"விநாயகர் அகவல்" -- 6
"விநாயகர் அகவல்" -- 6
[முந்தைய பதிவு]
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் [28]
இன்பம் என்பது இன்னது என்று
தன்னையுணரா மாந்தர் இங்கு
இன்பம் என்பது புலனில் என்று
நின்னை மறந்து தன்னை அழிப்பர்
கண்டதைக் கண்டு காமம் கொண்டு
கருத்தொழிபட்டு மதியை இழந்து
புலனில் அடக்கம் கொள்ளாதிருந்து
பொய்வழி சென்று மெய்வழி மறப்பர்
சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும்
ஐம்புலன் மீது கொண்டிட்ட அவாவில்
தன்னிலைகெட்டு தறிகெட்டலைந்து
செயல்வழி மறந்து சிந்தை குலைவர்
இதனைவிடுத்து சிவனில் இழைந்து
அவனை நினைந்து அகத்துள் மலர்ந்து
நற்செயல் செய்யும் பண்பு வளர்ந்து
அருளொளி படர பிறவிருள் அகல
கணபதி தானே தன்னுள் வந்து
மாயை அறுக்கும் வழிகளைக் காட்டி
இன்பம் அறுத்துப் பேரின்பம் தந்திட
புலனை அடக்கும் வழிகளைக் காட்டி
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து [30]
தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்
உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்
இறையருள் கூடி குருவருள் நாடி
ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்
ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து
ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க
எல்லையில்லா இன்பம் பிறக்கும்!
ஆம்!
எல்லா விளக்கும் அணைந்தபின்னே
எல்லையில்லாப் பெருவெளி தெரியும்!
நல்வினை தீவினை இரண்டின் பயனால்
இன்பம் துன்பம் என்பன நிகழும்
இவற்றின் விளைவால் பிறவிகள் எடுக்க
ஆன்மா இங்கே அலைந்து கிடக்கும்
திருவருள் கூடிய பேரின்பநிலையில்
அனைத்தும் இங்கே அகன்றிடத் துடிக்கும்
அறுகம்புல்லோன் அருளால் இருவினை இரண்டின்
பயனும் ஒழிந்து ஆணவமென்னும் இருளும் மறைந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி [31]
இறைவனை அடைய நால்வழி உண்டு
பணிவழி, மகன்வழி, நட்புவழி, காதல்வழி
என்பன இவற்றின் வகைகள் ஆகும்!
சரியை கிரியை யோகம் ஞானம்
என்னும் பெயரும் இவற்றுக்குண்டு
இறைபணி செய்து அடியரைப் பணிந்து
முதல்வழிமூலம் அடைவது சாலோகம்
இறையிடம் அமைத்து அவரை வழிபடல்
திரவியம் சேர்த்துத் திருப்பணி செய்தல்
மகனெனும் வழியிது அடைவது சாமீப்யம்
பொறிகளையடக்கி புலனை அடக்கல்
அன்புடன் அவனை அனுதினம் எண்ணல்
யோக வழியினில் பெறுவது சாரூபம்
தன்னையிழந்து தன்னை மறந்து
இறையில் கலந்து தானே இறையும்
என்றே கசிந்து காதல் மல்கிட
கனிவது காதல் வழியெனச் சொல்வர்
கிடைப்பதோ என்றும் சாயுச்சியம்
இவ்வழி நான்கும் எனக்கென அருளி
ஈசனவன் அடியரோடு தானும் கலந்திருந்து
அவ்வுலகில் வாழ்ந்திடலே சாலோகம் ஆகும்
ஈசனது அடிபற்றி அவனுக்கு அருகாமையில்
மகிழ்வுடன் இருத்தல் சாமீப்யம் ஆகும்
ஈசன் வடிவினையே தானும் அடைந்து
ஈசனாகவே வாழ்வதுவோ சாரூபம் ஆகும்
ஈசனே தானாகி தன்னுள்ளே அவன் கலந்து
ஒன்றாக வாழ்ந்திடலே சாயுச்சியம் எனச் சொல்வர்.
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே [32]
உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்
ஆணவம் கன்மம் மாயை என்னும்
மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்
இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்
என்றும் அண்டாமல் அடியோடகற்றி
************************************
[தொடரும்]
அடுத்த பதிவு
10 பின்னூட்டங்கள்:
/////மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே [32]
உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்
ஆணவம் கன்மம் மாயை என்னும்
மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்
இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்
என்றும் அண்டாமல் அடியோடகற்றி////
ஆணவம் என்றால் தெரிகிறது
மாயை என்றால் (illusion) தெரிகிறது
கன்மம் என்பது தெரியவில்லை - அதற்கு அருஞ்சொற்பொருள் சொல்ல வேண்டுகிறேன் வி.எஸ்.கே சார்!
(நான் வைத்திருக்கும் தமிழ் அகராதியில் இல்லை)
////கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து [30]
தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்
உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்
இறையருள் கூடி குருவருள் நாடி
ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்
ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து
ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க
எல்லையில்லா இன்பம் பிறக்கும்!/////
விளக்கம் அருமையாக உள்ளது!
கன்மம் (p. 220) [ kaṉmam ] {*}, s. see கருமம், action
செயல்பாடு எனச் சொல்லலாம் ஆசானே!
நன்றி.
"கன்மம்" (action) என்பது எப்படி மும்மலத்தில் ஒன்றாக முடியும்? புரியவில்லையே. கடமையை செய் (action)பலனை எதிர்பாராதே என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறாரே. கொஞ்சம் விளக்கி கூறுங்களேன்.
இது பற்றி விநாயகர் அகவல் முடிந்ததும் விளக்கமாகச் சொல்ல எண்ணியிருப்பதால் இப்போதைக்கு சற்றுச் சுருக்கமாகச் சொல்லுகிறேன் நண்பரே!
கடமை என்கிற 'ஆக்ஷன்' அல்ல இந்தக் கன்ம மாயை என்பது.
சைவசமயக் கருத்துப்படி சீவனை மும்மலங்கள் சூழ்கின்றன.
இறையுடன் ஒன்றிய சீவன், ஆணவ மலத்தின் ஆளுகையால், 'தான்' என்னும் நிலையை அடைந்து பரம்பொருளில் இருந்து பிரிந்து நிற்கிறது... தானும் இறை என்பதை உணராமல்.
முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை என்பது கன்ம மலம். இதுவும் சீவனைத் தொடர்ந்து வரும். இதை ஒட்டியே நமது செயல்பாடுகள் பெரிதுமாக நிகழ்கின்றன. இதுதான் கன்ம மாயை. இதன் ஆளுகையால் தான், நான் செய்த செயலுக்கு எனக்கு என்ன பலன் என வாடும் நிலை ஆணவ மலத்தால் அகப்பட்ட சீவனுக்கு நிகழ்கிறது.
இவற்றின் விளைவுகளால், 'நான்' இந்த உடம்பு இல்லை' 'நான் செய்வதன் பயனை நான் எதிர்பார்க்கக் கூடாது' என்கிற உண்மையை மறைப்பதுதான் மாயா மலம். மற்ற இரு மலங்களையும் மறைத்து, கண்ணெதிரே காண்பதுவே உண்மையென நம்மை நம்பச் செய்து இன்னமும் இப்பிறவித் துயரில் நம்மை ஆழ்த்துகிறது.
மீதி வரிகளுக்கான பொருளையும் படித்து முடியுங்கள். ஒரு விளக்கம் கிடைக்கலாம்... விநாயகன் அருளுடன்!
இறைவனை அடையும் நால்வழிகளைப் பற்றி இன்றே அறிந்தேன் எஸ்.கே.
//இறைவனை அடையும் நால்வழிகளைப் பற்றி இன்றே அறிந்தேன் எஸ்.கே.//
நல்லது குமரன்!
நனறி சொல்ல வார்த்தையில்லை.. நீவிர் வாழிய பல்லாண்டு !
நனறி சொல்ல வார்த்தையொன்றில்லை........ வாழிய நீவிர் பல்லாண்டு !
இத்தனை நாட்கள் கழிந்தும், இதனைப் பார்வையிட்டுக் கருத்து சொல்லிப் பாராட்டியமைக்கு என்னுடைய பணிவன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.
கணபதி எல்லாம் தருவான்!
Post a Comment