Wednesday, August 13, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

முந்தைய பதிவு

7.
தொடக்கமும் நடுவும் இறுதியும் இல்லா
ஒன்றேயாகி, எங்கும் நிறைந்து
ஆனந்தமான அற்புத நிலையாய்
உருவம் என்று எதுவும் இலாதாய்
உமையுடன் இணைந்து அமர்ந்திருக்கும்
உயரிய கடவுளாம், எவர்க்கும் அரசனாம்,
மூன்று கண்களும், நீலநிறக் கழுத்தும்,
எப்பொழுதும் அமைதியாய் இருக்கும்
'அவனை' மனதில் கொண்டே முனிவரும்
படைப்பின் ரகசியத்தை அறிவரோ,
எது எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருப்பதோ
எல்லா இருளுக்கும் அப்பால் இருப்பது "அது"!

8.
'அது'வே ப்ரம்மா, 'அது'வே சிவனும், 'அது'வே இந்திரனும்,
அழிவில்லாதது, எதனினும் உயர்ந்தது, ஒளிமிகு தெய்வம்,
'அது'வே திருமால், 'அது'வே உயிரளிக்கும் மூச்சு,
'அது'வே காலமும், தீயும், நிலவும் ஆகும்.

9.
'அது'வே இருப்பதும், இருந்ததும், இருக்கப்போவதும்,
இனி என்றுமிருப்பதும் ஆகும்
'அது'வை அறிபவன் மரணத்தை வெல்கிறான்
விடுதலைக்கு 'அதை'த் தவிர வேறு வழி இல்லை.

10.
தன்னில் அனைத்தையும் கண்டு
அனைத்திலும் தன்னைக் கண்டே
அனைத்தையும் கடந்த ப்ரஹ்மனை அடைவர்
வேறெந்த வழியிலும் அல்ல!

11.
"தான்" எனும் ஆத்மாவை மத்தாகவும்
"ஓம்" எனும் பிரணவத்தை அதன் தடியாகவும் கொண்டு
"ஞானம்" எனும் அறிவைக் கடைவதன் மூலம்
பிறக்கும் தீயில் ஞானியர் பந்தம் துறக்கின்றனர்.

12.
இதையறியா மயங்கிய "தான்" மாயையின் வசப்பட்டு
உலகியல் இனபத்தில் அடிமைப்படுகிறது
விழிப்பின் நிலையில் பெண், உணவு, கள் இவற்றால்
அது எல்லாம் பெற்றதாய் மகிழ்கிறது.

13.
தானே உருவாக்கிய மாயையின் உலகில்
தானே எழுப்பும் உணர்வின் வழியே
'தான்" எனும் ஜீவன் தூங்கும் நிலையில்
கனவில் மகிழ்வையோ, துயரையோ உணர்கிறது.
ஆழ்நிலை உறக்கத்தில், எல்லாம் இழந்த நிலையில்,
இருளெனும் ஒன்றில் ஆழ்ந்த ஜீவன்
சுகமெனும் அனுபவம் ஒன்றில் [தற்காலிகமாக] ஆழ்கிறது.

14.
முன்பிறப்பு நிகழ்வுகளால் ஆட்பட்ட ஜீவன்
மீண்டும் மீண்டும் இந்த விழித்தல், உறங்குதல்
என்னும் செயல்களில் ஈடுபடுகிறது
விழித்தல், கன்வு நிலை, ஆழ்துயில் என்னும்
முப்பெரும் நகரில் வாசம்செய்து மகிழ்கிறது
இதனிடம் இருந்தே எல்லாப் பிறழ்வும் பிறக்கிறது
இதுவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகி.
எல்லா மகிழ்வையும் தனக்குக் கொடுத்து,
பிரிக்கவொண்ணா தன்னிலை உணர்வைக் கொண்டதாய்
தன்னுள்ளே இந்த மூன்று நிலைகளையும் கலக்கிறது

15.
இதனின்றே மூச்சுக்காற்றும், மனமும், எல்லாப் புலன்களும்
ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் என்னும் துணைகளும் பிறக்கின்றன.

16.
உன்னில் ஒளிரும் ஒரு பொறி
இவ்வுலகுக்கே ஆதரமான அந்தப் பொறி
அணுவுக்கும் சிறிதாய் விளங்கும் பொறி
அந்தப் பொறியே உயரிய ப்ரஹ்மன்
'அது'வே நீ! நீயே 'அது'வென அறிவாய்

*****************************

“கைவல்ய உபநிஷத்” [தொடர்ச்சி]

உமாஸஹாயம் பரமேஷ்வரம் ப்ரபு4ம்
த்ரிலோசனம் நீலகண்ட2ம் ப்ரஷாந்தம்
த்4யாத்வா முனிர்க3ச்ச2தி பூ4தயோனிம்
ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் [7]

ஸ ப்3ர-ம்மா ஸ ஷிவ: ஸேந்த்3ர:
ஸோக்ஷர: பரம: ஸ்வராட்
ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண:
ஸ காலோக்3னி: ஸ சந்த்ரமா: [8]

ஸ ஏவ ஸர்வம் யத்3பூ4தம்
யச்ச ப4வ்யம் ஸனாதனம்
ஞாத்வா தம் ம்ருத்யுமத்யேதி
நான்ய: பந்தா2 விமுக்தயே [9]

ஸர்வபூ4தஸ்த2மாத்மானம்
ஸர்வபூ4தானி சாத்மனி
ஸம்பஷ்யன் ப்3ரஹ்ம பரமம்
யாதி நான்யேன ஹேதுனா [10]

ஆத்மானம் அரணிம் க்ருத்வா
ப்ரணவம் சோத்தராரணிம்
ஞான நிர்மத2னாப்4யாஸாத்
பாஷம் த3ஹதி பண்டித: [11]

ஸ ஏவ மாயா பரிமோஹிதாத்மா
ஷரீரமாஸ்தா2ய கரோதி ஸர்வம்
ஸ்த்ரியன்னபானாத்3 விசித்ரபோ4கை3:
ஸ ஏவ ஜாக்3ரத் பரித்ருப்திமேதி [12]

ஸ்வப்னே ஸ ஜீவ: ஸுக2து3:க்க2 போ4க்தா
ஸ்வ மாயயா கல்பித ஜீவலோகே
ஸுஷுப்திகாலே ஸகலே விலீனே
தமோபி4 பூ4த: ஸுக2ரூபமேதி [13]

புனஷ்ச ஜன்மாந்தர கர்மயோகா3த்
ஸ ஏவ ஜீவ ஸ்வபிதி ப்ரபு3த்3த4:
புரத்ரயே க்ரீடதி யஷ்ச ஜீவஸ்
ததஸ்து ஜாதம் ஸகலம் விசித்ரம்
ஆதா4ரம் ஆனந்தம் அக2ண்டபோ3த4ம்
யஸ்மின் லயம் யாதி புரத்ரயம் ச [14]

ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ
மன: ஸர்வேந்த்ரியாணி ச
க்க2ம் வாயுர் ஜ்யோதிர் ஆப:
ப்ருதி2வீ விஷ்வஸ்ய தா4ரிணீ [15]

யத்பரம் ப்3ரஹ்ம ஸர்வாத்மா
விஷ்வஸ்யா யதனம் மஹத்
ஸூக்ஷ்மாத் ஸூக்ஷ்மதரம் நித்யம்
தத்வமேவ த்வமேவ தத் [16]

**********************

[அடுத்த பதிவில் முடியும்]

9 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Wednesday, August 13, 2008 9:23:00 PM  

//10.
தன்னில் அனைத்தையும் கண்டு
அனைத்திலும் தன்னைக் கண்டே
அனைத்தையும் கடந்த ப்ரஹ்மனை அடைவர்
வேறெந்த வழியிலும் அல்ல!//

தத்வம் அஸி !
:)

அத்வைதம் !

VSK Wednesday, August 13, 2008 9:26:00 PM  

பின்றீங்க கோவியாரே!:))

குமரன் (Kumaran) Friday, September 19, 2008 7:21:00 PM  

உமாஸஹாயம் பரமேஷ்வரம் ப்ரபு4ம்
த்ரிலோசனம் நீலகண்ட2ம் ப்ரஷாந்தம்
த்4யாத்வா முனிர்க3ச்ச2தி பூ4தயோனிம்
ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் [7]

ஆகா. ஏதோ ஒரு சங்க இலக்கியத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் படித்ததைப் போலவே இருக்கிறது. அதே வர்ணனைகள். உமையுடன் கூடியவன்; பரமேஸ்வரன்; பிரபு; முக்கண்ணன்; நீலகண்டன் - இவை எல்லாம் சங்க இலக்கியத்திலும் அப்படியே வருகின்றனவே.

ஸ ப்3ர-ம்மா ஸ ஷிவ: ஸேந்த்3ர:
ஸோக்ஷர: பரம: ஸ்வராட்
ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண:
ஸ காலோக்3னி: ஸ சந்த்ரமா: [8]

இதெல்லாம் அப்படியே பரிபாடலைப் படிப்பது போலவே இருக்கின்றது.

எல்லோருக்கும் தெரிந்ததையே உவமையாகச் சொல்வார்கள். இங்கே அரணியில் தீயைத் தோற்றுவிப்பதை உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அரணியைக் கடைந்து நெருப்புப்பொறிகளை உண்டாக்குவதை ஸ்வாமியின் பிறந்த நாளின் போது நடக்கும் ஹோமங்களின் போது பார்த்திருக்கிறேன்.

VSK Friday, September 19, 2008 8:13:00 PM  

//உமாஸஹாயம் பரமேஷ்வரம் ப்ரபு4ம்
த்ரிலோசனம் நீலகண்ட2ம் ப்ரஷாந்தம்
த்4யாத்வா முனிர்க3ச்ச2தி பூ4தயோனிம்
ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் [7]

ஆகா. ஏதோ ஒரு சங்க இலக்கியத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் படித்ததைப் போலவே இருக்கிறது. அதே வர்ணனைகள். உமையுடன் கூடியவன்; பரமேஸ்வரன்; பிரபு; முக்கண்ணன்; நீலகண்டன் - இவை எல்லாம் சங்க இலக்கியத்திலும் அப்படியே வருகின்றனவே.//

எல்லாம் ஒன்றுதானே குமரன்! அதாவது, எல்லாவற்றிற்கும் மூலம் ஒன்றுதானே! :))

//ஸ ப்3ர-ம்மா ஸ ஷிவ: ஸேந்த்3ர:
ஸோக்ஷர: பரம: ஸ்வராட்
ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண:
ஸ காலோக்3னி: ஸ சந்த்ரமா: [8]

இதெல்லாம் அப்படியே பரிபாடலைப் படிப்பது போலவே இருக்கின்றது.

அப்ப்படி ஏதாவது ஒரு பாடலை எடுத்து விடுங்களேன் குமரன்!

//எல்லோருக்கும் தெரிந்ததையே உவமையாகச் சொல்வார்கள். இங்கே அரணியில் தீயைத் தோற்றுவிப்பதை உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அரணியைக் கடைந்து நெருப்புப்பொறிகளை உண்டாக்குவதை ஸ்வாமியின் பிறந்த நாளின் போது நடக்கும் ஹோமங்களின் போது பார்த்திருக்கிறேன்.//

இப்படி அக்னியை உண்டுபண்ணி தினம் ஹோமம் செய்பவர்களைத்தான் அக்னிஹோத்ரி எனச் சொல்லுவார்கள்!

நன்றி குமரன்!

குமரன் (Kumaran) Saturday, September 20, 2008 8:28:00 AM  

பரிபாடல் தொகுப்பின் முதல் பாடலின் பகுதி:

விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
நிலனும், நீடிய இமயமும், நீ.

குமரன் (Kumaran) Saturday, September 20, 2008 8:30:00 AM  

பரிபாடல் தொகுப்பின் மூன்றாம் பாடலின் பகுதி:

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்

குமரன் (Kumaran) Saturday, September 20, 2008 8:33:00 AM  

பரிபாடல் தொகுப்பின் மூன்றாம் பாடலின் இன்னொரு பகுதி:

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:

பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும்
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை:

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள!

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!

குமரன் (Kumaran) Saturday, September 20, 2008 8:34:00 AM  

நீங்கள் ஒன்று கேட்டீர்கள். நான் மூன்று தந்தேன். இன்னும் உண்டு. அவற்றைக் கூடலில் காண எண்ணம். இறையருள் முன்னிற்கட்டும்.

VSK Saturday, September 20, 2008 10:50:00 AM  

மிக நன்று குமரன்.... பரிபாடல் அளித்தமைக்கு!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP