தந்தையென்னும் ஓர் தெய்வம்!
"தந்தையென்னும் ஓர் தெய்வம்"!
தந்தையென்னும் ஓர் தெய்வம்
தரணியிலே எனக்கெனவே
இங்குவந்து என்னையாண்ட
கதையினையே சொல்லிடுவேன்
என்னுயிரைக் கருவாக
என்னன்னை சுமந்திடவே
வித்தாகத் தந்தானிவன்
இவன்பெருமை என்சொல்வேன்
கனிவொன்றே காட்டியென்னைத்
தாயவளும் வளர்த்தாலும்
கொடுமையான உலகிதினிலே
வாழும்வழி சொன்னவனிவன்
கைப்பிடித்து கூட்டியெனைக்
கடைத்தெருவில் பஞ்சுமிட்டாய்
வாங்கித்தந்த அந்தநாளை
நினைவுகூர்ந்து இன்புறுவேன்
அரிச்சுவடி சொல்லித்தந்து
அகரமெலாம் படித்திடவே
அறிவான கல்விதந்து
அரவணைத்த ஆசானிவன்
தன்தொழிலைத் தொடர்ந்திடவே
தன்மக்களில் ஒருவராயினும்
வருவாரோ வெனநினைத்தும்
அவரவரை ஆதரித்தான்
மருத்துவத்தில் இவர்போல
யான்வரவே வேண்டுமெனக்
கால்கடுக்க இவன் நடந்த
காட்சியினை மறப்பேனோ
மருத்துவனாய் யான்தேர்ந்து
பட்டம்பெறும் வேளையிலே
இவனிருக்கவில்லை அந்தோ
எனக்கந்தப் பேறில்லை
இறுதிநிலைப் படிப்புநிலை
இங்கிவனோ மாரடைப்பில்
என்மடியில் சாய்ந்தபடி
உயிர்விட்டான் என்னவனும்
வாழ்ந்திட்ட நாட்களையே
மகிழ்வுடனே நினைவுறுவேன்
அன்பொன்றே காட்டிநின்ற
மன்னவனை எண்ணுகிறேன்
தன்மகனை அன்றொருநாள்
வேறெவரோ குறைசொன்ன
சேதிகேட்டுப் பொங்கியெழுந்து
சண்டையிட்ட நிகழ்வினிது
வேற்றூரில் பணிசெய்யப்
போனாலும் மறக்காமல்
எனையணைத்து முத்தமிட்டு
சென்றிட்ட நாளினிது
எதிர்வருவோர் யாரென்றே
தெரியாது ஓர்நாளில்
வேகமாக ஓடிவந்து
தந்தைமேலே மோதிவிட்டேன்
அடிப்பாயோ எனும்பயத்தில்
நீர்வழிய அழுதுவிட்டேன்
'பார்த்துப்போடா' எனச்சொல்லி
சிரித்தபடி நீ நகர்ந்தாய்
நீமறைந்து நாளாச்சு
நினைவின்னும் அகலவில்லை
நினையெண்ணா நாளொன்றும்
இதுவரையில் எனக்கில்லை
போதனைகள் புகட்டியதில்லை
புத்திமதிகள் சொன்னதில்லை
அன்பொன்றே காட்டிநின்றாய்
அதையின்னும் மறக்கவில்லை
ஒற்றையாகப் பிறந்தாலும்
பலரையுமே நீயணைத்தாய்
பாசமென்பது என்னவென்றே
நீ காட்டித்தான் யானறிந்தேன்
நின்புகழை யான்போற்ற
செய்வதென்று ஒன்றுண்டு
அன்பென்னும் ஓர்பொருளை
அனுதினமும் காட்டுவதே
தந்தையர் தினத்தன்று
தந்தையே நினக்காக
யானிங்கு செய்வதுவும்
அன்புடனே வாழ்வதுவே!
அன்பே சிவம்!
அன்பே என் தந்தை!
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!
22 பின்னூட்டங்கள்:
Excellent. I really enjoyed it. Thanks.
Ravi
Thank you Mr.Ravi.
//மருத்துவனாய் யான்தேர்ந்து
பட்டம்பெறும் வேளையிலே
இவனிருக்கவில்லை அந்தோ
எனக்கந்தப் பேறில்லை//
இருந்தாலும் உங்கள் நினைவுகளில் நீங்காமல் வாழும் அன்புத் தந்தையை அருமையாய் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்!
//அன்பே சிவம்!
அன்பே என் தந்தை!//
சிவமே தந்தை..தந்தையே சிவம் !
என்று சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.
:)
நன்றி கவிநயா!
எல்லாம் ஒண்ணுதானே கோவியாரே!
இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.
அருமை.
தந்தையர் தினத்தன்று அருமையான ஒரு பாடல் VSK அவர்களே.
வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி, திரு.கைலாஷி, சர்வேசன்!
தாய் தன் குழந்தையை 10 மாதம் சுமக்கிறாள் ஆனால் தந்தையோ அந்த குழ்ந்தைஐ 20 வருடங்களக நெஞ்சில் சுமக்கிறான் என்பர்.
உங்கள் கவிதை கண்களில் கண்ணீர் வரவைக்கும் 50 வயதை கடந்த அனைவருக்கும், அவரவ்ர் தந்தையின் தியாகத்தை நினைவுகூர்ந்து.
வாத்யார் சுப்பையா சார் "தசாவதாரம்' விமர்சனத்துக்காக தன்களுக்கு லிங் கொடுக்க ,தங்களின் அnuபவக் கவிதை வாசிக்க ஒரு நல் வாய்ப்பு.நன்றி
உணர்வின் அலைகளை உணர்ந்து சொன்ன மொழிகளுக்கு மிக்க நன்றி பொதிகைத் தென்றல் அவர்களே!
///நீமறைந்து நாளாச்சு
நினைவின்னும் அகலவில்லை
நினையெண்ணா நாளொன்றும்
இதுவரையில் எனக்கில்லை///
பெற்றபிள்ளை இதுபோற் சொல்ல
பேறுபெற்ற மகராசன் அவர்;
உற்ற ஜென்மம் அடுத்துவரும்
உமக்குத் தந்தையாக அவரே வருவார்!
உற்ற = வேண்டிய, உற்ற துணை
//பெற்றபிள்ளை இதுபோற் சொல்ல
பேறுபெற்ற மகராசன் அவர்;
உற்ற ஜென்மம் அடுத்துவரும்
உமக்குத் தந்தையாக அவரே வருவார்//
எத்தனை ஜென்மம் வந்தாலும்
இவரெனக்கு வருவதென்றால்
பிறப்பெனக்கு மகிழ்வாகும்
ஆசிகளுக்கு நன்றி ஆசானே!
//மருத்துவத்தில் இவர்போல
யான்வரவே வேண்டுமெனக்
கால்கடுக்க இவன் நடந்த
காட்சியினை மறப்பேனோ//
காட்சி தனில் மறைந்திடலாம்!
மாட்சி தனில் மறைவானோ?
ஆட்சி இன்று மருத்துவத்தில்!
சாட்சி இந்தச் சங்கரனும்!
//மருத்துவனாய் யான்தேர்ந்து
பட்டம்பெறும் வேளையிலே
இவனிருக்கவில்லை அந்தோ
எனக்கந்தப் பேறில்லை//
உனக் கந்தப் பேறுண்டு!
உன் கந்தப் பேருண்டு!
மர வித்து மறைந்தாலும்
மறை வித்து வேராகும்!
வித்து தான் காண்பாரோ
வளர்ந் திட்ட பின்னாலே
வித்து அதுவே வேராகும்
வீறு கொண்டு நேராகும்!
தந்தையாருக்கு அடியேன் அடிக்கீழ் வீழ்ந்து வணக்கங்கள்!
தந்தையர் தின வாழ்த்துக்கள் SK!
அருமையான சொல்லெடுத்து
அடுக்கான சந்தத்தில்
ஆறுதலை எமக்களித்த
கண்ணபிரானுக்கு நன்றி!
இதுபோன்ற போற்றுதலுக்குரிய செய்திகளை மக்கள் பலரும் தெரியும் வண்ணம் தாங்கள் ஆற்றும் பணியும் போற்றுதலுக்குரியதே!
மேகநாதனுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
புகைப்படக்கலை ...... நீங்கள் எடுத்த படங்களை எங்களுக்கு இங்கே அளிக்கலாமே, திரு.விஜய்!
!
நன்றி.
அப்படியே சற்று தட்டச்சுப் பிழைகளிலும் கவனம் செலுத்துங்கள். பதிக்கும் முன் ஒரு முறை படித்தால் போதும். பெரும்பாலும் தவிர்க்கலாம்!
vsk சார்,
தங்கள் வாழ்த்துக்கும்,அறிவுரைக்கும் என் நெஞ்சுநிறை நன்றிகள்.
புகைப்படங்களை இணைத்துள்ளேண் ஐயா.
என்றும் அன்புடன்,
விஜய்
கோவை.
நான் சொன்னது இந்தப் பதிவைக் குறித்தல்ல திரு.விஜய்.
நீங்கள் இதுவரை எடுத்த சிறந்த புகைப்படங்களை ஒரு தொகுப்பாக பதியலாமே எனவே!
நன்றி.
அஸ் யூஷுவல் பதிவைப் படிக்கலை!! ஹேப்பி பாதர்ஸ் டே!! :))
அஸ் யூஷுவல் நன்றி கொத்ஸ்! :))
ஐயா வணக்கம். "தந்தை என்னும் ஓர் தெய்வம்" இந்த வார்த்தைகள் உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. தங்கள் வரிகள் எம்மை சற்றே பின்னோக்கி கொண்டுசென்றுவிட்டன. எமது ஆசான் திரு.சுப்பையா அவர்களின் தளம் மூலம் தங்கள் தளத்திற்கு வர முடிந்தது. ஆசான் அவர்களுக்கும் நன்றிகள்.பாசமுடன் தியாகராஜன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. தியாகராஜன்.
Post a Comment