Thursday, February 14, 2008

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]
அன்னையென்னும் அரும்பெயர் பெறவே தன்னை இவளும் தந்திருந்தாள்
துணைவன் கொடுத்த பொறியினை எடுத்தொரு பொந்தினில் வைத்துக் காத்திட்டாள்
அல்லும் பகலும் இதனை உயிர்க்க உதிரம் கொடுத்து உதவிட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [1]

பத்துத்திங்கள் தன்னை மறந்து என்னைநினைந்தே வாழ்ந்திருந்தாள்
பத்திரமாய் எனைக் கருவினில் சுமந்து கண்மணி போலே காத்திருந்தாள்
இத்தரையிலுள்ள நல்வரம்யாவும் தனக்கே வந்ததாய் மகிழ்ந்திட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [2]

தன்னுடல் நலனும் பேணாதிருந்து எனக்கெனவே அவள் பொறுத்திருந்தாள்
இன்னுயிராய் எனை எண்ணத்தில் நிறைத்து ஆசைக்கனவுகள் வளர்த்திருந்தாள்
மண்ணில் உள்ள இன்பங்கள் யாவினும் என்னையே பெரிதெனக் கருதிட்டாள் பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [3]

உள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்
உள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்
உள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [4]

முப்பது நாட்கள் முள்ளாய்த் தவித்தாய் இருக்கிறேன் என்றே தானறிய
அடுத்தொரு திங்கள் அகமெலாம் தளர்ந்தாய் உள்ளே நிகழ்ந்த மாற்றத்திலே
மூன்றாம் திங்கள் பூரித்திருந்தாய் என்னை வளர்க்கும் நோக்கத்திலே
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [5]

நாலாம் மாதம் கருவது தெரிய நடையில் சற்று மிடுக்கடைந்தாய்
ஐந்தாம் மாதம் உயிரின் துடிப்பின் ஓசைகேட்டு முகமலர்ந்தாய்
ஆறாம் மதம் அடுத்தவர் காண ஆடையைத் தளர்த்தி அமர்ந்திருந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [6]

ஏழாம் திங்கள் வளைகளை அடுக்கி உடலின் சீரைச் சமன்செய்தாய்
எட்டாம் திங்கள் வயிறும் பெருத்து மூலிகை மருந்தினால் சரிசெய்தாய்
ஒன்பதாம் திங்கள் எல்லாம் ஒடுங்கி என்னைக் கொணரும் வழியறிந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [7]

பத்தாம் திங்கள் என்னைக் கொணர்ந்து படைத்தவள் என்னும் பெயர் பெற்றாய்
உதிரப்பாலை எனக்குக் கொடுத்து காத்தல் என்னும் தொழில் செய்தாய்
என்னில் இருந்த தீயவை அழிக்க எத்தனை வழியில் நீ முயன்றாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [8]

தன்னில் இருந்து என்னை வளர்த்து மண்ணில் இன்று தவழவிட்டாய்
முத்தொழில் செய்து வரமெனக்கருளி என்னை உலகில் வளர்த்துவிட்டாய்
எத்தனை நன்றி சொன்னாலும் அது அன்னை பெருமைக்கு ஈடாமோ
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [9]

வெள்ளியில் அன்னையைப் போற்றிப்பாடுதல் உள்ளவர்கெல்லாம் நலமாகும்
கச்சிப்பதியில் காமாட்சி மாநகர் மதுரையில் மீனாட்சி காசியில் வாழும் விசாலாட்சி
இவரைப் பணியும் வெள்ளித்தையில் எம் அன்னையை இங்கே போற்றிப்பாட
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [10]

இதுவரை யாரும் சொல்லாக் கருத்தினை இங்கே யானும் சொல்லவில்லை
புதிதாய்ப் பிறந்த ஒவ்வொருபேர்க்கும் அன்னையிவளே முதல் தெய்வம்
கருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [11]
********************************************************************************

தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன!!

10 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Thursday, February 14, 2008 9:34:00 PM  

//தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன!! //

பாராட்டுக்கள்.

அடுத்த தை வரை இது போதும் !

VSK Thursday, February 14, 2008 9:48:00 PM  

அதே அதே கோவியாரே!
இனி அடுத்த தை வரை மன்னாரும், அருணையார் மட்டுமே!!

என் எல்லா நகர்வுகளும் உமக்குத் தெரிவது அதிசயமில்லை!
:))))))0

தி. ரா. ச.(T.R.C.) Friday, February 15, 2008 11:12:00 AM  

கருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [11]
உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

திவாண்ணா Saturday, February 16, 2008 4:13:00 AM  

//தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன!! //
அடுத்து என்ன க தை தானே?

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, February 17, 2008 1:58:00 AM  

அந்த முதல் படம் பட்டைய கெளப்புது SK!

//உள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்
உள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்
உள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்//

கருவறை தரிசனம் இது தானோ?
அருமையிலும் அருமை!
"கருவறை" என்று கடவுள், தன் வீட்டுக்கே இந்தப் பெயரைத் தான் வைத்துக் கொள்கிறான் போல!

VSK Sunday, February 17, 2008 10:40:00 AM  

தை வெள்ளிப் பதிவுகள் அனைத்தையும் படித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா!

VSK Sunday, February 17, 2008 10:50:00 AM  

க தை ல்லாம் கொஞ்ச காலம் கழிச்சு!
இப்ப, மன்னார் ஒவ்வொரு வாரமும் வரச் சொல்லியிருக்கான்.

அப்படியே அருணையாரையும் பார்த்துவரலாம் என்றிருக்கிறேன்.

இடையில் ஒரு சில மருத்துவப் பதிவுகள் கசடறவில் வரும்!

முருகனருள் முன்னிற்கும்!

VSK Sunday, February 17, 2008 10:54:00 AM  

//"கருவறை" என்று கடவுள், தன் வீட்டுக்கே இந்தப் பெயரைத் தான் வைத்துக் கொள்கிறான் போல!//

இப்படி எல்லாம் அருமையாக எழுதி மக்கள் மனதில் இடம் பிடிக்க உங்களால் மட்டுமே முடியும் ரவி!

நன்றி.

Subbiah Veerappan Sunday, February 17, 2008 4:37:00 PM  

உள்ளேன் அய்யா!

தாமதமாக வந்ததனால் - அதுவும் பாட்டு வகுப்பு முடிந்து வந்ததனால் நானே பெஞ்சின் மீது ஏறி நின்று கொண்டு விட்டேன். :-((((((

VSK Sunday, February 17, 2008 7:08:00 PM  

நீங்களெல்லாம் நல்லப் படிக்கறவங்க ஆசானே!
உயரத்தில் இருப்பதும் சரியே!

ஒரு சில ஆசிரியர்கள் அப்படிச் செய்வதையும் பார்த்திருக்கிறேன்!
;))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP