Sunday, February 10, 2008

"குட்டிராணி!" [காதலர் தின ஸ்பெஷல்!]

"குட்டிராணி !" [காதலர் தின ஸ்பெஷல்!]
மாலை நேரம்!
சூரியன் மறைந்து செவ்வானம் படர்கிறது!


ஆற்றங்கரை மணல்மேட்டில் அமர்ந்தபடி கூடுதேடி பறந்துவந்து மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளைப் பார்க்கிறேன்!
ஆசையுடன் தான் கொண்டுவந்த இரைக்காக குஞ்சுகள் ஆவென வாய்திறக்க, ஒரு தாய்மையின் முழுப்பரிவையும் வெளிக்காட்டி அக்கறையாய் ஊட்டுகின்ற தாய்ப்பறவைகளைக் கவனிக்கிறேன்!
அமைதியாக சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அதுதான் தந்தையாக இருக்க வேண்டும்!

தனக்கென்ன என்பதுபோன்ற ஒரு அலட்சியத்துடன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறது!

காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது!


மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்து ஆடி ஆடி கீழே விழுகிறது!
உதிர்ந்து விழும் முன் அதற்குத் தெரிந்திருக்குமா, தான் எங்கே சென்று விழப்போகிறோம் என?
ஒட்டியிருந்த நினைவுகளெல்லாம் கலைந்து எங்கேயோ செல்கிறோமே என?
இப்படி ஒரு நினைவு தலைதூக்க சட்டென பார்வையை அகற்றி தலையை உயர்த்திப் பார்க்கிறேன்.

வெண்மேகக் கூட்டங்கள் யாரையோ அவசரமாகப் பார்க்கச்செல்வதுபோல் விரைந்து கொண்டிருக்கின்றன!


யாராக இருக்கக் கூடும்?

அல்லது யாருக்காக இவ்வளவு வேகமாகச் செல்கின்றன?

எவர் அனுப்பிய காதல் நினைவுகளைச் சுமந்துகொண்டு இவைகள் செல்கின்றன?


என் நினைவுகளையும் சுமந்து செல்ல ஒரு மேகம் இருக்கிறதா?
என்னுடைய மேகம் எது?
தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவைகளைப் பார்க்கிறேன்!
இருப்பதிலேயே குட்டியாய் இருந்த ஒரு வெண்மேகம் என்னைக் கவனிப்பதைப் போல ஒரு உணர்வு!

ஓ! இதுவா எனக்கான மேகம்!
அதற்கு 'குட்டிராணி' என ஒரு பெயர் சூட்டிச் சிரிக்கிறேன்!
இதென்ன பைத்தியக்காரத்தனம் என ஒரு எண்ணம் வர, அதனை அலட்சியப்படுத்தி ஒதுக்குகிறேன்!
'குட்டிராணி'யைப் பார்த்துச் சொல்கிறேன்!

'இங்கே ஒருவன் இன்பநினைவுகள் இதயத்தில் தாங்கி இன்றுவரை இருக்கிறான்! இனிமேலும் நினைத்திருப்பான்! இனியுன்னைச் சந்திக்கவில்லையெனினும் நினைவுகள் நிறைந்திருக்கும் இவனுள்! நினைவுகள் மட்டுமே சுகம் தரும் இவனுக்கு! அவளை இன்பமாய் எப்போதும் இருக்கச் சொல்!'

'குட்டிராணி' எனக்காக, என் சொல்லைக் கேட்டு, அதை முழுதுமாய் உள்வாங்கிக் கொள்வதுபோல், ஒரு நொடி நிற்கிறது!


நான் ஒன்றும் கனவெதுவும் காணவில்லையே!
கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்கிறேன்!
நம்பினால் நம்புங்கள்! நம்பாவிடிலும் நட்டமில்லை!
எங்கிருந்தோ இன்னொரு குட்டி மேகம் இதனோடு சேர்ந்து இப்போது என் 'குட்டிராணி' சற்றுப் பெரிதாகி இருக்கிறது!

என்னுடைய செய்தி அதனுடன் சேர்ந்துவிட்டது என மனத்தில் ஒரு குதூகலம்!

இன்னும் சற்று உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்!
குட்டிராணி இப்போது சற்று விரைந்து செல்லுவது போலத் தோன்றியது!
ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அது நகர்வதாகப் பட்டது!
குட்டிராணிக்கு முன்னால் ஒரு பெரிய வெண்மேகம்!
அதையே நோக்கி விரைகிறது என் குட்டிராணி!
இதோ! அந்தப் பெரிய மேகத்தைத் தொட்டு..... இதென்ன!

குட்டிராணி அதற்குள் நுழைகிறதே!
பெரிய மேகத்துடன் இப்போது சிறிது சிறிதாகக் கலக்கிறது!
இப்போது அதைக் காணவில்லை!
எனக்குள் லேசாக ஒரு பதற்றம்!


குட்டிராணி தன் இலக்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, சரியான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டது என மட்டும் புரிந்தது!
அந்த பெரிய மேகத்தின் வடிவைப் பர்த்துக் கொண்டிருந்தேன்!

ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி!

மேகம் தன் கடமையைச் செய்ய விரைகிறது எனப் புரிந்தது!
'சீக்கிரமாய் வா! உன் பதிலை எதிர்பார்ப்பேன்' என அதைப் பார்த்துக் கத்தினேன்.
ஒரு இனம்புரியா உணர்வுடன் எழுந்தேன்!

ஒட்டியிருந்த மணல்துகளைத் தட்டிவிட்டு ஆற்றில் கால் நனைக்கச் சென்றேன்!

நிலவு வெளிவரத் தொடங்கியிருந்தது!
********************************************


15 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் Sunday, February 10, 2008 8:22:00 PM  

//ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி! //

ஆஹா.............


காதல் வாழ்க.

VSK Sunday, February 10, 2008 8:38:00 PM  

யானை என்றவுடன் உடனே வந்து ஆசீர்வதித்திருக்கிறீர்களே டீச்சர்!:))
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

இலவசக்கொத்தனார் Sunday, February 10, 2008 8:54:00 PM  

என்னமோ சொல்லறீங்க. ஒண்ணும் புரியலை!! உள்ளேன் ஐயான்னு சொல்லிக்கிறேன்.

VSK Sunday, February 10, 2008 9:43:00 PM  

உமக்கே புரியலியா?
அப்போ இந்தப் பதிவு சுத்தம் தான்!
அடுத்து எழுதத் தொடங்குகிறேன் கொத்ஸ்!
:))

கோவி.கண்ணன் Sunday, February 10, 2008 10:36:00 PM  

//இலவசக்கொத்தனார் said...
என்னமோ சொல்லறீங்க. ஒண்ணும் புரியலை!! உள்ளேன் ஐயான்னு சொல்லிக்கிறேன்.
//

ரிப்பீற்றேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....!

VSK Sunday, February 10, 2008 10:50:00 PM  

கோவியாருக்கும் புரியலைன்னா, இந்தப் பதிவு அம்போதான்!

நாளைக்கு அடுத்த பதிவு போடுர வேண்டியதுதான்!
:))))

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, February 11, 2008 5:54:00 AM  

//ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி! //

ஆஹா.............
காதல் வாழ்க//

எனக்குப் புரிஞ்சிருச்சே!
"காதல் யானை வருகிற ரெமோ"! :-))))))
என்ன டீச்சர்? கரீட்டா?

கோவி.கண்ணன் Monday, February 11, 2008 10:15:00 AM  

//காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது!


மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்து ஆடி ஆடி கீழே விழுகிறது!//

தவறான கற்பனை, காற்றே அடிக்காவிட்டால் தான் இலை ஆடி அல்லது ஆவணியாகி கிழே விழும், வேகமான காற்றுக்கு சடசட என பல இலைகள் விழும் அதுவும் நேராக விழாது அடித்துச் செல்லும்,

VSK Monday, February 11, 2008 10:34:00 AM  

"சற்றுத்தான்" வேகமாக வீசியதாகச் சொல்லியிருக்கிறேன்.
எத்தனை இலைகள் விழவேண்டும் என முடிவு செய்பவர் கோவியார் எனத் தெரியாமல் போயிற்றே!:))
நான் கண்ட காட்சியில் ஒரு இலைதான் விழுந்தது!:))
இதைக் கற்பனையாகக் கண்டு அதைத் தவறெனக் கூறுவதுதான் தவறாகத் தெரிகிறது.:)))

Unknown Tuesday, February 12, 2008 6:26:00 AM  

எத்தனை முறை மேகத்தை பார்க்கிறோம், அது ஒன்றுடன் ஒன்று இணைவதைப் பார்க்கிறோம். எத்தனை முறை காற்றில் மரமசைந்து இலை விழுவதைப் பார்க்கிறோம். ஒரு சிலருக்கே அதை தன் மனத்தாளுக்கு தூது எடுத்துச் செல்ல பயன்படுத்த முடிகிறது.
வாழ்க நீங்களும் உங்கள் நினைவுகளில் நிறைந்திருக்கும் அவளும் - நிறை மனதோடு.

VSK Tuesday, February 12, 2008 8:59:00 PM  

//எனக்குப் புரிஞ்சிருச்சே!
"காதல் யானை வருகிற ரெமோ"! :-))))))
என்ன டீச்சர்? கரீட்டா?//

உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்லையா ரவி!:))))))

மிகவும் ரசித்தேன்.
நன்றி!

VSK Tuesday, February 12, 2008 9:01:00 PM  

//வாழ்க நீங்களும் உங்கள் நினைவுகளில் நிறைந்திருக்கும் அவளும் - நிறை மனதோடு.//

வாழ்த்தோடு க[வி]தையின் உள்ளேயும் சென்று பார்த்த உங்களுக்கு மிக்க நன்றி, திரு. சுல்தான்!!

cheena (சீனா) Tuesday, February 12, 2008 9:26:00 PM  

வழக்கம் போல் கதையின் நடுநடுவே செய்திகள். தாய்ப் பறவை துன்பப்பட்டு உணவு கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும் போது எனக்கென்ன என்று அமர்ந்திருக்கும் தந்தைப் பறவை. .... ம்ம்ம்ம்ம்ம்

குட்டி ராணி மூலம் செய்தி அனுப்பி அது சென்றடைந்ததாக மகிழ்ந்து பதில் வருமென எதிர் பார்த்து ...... காதலர்கள் படும் பாடு ....
அப்பப்பா

VSK Tuesday, February 12, 2008 11:26:00 PM  

//குட்டி ராணி மூலம் செய்தி அனுப்பி அது சென்றடைந்ததாக மகிழ்ந்து பதில் வருமென எதிர் பார்த்து ...... காதலர்கள் படும் பாடு ....
அப்பப்பா//

இதெல்லாம் காளிதாசன் காலத்திலிருந்தே நடக்கிறதாம் சீனா ஐயா!:))

குமரன் (Kumaran) Wednesday, February 13, 2008 9:29:00 AM  

மேக தூதம் படைத்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது எஸ்.கே. :-)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP