Monday, June 09, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

//மறப்பினும் ஒத்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்
இந்த குறளின் பொருள் என்ன? இதில் சொல்லப்படும் 'பிறப்பொழுக்கம்' என்பது என்ன?ஜாதி கட்டுமானமா? ஆம் என்றால் வள்ளுவர் வருணாசிரமத்தை ஆதரித்து குறள் எழுதினாரா?//


செல்வன் கேட்ட இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு, மயிலை மன்னாரிடம் போனேன்.

இதையும் காட்டினேன்.

படித்தான். நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு பீடியை வலித்தான். சற்று நேரம் பொறுத்து 'கடகட'வெனச் சிரித்தான்..... கண்களில் நீர் வழியச் சிரித்தான்!!

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விநோதமாக அவனைப் பார்த்தேன்.

அவன் இப்படி நடந்துகொண்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை.

"மன்னார்! உனக்கு ஒண்ணும் ஆகலியே! நல்லாத்தானே இருக்கே?" என ஒருவிதப் பயத்துடன் கேட்டேன்.

சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை ஒருவித சோகத்துடன் பார்த்தான்.

"ஐயன் கொறளு எளுதி ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேல ஆயிருச்சு. ஆனா, இதுவரைக்கு அல்லாரும் சும்மா மேம்புல்லை மேயற மாரி, தனக்கு வோணும்ன்றத மாட்டுந்தான் பாக்கறாங்காளே ஒளிய, அவரு சொல்ல வந்த கருத்து இன்னான்னு, சிந்திச்சுப் பாக்கவே இல்ல. அத்த வுடு! ஒரு கருத்துக்கு பத்து கொறளுன்னு எளுதியிருக்காரு. எதுனாச்சும் ஒரு அதிகாரத்த மட்டும் எடுத்துகிட்டு. அதுல இன்னா சொல்ல வராருன்னு பாக்கறாங்களான்னா, அதுவும் இல்ல. அது மட்டுமா? அவரு சொன்னத தனக்கு ஏத்தமாரி அர்த்தம் சொல்றதுன்னு ஆரம்பிச்சு, இப்ப தனக்கு ஏத்தாப்பல, கொறள மாத்தக் கூட தயங்காம செய்யறாங்க. இப்பிடியே போனா இது எங்கே போயி முடியுமின்னு ஆராலியும் சொல்ல முடியாது.

ஒன்னோட தோஸ்த்துன்னு சொல்லுவியே, அதான் ஒங்க செல்வன், அவரு தெரிஞ்சு செஞ்சாரோ, தெரியாமச் செஞ்சாரோ, எனக்குத் தெரியல. ஆனா, ரொம்ப நாளா நான் மனசுல நெனைச்சுகிட்டு இருந்த ஒரு விசயத்தச் சொல்றதுக்கு நல்லாவே ஒதவி பண்ணியிருக்காரு. அதுக்குன்னே அவரு இப்ப எனக்கும் தோஸ்த்தாயிட்டாரு!" என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஏற்கெனவே சென்னை வெயிலின் கொடுமை தாங்காமல் தவித்த எனக்கு இப்போது நிஜமாகவே தலை சுற்றியது.

"என்ன சொல்றே மன்னார்? நான் இந்தக் குறளை எடுத்துக் கொண்டு உன்னிடம் வந்திருக்கவே கூடாது என நினைக்கிறேன். சரி, நான் வர்றேன். அப்புறமாப் பார்க்கலாம்" என எழுந்தேன்.

ஒரு வலுவான கை என்னை அழுத்தி உட்கார வைத்தது. பதட்டத்துடன் திரும்பினேன். நிஜமாகவே மன்னாரின் முகத்தில் கோபக்கனல் வீசியது. அதிர்ந்து போய் உட்கார்ந்தேன்.

"இப்ப நான் சொல்றதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதே! ஒன் தோஸ்த்து செல்வன் சொன்ன இந்தக் கொறளு ஒண்ணு போதும்! நான் சொல்ல வேண்டியதுக்கு. இதுல சில பலான பலான விசயம்லாம் வரும். ஆனா, அது,.... அது இல்ல! நான் சொல்லச் சொல்ல ஒனக்குப் புரியும்.

ஒரு சாதாரணமான சொல்லு. அதுக்கான அர்த்தமே வேற. ஆனா, நாளாவட்டத்துல, அதுக்கு வேறொற அர்த்தம் ரொம்பவே பாப்புலராயிடுது. இப்ப அந்த சொல்லை சொல்றதே தப்புன்னு ஒரு அபிப்பிராயம் வந்திருது! நீ ஒரு பெரிய தமிள்........ ஆங்...... அது இன்னா?.... ஆங்... அதான்... அறிஞன்.... பெரிய தமிள் அறிவாளி!... நீ இத்தப் படிக்கறே! இதுக்கு அப்பிடியே பொருள் சொல்ல முடியாம பம்முறே! ஏன்னா இப்ப அது ஒரு 'கெட்ட வார்த்தை'! "நான் ஆரு? எனிக்கு இன்னா பேரு? இப்பப் போயி இதுக்கு நான் அர்த்தம் சொன்னா ஊரு ஒலகம் என்னைப் பத்தி இன்னா சொல்லும். போயும் போயும் ஒரு வள்ளுவனுக்காவ, நான் என்னோட இமேஜைக் கெடுத்துக்கறதா"ன்னு நெனைக்கறான். கொஞ்சம் ரோசனை பண்றான்.

இப்பத்தான் அவனுக்கு அவனோட ஆத்தா நெனைப்பு வருது! அதாம்ப்பா! நீங்கள்லாம் அடிக்கடி சொல்லிகிட்டுத் திரியுறீங்களே.. அந்தத் தமிளன்னை... அவள தொணைக்கு இளுத்துக்கறான்! அவ கொடுத்த பாலுல வளந்த பய.. இப்ப அவளையே சந்திக்கு இளுத்து, கொறள்ல ஒரு சொல்லை இப்பிடியும் அப்பிடியுமா மாத்தறான். ஆமாம்ப்பா.. ஐயன் எளுதின கொறளையே மாத்தறான். இதுக்கு மத்த ஆளுங்களையும் கூடச் சேத்துக்கறான்..... பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் கூப்பிடறான். அவங்களும் வந்து, 'ஐயா சொல்றதுதான் சரி; ஐயன் இப்பிடி சொல்லியிருக்க மாட்டார்'னு ஜால்ரா போடறாங்க. இப்ப ஐயன் எளுதினது மறைஞ்சுபோய், ஒரு புதுக் கொறளு,....... அதுக்குப் புதுப் புது அர்த்தம்ல்லாம் வந்து... இதான் ஐயன் கொறளுன்னு ஆகிப்போயிடுது! இதான் நடக்குது இப்ப!" என மேலும் தொடர்ந்தான் மன்னார்.

"மன்னார்! உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு நீ இப்பிடியெல்லாம் பேசறே?" என அதட்டினேன் நான்.

மன்னார் என்னை பரிதாபத்துடன் பார்த்தான். அவன் கண்களில் நீர் ததும்பியது.

நான் பதறிப் போனேன்!

"சொல்லு மன்னார். நீ என்ன சொல்லணுமோ சொல்லு. நான் கேட்டுக்கறேன். அதுக்காக நீ இப்படியெல்லாம் பேசாதே" என அவனை வேண்டினேன்.

"ஓத்து" என்றான் மன்னார்.

ஒரே அதிர்ச்சி எனக்கு! மன்னாரா,...... என் மயிலை மன்னாரா.... இப்படியெல்லாம் பேசுவது என நடுங்கினேன்.

"என்ன சொல்றே மன்னார்?' என்றேன்.

"ஒத்து" என்றான் மன்னார்.

'ஓ! 'ஒத்து'ன்றியா? இப்ப நான் எதை ஒத்துக்கணும்? இல்லை.... எங்கே ஒத்திப் போகணும்?' எனச் சிரித்தேன்.

மீண்டும் "ஓத்து" என்றான் மன்னார்.

'இது கெட்ட வார்த்தை மன்னார்!! ரவுடின்னாலும், நீ இப்படியெல்லாம் என்கிட்ட பேசமாட்டியே! இப்ப என் இப்படியெல்லாம் பேசறே' என நான் வினவினேன்.

'இப்பத்தான் இது கெட்ட வார்த்தை. ஆனா, எங்க ஐயன் காலத்துல இது கெட்ட வார்த்தை இல்லை. இதுக்கு இன்னா அர்த்தம் தெரியுமா? 'ஓத்து'ன்னா 'வேதம்லாம் படிக்கற பாடசாலை' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்.

ஏதோ சொல்ல வருகிறான் என உஷாரான நான், 'ம்ம். அப்புறம்?' என அவனைத் தூண்டினேன்.

'ஒரு பொஸ்தகத்தைப் படிக்கறே. படிச்சு முடிச்சிட்டு தூக்கிப் போட்டுடறே! அதுக்குப் பேரு படிப்பு. இப்ப ரொம்பப் பேரு. படிக்கறது ஒண்ணு; ....... பி.ஏ., எம்.ஏ.ன்னு என்னமோ படிக்கறாங்க,..... ஆனா. பண்றது இன்னாமோ பெஞ்சு தொடைக்கற வேலை. ஆனாக்காண்டி, ஒரு சமாச்சாரத்தை நல்லாப் படிக்கணும்னா இன்னா பண்ணனும்? திரும்பத் திரும்பப் படிக்கணும். அதுக்கு 'ஓதறது'ன்னு பேரு.

அந்தக் காலத்துல... அதாம்ப்பா... ஒரு ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்தி, .....இந்த வேதம்னு சொல்லுவாங்களே, அதைப் படிக்கறவங்க அல்லாரும், சொல்றவன் வாயைப் பார்த்துகிட்டே,..... அவன் ஒதடு அசைஞ்சு அதுலேர்ந்து வர்ற வார்த்தையைக் கேட்டுகிட்டே .....திருப்பித் திருப்பிச் சொல்லியே கத்துக்குவாங்க. அதாவது, திரும்பத் திரும்ப ஓதியே கத்துக்குவாங்க. அவங்களுக்கு பார்ப்பான்னு பேரு.

இதுவரைக்கும் புரிஞ்சுதா?

இப்ப இவங்க சொல்றதுக்கு 'ஓதுதல்'னு பேரு. இப்பிடி 'ஓத்து'கிட்டு... அதாம்ப்பா ... ஓதியே கத்துகிட்டவங்க..... மறந்தாக் கூட மறுபடியும் இன்னொருத்தன் வாயைப் "பார்த்து", அவன் சொல்றதைக் கேட்டு, கத்துக்கிட முடியும். அவந்தான் "பார்ப்பான்"

ஆனாக்காண்டிக்கும், நீ எந்தப் பிறப்புல பிறந்திருந்தாக்கூட, ஒளுக்கம் தவறி நடந்தியானா, ...நீ பொறந்த பொறப்பு எம்மாம் பெரிய பொறப்புன்னு ஊரு ஒலகம் சொன்னாலுங்கூட,..... இனிமே ஒனக்கு மருவாதி கிடையாது!

இதான் ஐயன் சொன்னது.

இன்னா முளிக்கறே? செல்வன் சொன்னது இது இல்லியேன்னா? அதான் நான் இம்மா நேரம் கூவினேனே!

செல்வன் சொன்னது ஐயன் கொறள் இல்லே!
இப்ப அவரு இன்னா சொன்னாரு?

"மறப்பினும் த்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்"

இது இல்லே ஐயன் எளுதினது.


"மறப்பினும் த்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்[புஒ]ழுக்கம் குன்றக் கெடும்"

இதான் ஐயன் சொன்னது!


ஐயன் சொன்னப்ப 'ஓத்து'ன்றதுக்கு இருந்த அர்த்தம் வேற.
இப்ப அதுக்கு இருக்கற அர்த்தம் வேற!

இப்ப அது ஒரு கெட்ட வார்த்தை! நீ கூட பதறினியே! மன்னாரா இதெல்லாம் சொல்றான்னு..... அதுமாரியான கெட்ட வார்த்தை!

ஒங்க தமிள் அறிவாளிங்கல்லாம் அதை ஐயன் வாயிலேர்ந்து வந்துதுன்னு சொல்ல வுட்டுடுவாங்களா? இப்ப, இவங்க தானே தமிளைக் காப்பாத்த அவதாரம் எடுத்து வந்திருக்காங்க! ஐயன் மேல ஒரு பளி விள வுட்டுருவாங்களா? "ஓத்து"ன்றத 'ஒத்து'ன்னு மாத்தி, இதான் ஐயன் சொன்னதுன்னு, ஒரு புதுக் கொறளை வுட்டுட்டாங்க. இதை மதுரை திட்டமும் ஏத்துகிட்டதுதான் பெரிய சோகம்!" எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மன்னார்-

அவனது சோகம் என்னை இப்போது முழுமையாகத் தாக்கியது.

"நீ சொல்லுவது என்னவெனப் புரிகிறது மன்னார்!' என அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தேன்.

"இது மட்டுமில்ல சங்கரு! 'பிறப்பு, ........ஒழுக்கம் குன்றக் கெடும்'னு ஐயன் சொன்னத, 'பிறப்பொழுக்கம்'னு பதம் பிரிச்சு, ஒன்னோட தோஸ்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாரு, அதான் என்னிய இம்மாந் தூரம் பேச வைச்சது. அதப்பத்தி இன்னோரு நாளு சொல்றேன். ஐயனைக் கொறை சொல்றத வுட்டு, அவர் சொன்னதைப் புரிஞ்சுக்கப் பாருங்கப்பா'' எனச் சொல்லிச் சமாதானமானான் மயிலை மன்னார்.

நான் நாயரைப் பார்த்துக் கண்ணடித்தேன்.

உடனே, இரு தட்டுகளில் மசால் வடையை வைத்து எங்கள் பக்கம் நீட்டினார் நாயர்.

'இன்னிக்கு டீ வேணாம். ரெண்டு நன்னாரி ஷர்பத்' என அதட்டலாகச் சொன்னேன் நான்.

"இம்மாந்நேரம் கேட்டுட்டு இப்பிடி சொல்றியே! இருக்கறத மாத்தாதே. நாயர்! டீயே போடுப்பா" என்றான் மயிலை மன்னார்!

வெட்கித் தலை குனிந்தேன் நான்!

12 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Tuesday, June 10, 2008 1:01:00 AM  

ஐயையோ....ஆ...பாசம் !
:)

வடுவூர் குமார் Tuesday, June 10, 2008 7:57:00 AM  

ஒரு சுழியில் "சுழியை" யே மாத்திட்டாங்களே.

அருமையாக சொன்ன மன்னாருக்கு என் வாழ்த்துக்கள்.

கவிநயா Tuesday, June 10, 2008 7:59:00 AM  

சுத்தத் தமிள்ல சொன்னா சூப்பர்! :)

(தமிழன்னை மன்னிப்பாளாக!)

ஜயராமன் Tuesday, June 10, 2008 8:04:00 AM  

ஐயா,


//// "இது மட்டுமில்ல கரு! 'பிறப்பு, ........ஒழுக்கம் குன்றக் கெடும்'னு ஐயன் ன்னத, 'பிறப்பொழுக்கம்'னு பதம் பிரிச்சு, ஒன்னோட தோஸ்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாரு, அதான் ///

இது முற்றிலும் தவறான விளக்கம். திருக்குறளின் அனைத்து உரைகளும் பிறப்பொழுக்கம் என்பதற்கு அளித்த விளக்கம் நேரானது. தங்களின் இந்த புதுமை விளக்கம் நேர்மையில்லாதது போல் தோன்றுகிறது. இதற்கு ஏதாவது ஆதாரம் தர முடியுமா?

நன்றி

ஜயராமன்

VSK Tuesday, June 10, 2008 8:42:00 AM  

ஆ... பாசமுமில்லை... ஆபாசமும் இல்லை, கோவியாரே!
உங்களுக்கு மட்டும் ஏன் அப்படி படுகிறது?:))

VSK Tuesday, June 10, 2008 8:42:00 AM  

நன்றி, திரு. குமார்!

VSK Tuesday, June 10, 2008 8:43:00 AM  

இதுக்கெல்லாம் தமிழன்னை கோபிக்க மாட்டாள், கவிநயா.!! நன்றி!

VSK Tuesday, June 10, 2008 8:48:00 AM  

நானாகக் கற்பித்த பொருள் இல்லை திரு. ஜயராமன்.

இந்தக் குறள் இரு வரிகளைக் கொண்டது.

மறப்பினும் பார்ப்பான் ஓத்துக் கொளல் ஆகும் என்பது ஒரு வரி... ஒரு கருத்து.
ஒழுக்கம் குன்ற பிறப்பு கெடும் என்பது அடுத்த செய்தி.

என்னிடம் இருக்கும் ஒரு தமிழ்ப்புலவரின் உரையில் இப்படிய்த்தான் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
"மறைநூல்களைக் கற்பவன் கற்றதை மறக்க நேர்ந்தாலும் அதனை அவன் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், ஒருவனது ஒழுக்கத்தில் குறைவுபட்டால் அவனுடைய குடியின் சிறப்புக் கெடும்" என இருக்கிறது.
இதனை ஒட்டியே என் கருத்தும் அமைந்தது. நன்றி.

கோவி.கண்ணன் Tuesday, June 10, 2008 8:54:00 AM  

வீஎஸ்கே ஐயா,

பார்பான் என்பது பிறப்பின் அடிப்படை இல்லை என்று விளக்கம் கொடுத்து இருந்தால்...வள்ளுவன் எதையும் தவறாக சொல்லவில்லை என்று விளக்கி இருக்கலாம். இவ்வளவு கடினப்படத் தேவை இல்லை

:)

VSK Tuesday, June 10, 2008 10:06:00 AM  

இது பார்ப்பானைக் குறித்து எழுதப்பட்ட பதிவில்லை கோவியாரே! அது என் எண்ணமும் இல்லை.

குறில் நெடில் மாற்றிக் குறளைச் சிதைத்த அவலத்தையே சொல்லமுற்பட்டேன்.

புரிதலுக்கு நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM Wednesday, November 12, 2008 9:22:00 AM  

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது பார்ப்பான்=ஒழுக்க நெரி கொண்டு வாழ்பவர்/ சான்றோர் என பொருள் கொள்ள முடியும் அல்லவா?

VSK Wednesday, November 12, 2008 10:48:00 PM  

//எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது பார்ப்பான்=ஒழுக்க நெரி கொண்டு வாழ்பவர்/ சான்றோர் என பொருள் கொள்ள முடியும் அல்லவா?//

சரியாகச் சொன்னீர்கள் திரு. விக்கினேஸ்வரன். அப்படித்தான் அதன் பொருள்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP