"சுகமெல்லாம் தந்திடம்மா!!" [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]
சுகமெல்லாம் தந்திடம்மா!! [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]
மங்களங்கள் அருள்கின்ற மகிழ்வெல்லாம் அளிக்கின்ற
சங்கடங்கள் தீர்க்கின்ற சகலநலம் புரிகின்ற
பைங்கிளியைக் கையிலேந்தி பச்சைவண்ண மேனியுடன்
பக்தருக்கு அருளமுதை பரிவோடு வழங்கிவரும்
தென்மதுரை நகரிருந்து தென்பாண்டி ஆளுகின்ற
சுந்தரனின் துணைவியான மீனாக்ஷி திருக்கதையை
செந்தமிழில் சொல்லெடுத்து பக்தியுடன் பாடிடவே
மங்களவிநாயகனின் தாளடியை நான் பணிந்தேன். [1]
அருந்தவங்கள் ஆற்றியதில் அகமகிழ்ந்த மலைமகளும்
தானொருநாள் மகளாக வளர்வதாக வாக்களித்து
தேவமகள் வித்யாவ திக்குவரம் அளித்திடவே
பூவலகில் பெண்ணாகப் பிறந்திட்ட தேவமகள்
பாண்டிநாட்டை ஆண்டுவந்த மாமன்னன் மலையத்வஜன்
மனையாக மணம்புரிந்து தென்பாண்டி நாட்டினிலே
காஞ்சனமாலையெனும் பெயரோடு சீராக வாழ்ந்திருந்தாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [2]
பிள்ளையில்லாக் குறையாலே மன்னவனும் வருந்திடவே
மகவொன்று பிறக்கவேண்டி யாகங்கள் செய்திடவே
வளர்ந்தெழுந்த பெருந்தீயின் நடுவினின்று எழுந்ததம்மா
வடிவழகில் மிகச் சிறந்த தோற்றத்தைத் தானடக்கி
பட்டாடைதானணிந்து புன்னகையைத் தவழவிட்டு
புடம்போட்ட பொன்னெனவே பூவுலகம் வாழ்ந்திடவே
முனிவோரும் வாழ்த்திடவே மூன்றுவயதுப் பெண்ணொன்று!
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [3]
பாண்டிநகர்த் துறைமுகத்தில் சீறிவரும் கடலலைகள்
கடலலைகள் நடுவினிலே துள்ளிவிழும் வெள்ளிமீன்கள்
வெள்ளிமீன் வடிவினைப்போல் வண்ணமகள் விழிமிளிர
மீனாக்ஷி என்னுமொரு திருநாமம் கொண்டிட்டாள்
அன்னையிவள் மீனாக்ஷி அன்னைமடி சென்றமர்ந்தாள்
மன்னவனும் பிள்ளையிலாக் குறைநீங்கிக் களித்திட்டான்
கற்றவரும் மற்றவரும் வாழ்த்தொலிகள் எழுப்பிட்டார்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [4]
முத்துமகள் மீனாளின் மார்பினிலே மும்முலைகள்
மன்னவனும் திகைத்திருக்க அசரீரி அங்கொலிக்க
"மங்கையிவள் மணாளனைக் காணுகின்ற பொழுதினிலே
குறைபாடு நீங்கியிவள் நிறைமுலையாய்த் திகழ்ந்திடுவாள்!"
மன்னவனும் மகிழ்ந்திட்டான் மகளை வாரி அணைத்திட்டான்
வீரமுள்ள திருமகளாய் மீனாளை வளர்த்திட்டான்
திக்விஜயம் செய்திடவே தலைமகளும் புறப்பட்டாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [5]
அன்னையிவள் வெற்றியுலா அடியேனால் சொல்லப்போமோ
ஆற்றலுடன் போர் புரிந்து அடுத்தவரை வென்றிட்டாள்
முடிமன்னர் அடிபணிய வெற்றிகளைக் குவித்திட்டாள்
படைவீரர் எக்களிக்க வீரமுழக்கம் செய்திட்டாள்
செல்வழியில் கற்றவரை வாதுகளில் வென்றிட்டாள்
செருக்குண்ட பலபேரின் கருவத்தை அடக்கிட்டாள்
கைலாயம் சென்றங்கு சிவனாரைச் சமர் அழைத்திட்டாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [6]
சிவனாரும் சமர்புரிய மிடுக்குடனே வெளிவந்தார்
என்னவொரு ஆச்சரியம்! சிவனாரை கண்டவுடன்
மார்பகத்தில் இருந்திட்ட மூன்றாம்முலை மறைந்ததம்மா!
மணவாளன் இவனென்று மகிழ்வாகத் தெரிந்ததம்மா!
நாணமங்கே தலைகவிழ்த்து நயமாக நின்றததம்மா
"தென்மதுரை நீ திரும்பு, எட்டாம் நாள் நான் வருவேன்
சித்திரையில் யாம் மணப்போம் கொற்றவளே" என்றுரைத்தார்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [7]
நாச்சியாரும் திரும்பிட்டாள்! பெற்றவரிடம் சேதி சொன்னாள்
உற்றவனாம் சோதரனாம் கள்ளழகர்க்கு ஓலையிட்டார்
சித்திரையில் வருகின்ற முழுநிலவின் முதல் நாளில்
சித்திரமாம் மீனாளின் திருக்கரத்தை பற்றிடவே
சுந்தரனாம் சோமசுந்தரன் தென்மதுரை வந்தடைந்தார்
உற்றவரும் சுற்றவரும் மற்றவரும் வாழ்த்தொலிக்க
அன்னையிவள் கைப்பிடித்தார் ஆலவாய் அழகனுமே
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [8]
சோதரியின் திருமணத்தைக் காணவேண்டி கள்ளழகர்
தன்னிருக்கை தனைவிடுத்து வைகைநதிக் கரையடைய
வைகையிலே வந்தவெள்ளம் வழிமறைத்துத் தான் தடுக்க
அக்கரையில் அக்கறையாய் அழகருமே தங்கிவிட்டார்
இக்கரையில் அதற்குள்ளே மணம் முடிந்த சேதிவர
உக்கிரமாய் கள்ளழகர் பெருவெள்ளம் தனிலிறங்கி
தன்னிடத்தைத் தானடைந்தார் தணியாத கோபமுடன்!
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [9]
மங்கலங்கள் புரிகின்ற மாமதுரை மீனாக்ஷி
தன் கதையைப் பாடிடவே மங்கையவள் அருள்செய்தாள்
மங்களங்கள் பெருகிவிடும் மனமகிழ்ச்சி கூடிவிடும்
சுந்தரமாய் நம் வாழ்க்கை சுடர்விட்டு ஒளிவீசும்
தாய்மீனின் கண்பார்வை தம்குஞ்சை உயிர்ப்பதுபோல்
அன்னையிவள் அருட்பார்வை அனைத்திடரை அணைத்துவிடும்
சங்கடங்கள் விலகிவிடும் சுந்தரியாள் கண்திறந்தால்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [10]
மாமதுரை மீனாக்ஷி, மங்கையரில் அரசியிவள்
பைங்கிளியைக் கரமேந்தும் பச்சைவண்ண மீனாள்
சுந்தரனின் பாதியிவள் தென்பாண்டித் தெய்வமிவள்
மும்மணியில் ஒருமணியாய் முழுவாழ்வு தந்திடுவாள்
மூக்குத்தி ஒளியாலே மூவுலகும் பொலிவு பெறும்
அண்டியவரை ஆதரிக்கும் அங்கயற்கண்ணியிவள்
சொந்தமுடன் பாடிவந்தேன் சுகமெல்லாம் தந்திடம்மா
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [11]
************************************************************
9 பின்னூட்டங்கள்:
வீட்டில் அனைவரும் உரக்கப் படித்து அருள் பெற்றோம், மிக்க மகிழ்ச்சி!
சூலமங்கலம் சகோதிரிகள் பாடும் 'கந்தகுரு' பாடலின் சந்தத்தில் இருக்கிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
தங்களது சொற்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது திரு. ஜீவா.
நன்றி.
இது மிகவும் உயர்ந்ததொரு பாராட்டு கோவியாரே!
நன்றி.
இன்னொரு முத்து. நன்றி!
"முத்து மீனாட்சி" என்று கூட அவளை அழைப்பார்கள்! அந்த வகையில் நீங்க சொல்லியிருப்பதும் சரியே திரு. திவா!
இந்த இடுகையைச் சேமித்து வைத்துக் கொள்கிறேன்!
மதுரைச் சித்திரைத் திருவிழா ஏப்ரல்-ல வரும் போது, அம்மன் அருள் வலைப்பூவில் இட்டு விடலாம்!
அப்படியே, அன்னையின் முழுக் கதையும் மங்களமாய்ச் சொன்ன SKவுக்கு நன்றி!
//தாய்மீனின் கண்பார்வை தம்குஞ்சை உயிர்ப்பதுபோல்
அன்னையிவள் அருட்பார்வை அனைத்திடரை அணைத்துவிடும்//
மீன+அக்ஷி
கயல்+கன்னிக்கு
பாட்டினால் விளக்கம் அருமை!
நன்றி ரவி!
நானே இதையெல்லாம் ஆடியில் அங்கு இடலாம் என நினைத்தேன்!
நீங்களே செய்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்!
தை மாதம் நீங்கள் இட்ட இந்த இடுகையை பங்குனி இறுதியில் வந்து படிக்கிறேன். தற்செயலாக வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டது. :-)
சித்திரைத் திருவிழா தொடங்கும் நேரத்தில் அன்னையின் திருக்கதையை அழகான கவிதை வடிவில் படிக்கக் கிடைத்ததும் பாக்கியமே.
இந்தப் பாடலை 'அம்மன் பாட்டு' வலைப்பதிவிலும் கொடுக்கும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
சித்திரை திருவிழாவிற்கு அம்மன் பாட்டில் இடுகிறேன் என்று சொன்னவர் நேரில் சித்திரை திருவிழா காணச் (?!) சென்றுவிட்டதால் நீங்களே அங்கும் இட்டுவிடுங்கள். :-)
Post a Comment