Sunday, June 01, 2008

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

விண்ணைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்!

விடைபெற்றுச் சென்ற என் குட்டிராணி திரும்பவும் வருகிறாளா என அண்ணாந்து பார்த்திருந்தேன்.

வழக்கமான ஆற்றங்கரையோரம்தான்!

மரங்கள் அடர்ந்த அந்த வனத்தில், அந்தச் சிற்றாறு 'சலசல'வென ஓடிக்கொண்டிருந்தது.

என் கால்களும் அதில் நனைந்து கொண்டுதானிருந்தன!

இலைகளும் சருகுகளும், மலர்களும் சென்றுகொண்டுதான் இருந்தன!

மரங்கள் என் பார்வையை சற்று மறைத்தன.

அதையும் மீறி, வானம் வசப்பட்டது!

மரக்கிளை ஒன்றில் ஒரு குரங்கு!

தன் கையால் ஒரு கிளையைப் பிடித்தபடி குரங்கு இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே...... சட்டென....... தன் பிடியை விட்டது!

இப்போது அது அந்தரத்தில்!

அடடா! என்ன ஆகப் போகிறது இந்தக் குரங்குக்கு!

எந்தவொரு பிடிப்பும் இல்லாமல், இலக்கும் இல்லாமல், தான் பற்றியிருந்த பிடியையும் விட்டுவிட்டதே!

என்ன ஆகும் இதற்கு!

இப்படி ஒரு துயர நிகழ்ச்சியைக் காணவா நான் இங்கே இருந்தது!

இதைப் படிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் கூட ஆகவில்லை!

அந்தரத்தில் தவழ்ந்த அந்தக் குரங்கு, கீழே.... கீழே... கீழே விழுந்த வேகத்தில் ஒரு கிளையை வெகு லாவகமாகப் பற்றியது!

ஒற்றைக்கையில் பற்றிய வேகத்தில் ஒரு ஆட்டம் போட்டு, சட்டென ஒரு குட்டிக்கரணம் போட்டு, அதன் மீது ஏறி ஓடியது!

இப்போது அது ஒரு பத்திரமான இடத்தில்!

எனக்கும் மூச்சு வந்தது!

மகிழ்ச்சியுடன் சிரித்து, கைகளைத் தட்டினேன்!

"குரங்கு... குரங்கின் திடீர்த் தாவல்.....!"

இந்தக் காட்சியின் பொருள் என்ன? இது சொல்ல வந்த கருத்து என்ன? என என் 'குரங்கு' மனம் எண்ணத் தொடங்கியது!

திடீரென மனதில் ஒரு மின்னல்!

ஏதோ புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

குரங்கு..... நாம் எல்லாரும்!

அதன் தாவல்...... 'போதுமடா சாமி!' என விட்டு விடுதலையாக எண்ணுகின்ற நிலை!

ஆனால்,
'எனக்கும் மேல் ஒருவன் இருக்கிறான்; அவன் எம்மைக் காப்பான்!' என்ற நம்பிக்கையுடன், இலக்கு ஒன்றைக் குறிவைத்து, மனதுக்கும் தெரியாமல் தன்னைப் பிணைத்திருக்கும் பிடிப்பை விட்டுத் தாவுகிறது இந்த ஆத்மா!

இந்த நினைவைக் கொடுத்தது யார்?
எவரால் இது நிகழ்கிறது?

'என்னை நம்பி உன் பிடிப்புகளை நீ விடு! யான் உன்னைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பேன்!' என இறைவன் எத்தனையோ இறைதூதர்கள் மூலம் சொல்லிய சொல் என் நினைவைத் தாக்கியது!

விடுவோமா நாம்?
விடுகிறோமா நாம்?

அநேகமாக இதைச் செய்வதில்லை!

ஏன்?
அந்தக் குரங்கு விட்டதே!
அடுத்து எதைப் பிடிப்போம் என்ற நினைப்பைக் கவனத்தில் கொள்ளாமல் தன்னை விடுத்தது அந்தக் குரங்கு என நினைப்பது நம் மனம்!

ஆனால், இதுவரை தான் பிடித்திருந்ததை முற்றிலுமாக விடுத்து, 'நீயே கதி' என ஒரு இலக்கை நோக்கியே அது தாவியது என்பதை உணர இந்த மனத்துக்குத் தெரியவில்லை!

'தவறு செய்து விட்டாயே' என அந்தக் குரங்கைப் பற்றி அவசரப்பட்டு நினைத்தது போலவே, எந்த ஒரு செயலையும் நாம் செய்யும் முன்னும், பின்னும், நம்மைப் பழித்து அது வருத்தும்!

மனம் என்னும் ஒன்றின் பிடிப்பில் மிகவுமே ஆழ்ந்திருப்பதால்தான், இந்த 'விடுதலை' நிகழ மறுக்கிறது!

விட்டு விடுதலை ஆனாலும், இந்த ஆத்மா இறை நம்பிக்கையோடு விட்டு விடுதலை ஆனாலும், ........இந்த மனம் உன்னை இன்னமும் இறுகத்தான் பிடித்திருக்கும்!
எதனை விட்டாலும், உன்னால் இந்த மனத்தின் பிடிப்பை மட்டும் விடவே முடியாது!
கூடவே வரும்!

அது மட்டுமல்ல! உன்னை வருத்தியும் அலைக்கழிக்கும்!

பிறவியும் தொடரும்!
இறையின் வேலை....... இன்னமும் தொடரும்!
......இந்த மனத்தை நாம் விடும் நாள் வரை!
எப்படி இதை விடுவது?

யோசித்துக் கொண்டே எழுந்து நடந்தேன்!

குரங்கு ஒன்று ஒரு கிளையை விட்டுப் பாய்ந்து இன்னொரு கிளையைப் பிடித்தது!!

5 பின்னூட்டங்கள்:

VSK Sunday, June 01, 2008 10:02:00 PM  

விட்டாச்சு!
விடுதலையாச்சு!

Subbiah Veerappan Sunday, June 01, 2008 10:03:00 PM  

////விடுவோமா நாம்?
விடுகிறோமா நாம்?

அநேகமாக இதைச் செய்வதில்லை!///

புதிய சிந்தனை! இன்றைக்குத் தேவையும்கூட!
தொடர்ந்து எழுதுங்கள்!
முருகனருள் முன்னிற்கும்!

கோவி.கண்ணன் Sunday, June 01, 2008 10:58:00 PM  

// VSK said...
விட்டாச்சு!
விடுதலையாச்சு!
//

எதை விட்டிங்க ?

எல்லாம் அவன் செயல்... ! விடுதலை ஆவதும் மட்டும் தன்செயலா ? தற்செயலா ?

VSK Sunday, June 01, 2008 11:08:00 PM  

//புதிய சிந்தனை! இன்றைக்குத் தேவையும்கூட!
தொடர்ந்து எழுதுங்கள்!
முருகனருள் முன்னிற்கும்!//

ஊக்கத்துக்கு நன்றி ஆசானே!

இது போன்ற சிந்தனைகளையும் அவ்வப்போது எழுதிவரத்தான் எண்ணம்~!

முருகனருளை அனுப்பி வைத்ததற்கும் நன்றி.

VSK Sunday, June 01, 2008 11:13:00 PM  

//எதை விட்டிங்க ?//

அடக் கடவுளே!
பதிவு போட்டு ஒரு மணி ஆச்சு!
முகப்புக்குக் கொண்டுவர எண்ணி அதை எழுதினேன்!

விட்டாச்சு! விடுதலைஆச்சு~! வந்து பாருப்பா கோவிக்கண்ணா என!!:)))

உங்களது இரண்டாவது கேள்விக்கான விடையை அடுத்து சிலபதிவுகளில் எழுத எண்ணம்!
நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP