Tuesday, August 26, 2008

"கண்ணா வா!"

"கண்ணா வா!"
[க்ருஷ்ண ஜயந்தி அன்றே எழுதி வைத்தது! வேறு சில பதிவுகள் இடையில் பதிந்ததால் தள்ளிப் போனது! அதனால் என்ன! கண்ணன் வர ஒரு நாள் வேண்டுமா? இதோ!...வருகிறான்!]

கண்ணன் என்னும் எந்தன் மன்னன் என்னில் வந்தான்
முன்னம் வந்த வினைகள் எல்லாம் தீர்த்து வைத்தான்
கண்ணில் அன்பைக் காட்டி என்னைக் கட்டிக் கொண்டான்
எண்ணம் முழுதும் அவனே என்னுள் பொங்கி நின்றான்!

இன்பம் என்னும் சொல்லின் பொருளின் காட்சி தந்தான்
துன்பம் இல்லா வாழ்வைக் காணும் வழியைத் தந்தான்
புல்லாங்குழலின் ஓசைமூலம் கீதை சொன்னான்
என்றும் சுகமாய் வாழும் வழியைச் சொல்லிச் சென்றான்!

வெண்ணையுண்ண கோதைப்பெண்டிர் இல்லம் சென்றான்
கண்ணில் கள்ளம் காட்டிக் கொண்டு புன்னகை செய்தான்
மண்ணையுண்டு வாயைத் திறந்து மாயம் செய்தான்
எண்ணவொண்ணா உலகைத் தன்னில் காட்டி நின்றான்!

காதல் செய்த ராதை உள்ளம் தன்னில் நின்றான்
கோதை ஆண்டாள் உள்ளில் தன்னின் மாலை தந்தான்
ஏதும் இல்லா காதல் என்னும் எண்ணம் தன்னை
தீதும் இன்றி என்னில் தந்த மன்னன் கண்ணன்!

வேதம் சொன்ன கண்ணன் என்றும் என்னில் என்னில்
கீதை சொன்ன கண்ணன் அந்தப் புல்லாங் குழலில்
ஓதும் எந்த வேதம் எல்லாம் இவனின் சொல்லில்
போதும் இந்தப் பிறவி இனிமேல் உந்தன் கையில்!

ஆவணி மாதம் ரோஹிணியில்நீ இல்லம் வந்தாய்
தேவகித் தாயின் கருவில் வந்து கீதை தந்தாய்
கோகுலம் வந்து கோபியர் நெஞ்சில் கோயில் கொண்டாய்
மாநிலம் வாழ என்றும் உந்தன் அருளைத் தந்தாய்!

சின்னச் சின்னக் குறும்புகள் செய்தென் நெஞ்சம் கொண்டாய்
வண்ண வண்ணக் கோலம் காட்டியென் சிந்தை நின்றாய்
என்னவென்ன சொல்லி உன்னைப் பாடுவேன் கண்ணா
சின்னக்கண்ணா நீயே என்றன் சொந்தம் மன்னா!

கண்ணன் என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்
கண்ணன் பேரைச் சொன்னால் கலியின் தாகம் தீரும்
கண்ணன் என்னும் சொல்லே வாழ்வின் பொருளைச் சொல்லும்
கண்ணன் என்னும் ஒன்றே என்றும் என்றன் இன்பம்!
************************************************


["கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல" பாடல் ராகத்தில் பாடிப் பாருங்கள்!]

9 பின்னூட்டங்கள்:

jeevagv Tuesday, August 26, 2008 11:17:00 PM  

பதிவே நீல வண்ணத்தில் மின்னுகிறது!

கோவி.கண்ணன் Tuesday, August 26, 2008 11:35:00 PM  

கிருஷ்ண ஜெயந்தி லேட்டாக கொண்டாடுறிங்க. மத்தவங்க வீட்டுக்கு போன கண்ணன் இன்னிக்குத்தான் ப்ரீயா இருப்பார் என்று அழைக்கிறீர்களோ !

VSK Tuesday, August 26, 2008 11:40:00 PM  

நீல வானில் மின்னும் நட்சத்திரமே வந்ததால் நீல வண்ணத்தில் பதிவு மின்னுதோ?!!!!!!:))

நன்றி திரு. ஜீவா!

VSK Tuesday, August 26, 2008 11:41:00 PM  

கண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!:))

Subbiah Veerappan Wednesday, August 27, 2008 12:29:00 AM  

வேதம் சொன்ன கண்ணன் என்றும் என்னில் என்னில்
கீதை சொன்ன கண்ணன் அந்தப் புல்லாங் குழலில்
ஓதும் எந்த வேதம் எல்லாம் இவனின் சொல்லில்
போதும் இந்தப் பிறவி இனிமேல் உந்தன் கையில்!

அருமை! வி.எஸ்.கே சார்!
போதும் பிறவி; தந்தேன் உந்தன் கையில்!
அருமையான மன வெளிப்பாடு!
வாழ்க நீவிர் என்றும்!!!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, August 27, 2008 8:47:00 PM  

//கண்ணா வா!//

SK கூப்பிட்டு வராமால் இருப்பேனா?
இதோ வந்துட்டேன் SK! :))

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, August 27, 2008 8:51:00 PM  

//ஓதும் எந்த வேதம் எல்லாம் இவனின் சொல்லில்
போதும் இந்தப் பிறவி இனிமேல் உந்தன் கையில்!
//

ரொம்ப நல்லா வந்திருக்கு SK!

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல மெட்டு மெய்யாலுமே சூப்பர்!

VSK Wednesday, August 27, 2008 11:05:00 PM  

கவிஞரை ஒற்றி எழுதிய கவிதைக்கு இன்னும் ஆசான் வரலியேன்னு நினைத்தேன்!

வந்தென் கலி தீர்த்தீர் ஆசானே!@

நன்றி

VSK Wednesday, August 27, 2008 11:06:00 PM  

கண்ணன் பதிவுக்கு கண்ணன் வராமல் நிறைவு பெறுமா!

நன்றி ரவி... கண்ணன்! ... கண்ணபிரானே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP