"உந்தீ பற!” - 3
"உந்தீ பற!” - 3
பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”
காப்புச் செய்யுளாக வரும் இந்த மூன்று பாடல்களும் நான் எழுதியவை.அருணைக் கோபுர வாசலில் அமர்ந்து
கருணைசெய் கணபதி உந்தீ பற
கவலைகள் தீர்ந்ததென உந்தீ பற
பெருமைத் தலமாம் அருணா சலத்தில்
சோதியாய் எழுந்தருள் உந்தீ பற
அண்ணாமலையா யுந்தீ பற
முத்தியருள் சிவ சத்திப் பதியினில்
உய்த்து உணர்ந்தவா வுந்தீ பற
குருவருள் ரமணா உந்தீ பற
**********************
“நூல்”
கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற. [1]
கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.
கருமம் என்பது செய்தொழிலாகும்
செயல்படு பொருளதால் செய்கை ஆகும்
தானாய் இயங்கும் ஒரு தொழிலன்று
செய்கை என்பதோர் இயக்கம் மட்டுமே
இயக்கம் செய்தல் எவராலும் கூடும்
ஆயினும் அதன்பயன் எம்மிடம் இல்லை
பயனைத் தருவதும் இறைவன் ஆணையே
அதனால் அதையொரு சடமெனச் சொன்னார்
எனவே செய்கை இறையென ஆகா[து]
எந்தவொரு செயலும் தானாய் நிகழ்வது இல்லை. மேசை மேல் இருக்கும் ஒரு எழுதுகோல், அல்லது புத்தகம் இவை இரண்டுமே ஏதோ ஒரு இயக்கத்தின் மூலமே ஒரு பயனைப் பெறுகிறது. இதில் எதை எடுப்பது எனத்
தீர்மானிப்பவரின் செய்கையால் மட்டுமே இவை செயல்திறன் பெறுகின்றன.
கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போல, எந்த ஒரு செயலாலும் 1.எண்ணியபடியே, 2. எண்ணியதற்குக் குறைவாக, 3. எண்ணியதற்கும் மேலாக, 4. முற்றிலும் எதிர்பாராத என நான்கு விதமான பயன்களே வரமுடியும்.
ஒரு புறாவை நோக்கி அம்பு விடுக்கும் ஒரு வேடனை மனதில் எண்ணி இந்த நான்கு பலன்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது புரியும். அப்படி, இந்த பலன்களை அளிப்பது இறைவன் ஆணையே! ஆகவே, செய்கருமம் ஒரு சடப் பொருளே; அதுவே இறைவன் என ஆகாது.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற. [2]
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீ பற
வீடு தரல் இ[ல்]லை உந்தீ பற.
வளமுறு நிலத்தில் விதைக்கும் விதையால்
விதையின் திறனே பயிராய் விளையும்
விளைவதும் செய்திடும் முயற்சியால் கூடும்
கூடலும் குறைதலும் செய்வினை ஆகும்
செய்யும் வினையால் விளைவதும் வினையே
இதுவே தொடர்ந்து வினைக்கடல் ஆழ்த்தும்
வினைக்கடல் தாண்டி விடுதலை அடைந்திடல்
வினையின் செயலால் விளைவதும் இல்லை.
ஒரு செயல் செய்கையில், அதனைத் தொடர்ந்து வருகின்ற வினைப்பயன் மேலும் மேலும் பல வினைகளைச் செய்யவைத்து நம்மை வினை என்கின்ற ஆழ்கடலில் ஆழ்த்திவிடும். ஒரு தொழில் தொடங்கி, அது வளர, வளர. செயல்பாடுகள் மேலும் விரிவடைகின்றன.
அல்லது அது நட்டத்தில் செல்ல, அதனைத் தொடர்ந்தும் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.
சரவணபவன் உணவுவிடுதி,சத்யம் நிறுவனம் போன்றவற்றை இதனுடன் பொருத்திப் பார்த்தால் விளங்கும். இந்த வினைக்கடலில் ஆழ்ந்தவரால் வீடுபேறு என்பது அடையமுடியாத ஒன்றாகிப் போய்விடுகிறது.
**********************
[தொடரும்]
7 பின்னூட்டங்கள்:
ஒவ்வொரு வரிகளும் அருமை
வாழ்த்துகள்
அருமை!
முழுமுதல் மூத்தவனுக்கு உந்தீ பற!
முத்துக் குமரனுக்கு உந்தீ பற!
முப்புரம் எரித்தவனுக்கு உந்தீ பற!
வந்தனம் செலுத்தி,
ஐயா உரையுடன்
அனுதினம் படிக்க உந்தீ பற!
எல்லாம் குருவருள் ஐயா.
இயன்ற அளவிற்கு முயன்றிருக்கிறேன்.
நன்றி.
அருமையான உந்தீக்களைப் பறக்கவிட்டு அருமையாக வாழ்த்தியமைக்கு நன்றி.
அருமையாக செல்கின்றது உந்தீபற.
வாழ்த்துக்கள் VSK ஐயா.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா!
ஒரு செயல் செய்கையில், அதனைத் தொடர்ந்து வருகின்ற வினைப்பயன் மேலும் மேலும் பல வினைகளைச் செய்யவைத்து நம்மை வினை என்கின்ற ஆழ்கடலில் ஆழ்த்திவிடும். ஒரு தொழில் தொடங்கி, அது வளர, வளர. செயல்பாடுகள் மேலும் விரிவடைகின்றன. ///
ஒவ்வொரு வரிகளும் அருமை
அருமையாக செல்கின்றது உந்தீபற.
தேவா...
எல்லாப் புகழும் குருவருளே!
ஒரு ஆர்வத்தில் இதில் இறங்கினேன். வந்தவரை நன்றாக இருக்கிறது எனச் சொல்லக் கேட்டு குருவை வணங்குகிறேன். நன்றி, திரு. தேவன்மயம்.
Post a Comment