"விநாயகர் அகவல்" -- 8
"விநாயகர் அகவல்" -- 8
முந்தைய பதிவு
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் [40]
ஆதாரங்கள் ஆறும் இங்கே
இரண்டிரண்டாய்ப் பிணைந்திருக்கும்
மூலாதாரமும் சுவாதிட்டானமும்
அக்கினிமண்டலம் எனவாகும்
மணிபூரகமும் அநாகதமும்
சூரியமண்டலம் என விளங்கும்
விசுத்தி, ஆக்கினை இரண்டும் சேர்ந்து
சந்திரமண்டலம் என விளங்கும்
குண்டலினி என்னும் பரிக்ரக சக்தி
பாம்பின் உருவம் தனைக்கொண்டு
மூலாதார மடியினில் தன்னைச்
சுருட்டிவைத்துத் தொங்கிநிற்கும்
முறையுடன் புரியும் யோகசாதகன்
சுருண்டிருக்கும் அரவம் இதனை
மூன்று மண்டல வாயில் வழியே
ஆக்கினைவரையில் தானெழுப்பி
மந்திரச் சொல்லை நாவில் உணர்ந்து
ஆன்மா இதனை உணரச் செய்யும்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து [42]
பேசாதொலிக்கும் மந்திர சத்தம்
சுவாசச் சுழலின் துணையால் நிகழும்
இடகலை பிங்கலை சுழுமுனை மூலம்
சுழலும் ஒலியே அஜபா எனப்படும்!
உட்செலும் பிராணன் 'ஸோ' எனும் ஒலியையும்
கும்பகம் நிற்கும் வாயுவில் 'ஹம்'எனும் ஒலியும்
கூடச்சேர்ந்து 'ஸோஹம்' எனவாகும்!
ஸோஹம் என்பதே சிவோஹம் ஆகும்!
சிவோஹம் என்னும் சொல்லாமந்திரம்
ஒவ்வொரு சுவாசம் நிகழும் போதும்
ஒவ்வொருவர்க்குள்ளும் நிகழ்ந்தே இருக்கும்
அறிந்தவர் இதனைப் பிடித்துக்கொண்டு
சாதகம் என்னும் பயிற்சி செய்யின்
உள்ளே மூளும் கனலின் வெம்மை
தன்னில் உணரும் ஞானம் பிறக்கும்
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே [44]
இத்தனை இதுவரை காட்டிய கணேசன்
மூலத்தினின்று முளைத்தெழும் சோதியைக்
கிளப்பிவிட்டு மேலெழும்பச் செய்திருந்து
சுழுமுனை மார்க்கமாய் கொண்டுசெல்லும் வழியினைக்
காற்றெனும் பிராணன் வழியினைச் சொல்லி
காட்டித்தந்த அருள்திறத்தைப் பாடுகிறாள்!
[கால்=காற்று, பிராணன்]
*******************
[தொடரும்]
அடுத்த பதிவு
2 பின்னூட்டங்கள்:
கணேச சரணம்!
http://www.tamil.net/projectmadurai/pub/pm0231/pm231.pdf
இங்கே மிக விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதை சுருக்கித் தருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
எஸ்.முரளி
Post a Comment