Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 5

"விநாயகர் அகவல்" -- 5



முந்தைய பதிவு

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென [22]

தன்னைத் தானே உணரும் பேறு

எல்லாருக்கும் வாய்ப்பதுமில்லை

தன்னையுணரச் செய்திட இங்கு

குருவென ஒருவன் வந்திடல் வேண்டும்

இறையருள் கூடி ஞானம் பிறந்திடக்

குருவே எமக்குத் திருவருள் புரிவான்

இதுவே உண்மை இதுவே மெய்யென

நல்லவை உணர்த்தித் திருவடி தருவான்

ஐந்தெழுத்தை அகத்தில் வைத்து

அனுதினம் நின்னை எண்ணித் துதித்திட

அன்புக்கணபதி நீயே என் குருவாய் வந்து



வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே [24]


இதுவரை இங்கு வாடியதெல்லாம்

தீர்ந்தது என்று அருளினை வழங்கி

கையினில் ஏந்திய தந்தக்கோலால்

முந்தைவினைகளை முழுதுமாய் அழித்து

மகிழ்வாய் என்றன் கலியினைத் தீர்த்து



உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி [26]


எத்தனை முறை யான் கேட்டபோதிலும்

முன்னிலும் இனிப்பாய்த் திகட்டாச் சொல்லை

பாவங்கள் போக்கிடும் திருமந்திரத்தை

உய்த்திடச் செய்திடும் உபதேசத்தை

என்றன் செவியில் அன்புடன் ஓதி

நூல்பல ஓதி கிடைக்கா ஞானம்

நீயே வந்து உரைத்திட்ட ஞானம்

யானெனும் செருக்கை ஒழித்திட்ட ஞானம்

திருவடி வைத்துத் தந்திட்ட ஞானம்

என்றும் எனக்குத் தெவிட்டா ஞானம்

அதனை அறிந்ததில் தெளிந்தது ஆன்மா
******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

3 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Friday, September 19, 2008 7:22:00 PM  

உவட்டா உபதேசம் என்றால் என்ன எஸ்.கே?

VSK Friday, September 19, 2008 8:17:00 PM  

ஒருசில உபதேசங்கள், அறிவுரைகள் அடுத்தடுத்துச் சொன்னால் திகட்டிவிடும்!

ஆனால், இந்த விநாயகன் சொல்லிய இந்த உபதேசம் கேட்கக் கேட்கத் திகட்டாத, இன்பம் பெருக்கெடுக்கும் ஒன்றாம்.

அதைத்தான், 'உவட்டா' உபதேசம் எனச் சொல்லுகிறார் அவ்வை!

உவட்டு +. To swell, as a river; பெருக்கெடுத் தல்

VSK Friday, September 19, 2008 8:30:00 PM  

சொல்ல மறந்தேன்!
அடுத்த பதிவு திங்களன்று வரும்!

நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP