"விநாயகர் அகவல்" --- 2
"விநாயகர் அகவல்" --- 2
ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்"
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2]
குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள்
தாமரை மலரினைப் போலச் சிவந்தவை
கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள்
பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள்
திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது
நாத ஒலியினில் நானிலம் பிறந்தது
அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன
ஒவ்வொரு ஒலிக்கும் புதிதுபுதிதாய்
இசையொலி எழுப்ப யுகங்கள் பிறந்தன
மூலாதாரக் கனலினைக் கிளப்பும்
நாயகன் கழல்கள் நாதம் எழுப்பும்
நாதத்திலிருந்து அனைத்துமே பிறக்கும்
[சீதம்= குளிர்; களபம்= சந்தனம்]
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் [4]
பொன்னால் ஆகிய அரைஞாண் கயிறும்
பூவினைப் போலும் மென்மை தவழும்
வெண்ணிறப் பட்டில் மின்னும் ஆடையும்
பெருத்த இடுப்பில் பாங்குடன் மிளிர
[பூந்துகில்= மென்மையான வெண்ணிறப்பட்டு; மருங்கு= இடை, இடுப்பு; எறிப்ப= ஒளிபரப்ப]
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் [6]
திருவடி தொடங்கி இடைவரை வந்தவர்
அண்டசராசரம் அனைத்தும் அடங்கும்
ஆனைமுகத்தோன் பானைவயிற்றில்
பெட்டியைப் போலும் பெருநிறை வயிற்றில்
சற்றே கனிந்து அதைப் பாடுகின்றார்.
ஆனைமுகத்தோன் அதனால் இங்கு
கனத்த முகத்தோன் ஒற்றைக் கொம்பன்
அழகுறை நெற்றியில் சிவந்ததோர் பொட்டு
சிந்தூரம் எனவே அதனைச் சொல்வர்
திருவடி துவங்கி முகநிறை தரிசனம்
ஔவை செய்விக்கும் ஆனந்த தரிசனம்!
[பேழை= பெட்டி; பாரம்= கனம்; கோடு= தந்தம்; வேழம்= யானை; சிந்தூரம்= சிவப்புப் பொட்டு]
7 பின்னூட்டங்கள்:
இரண்டு அடிகளுக்கு விளக்கமான உரையுடன், பதிவிற்கு ஆறு வரிகள் என நிறைவான இடுகை.பாராட்டுக்கள் வி.எஸ்.கே சார்!
தொடரட்டும் உங்கள் ஆன்மீக சேவை!
ஒவ்வொரு பதிவும் அரைகுறையாக இராமல் ஒரு கருத்தை முழுமையாகச் சொல்லுமாறு பதிய எண்ணம் ஆசானே! எனவே, பாடல் வரிகள் கூடக் குறைத்து வரலாம். நன்றி,
கடையில் கொடுக்கும் அருஞ்சொற்பொருள் விளக்கம்
நன்மை பயக்கிறது.
//கடையில் கொடுக்கும் அருஞ்சொற்பொருள் விளக்கம்
நன்மை பயக்கிறது.//
இதற்கே இப்படிச் சொல்லுகிறீர்களே சத்தியா!
இது முழுதும் முடிந்ததும் ஒரு பெரிய விருந்து உங்களுக்குக் காத்திருக்கிறது!
\\இது முழுதும் முடிந்ததும் ஒரு பெரிய விருந்து உங்களுக்குக் காத்திருக்கிறது!\\
பலே..
வன்ன மருங்கு என்பதில் 'வன்ன' என்றால் என்ன எஸ்.கே?
முதல் ஆறுவரிகளின் பொருள் அழகாகச் சொன்னீர்கள்.
//வன்ன மருங்கு என்பதில் 'வன்ன' என்றால் என்ன எஸ்.கே?//
வன், (p. 927) [ vṉ, ] adj. [a change of வல், used in combin.] Strong, வலிய. 2. Great, மிகு, 3. Cruel, கொடிய.
இதில் இரண்டாவதாகச் சொல்லியிருக்கும் மிகு அல்லது பெரிய என்ற பொருளில், வன் மருங்கு என்பதை வன்ன மருங்கு எனச் சொல்லியிருக்கிறார் அவ்வை. பெருத்த இடுப்பு என்ற பொருளில். நன்றி குமரன்.
Post a Comment