"விநாயகர் அகவல்" -- 11
"விநாயகர் அகவல்" -- 11
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) [58]
சொல்லிய சொல்லும், எண்ணிய எண்ணமும்
பாசம் என்னும் அறிவின் விளைவுகள்!
பாசமறுக்க இறையருள் வேண்டும்!
இறையருள் வருவது குருவருள் மூலம்!
சொல்லும், எண்ணமும் அறவே அறுத்து
மனத்துள் ஒடுங்கிட இன்பம் பிறக்கும்
பாசமறுத்து பசுவெனும் அறிவை
உள்ளில் அறியும் நிலையைக் காட்டிட
இறையே இங்கு குருவாய் வந்த
இனிமைக் களிப்பில் ஔவை சிலிர்க்கிறாள்!
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் [60]
இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்
கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!
ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்
சிவமயம் என்னும் பேரருள் ஆணை!
இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்
எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்
தானே இறையாய் இருப்பது என்னும்
மூன்றாம் நிலையாம் சாரூபம் தன்னில்!
அருளே வடிவாம் கணபதி அருளால்
அறிவும் அறிவின்மையும் பிறக்கும் இடமும்
ஒன்றே என்னும் தெளிவில் பிறக்கும்
இன்பநிலையினில் சாரூபம் கண்டாள்!
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் [62]
இத்தனை வந்ததும் எல்லாம் மறையும்
தானே இறையெனும் உணர்வும் மறையும்
எல்லையில்லாப் பெருவெளியதனில்
எல்லைகள் ஏது எண்ணங்கள் ஏது
எல்லா நலனும் இழந்தே போயினும்
எல்லையில்லா இன்பமே நிலைக்கும்
நாலாம் நிலையாம் சாயுச்சியம் எனும்
சொல்லா நிலையில் சுகமே விளையும்
இம்மை மறுமை பிறப்பு இறப்பெனும்
எல்லாத் துயரும் அடியோடழிந்து
அல்லல்கள் யாவும் நில்லாதொழிந்து
கணபதி அருள்வழி ஒன்றே தெளிந்து
ஆனந்த நிலையினில் ஔவை திளைக்கிறாள்!
***********************************************
[தொடரும்]
அடுத்த பதிவு
2 பின்னூட்டங்கள்:
/////இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்
கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!
ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்
சிவமயம் என்னும் பேரருள் ஆணை!
இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்
எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்
தானே இறையாய் இருப்பது என்னும்
மூன்றாம் நிலையாம் சாரூபம் தன்னில்!/////
மூன்றாம் நிலை எது என்பதை மிக அழகாக வலியுறுத்திச் சொல்லியியிருக்கிறீர்கள் வி.எஸ்.கே சார்.
அற்புதமாக இருக்கிறது. நன்றி உரித்தாகுக!
எல்லாம் பெரியவங்க முன்னாடியே சொல்லி வைத்துப் போனதுதான் ஐயா!
முடிந்தவரை புரிந்துகொண்டு என் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறேன் ஆசானே!
புதிதாக ஏதும் சொல்ல முயலவில்லை!
நன்றி!!
Post a Comment