Wednesday, October 01, 2008

"விநாயகர் அகவல்" -- 14

"விநாயகர் அகவல்" -- 14முந்தைய பதிவு

பல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.

இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரி அன்னைக்கு ஒரு ஆலயம் எழுப்பி, மிகச் சிறந்த இறைப்பணி செய்துவரும் சைதன்யானந்தா என்னும் ஒரு பெரியவரின் அருளுரையில் இதற்கான பொருள் விளக்கம் கேட்க நேர்ந்தது..... முருகனருளால்.

இதன் ஆர்வமாய் மேலும் இதைப் படிக்கத் தொடங்க எண்ணித் தேடியபோது மதுரைத் திட்டத்தின் கீழ் திரு ரஜபதி ஐயா எழுதிய உரைவிளக்கம் கிடைத்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் பிரமிப்பூட்டின.

நான் வணங்கும் ஒரு பெரியவரின் ஆசியுடன், அவர் தந்த சில விளக்கங்களுடனும், இதற்கு எனது பாணியில் ஒரு எளிய விளக்கம் கொடுக்க எண்ணினேன்.

அதன் விளைவுதான் சென்ற 13 பதிவுகளாய் வந்த விநாயகர் அகவல் உரை விளக்கம்!

இந்த மூன்று பெரியவர்களுக்கும் எனது பணிவான வணக்கமும், நன்றியும்.

நான் சொன்னது மிக, மிக ஆரம்பநிலை விளக்கம் மட்டுமே!

இதனைப் படித்து, நன்கு உள்வாங்கிக் கொண்டு, உள்ளில் ஏதேனும் உந்தல் புறப்பட்டால், ஒரு குருவைத் தர விநாயகனை வேண்டுங்கள்!

அவர் காட்டித் தருவார்! வளம் தருவார்!

மதுரைத் திட்டச் சுட்டி இதோ!

விநாயகர் அகவல் இசைவடிவில் இங்கே!

இனி நான் வணங்கும் பெரியவர் எழுதிய முதல் ஓரிரு வரிகளுக்கான சில யோக விளக்கங்களைக் காணலாம். இது சற்று ஆழ்நிலை விளக்கமாக இருக்கும். பிடிப்பவர்க்குப் பிடிக்கும்! புரிபவர்க்குப் புரியும்! நன்றி.

"சங்கர் ஐயா கேட்டுக் கொண்டதற்கேற்ப எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

விநாயகர் அகவல் முழுக்கவே யோக நெறியின்படி எழுதப்பட்ட நூல்! யோகத்தில் முழுமைப்பெற்றவரது துணையும், அவர் காட்டும் தெளிவும் இல்லாமல் இருந்தால் மிக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு விடலாம்! கொஞ்சம் ஆபத்து தான்!


யோக நெறியில் உள்ளது என்ன என்ற ஒரு மேலெழுந்தவாரியான அறிவை வேண்டுமானால் இதனால் பெறலாம். இந்த யோகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதற்கு இந்த [vsk இன்] விளக்கம் உபயோகமாகும். தன் பணிகளுக்கு இடையில் நேரம் கிடைத்து இப்படி ஒன்றை [vsk] எழுதுவது பெரிய விஷயம்தான். பணிவுடன் வணங்குகிறேன்.

யோகத்தில் குறியீடுகள்தான் முக்கியம். ஏன்? வெளிப்படையாக சொன்னால் என்ன என்று தோன்றலாம். யோகத்தில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம்.

1.இந்த பாதையை உள்ளப்படிக்கு உணர்ந்தவரது வழிக்காட்டல்;
2.சாதகன் எதையும் ஆழ்ந்து சிந்தித்து தானாக அறியும் ஞானம்.


இந்த பாதையை உள்ளப்படிக்கு முழுதும் சென்று அறிந்தவர் இதில் உள்ள ஆபத்துக்களையும், இடையூறுகளையும், நுணுக்கங்களையும் அறிந்திருப்பார். அவருக்கு அவர் குரு உதவி இருப்பார். ஆதியில் இறைவனே நேரடியாக குருவாக வந்து வழிக்காட்டியதாக சான்றோர் சொல்லால் அறிகிறோம். நானும் அப்படியே நேரடியாக இறைவனின் வழிக்காட்டுதலையே பெற்றுக் கொள்கிறேன் என்பவர் உண்மையில் ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும் முயன்றால் நிச்சயம் இப்போதுக் கிட்டும் என்று பெரியோர் ஆணித்தரமாக சொல்லுகின்றனர்.

சாத‌க‌ர் என‌ப்ப‌டும் யோக‌ ப‌யிற்சியாள‌ருக்கு குரு சில‌ அடிப்ப‌டைக‌ளை மாத்திர‌ம் சொல்லித்த‌ந்து எப்ப‌டி அறிய‌ வேண்டும் என்று க‌ற்றுத் த‌ருவார்! அதை வைத்துக் கொண்டு சீட‌ரே ஆராய்ந்து அறிய‌ வேண்டும். ப‌க‌வ‌த்கீதை, சித்த‌ர் பாட‌ல்க‌ள், உப‌நிஷ‌த் எல்லாமே இப்ப‌டி தான் அறிய‌ வேண்டும். அத்த‌னையும் இப்ப‌டி தான் என்று யோகிக‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர். என‌வே குறியீடாய் சொல்வ‌தை க‌ண்ட‌றியும் திற‌னை ப‌யிற்சி மூல‌மாக‌வும், வ‌ழிக்காட்டுத‌ல் மூல‌மாக‌வும் சீட‌ன் அறிகிறான். திரும்ப‌ என்ன‌ வ‌ழிக்காட்டுத‌ல் என்று சொல்கிறேனே என்றால், ப‌யிலும் சீட‌ன் யோசித்து அறிந்த‌தை குருவிட‌ம் வ‌ந்து சொல்லும் போது குரு அதை ச‌ரி என்றோ த‌வ‌று என்றோ சொல்லுவார். த‌வ‌றாய் இருந்தால் மீண்டும் சீட‌ன் தியான‌த்தில் சிந்தித்து ஆராய்வான்.

உதார‌ண‌ம் தைத்திரீய‌ உப‌நிஷ‌த்தில் வ‌ருண‌ண் பிருகுவுக்கு சொல்வ‌தை காண‌லாம்.
"எதிலிருந்து எல்லாம் தோன்றிய‌தோ, எதனால் எல்லாம் இருக்கிற‌தோ, எத‌னால் எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டைகிற‌தோ அது எதுவென‌ அறிவாய்!" என்பார் வ‌ருண‌ன்.
பிருகு வெகுகால‌ம் தியானித்து அறிந்து வ‌ந்து "அன்ன‌ம்" என்பார்.
"ந‌ன்று! இன்னும் போய் ஆராய்வாய்!" என்பார் வ‌ருண‌ன்.
திரும்ப‌ ஆராய்ந்து நேர‌டியாக‌ அறிந்து வ‌ந்து "பிராண‌ன்" என்பார் பிருகு.
"ந‌ன்று! இன்னும் சிந்தி!" என்பார் வ‌ருண‌ன்.

இப்ப‌டியே போகும்!
ஆக‌ சீட‌னை சிந்திக்க‌ வைத்து, அதே ச‌ம‌ய‌ம் த‌வ‌றாக‌ போகும் போது மீண்டும் வழிக்குத் திருப்புவார் குரு. அப்படி சீட‌ன் சிந்திக்க‌வே யோக‌ முறையில் எல்லாம் குறியீடுக‌ளாக‌ இருக்கும். இத‌னால் அறிய வேண்டிய தாகத்தில் இருக்கும் ஒருவன், க‌ண்டிப்பாக‌ ஒரு முழுமைய‌டைந்த‌வ‌ரை தேடி அடைவான். அடுத்து அவ‌ன் சிந்திக்க‌ வாட்ட‌மாக‌, உப‌யோக‌மாக‌ இந்த‌ குறியீடுக‌ள் இருக்கும். இத‌னால் மொழியை க‌ட‌ந்து மொழியின் உள்ளே ம‌றைந்து இருக்கும் உண‌ர்வினை அறியும் வ‌ல்ல‌மையை பெறுகிறான்.

ஒரே ம‌ட‌லில் எல்லாம் இருந்தால் ப‌டிப்ப‌வ‌ருக்கு க‌ஷ்ட‌மாக‌ இருக்கும். அடுத்த‌ மட‌லில் விநாய‌க‌ர் அக‌வலின் முத‌ல் வ‌ரியில் இருக்கும் குறீயீடு (allegory) எதை குறிக்கிற‌தென்று ஒரு மாதிரிக்கு (sample) தெரிவிக்க முயலுகிறேன். அதுவும் ஓரளவிற்கு எனக்கு புரிய வைக்கப்பட்டதை, பெரியோர் அங்கீகரித்ததையே எழுத முயல்வேன்.
*********************************

[தொடரும்]

அடுத்த பதிவு

3 பின்னூட்டங்கள்:

jeevagv Thursday, October 02, 2008 8:18:00 PM  

//இதனைப் படித்து, நன்கு உள்வாங்கிக் கொண்டு, உள்ளில் ஏதேனும் உந்தல் புறப்பட்டால், ஒரு குருவைத் தர விநாயகனை வேண்டுங்கள்!//
மிக்க நன்றி ஐயா.

VSK Thursday, October 02, 2008 11:01:00 PM  

தொடர்ந்து வந்து படித்து கருத்து சொன்னதற்கு நானல்லவா நன்றி சொல்லணும்!
நன்றி திரு. ஜீவா!

veloo Wednesday, October 15, 2008 11:48:00 PM  

Blessedself.i had come across vinayagar agaval posting by chance and it is interesting. Try to read similar vizhakkam by sivayogi rathnasabapathipillai. The book is out of print but i do have a copy but do not know how to type in tamil and upload it if you need. Please let me know thw way you type in tamil,the font, how to go about it so that if time permits i can learn to type and post it .I too can participate in the blog activity. I am in Tiruchirapalli,

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP