"தமிழன்னை தந்த செல்வம்"
"தமிழன்னை தந்த செல்வம்"
செட்டிநாட்டிலே பிறந்தான் செந்தமிழும் இவன் கற்றான்
நெக்குருகும் பாட்டமைத்து நாட்டிலே உலவவிட்டான்
எப்படியிவன் வாய்மொழியில் இத்தனையும் வருகுதென்று
கேட்டவரை ரசித்தவரை எல்லாரையும் வியக்க வைத்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்
சொன்னபடி கேட்கும் தேன்மொழிகள் பிறந்துவிடும்
சின்னக் குழந்தைக்கும் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணன் வரம் தந்து இங்கு வந்த கண்ணதாசன்
அன்னைத்தமிழுக்கு மாறாத அழகு சேர்த்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்
கையசைவில் கருத்து வரும் கண்ணசைவில் பாக்கள் வரும்
இம்மென்னும் முன்னாலே எத்தனையோ சந்தம் வரும்
பாடாத பொருளில்லை இவன் பேசாத கருவில்லை
ஒவ்வொன்றும் மனம் களிக்கும் சந்தமிகு தமிழ்ப்பாட்டு
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்
சோகத்தைப் பிழிந்தெடுப்பான் சுகராகமும் பாடிடுவான்
ஏக்கத்தைத் தவிர்க்கின்ற வீரமிகு பாடல் தந்தான்
காதலர்கள் மகிழ்ந்திடவே களங்கள் பல அமைத்திருந்தான்
வாழ்வதற்குத் தேவையான தத்துவங்கள் சொல்லிவைத்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்
இருந்தவரை அரசனானான் இறந்தபின்னும் பேசப்பட்டான்
வீற்றிருந்த அரியாசனம் நிரப்புதற்கோர் ஆளில்லை
மன்னுபுகழ் உள்ளளவும் மகராசன் பேரிருக்கும்
சின்னஞ்சிறு பிள்ளைகளும் இவன்பெயரைச் சொல்லி நிற்கும்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்
[இன்று ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள். என் பங்குக்கு ஒரு எளிய அஞ்சலி!]
8 பின்னூட்டங்கள்:
இடுகையின் தலைப்பே சூப்பரான அஞ்சலி வி.எஸ்.கே சார்!
உங்களைப்போன்ற நல்ல தமிழ் நெஞ்சங்களில் கவியரசர் இன்றைக்கும் வாழ்கின்றார். என்றைக்கும் வாழ்வார்
அதைத்தான் அவர் எனக்கு என்றைக்கும் மரணமில்லை என்று சொல்லிச் சென்றார் போலிருக்கிறது!
உணர்ந்துசொன்ன சொற்கள் அவை ஆசானே!
ஏதோ இன்று நான் கிறுக்குவதெல்லாம் அவர் இட்ட பிச்சை!
அவர் எழுதிய பாடலுக்கு அதே மெட்டில் இன்னொரு பாரா எழுதித்தான் நான் எழுதக் கற்றேன்.
அதுவே உண்மை!
முதல் வருகைக்கு நன்றி!
அர்த்தமுள்ள இந்து மதம் என்னும்
ஆன்மீக அரிச்சுவடி தந்தான்
அகிலத்தில் பலர் சித்தம் தனை
சிதையாது சீராக்கினான்
சத்தியத்தை சரணடைந்தால்
நித்தியமாய் வாழ்ந்திடலாம்
என்றெமக்குணர்த்திடவே
நித்திலத்தில் வாழ்கிறான்.__/\__
//கையசைவில் கருத்து வரும் கண்ணசைவில் பாக்கள் வரும்
இம்மென்னும் முன்னாலே எத்தனையோ சந்தம் வரும்
பாடாத பொருளில்லை இவன் பேசாத கருவில்லை//
அருமையாச் சொன்னீங்க!
//மன்னுபுகழ் உள்ளளவும் மகராசன் பேரிருக்கும்//
உண்மை!
நன்றி அண்ணா!
அருமை! எப்படி இந்த மாதிரி எழுத முடியுது?
//அவர் எழுதிய பாடலுக்கு அதே மெட்டில் இன்னொரு பாரா எழுதித்தான் நான் எழுதக் கற்றேன்.//
ஓ, அதுவும் அப்படியா?
வாங்க திவா! ரொம்ப நாளாக் காணலியே!
கண்ணதாசனின் ஏகலைவன் நான்.
:)))))))
அப்பப்ப பாத்துகிட்டுதான் இருக்கேன் எஸ்கே!
பின்னூட்டம்தான் போடறதில்லை.
சும்மா வருகை பதிவுன்னு எழுத மனசில்லை.
ப்ளாக் எப்பவுமே நல்லாதான் இருக்கு. அதை எப்படி திருப்பி திருப்பி சொல்றது?
:-))
கண்ணதாசன் அவர்களைப் போன்றே அருமையான எளிமையான் பாடல் வி.எஸ்.கே.
//அதைத்தான் அவர் எனக்கு என்றைக்கும் மரணமில்லை என்று சொல்லிச் சென்றார் போலிருக்கிறது!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
Post a Comment