"உந்தீ பற!” - 5
"உந்தீ பற!” - 5
பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”
[முந்தைய பதிவு]
எண்ணுரு யாவு மிறையுரு வாமென
வெண்ணி வழிபட லுந்தீபற
வீசனற் பூசனை யுந்தீபற. [5]
எண் உரு யாவும் இறை உரு ஆ[கு]ம் என
எண்ணி வழிபடல் உந்தீபற
ஈசன் நல் பூசனை உந்தீபற.
எவ்வகைத் தோற்றம் மனதில் எழினும்
அவ்வகை இறையென எண்ணிப் போற்றிக்
காணும் யாவினும் இறையுருக் கண்டு
வழிபடும் பூசனை அவற்றுள் கொண்டு
இறைவழிபாடு இவ்விதம் செய்து
ஈசன் அவரே என்றே உணர்ந்து
நாளும் நினைவுடன் பூசனை செய்யின்
ஈசன் மகிழ்வான் இதுவே திண்ணம்.
காணுகின்ற எதனையும் இறைவன் உருவாக எண்ணி, எண்ணுகின்ற, காணுகின்ற எதனையும் இறைவன் என்றே எண்ணி, அத்தனையையும் இறையாகவே வழிபாடு செய்வதே, ஈசன் வழிபாடு என்று உணர்க.
வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்
விழுப்பமா மானத முந்தீபற
விளம்புந் தியானமி துந்தீபற. [6]
வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்கு உள் செபத்தில்
விழுப்பம் ஆனதமும் உந்தீ பற
விளம்பும் தியானம் இது உந்தீ பற.
ஈசன் நாமம் உரக்கச் சொல்லி
அவனது புகழைப் பாடுவர் சிலரும்
உதடுகள் மட்டும் அசைந்திடும் வண்ணம்
திருப்பெயர்ச் சொல்லிச் செபமும் செய்வர்
இதனினும் உயர்ந்தது அடி நாக்கிடத்தில்
எதனும் அசையா திருநாமம் செபித்தல்
தியானம் என்னும் மேல்நிலைப் படிக்கு
இதுவே வழியாம் என்றே உணர்க.
‘வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்’ என ஒரு பாடல்வரி உண்டு.
அதைப் போல, சத்தம் போட்டு இறை புகழ் பாடிடுவார் சில பேர்.
உதடுகளை மட்டுமே அசைத்து, சத்தம் வராமல் சிலர் செபம் செய்வர்.
இதை விடவும் சிறந்தது, உள்நாக்கில் இதனை உருட்டி, எதையும் அசைக்காமல், செபம் செய்வது.
இதுவே மிகவும் உயர்ந்த நிலை என இப்பாடல் சொல்கிறது.
*************************
[தொடரும்]
9 பின்னூட்டங்கள்:
//எவ்வகைத் தோற்றம் மனதில் எழினும்
அவ்வகை இறையென எண்ணிப் போற்றிக்
காணும் யாவினும் இறையுருக் கண்டு
வழிபடும் பூசனை//
பார்க்கும் மரங்கள் எல்லாம் உன் பச்சை் நிறம் தோன்றுதய்யா அருணாசலா.
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருண சிவ ஓம்!
நன்றி ஐயா!
தொடர்ந்து படித்து வருகிறேன் SK!
ஆனால் இன்னிக்கி கேள்வி நேரம் என்று உந்தீ பற!
பதில் சொல்லுங்க SK என்று உந்தீ பற! :))
இன்று மாலை பார்த்துவிட்டுச் சொல்ல முயல்கிறேன் ரவி!
நன்றி.
இன்று மாலை பார்த்துவிட்டுச் சொல்ல முயல்கிறேன் ரவி!
நன்றி.
//வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்கு உள் செபத்தில்//
உள் செபம் புரிகிறது! அது என்ன வாக்கு-உச்ச-வாய்?
"உச்ச" என்று இங்கே எதைச் சொல்ல வருகிறார் SK?
//அதைப் போல, சத்தம் போட்டு இறை புகழ் பாடிடுவார் சில பேர்.
உதடுகளை மட்டுமே அசைத்து, சத்தம் வராமல் சிலர் செபம் செய்வர்.
இதை விடவும் சிறந்தது//
நாம சங்கீர்த்தனம், அதை விடச் சத்தமில்லாத உள் தியானம் தான் சிறந்தது என்ற பொருளிலா இப்படிச் சொல்லி இருப்பார்?
"அதை விட இது" என்ற பொருளில் சொல்லி இருக்க மாட்டார்-ன்னே தோனுது! இதுக்கு வேற மாதிரி பொருள் கொள்ளணுமோ?
* உச்ச வாய்க்கு = வாயாரப் பாடும் வாய், அதற்கு
* விழுப்பம் ஆனதமும் = பெருமை ஆவது எது?
* உள் செபத்தில் = உள்ளார்ந்த ஜபம்!
வாயாரப் பாடும் முன்னர், உள்ளார்ந்து உணர்ந்து கொள்ள வேணும்! வெறுமனே பாடக் கூடாது! "உணர்ந்து", வாயாரப் பாட வேண்டும்!
ஆக...
அந்தப் பாடும் வாய்க்குப் பெருமை சேர்ப்பது உள்ளார்ந்து உணர்தல்!
உச்ச வாய்க்கு, விழுப்பம் ஆனதமும் = உள் செபம்!
நாவுக்கு அணிகலன் நமச்சிவாயவே! என்பது போல்
உச்ச வாய்க்கு அணிகலன் உள் செபமே!
உந்தீ பற!உந்தீ பற!!
சரியா SK?
//இதுக்கு வேற மாதிரி பொருள் கொள்ளணுமோ?//
வழுத்தல்= பூசனை செய்தலில்
வாக்கு உச்ச[ம்]= சத்தமாக இறை புகழ் பாடுதல் உயர்ந்தது
வாய்க்கு உள் செபம்= அடிநாக்கிற்கும் கீழாக இறை நாமத்தை உன்னி, உதடுகள் அசையாமல் ஒருமுகமாய் செபம் செய்தல்
ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்னும் பொருளிலேயே சொல்லியிருக்கிறார். இதற்கு முன் வந்த ஒரு பாடலையும், இனி சொல்லப்போகும் கருத்துகளையும் படித்தால், இன்னும் புரியவரும்.
வழுத்தலில், வாக்கு உச்சம். வாய்க்குட் செபத்தில் விழுப்பம்[உயர்வு] ஆனது. இதுவே தியான நிலைக்குக் கொண்டு செல்லும் எனப் பொருள்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்னும் குறளை இங்கு உணரலாம்.
நன்றி, ரவி.
நீங்கள் இந்த ‘உச்சவாய்’ என்பதைவிட்டு வந்தால் இது இன்னும் விளங்கும் ரவி.
வழுத்தலில் வாக்கு உச்ச[ம்]
வாய்க்கு உள்செபத்தில் விழுப்பம்
இப்படிப் பார்த்தால், உடல்வருத்தி பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, வாயினின்று சத்தம் வராத உள் செபம் இதுவே பெருமை எனப் பொருளாகும்!
இது என் கருத்து.
நன்றி.
Post a Comment