Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 3

"விநாயகர் அகவல்" --- 3
முந்தைய பதிவு இங்கே

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8]


படைத்தல் காத்தல், அழித்தல்,

மறைத்தல், அருளல் என்றே உலகில்

இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்

நான்கு கரங்கள், எட்டுக்கைகள்

பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டு

ஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்

அருள்நிறைக் கடவுள் கணபதி இவனே

முன் ஒருகையில் ஒடித்த தந்தம்

எழுத்தாணி எனவே அதனைக்கொண்டு

படைக்கும் தொழிலைச் செய்கின்றான்

இன்னொரு கரத்தில் மோதகம் ஏந்தி

அனைத்தையும் காக்கும் காப்புத் தொழிலையும்

மூன்றாம் கரத்தில் அங்குசம் ஏந்தி

அழித்தல் தொழிலையும் புரிகின்றான்

நாலாம் கரத்தில் பாசம் தாங்கி

மறைக்கும் கருமம் நிகழ்த்துகிறான்

ஐந்தாம் கரமாம் தும்பிக்கையினில்

அமுதக் கலசம் அதனைத் தாங்கி

அருளினை எமக்கு வாரித்தருகிறான்

ஆனையின் நிறமோ கருமை ஆகும்

ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்

இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்

கண்ணுக்குக் குளுமை நீல நிறமே

தனியே தன்னந்தனியே......

அகத்தில் இவனைத் தனியே நிறுத்தி

வெளியன் இவனை வழிபடும் அன்பர்

அழியாநலனைப் பெற்றிடுவார் எனும்

நம்பியாண்டான் நம்பி சொன்னது

நீலத்திரு மேனியின் எழிலின்

தன்மைகுறித்தே என்றே கொள்க.


நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் [10]


அடியவர் நெஞ்சினில் அன்புடன் அருளும்

மந்திரம் யாவையும் சொல்லிடும் வண்ணம்

நாயகன் வாயும் தொங்கிய வண்ணம்!

ஆனையின் வாயினைப் போலே கீழே

தொங்கிடும் வாயின் பெருமை இதுவே!

நாலிரு புயமெனில் எட்டென வேண்டா

இருபுயம் என்பது வலிமையைக் குறிக்கும்

நுதலில் இருந்து வளர்ந்திடும் துதிக்கை

தோளெனத் தனியே அமைவது இல்லை

எனவே கணபதி வலிமை பொருந்திய

நான்கு புயங்களைத் தன்னில் கொண்டான்!

பகலவன், முழுமதி, அக்கினி எனவே

மூன்று கண்களைக் கொண்டவன் நாயகன்

மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்

பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்

முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்

[நான்ற= தொங்குகிற; சுவடு= தழும்பு]இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் [12]


எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்

இருந்தும் பயனற்று வாழ்கின்றார்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்

என்று பாடினான் வள்ளுவன் இங்கு!

செவியின் பயனைச் சரியாய் உணரா

இழிநிலை மாந்தர் தன்னிலை மறந்தார்

நாயகன் புகழைக் கேட்பது ஒன்றே

செவிகள் செய்யும் புண்ணியம் என்று

அதனைச் செய்திடும் உயர்நிலை தவத்தோர்

அருளைப் பாடி அவனடி பணிய

அவனிரு செவிகளும் அசைந்து கொடுக்கும்!

ஆம்!~

கணபதி திருச்செவி மட்டுமே இங்கு

அசையும் தன்மை உடையனவாகும்!

வேறெவர் செவியும் அசைவது இல்லை

ஆனையின் செவிகள் மட்டுமே புரியும்!

ஆனைப்பாகன் ஆனையின் மீது

ஏறிடப் பற்றிடும் ஒருபொருள் செவியே!

கணபதி செவிகளைப் பற்றியவண்ணம்

பிறவித்துயரை ஒழித்திட முடியும்

அத்தகு பெருமை வாய்ந்திட்ட செவிகளை

ஔவை இங்கே அழகுறப் போற்றினார்!

மூவுலகுயிரும் ஒன்றாய் வணங்கிடும்

முழுமுதற்கடவுள் கணேசன் ஆவான்

அவனது முடியினில் பொலிவாய்த் திகழும்

பொன்முடி இவனே அரசன் என்னும்!

ஓமெனும் பிரணவ மந்திரம் காட்டும்

முப்புரிநூலைத் திருமார்பில் தாங்கி

ஒளியெனும் அறிவை எமக்குத் தருபவன்

விநாயகன் என்றே இச்சொல் உணர்த்தும்!சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே! [14]அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்

ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்

உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்

உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்


ஐம்புலன் ஆசையில் அகப்பட்ட ஆன்மா

விழித்திரும்போது சூழ்நிலை அறிந்து

வேதனைகொள்ளும் நிலையினை ஆன்றோர்

ஜாக்கிராவஸ்தை என்று சொல்லுவர்

கனவுலகில் சென்று அலையும் ஆன்மா

விரும்பிய இடங்களைத் தானே அடைந்து

எங்கும் பரவி உணர்வுகள் கொள்ளும்

நிலையினை சொப்பனாவஸ்தை எனபர் அறிந்தோர்!

இவ்விரு நிலையிலும் சொற்களின் ஆட்சி

அதிகம் இருக்கும் என்பதை உணர்க!

ஆழ்நிலைத் துயிலில் சுழுத்தியில் அடங்கிய

சொற்கள் தம்மின் வலிமை இழக்கும்

பேசாநிலையில் ஆன்மாஇருந்தும்

இதுவோர் மறதிநிலையே!

இதனால் பெரிதும் பயனேதுமில்லை!

மனத்தை அடக்கி பிராணனில் ஒடுக்கி

சித்தம் தன்னை அவனில் நிறுத்தி

இருக்கும் நிலையைத் துரியம் என்பர்

ஆன்மா இங்கே இறையை உணரும்

காலமும் நேரமும் கடந்து நின்று

இன்பமும் துன்பமும் ஒழிந்து சென்று

பிறப்பும் இறப்பும் இல்லா நிலையிது

இந்நிலைதன்னில் இருப்பவன் கணேசன்

அனைத்தையும் தந்திடும் கற்பகத் தரு அவன்!

யானை அதிலும் ஆண்யானையாம்!

அதனால் கற்பகக் களிறே என்கிறார்![தொடரும்]


*********************


அடுத்த பதிவு

17 பின்னூட்டங்கள்:

Subbiah Veerappan Tuesday, September 16, 2008 10:07:00 PM  

////எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்
இருந்தும் பயனற்று வாழ்கின்றார்////

அருமை!

Subbiah Veerappan Tuesday, September 16, 2008 10:07:00 PM  

/////ஆனையின் நிறமோ கருமை ஆகும்
ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்
இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்
கண்ணுக்குக் குளுமை நீல நிறமே/////

புதுமையான, அழகான விளக்கம்.
நன்றி வி.எஸ்.கே சார்!

MSATHIA Wednesday, September 17, 2008 10:34:00 AM  

\\அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்
ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்
உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்
உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்\\

இது அரசியல் என்பார் சிலர். அதுனால;-)) போட்டுக்கறேன்.

இதற்கு அடுத்துவரும் வரிகள் ஆழமானவை. ரமணரை எளிமையாக புரியவைப்பது போல் இருக்கிறது.

குமரன் (Kumaran) Wednesday, September 17, 2008 1:53:00 PM  

ஆழ்ந்த உண்மைகளை அழகாகச் சொல்லிச் செல்கிறீர்கள். நன்றி எஸ்.கே

குமரன் (Kumaran) Wednesday, September 17, 2008 1:53:00 PM  

ஆழ்ந்த உண்மைகளை அழகாகச் சொல்லிச் செல்கிறீர்கள். நன்றி எஸ்.கே

VSK Wednesday, September 17, 2008 3:07:00 PM  

ஆசானே, தாங்கள் தொடர்ந்து படித்து வருவது மகிழ்வாய் இருக்கிறது.

VSK Wednesday, September 17, 2008 3:08:00 PM  

முடிந்தவரை எளிமையாகச் சொல்ல முயன்றிருக்கிறேன் சத்தியா. நன்றி.

VSK Wednesday, September 17, 2008 3:09:00 PM  

நன்றி குமரன்.

Unknown Wednesday, October 15, 2008 6:13:00 PM  

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...........


இலங்கை தமிழர்கள்

T.N.Elangovan Thursday, September 29, 2011 3:00:00 AM  

/ மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்

பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்

முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்/ மும்மதம் என்பதன் பொருளை உணர முடியவில்லை. வலையில் இயன்றவரை முயன்றேன்.. பலனில்லை.. சற்றே விரிவாய் சொல்வீர்களா?
நன்றியுடன்
இளங்கோவன்

VSK Thursday, September 29, 2011 1:22:00 PM  

யானைகளைச் சற்று அருகில் சென்று கவனித்தால், பருவத்தின் இயல்பாக அடிக்கடி வழிந்துவரும் மதநீரின் வெப்பம் பட்டு, அதன் முகத்தில் கோடு போன்ற தழும்புகள் இருபுறமும் இருப்பதைக் கவனிக்கலாம்.

நமது ஆன்மவினைகளைக் கழுவிடும் மதநீராக ... அதன் சுவடாக... தழும்பாக இந்த 'மும்மதச் சுவடு' விளங்குகிறது என அவ்வையார் போற்றுகிறார், ஐயா! வணக்கம்.

VSK Thursday, September 29, 2011 1:28:00 PM  

ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்று மலங்களுமே மும்மதங்கள்

'நான்' என்னும் 'ஆணவம்'
எல்லாமே கானல் நீர்தான் என்பதை மறைக்கும் 'மாயை'
என்னால் நடக்கிறது எனும் பேராசையில் விளையும் 'கன்மம்'[காமியம்]
என மூன்று வித மயக்கங்களுக்கு ஜீவன் அடிமைப்பட்டு அல்லாடுகிறது.
இவற்றையே மும்மலங்கள், மும்மதங்கள் எனச் சொல்லுவர் பெரியோர்.

T.N.Elangovan Thursday, October 13, 2011 7:47:00 AM  

மன்னிக்கவும். மும்மலங்களை மும்மதங்கள் என்று சொல்லுவதை ஒத்துக்கொண்டாலும், யானையின் முகத்தில் உள்ள சுவடுகளை மும்மதச்சுவடு என்று எங்கனம் அழைக்க இயலும்? விளங்கவில்லை ஐயா?

VSK Thursday, October 13, 2011 1:52:00 PM  

யானைக்கு கன்ன மதம், கை மதம், வாய் மதம் என மூன்று விதமான மதநீர் சுரக்கும். அவை வழிவதால் அதன் சுவடு கண்ணுக்குக் கீழே கன்னத்தில் கோடு போன்று படிவதால் மும்மதச் சுவடு எனக் கூறுவர்.

திருப்புகழில் மும்மதன் எனக் கூறியிருக்கிறார் அருணையார்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்திலும், 'படுமும்மதப்புனல்சோர வாரணம்பைய நின்று ஊர்வதுபோல்' என இருக்கிறது. இன்னும் இதுபோல பல நூல்களிலும் இருக்கின்றன. அதனையே

T.N.Elangovan Saturday, October 15, 2011 7:30:00 AM  

எனது சந்தேகத்திற்கு இவ்வளவு பொறுமையாக விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா !

T.N.Elangovan Saturday, October 15, 2011 7:30:00 AM  

எனது சந்தேகத்திற்கு இவ்வளவு பொறுமையாக விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா !

VSK Saturday, October 15, 2011 6:33:00 PM  

சொல்ல வைத்த உங்களுக்கு என் வணக்கம் ஐயா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP