"எவரால்?" ["கேன உபநிஷத்"] -- 1
""எவரால்?" ["கேன உபநிஷத்"] -- 1
வேதங்களின் சாரம் உபநிடதங்கள் எனச் சொல்லுவார்கள்! 'உப நிஷத்' என்றால் 'அருகில் வந்து அமர்' எனப் பொருள். அப்படிப் படித்து வருகையில், என்னை மிகவும் கவர்ந்த உபநிடதம் இது! 'கேன' என்றால் "எவரால்?" எனப் பொருள். "எவரால் [அ] எதுவால்" இந்த உலக இயக்கம் நிகழ்கிறது என்பதை விளக்கும் வேதசாரம் இதில் சொல்லப்படுகிறது. அதைத் தமிழில் இங்கு நான்கு பகுதிகளாக அளிக்கிறேன். பல உண்மைகளை இது புரிய வைக்கும்..... புரிய விழைபவர்க்கு. புரியாதவர்கள் புரிய முற்படலாம்!! நன்றி! எங்கும் மங்கலம் சூழ்க! தன்னைத் தான் அறிக!
ஓம்!ஓம்!ஓம்!
[இதை ஒரு கற்றறிந்த, நான் மதிக்கும் ஞானிக்கு அனுப்பி அவரது ஒப்புதல் பெற்றே இங்கு அளிக்கிறேன்!]
முதல் பகுதி:
1.
சீடனெழுந்து கேட்கின்றான்:
ஓம்
மனமிங்கு தானெண்ணும் செயல்நோக்கிச் செல்லுவது எவரிட்ட கட்டளையால்?
மூச்சிங்கு தன்செயலை முறையாகப் புரிவதுவும் எவரிட்ட கட்டளையால்?
பேச்சென்னும் செயலொன்றை மக்களெல்லாம் உரைப்பதுவும் எவரிட்ட கட்டளையால்?
கண்களையும் செவிகளையும் வழிநடத்தும் பரம்பொருளும் எவரெனச் சொல்வீரோ?
2.
ஆசிரியர் பதிலுற்றார்:
செவிகளின் செவி,, மனங்களின் மனம், பேச்சுகளின் பேச்சு
உயிர்களின் உயிர்,கண்களின் கண் இவையெல்லாம் செய்கிறது!
'தான்'என்னும் பொருளறிந்து,புலன்மீது பற்றறுத்து
உலகின்பம் விடுவோரே அழிவின்றி நிலைக்கின்றார்!
3 - 4.
கண்ணாலும், சொல்லாலும், மனத்தாலும் செல்லவொண்ணாப் பேரிடமது
நாமறியாப் பொருளதுவே!
எவரிங்கு உணர்த்திடுவார் என்றெவர்க்கும் தெரியாது
யாமறிந்த எதற்குள்ளும் இதையறிய முடியாது
தெரியாத பொருளுக்கும் மேலிருக்கும் பொருளிதுவே
இதையறிந்த அறிவோர்கள் இப்படித்தான் எமக்குணர்த்திச் சென்றார்!
5.
எதுவொன்றை சொல்லாலும் விளக்கிடவே முடியாதோ
எதன்மூலம் சொல்லிங்கு எம்மிடையே வெளிப்படுகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]
6.
எதுவொன்றை மனமிங்கு தானுணர மாட்டாதோ
எதுவொன்றால் மனமிங்கு புரியப்படுகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]
7.
எதுவொன்றை கண்களிங்கு தான் காண்பதில்லையோ
எதுவொன்றால் கண்களிங்கு பார்வையென உணர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]
8.
எதுவொன்றைச் செவிகளிங்கு தான் கேட்கமுடியாதோ
எதுவொன்றால் செவிகளிங்கு கேட்பதினை உணர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]
9.
எதுவொன்றை மூச்சிங்கு தான் நுகர முடியாதோ
எதுவொன்றால் மூச்சிங்கு வாசனையை நுகர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]
__________
[வளரும்]
10 பின்னூட்டங்கள்:
ஆகா, அருமை. படமும் சாலப் பொருத்தம்.
மிக்க நன்றி திரு. ஜீவா!
உங்கள் கருத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.
ஏமாற்றாமல் வந்துவிட்டீர்கள்.
நன்றி.
நன்றி எஸ்.கே.
மூலத்தையும் இட்டீர்கள் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இல்லையேல் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்கிறேன்.
வரிக்கு வரி படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
//எதுவொன்றை சொல்லாலும் விளக்கிடவே முடியாதோ
எதன்மூலம் சொல்லிங்கு எம்மிடையே வெளிப்படிகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் ///
வெளிப்படும் வாக்கியங்களில் மனம் திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது!
வடமொழி மூலம் பலருக்கிங்கு உதவியாய் இராதோ என்றே இடவில்லை, குமரன்.
பதிவின் இறுதியில் ஒரு தொடுப்பு கொடுத்து விடுகிறேன், சரியா!
நன்றி.
மிக்க நன்றி, திரு. ஆயில்யன்.
வெளிப்படுகிறதோ என தட்டச்சுப்பிழையையும் திருத்திவிட்டேன்.:)
//புரியாதவர்கள் புரிய முற்படலாம்!! //
அடியேன் இந்த வகை. நன்றி அண்ணா.
அப்ப நீங்கதான் அறிஞ்சவங்க கவிநயா!:)
//ஏமாற்றாமல் வந்துவிட்டீர்கள்.//
கற்று அறிய வேண்டியவை கடலென சூழ்ந்திருக்க, பிறவிக்கடலும் பெருந்துயராய் விரிந்திருக்க,
கற்க வேண்டியவற்றை தாங்கள் கடை விரித்திருக்க,
நானல்லவோ சிக்கெனப் படித்தேன்!
நானல்லவோ நன்றி சொல்லவேண்டியது!
நன்றி, நன்றி, நன்றி!
வர வேண்டியவர்கள் வந்தால் மகிழ்ச்சி எல்லாருக்கும்தானே ஜீவா ஐயா!
ஸஹனா பவது! ஸஹனௌ புனக்து!
ஸஹ வீர்யம் கரவா வஹை!
Post a Comment