"உந்தீ பற!” -- 6
"உந்தீ பற!” -- 6
”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”
விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்
விட்டிடா துன்னலே யுந்தீபற
விசேடமா முன்னவே யுந்தீபற. [7]
விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்
விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்
விட்டிடாது உன்னலே உந்தீ பற
விசேடமாம் உன்னவே உந்தீ பற.
தியானம் செய்தலில் பல்வகை உண்டாம்
நீரின் வீழ்ச்சி பலவிதமாகும்
தியானம் செய்தலில் பல்வகை உண்டாம்
நீரின் வீழ்ச்சி பலவிதமாகும்
சிந்திச் சிதறிப் பட்டுத் தெறித்து
நீரின் வேகம் போலது வீழும்
நீரின் வேகம் போலது வீழும்
நெய்யின் வீழ்ச்சியோ சீராய் நிகழும்
மேல்முதல் கீழ்வரை ஒழுங்காய் ஒழுகும்
மேல்முதல் கீழ்வரை ஒழுங்காய் ஒழுகும்
சிந்துதல் சிதறுதல் இதனில் கிடையா
இவ்வகை நிகழும் தியானமே உயர்வாம்.
எண்ணை, அல்லது நெய்யை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றும்போது கவனித்தால், அதன் ஒழுக்கு ஒரே சீராய் சிந்தாமல், சிதறாமல் நிகழ்வது தெரியவரும்.
நீரருவி விழுகையில், அப்படி இராது.
அப்படி, ஒரு நெய்யொழுக்கின் வீழ்ச்சி போல, கவனம் சிந்தாமல், அலைபாயாமல் தியானம் செய்வது நிகழவேண்டும்.
இதுவே உயர்ந்ததாம்.
அனியபா வத்தி னவனக மாகு
மனனிய பாவமே யுந்தீபற
வனைத்தினு முத்தம முந்தீபற. [8]
அனிய பாவத்தின் அவன் அகம் ஆகும்
அனனிய பாவமே உந்தீ பற
அனைத்தினும் உத்தமம் உந்தீ பற.
புறமொரு தோற்றம் கண்ணால் கண்டு
அதனில் அளவிலாக் காதல் கொண்டு
அதனை அங்ஙனம் எண்ணீயபடியே
நிகழ்த்திடும் தியானம் அன்னியம் ஆகும்
அகத்துனுள் ஒரு தனி உருவினை நிறுத்தி
அதனை உள்ளுள் ஒளிரச் செய்து
அவ்வுருதன்னில் கருத்தினை உன்னும்
அனனிய தியானம் அனைத்திலும் உயர்வாம்.
வெளியே கண்ணுக்கு முன்னே தெரிகின்ற தனக்குப் பிடித்தமான கடவுளரின் உருவத்தைக் கண்ணாரக் கண்டு, உருகி, அந்தத் தோற்றத்தின் மீது பக்தி கொண்டு மெய்யுருகித் துதிப்பது அன்னிய பாவம்[bhaavam] என வகைப்படும்.
அதே தோற்றத்தைத் தன் மனத்துக்குள் நிலை நிறுத்தி,மனக்கண்ணால் அதனைக் கண்டு பக்தி செய்வது அனனிய பாவம்[baavam] எனச் சொல்லப்படுகிறது.
உள்ளில் இவ்வாறு எண்ணி தியானம் செய்வதே, இந்த அனனிய பாவமே
உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறது.
உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறது.
‘தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளில் தேடிக் கண்டுகொண்டேன்’ என்பதும் இதுவே!
*************
[திங்களன்று மீண்டும் தொடரும்] [நாளை இதுவரை கற்றதை ஒரு பார்வை பார்க்கலாம்!]
2 பின்னூட்டங்கள்:
//அனிய பாவத்தின் அவன் அகம் ஆகும்
அனனிய பாவமே உந்தீ பற
அனைத்தினும் உத்தமம் உந்தீ பற.
//
நீங்கள் சொன்ன பொருள் பொருத்தமாகத் தோன்றினாலும் இங்கே 'அத்வைத தியானத்தை'க் குறிக்கிறாரோ என்று தோன்றுகிறது - அதாவது நான்கு மகா வாக்கியங்கள் சொல்வதைத் தியானிப்பது. இறைவனை அன்னியமாகக் கொள்ளும் போது அவன் அகமாக, ஆத்மனுக்கு ஆத்மனாக, நியாமகனாக, அந்தர்யாமியாக விளங்குகிறான். இறைவனே நான் என்னும் போது அது அனன்னிய தியானம் ஆகிறது. அந்த பாவமே அனைத்திலும் உத்தமம் என்பது இரமணரின் வாக்கு - என்று தோன்றுகிறது.
நீங்கள் சொல்கின்ற அத்வைத விளக்கமும் பொருத்தமாகவே இருக்கிறது குமரன்!
நான் நேரடியாக அவர் பாடலுக்குப் பொருள் காண விழைந்தேன்.
‘தேடித் தேடொணாத் தேவனை’ என்பது கூட இதிலிருந்தே பிறந்தது.
ஒரு செய்தி!
இதற்கென இதுவரையில் நான் எந்த நூலையும் ஒப்பிட்டுப் பொருள் காணவில்லை.
குருவருளால், எனக்கு என்ன மனத்தில் தோன்றியதோ அதை மட்டுமே சொல்லத் துணிந்தேன்.
அதனால்தான் முதல் பதிவிலேயெ மற்றவரின் கருத்தையும் அறிய அழைப்பு விடுத்திருந்தேன்.
நீங்கள், ஜீவா, ரவி மற்றும் அனைவரும் வந்து சொல்வது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இப்பதிவின் முடிவில் சில ஆச்சரியமான தகவல்களைச் சொல்ல நினைக்கிறேன்.
நன்றி, குமரன்!
Post a Comment