Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 10

"விநாயகர் அகவல்" -- 10




முந்தைய பதிவு

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54]



இறையின் தரிசனம் தியான முடிவினில்

மும்மலம் விளைத்த அகவிருள் விலகி

ஆன்மா ஒளியினைக் காணும் வேளையில்

சாதகன் சிரசின் மேலொரு ஒளியின்

காட்சியும் கிட்டும் என்பர் யோகியர்

நால்வகை நிலையுள் சாலோகமென்னும்

முதல்நிலை
இதுவென ஆன்றோர் அறிவர்

சரியை என்னும் யோகம் சித்திக்க

சாலோகநிலையினில் பேரொளி தரிசனம்

இறையருள் கிட்டிய பெருமித மகிழ்வில்

ஔவைப்பாட்டி குதித்தாடுகிறாள்!



என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து [56]



ஆன்மா தன்னை அறியும்போது

இறையின் அருகில் இருப்பதை உணரும்

இறையருள் இன்றி இது நிகழாது

பேரொளிவெள்ளம் உள்ளில் தெரிய

ஆனைமுகனும் அருகில் தெரிவான்

ஐம்புலன் ஆளுகை தன்னை மறைக்க

ஆன்மா எதுவென தனக்கே மறக்க

அமலன் அருளால் தன்னை அறிந்திட

ஞானம் பிறந்த நன்னெறி நிலையில்

சாமீபமென்னும் இரண்டாம் நிலையினை

ஆனைமுகனின் அருகில் இருப்பதை

அறியும் ஔவை அகமகிழ்கின்றாள்!


சுழுமுனை வரையினில் கனலை எழுப்பி

நாடிகள் பத்தையும் சுத்தப்படுத்தி

அமுதநிலையையும் அறிந்து மகிழ்ந்து

ஆயுளை நீட்டும் வழியடைந்தாலும்,


ஆனைமுகனின் அருளால் கிட்டும்

இந்நிலை ஞானம் கைகூடாவிடின்,

தன்னை அறியும் நிலை கிட்டாவிடின்,

ஏதொருபயனும் இல்லை என்பதை

உணர்ந்திட்ட ஔவை இவ்வண்ணம் மகிழ்கிறாள்!


இவையெலாம் முறையே தன்னில் நிகழ்ந்திட

முன்னை வினைகள் முதலில் மாயணும்!

காலம் காலமாய்ப் பிறவியெடுத்து

கணக்கில்லாது வினைகள் புரிந்து

கணக்கினை மேலும் மேலுமாய்க் கூட்டி

ஆன்மா உள்ளின் அடியில் அழுந்தி

சுமைகளைக் குறைக்கும் வழிதெரியாமல்

அலைந்திட்ட ஆன்மா விடுதலை பெற்று

முந்தைய வினைகளை முழுதுமாய்க் களைந்து

பேரொளி கண்டு தன்னை அறிந்து

மகிழ்வில் ஆழ்ந்திடும் காட்சியைக் கண்டாள்!
*******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு


0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP