Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 12

"விநாயகர் அகவல்" -- 12
முந்தைய பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64]



உருவாய் வந்து திருவருள் செய்தவன்

குருவாய் வந்து அகவிருள் தொலைத்தவன்

அருவுருவாகி அகத்துள் ஆடுவான்

அவனே உருவிலா சதாசிவம் ஆகும்


சிவமாய், சக்தியாய், விந்துவாய், நாதமாய்

அருவம் காட்டி ஐந்தொழில் புரிபவன்

சதாசிவமாகி விண்வெளி நிற்பான்

உள்ளிலும் புறத்திலும் இவனே நிறைவான்


ஆக்கல் காத்தல், அழித்தல், மறைத்தல்,

அருளல் என்னும் ஐந்தொழில் யாவும்

செய்திடும் அருவுரு சதாசிவம் என்பான்

விண்வெளியதனில் நாதமாய் ஒலிப்பான்


கண்ணில் தெரிந்தவன் சத்தத்தில் நிறைந்து

சதாசிவமாக அண்டத்தில் ஒலிப்பான்

சித்தத்தில் அவனே சிவலிங்கம் ஆவான்

வானத்திலாடும் மயில் குயிலாச்சு!


யோகம் என்னும் ஞானம் பெற்றோர்

அண்டத்துள் அறிவது சதாசிவத்தை

உள்ளம் என்னும் பிண்டத்தில் அறிவது

சிவலிங்கம் என்னும் அதுவே ஆகும்


அகமும் புறமும் யோகமும் போகமும்

இவரருளாலே நிறைந்திடக் கண்டு

கணபதி தந்த நற்கொடை அருளிது

மழையாய்ப் பொழிவதில் ஔவை நனைகிறாள்!


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி [66]



இறையவன் திருவுரு கொள்வதற்கும் அரியது

சின்னஞ்சிறிய அணுவுள்ளும் அணுவாய் இருப்பான்

அண்டபகிரண்டம் முழுதுக்குமாய் விரிந்துமிருப்பான்

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா எனப்பாடிய

பாரதியின் சொல்போல காணுமிடமெல்லாம்

நீக்கமற நிறைந்திருக்கும் அவனருளைப் பருகுவது


இறையருள் தனக்குக் கொடுத்திட்ட நிலையை

எவரும் புரிந்திடத் திருவுளம் கொண்டு

அனைவரும் அறிந்திடும் ஒருபொருள் எடுத்து

அதனின் மூலம் எமக்கு உரைக்கிறாள்


பாலும்,தெளிதேனும், பாகும் பருப்பும்

கரும்பும், ஒரு முக்கனியும் சொற்சுவை சேர்க்கும்!

கணுக்களெல்லாம் முற்றிக் கனிந்து

கருப்பஞ்சாறு தன்னில் நிறைந்து

இனிப்பெனவே இருக்கின்ற கரும்புபோல

என இந்தக் கரும்பைச் சுவைக்கிறாள் ஔவை
********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP