடிடுவார் சில பேர்.


உதடுகளை மட்டுமே அசைத்து, சத்தம் வராமல் சிலர் செபம் செய்வர்.


இதை விடவும் சிறந்தது, உள்நாக்கில் இதனை உருட்டி, எதையும் அசைக்காமல், செபம் செய்வது.


இதுவே மிகவும் உயர்ந்த நிலை என இப்பாடல் சொல்கிறது.

*************************
[தொடரும்]

Tuesday, January 27, 2009

"உந்தீ பற!” - 4

"உந்தீ பற!” - 4

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



[முந்தைய பதிவு]

கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங்

கருத்தைத் திருத்தியஃ துந்தீபற

கதிவழி காண்பிக்கு முந்தீபற. [3]

கருத்தனுக்கு ஆக்கு[ம்] நிட்காமிய கன்மம்
கருத்தைத் திருத்தி அஃது உந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற.


பலனை வேண்டிச் செய்திடும் கருமம்
ஏதுபலன் தருமென எவரும் அறியார்

வேண்டிய பலனும் வந்திடின் வரலாம்
கூடவோ குறைந்தோ அதுவும் வரலாம்

முற்றிலும் வேறாய் பயனும் தரலாம்
இவ்வகை செய்பலன் நால்வகை ஆகும்

பயனெதும் கருதா செய்வினை செய்யின்
கருத்தைத் திருத்திக் கதிவழி காட்டும்

என்பதை உணரும் அறவழி மாந்தர்
அவ்விதம் செய்து பயனை விரும்பார்.


முதல் பாடல் கருத்தில் சொன்னதுபோல 'நால்வகைப் பயன்கள்' ஒரு செயலால் விளையும் என்பதை நன்கு உணர்ந்தவர், பயன் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யவேண்டிய செய்கையினை மட்டுமே
செய்வதே ‘நிஷ்காமிய கன்மம்’ என தங்களது கருத்தைத் திருத்திக்கொண்டு அதுவே முக்திக்கு வழியென நடப்பார்கள்.

திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற

வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற. [4]


திடம் இது பூசை செபமும் தியானம்
உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற.


இறைவனை எண்ணி ஆராதித்தலும்
அதனையே உன்னி நாமம் செபித்தலும்

மனதில் எண்ணி தியானம் செய்தலும்
உடல்வாக்கு உள்ளம்செய்யும் மூவகைத்தொழிலாம்

உடல்வழி செய்வது பூசை ஆகும்
அதனினும் சிறந்தது வாக்கினில் செபமும்

உளத்தில் ஒடுங்கிடும் தியானம் மிகவேவுயர்வே
இவ்வகையாய்ச் செய்திடல் எதனிலும் சிறப்பு.


‘காயேனவாசாமனஸா’ என உடல் வாக்கு மனம் என மூன்று வகையில் திடமாகப் பூசை செய்ய இயலும்.

உடலை வருத்தி பூசனை செய்வதைக் காட்டிலும், வாயால் செபித்து பூசை செய்வது சிறந்தது.

அதைவிடவும் சிறந்தது, மனதில் இறையை எண்ணி தியானம் செய்வது.

******************
[தொடரும்]

Monday, January 26, 2009

"உந்தீ பற!” - 3

"உந்தீ பற!” - 3

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

காப்புச் செய்யுளாக வரும் இந்த மூன்று பாடல்களும் நான் எழுதியவை.

அருணைக் கோபுர வாசலில் அமர்ந்து
கருணைசெய் கணபதி உந்தீ பற
கவலைகள் தீர்ந்ததென உந்தீ பற

பெருமைத் தலமாம் அருணா சலத்தில்
சோதியாய் எழுந்தருள் உந்தீ பற
அண்ணாமலையா யுந்தீ பற

முத்தியருள் சிவ சத்திப் பதியினில்
உய்த்து உணர்ந்தவா வுந்தீ பற
குருவருள் ரமணா உந்தீ பற
**********************


“நூல்”

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற. [1]


கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.


கருமம் என்பது செய்தொழிலாகும்
செயல்படு பொருளதால் செய்கை ஆகும்


தானாய் இயங்கும் ஒரு தொழிலன்று
செய்கை என்பதோர் இயக்கம் மட்டுமே


இயக்கம் செய்தல் எவராலும் கூடும்
ஆயினும் அதன்பயன் எம்மிடம் இல்லை


பயனைத் தருவதும் இறைவன் ஆணையே
அதனால் அதையொரு சடமெனச் சொன்னார்


எனவே செய்கை இறையென ஆகா[து]


எந்தவொரு செயலும் தானாய் நிகழ்வது இல்லை. மேசை மேல் இருக்கும் ஒரு எழுதுகோல், அல்லது புத்தகம் இவை இரண்டுமே ஏதோ ஒரு இயக்கத்தின் மூலமே ஒரு பயனைப் பெறுகிறது. இதில் எதை எடுப்பது எனத்
தீர்மானிப்பவரின் செய்கையால் மட்டுமே இவை செயல்திறன் பெறுகின்றன.


கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போல, எந்த ஒரு செயலாலும் 1.எண்ணியபடியே, 2. எண்ணியதற்குக் குறைவாக, 3. எண்ணியதற்கும் மேலாக, 4. முற்றிலும் எதிர்பாராத என நான்கு விதமான பயன்களே வரமுடியும்.



ஒரு புறாவை நோக்கி அம்பு விடுக்கும் ஒரு வேடனை மனதில் எண்ணி இந்த நான்கு பலன்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது புரியும். அப்படி, இந்த பலன்களை அளிப்பது இறைவன் ஆணையே! ஆகவே, செய்கருமம் ஒரு சடப் பொருளே; அதுவே இறைவன் என ஆகாது.

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற. [2]

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீ பற
வீடு தரல் இ[ல்]லை உந்தீ பற.


வளமுறு நிலத்தில் விதைக்கும் விதையால்
விதையின் திறனே பயிராய் விளையும்


விளைவதும் செய்திடும் முயற்சியால் கூடும்
கூடலும் குறைதலும் செய்வினை ஆகும்


செய்யும் வினையால் விளைவதும் வினையே
இதுவே தொடர்ந்து வினைக்கடல் ஆழ்த்தும்


வினைக்கடல் தாண்டி விடுதலை அடைந்திடல்
வினையின் செயலால் விளைவதும் இல்லை.

ஒரு செயல் செய்கையில், அதனைத் தொடர்ந்து வருகின்ற வினைப்பயன் மேலும் மேலும் பல வினைகளைச் செய்யவைத்து நம்மை வினை என்கின்ற ஆழ்கடலில் ஆழ்த்திவிடும். ஒரு தொழில் தொடங்கி, அது வளர, வளர. செயல்பாடுகள் மேலும் விரிவடைகின்றன.

அல்லது அது நட்டத்தில் செல்ல, அதனைத் தொடர்ந்தும் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.

சரவணபவன் உணவுவிடுதி,சத்யம் நிறுவனம் போன்றவற்றை இதனுடன் பொருத்திப் பார்த்தால் விளங்கும். இந்த வினைக்கடலில் ஆழ்ந்தவரால் வீடுபேறு என்பது அடையமுடியாத ஒன்றாகிப் போய்விடுகிறது.

**********************

[தொடரும்]

Friday, January 23, 2009

"உந்தீ பற" -- 2

"உந்தீ பற" -- 2

[முந்தைய பதிவு]

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"

பாயிரத்தைத் தொடர்ந்து, திரு. முருகனார் ஒரு சிறிய முன்னுரை போல, பகவான் ரமணரின் இந்த நூல் எதைப் பற்றிப் பேசுகிறது என சொல்ல விழைந்து, ஒரு கதையை நம் முன் எடுத்து வைக்கிறார்.


மாணிக்கவாசகர், முப்புரம் எரித்ததையும், தட்சன் நடத்திய யாகத்தில் அனைவரும் அழிந்ததையும் தனது திருவுந்தியில் பாட, முருகனாரோ, தாருகவனத்து முனிவர்கள், ’தான்’ என்ற மமதையில், செயல் ஒன்றே சிறந்தது என்கிற ஆணவத்தில், ஆதிசிவனோடு மோத, அவர்களது கருவத்தை சிவன் எப்படி அழித்து ஆட்கொண்டார் என்பதை ஆறு பாடல்கள் மூலம் சொல்கிறார்.
இதற்கு உபோற்காதம் [முன்னுரை, முகவுரை, பாயிரம், முன்கதை] எனப் பெயரிட்டு வழங்குகிறார்.

அந்தப் பாடல்களையும், அவற்றைப் பதம் பிரித்தும், சுருக்கமான பொருள் காணலாம்.


[கலித்தாழிசை]

உபோற்காதம்

தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர்

பூருவ கன்மத்தா லுந்தீபற

போக்கறை போயின ருந்தீபற.

தாரு வனத்தில் தவம் செய்திருந்தவர்

பூருவ கன்மத்தால் உந்தீ பற

போக்கறை போயினர் உந்தீ பற.

[தாருகாவனத்தில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்கள், முந்தைய பிறப்பில் தங்களுக்குக் கிட்டிய செய்பலனால், தாங்கள் செய்வது இன்னது என அறியாது கெட்டொழிந்தனர்.]

கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும்

வன்மத்த ராயின ருந்தீபற

வஞ்சச் செருக்கினா லுந்தீபற.


கன்மத்தை அன்றிக் கடவுள் இல்லையெனும்

வன்மத்தர் ஆயினர் உந்தீ பற

வஞ்சச் செருக்கினால் உந்தீ பற.


[மதிமயங்கிய முனிவர்கள் தாங்கள் செய்கின்ற தவத்தினால் கிட்டிய செய்பலன் என்கிற கன்ம பலமே சிறந்தது. அதனை மீறிக் கடவுள் என ஒன்றும் இல்லை என ஆணவச் செருக்குற்றவராயினர்.]


கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச்செய்

கன்ம பலங்கண்டா ருந்தீபற

கர்வ மகன்றன ருந்தீபற.


கன்ம பலம் தரும் கர்த்தர்[ரை] பழித்துச்

செய்கன்ம பலம் கண்டார் உந்தீ பற

கர்வம் அகன்றனர் உந்தீ பற.


[இந்த ஆணவம் தலைக்கேற, கன்ம பலம் என்கின்ற ஒன்றைத் தருகின்ற கடவுளைப் பழிக்கும் செயலால், [முற்பிறப்பால் கிட்டிய பலன்களை எல்லாம் இழந்து, இப்போது செய்துவந்த இழிச்செயலால்] இந்தச் செயலால் விளைந்த பலனை அடைந்தனர். அதன் மூலம், தங்கள் ஆணவமும் அழிக்கப் பெற்றனர். ]

காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தனனுந்தீபற

சிவனுப தேசமி துந்தீபற.


காத்து அருள் என்று கரையக் கருணைக்கண்

சேர்த்து அருள் செய்தனன் உந்தீ பற

சிவன் உபதேசம் இது உந்தீ பற.

[ஆணவம் அழியப் பெற்றதால், எங்களைக் காத்து அருளவேண்டும் எனக் கண்ணீர் மல்க சிவனாரை வேண்ட, கருணைக் கண் திறந்து அவர்களுக்கு அருள் செய்தார். அப்படி அவர் செய்தபோது அருளிய உபதேசம் இது என அறிக.]


உட்கொண் டொழுக வுபதேச சாரத்தை

யுட்கொண் டெழுஞ்சுக முந்தீபற

வுட்டுன் பொழிந்திடு முந்தீபற.


உள்கொண்டு ஒழுக உபதேச சாரத்தை

உள்கொண்டு எழும் சுகம் உந்தீ பற

உள் துன்பு ஒழிந்திடும் உந்தீபற.


[இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கி அதன்படி நடந்து வந்தால், உள்ளிருந்து ஒரு சுகமான அனுபவம் எழுவதை உணரலாம். இதுவரை இருந்த துன்பங்கள் எல்லாமே ஒழிந்து போய்விடும்.]


சார வுபதேச சாரமுட் சாரவே

சேரக் களிசேர வுந்தீபற

தீரத் துயர்தீர வுந்தீபற.


சார உபதேச சாரம் உள் சாரவே

சேரக் களி சேர உந்தீ பற

தீரத் துயர்தீர உந்தீ பற.


[அப்படியே அனைவரும் இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இன்பம் ஒன்றையே அடையட்டும். அவர்கள் துன்பமெல்லாம் தீர்ந்து போகட்டும்.]

-- முருகனார்

[எனச் சொல்லி முருகனார் வாழ்த்துகிறார்!]
____________________________


இதுவரை வந்த பாடல்களுக்குச் சொல்லியதெல்லாம் பொதுப்படையான பொருள் மட்டுமே. உபதேச உந்தியாரில் வருகின்ற பகவான் ரமணரின் முப்பது பாடல்களுக்கும் சற்று வித்தியாசமான முறையில்,... ஒரு எட்டுவரிக் கவிதையில்.... சொல்ல முயன்றிருக்கிறேன். தொடர்ந்து சில உரைநடை விளக்கங்களும் இருக்கும்.


அப்படித் தொடங்கும் போது, என் மனதில் உதித்த ஒரு மூன்று பாடல்களை வாழ்த்துப் பாக்களாக உங்கள் முன் வைத்து, அதனைத் தொடர்ந்து, பகவானின் பாடல்களை அளிக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை [இந்திய நேரம்] வாரம் ஐந்து பதிவுகளாக இது வரும்.

நன்றி.

முருகனருள் முன்னிற்கும்!
_________________________
[தொடரும்]

Thursday, January 22, 2009

"உந்தீ பற" -- 1

"உந்தீ பற" -- 1

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"


திருவாசகம் படித்துவருகையில், மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய ஒரு பாசுரம் என்னை மிகவும் கவர்ந்தது.


திருவுந்தியார் எனும் இந்தத் தொகுப்பு மூன்றடிகள் கொண்ட பாக்களால் ஆனது. இரண்டாம், மூன்றாம் அடிகளில் ஈற்றடியாக 'உந்தீ பற' எனும் சொற்றொடர் வரும்.


இதன் பொருள் என்னவெனத் தேடினேன். இது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு என ஒரு பொருள் இருந்தது. அதை வைத்து யோசிக்கையில், முதல் இரண்டு அடிகளைச் சொல்லி அதில் ஒரு கேள்வியையோ அல்லது கருத்தையோ வைத்து ஒரு பெண் மலர்ப்பந்தை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை அடுத்தவளிடம் வீச, அவள், அதற்கான விடையைச் சொல்லி திருப்பி எறிவது எனக் கற்பனை செய்து பார்த்தால், இதன் அமைப்பு சற்று புரிய வரலாம்.


இதைத் தவிரவும் மேல் விளக்கங்கள் இருக்கலாம். தெரிந்தவர்கள் வந்து சொன்னால், நன்றியுடையவனாக இருப்பேன்.


உதாரணத்திற்கு ஒன்று:


மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில், எட்டாம் திருமுறையில், 'ஞான வெற்றி' எனும் தலைப்பில் உள்ள 'திருவுந்தியாரில்’ இருந்து ஒரு பாடல்:


ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற


இதன் முதல் ஈரடிகள் சொல்வதின் பொருள்:


முப்புரம் எரிக்கக் கிளம்புகிற திருவேகம்பரின் திருக்கரத்தில் நாம் இரண்டு அம்புகளைக் கூட காணவில்லையே? ஒரு அம்புதானே இருக்கிறது
எனச் சொல்லி உந்தீ பறக்கவிடுகிறாள் அடுத்தவளிடம்!


அதற்கு பதில் அளிக்கிறாள், அடுத்தவள் மூன்றாவது அடியில்:


[பார்வையாலேயே சுட்டெரிக்கும் வல்லமை பெற்ற எம்பெருமானுக்கு] அந்த ஓரம்பே அதிகமில்லையோ? எனச் சொல்லி உந்தீ திருப்பிப் பறக்க விடுகிறாள்.


இப்படியாகப் போகிறது விளையாட்டு மாறி மாறி!


மாணிக்கவாசகரைத் தொடர்ந்து இந்த பாணியைக் கையாண்டு பலரும் இயற்றி இருக்கிறார்கள். அவையெல்லாமே 'திருவுந்தியார்' எனவே அழைக்கப்படுகின்றன.


அப்படி ஒரு நூல் என் கைகளில் வந்து சேர்ந்தது.


இது கிடைத்தது ஒரு சுவையான நிகழ்வு.


எனது உறவினர் ஒருவர் சொன்னதின் பேரில், எங்களூரில் இருக்கும் ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்திருந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.


அவர் பகவான் ரமணரின் குடும்ப வழித் தோன்றல் என்பது சென்ற பின்னரே தெரிய வந்தது. விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது, என் கையில் ஒரு புத்தகம் கொடுத்து ”இதைப் படியுங்கள்” எனச் சொன்னார். பகவான் ரமணரால் இயற்றப்பட்ட பல்வேறு பாசுரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூல் அது.


அன்றுதான் திருவண்னாமலை தீபத் திருநாள்! அண்ணாமலையான் ஆசியாக அதை நினைத்து நன்றிசொல்லி வந்தேன்.


அண்மையில், சென்னை சென்றிருந்தபோது, விமானத்தில் படிக்க இதனை எடுத்துச் சென்றிருந்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த பாசுரம்தான் இந்த ”திருவுந்தியார்”!


'நான்' என்பது யார்? அதனை எப்படி அறிவது? அறிந்தபின் எப்படி விடுவது? தான் அற்றவனாக எப்படி ஆவது? போன்ற பல கேள்விகளுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பாசுரமாக அது எனக்குத் தோன்றியது.


எனக்குத் தெரிந்த அளவில், இந்த மூன்றடிப் பாக்களை எட்டுவரிக் கவிதை வடிவில் விளக்க முயன்றிருக்கிறேன். குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்!
முப்பது பாடல்களில் இதனை பகவான் ரமணர் சொல்லியிருக்கிறார். அவரது சீடரான முருகனார் என்னும் அன்பர் இதற்கு முன்னும் பின்னுமாக பனிரண்டு பாக்களை இதே அமைப்பில் சேர்த்திருக்கிறார். அவற்றுள், முதல் ஏழு பாடல்களை முதலில் சுருக்கமாக அளிக்கிறேன்.


குருவருள் துணை நிற்கட்டும்!
******************************


"உபதேசவுந்தியார்"


பாயிரம்


[வெண்பா]

[இந்தப் பாடல் 'உந்தீ பற' அமைப்பில் அமைந்தது அல்ல!]


கன்மமய றீர்ந்துகதி காண நெறிமுறையின்
மன்மமுல குய்ய வழங்குகெனச் - சொன்முருகற்
கெந்தைரம ணன்றொகுத் தீந்தானுபதேச
வுந்தியார் ஞானவிளக் கோர்.


[பதம் பிரித்து]


கன்மமயம் தீர்ந்து கதிகாண நெறிமுறையின்
மன்மம் உலகுய்ய வழங்குக எனச் - சொன்முருகற்கு
எந்தை ரமணன் தொகுத்து ஈந்தான் உபதேச
வுந்தியார் ஞானவிளக்கோர்.


உபதேச உந்தியார் என்னும் ஒரு ஞானவிளக்கு! கன்ம மலம் தீர்ந்து எவ்வாறு கதி காணுவது என்பதன் மர்மத்தை இந்த உலகம் உய்வதற்கென வழங்கிடுக எனச் சொன்ன முருகருக்கு[சீடர் முருகனார்] எங்கள் தந்தையாகிய 'ரமணன்' இங்கே தொகுத்து அளித்தான்.

***********************************


[தொடரும்]

Wednesday, January 21, 2009

”ஆனந்த ராமாயணம்” -- 2

”ஆனந்த ராமாயணம்” -- 2

"கிஷ்கிந்தா காண்டம்"


அனுமான் எதிரில்வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா


நேசம்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீ நிலத்தில் செய்து கொண்டீர் ராமா ராமா


சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டு மனம் கசிந்தீர் ராமா ராமா


சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மராமரத்தை ராமா ராமா


வாலியை வதைத்தவனை ராமா ராமா

வைகுண்டம் போகச் செய்தீர் ராமா ராமா


சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதி சொல்லி விடுத்தீர் ராமா ராமா


நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகின்றார் ராமா ராமா

*****************************************


"சுந்தர காண்டம்"


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடவே ராமா ராமா


மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா


இலங்கிணி தன்னையே ராமா ராமா

கலங்கிட அடித்தானே ராமா ராமா


சீதையைத் தேடிக்கண்டானே ராமா ராமா

சேதி அடையாளம் தந்தான் ராமா ராமா


அசோகவனம் அழித்தான் ராமா ராமா

அசுரர்களைத் தான் வதைத்தான் ராமா ராமா


இலங்கைக்குக் கொள்ளி வைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா


சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா


இந்திரஜித்தன் அஸ்திரத்தால் ராமா ராமா

பந்தித்த அனுமானும் ராமா ராமா


ராவணனைக் கண்டு அனுமான் ராமா ராமா

சாவாமைக்கு புத்தி சொன்னான் ராமா ராமா


விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா

**************************************


"யுத்த காண்டம்"


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா


சரணமடைந்த விபீஷணர்க்கு ராமா ராமா

சிரஞ்சீவிப் பட்டம் தந்தாய் ராமா ராமா


ராவணாதி அசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷஸர் வேரற்றுப் போக ராமா ராமா


சீதையைச் சிறை நீக்கிவிட்டாய் ராமா ராமா

விபீஷணர்க்கு முடிதரித்தாய் ராமா ராமா


அயோத்திக்குத் திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்கு உரை செய்தாய் ராமா ராமா


புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா


போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போக விடுத்து அனுமானை ராமா ராமா


பரதன் உயிர் காப்பாற்றிய ராமா ராமா

அயோத்திநகர் வந்து சேர்ந்தீர் ராமா ராமா


மகுடாபிஷேகம் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா


குவலயத்தை ரக்ஷிக்கும் ராமா ராமா

குறைகள் ஒன்றும் வாராது ராமா ராமா


ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

*********************************

ஆனந்த ராமாயணம் நிறைவுற்றது!

Tuesday, January 20, 2009

"ஆனந்த ராமாயணம்" - 1

"ஆனந்த ராமாயணம்"


நான் தினந்தோறும் சொல்லிவரும் ஒரு இனிய தோத்திரப் பாடல் ஆனந்த ராமாயணம். எளிய தமிழில், ராமனையே நேரில் உட்காரவைத்து, அவனுக்கே அவன் கதையைச் சொல்லுவதாக அமைந்த பாடல் இது! இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

பதிவின் நீளம் கருதி, இரு பதிவுகளாக இதை இங்கு அளிக்கிறேன். இசைவடிவிலும் இதனை நாளை அளிக்க முயலுகிறேன்.

ஸ்ரீ ராமஜயம்!



"பால காண்டம்"


தேவர்குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா


தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடே ஜனித்தாய் ராமா ராமா


கோசலைதன் கர்ப்பத்தில் ராமா ராமா

கூசாமல் நீ பிறந்தாய் ராமா ராமா


தவமுனிக்கு உதவிசெய்ய ராமா ராமா

கவனமுடன் பின்சென்றாய் ராமா ராமா


தாடகையைச் சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா


கல்லைப் பெண்ணாக்கி வைத்தாய் ராமா ராமா

வில்வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா


ஜனகன் வரலாறு கேட்ட ராமா ராமா

தனக்கு முனிவன் பதிலுரைக்க ராமா ராமா


தனுசைக் கையில் எடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமற்றாய் ராமா ராமா


வில்முறிய சீதை கண்டு ராமா ராமா

நல்மணம் செய்துகொண்டாய் ராமா ராமா


மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கினீர் மிதிலை தன்னில் ராமா ராமா


பரசுராமன் வில் முறித்தீர் ராமா ராமா

கரிசனமாய் அயோத்தி சென்றீர் ராமா ராமா


சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறக்கவே அயோத்தி நகர் ராமா ராமா

****************************************


"அயோத்தியா காண்டம்"


அயோத்திக்கு அரசனாக ராமா ராமா

அவனிதனில் தசரதரும் ராமா ராமா


உந்தனையே வேண்டிக் கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா


சிற்றன்னை கைகேசியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா


பக்குவமாய் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா


உத்தரவு கேளென்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா


தாய்மொழி தவறாமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா


தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தான் நடந்தாய் கானகமும் ராமா ராமா


சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணரும் கூட வந்தார் ராமா ராமா


பக்தரெல்லாம் புலம்பிடவே ராமா ராமா

பலநீதி சொல்லி தான் நகர்ந்தாய் ராமா ராமா


கங்கைக் கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா


ஓடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உறவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா


சேனையுடன் பரதர் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா


பட்டம்கட்டி அரசுசெய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா

********************************************


"ஆரண்ய காண்டம்"


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சேர்ந்தாய் ராமா ராமா


கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா


தண்டகவனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா


பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா


சூர்ப்பனகையைக் கண்டீர் ராமா ராமா

தீர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா


தம்பியால் பங்கமடைந்தாள் ராமா ராமா

வெம்பி மனம் வாடினாள் ராமா ராமா


கரதூஷணாதியரை ராமா ராமா

வர முறையிட்டாள் ராமா ராமா


கோதண்டத்துக்கு இரையாக ராமா ராமா

கூக்குரலிட்டு ஓடிவந்தார் ராமா ராமா


சூர்ப்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா


மாரீசனை மானாக வர ராமா ராமா

மருமகனும் வேண்டிக் கொண்டான் ராமா ராமா


மாரீசன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா


சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப் பிடிக்கப் பின்சென்றாய் ராமா ராமா


அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா


சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா


ராவண சந்யாசி வந்தான் ராமா ராமா

நிலத்தோடே சீதையை ராமா ராமா


தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்தெதிர்த்த ஜடாயுவும் ராமா ராமா


சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா


தேடிவரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா


நல்வரமும் தானளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா


சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

***************************************
[நாளை நிறைவுறும்!]

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP