"விநாயகர் அகவல்" -- 4
"விநாயகர் அகவல்" -- 4
முந்தைய பதிவு
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15
தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது
அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே
அன்பால் பழுத்த அடியவர்தம்மில்
குற்றம் குறைகள் ஏதுமிருப்பினும்
அப்புறம் தள்ளா அருட்பெருங்கடலிவன்!
ஆனை வடிவம் கனத்ததோர் உருவம்
ஆயினும் அமர்வதோ பெருச்சாளி மேலே
எவரும் தாங்கிடும் வண்ணம் மென்மை
அருளைப் பொழிபவன் என்பதை உணர்த்தும்
“குண்டலியோகம் செய்பவர் உள்ளில்
குறுகுறுவெனவோர் உணர்வும் ஓடும்
பெருச்சாளி ஒன்று ஓடுதல்போல
அவ்வுணர்விருக்கும்”- இது ஆன்றோர் வாக்கு!
மூலம் தொடங்கி மேலே ஏறிடும்
குண்டலிக் கனலின் உச்சியில் இருப்பவர்
விநாயகன் என்றும் அறிந்தவர் சொல்லுவர்!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் [18]
எத்தனைதான் பட்டாலும் வாடியிங்கு நொந்தாலும்
மீண்டுமிந்தப் பிறவியெனும் ஆழ்கடலில் உழல்வதுவே
வாழுகின்ற உயிர்க்கெல்லாம் வாடிக்கை ஆகிப்போச்சு!
போதுமிந்தப் பிறவியென மனமிங்கு நினைக்கையிலே
சூது மிகுந்த வாழ்க்கையினிப் போதுமென எண்ணுகையில்
மாயமிந்தப் பிறவியென மனமுணரும் நேரத்தில்
தாயாக நீ வந்து தயை செய்து காத்திடவே
நாயாக நானிங்கு உழலாமல் பிறப்பறுத்து
நீயாக என்முன்னே இப்போதே எழுந்துவந்து
அடியேனை ஆட்கொள்ள வேண்டுமெனும் என்கதறல்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து [20]
பிறவிப்பயனின் விளைவாய்ச் சிறிது சிறிதாய்க்
குறைந்திருந்து, நின்றன் கருணை என்னில் தெரிந்து
நின்னையே நாடி ஐந்தெழுத்தை அன்புடன் ஓத
மூலாதாரம் முதலில் கிளம்பி, சுவாதிட்டானம்
நாபி, இதயம், கண்டம் புருவமத்தி என்னும் இடங்களில்
சுழுமுனை வழியே நின்று துதிக்கும்
பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்
என்னும் ஐவரும் ஒவ்வொரு எழுத்திலும் நின்றிருந்து
ஓதும் நாமம் நாதமாய் மாறிட
கதறல் கேட்ட கணபதி அதனில்
ஓம் எனும் நாதமாய் வருவான்
நற்றுணை புரிவான் இதயம் பொருந்தத்
தன் திருவருள் தருவான் கணபதி.
*******************************************
[தொடரும்]
[நீலக் கணபதியை மேலே தரிசியுங்கள்!!]
அடுத்த பதிவு
5 பின்னூட்டங்கள்:
எதையும் தள்ளாது ஏற்றுக் கொள்கிறான் என்று அருமையாகச் சொன்னீர்கள் எஸ்.கே. முப்பழம் என்னும் போது மா, பலா, வாழை என்னும் மூன்று பழங்களைக் குறிக்கிறார்கள் என்று எண்ணியிருந்தேன். சரி தானா?
முப்பழம் என்பதற்குத் தத்துவார்த்த விளக்கம் இருந்தாலும், பொதுவாக நீங்கள் சொல்லிய முப்பழம் தான் நான் சொல்லியதும் குமரன்.
விதை, கொட்டை இல்லாமல் தோல் மட்டும் இருக்கும் வாழைப்பழம், கொட்டையோடு பதிந்த மாம்பழம், கொட்டை ஒட்டாமல் தோல் இல்லாத பலா.... இதில் ஏதாவது புரிகிறதா?
இதுதான் ஆன்மீகத் தேடல்!
புரியத் தொடங்கினால் ஆன்மீகம் விளங்கும்!
நன்றி குமரன்!
எதுவும் புரியவில்லை எஸ்.கே.
//திருந்திய முதலைந் தெழுத்தும்//
இது நமசிவாய என்னும் நாமத்தை குறிக்காதா?
தயவு செய்து விளக்கவும் .!
////திருந்திய முதலைந் தெழுத்தும்//
இது நமசிவாய என்னும் நாமத்தை குறிக்காதா?
தயவு செய்து விளக்கவும் .!//
இந்த ஐந்து நிலைகளிலும் நின்று நம்மை உயர்த்தெழச் செய்வதே நமசிவய என்னும் ஐந்தெழுத்து தான் ஐயா.
நன்றி!
Post a Comment