Tuesday, June 13, 2006

"விடைகொடு விடலைப் பருவமே"

நாமும்தான் முயன்று பார்ப்போமே என
தேன்கூட்டுப் போட்டியினின் தலைப்பதனை
ஒட்டியே ஒரு கவிதை புனைந்திங்கு
நானும்தான் வரைந்துள்ளேன்!
உள்ளன்பு கொண்டோரே!
ஒருவார்த்தை செப்பிடுவீர்!"விடைகொடு விடலைப் பருவமே"


"விடைகொடு விடலைப் பருவமே"
அல்லது,
"விட்டுப் போகிறேன் விடலைப் பருவமே"
எனச் சொன்ன நாளை எண்ணி
காலச்சுவட்டில் தேடிப் பார்க்கிறேன்!

அரும்பாமல் அரும்பி நின்ற
மிருதுவான பூனை மீசையை
திரும்பத் திரும்ப சவரம் செய்து
முறுக்காக முளைத்த நாளா?

பாடம் படிக்கும் சாக்கில்
மாடிப்படியடியில் அவளறியாமல்
பதுங்கிச் சென்று ஒளிந்து நின்று
பார்ப்பதை மறந்த நாளா?

வீட்டிற்கு வந்தவுடன்
வயிற்றுக்கு என்னவென்று
விரட்டலாக தாயை வெருட்டி
வருத்தியதை நிறுத்திய நாளா?

மாலைஎனும் நேரமே மனமகிழத்தான் என்று
நாளையெலாம் வீணாகக் கழித்து நின்ற பொல்லாத
வேளையினைத் தள்ளிவிட்டு நேரத்தில் வீடுவந்து
காலலம்பி நீறணிந்து திகைக்க வைத்த நாளா?

காசுபணம் பிடுங்கவென்றே படைத்தது போல் எண்ணி
பாசமுடன் ஒருநாளும் பார்க்காமல் புறக்கணித்த
ஆசையான தந்தையிடம் அருகிலே சென்றமர்ந்து
மாசச்சம்பளத்தை பெருமையுடன் அளித்த நாளா?

எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!

தலை உயர்த்திப் பார்த்தபோது,
கனிவுடன் எனை நோக்கி
'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்
பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!

42 பின்னூட்டங்கள்:

செல்வன் Tuesday, June 13, 2006 8:23:00 PM  

வளர்சிதை மாற்றம் எனும் போட்டிக்கு எழுதிய படைப்பா?அப்படி என்றால் அதை பதிவில் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்.

கவிதை அருமை.தமிழும் அருமை.மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.

பொன்ஸ்~~Poorna Tuesday, June 13, 2006 8:32:00 PM  

எஸ்கே,
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..

நான் கூட போட்டில கலந்துக்கலாம்னு இருந்தேன்.. இதை, உஷாவோடதை எல்லாம் பார்த்தா.. ம்ஹும்.. அடுத்த தலைப்பு எப்படியும் நீங்க யாராவது தான் சொல்லப் போறீங்க.. அப்போ பார்க்கலாம் :)

Sivabalan Tuesday, June 13, 2006 8:43:00 PM  

மிக அருமை.

மகிழ்ச்சியான பதிவு.

நன்றி.

SK Tuesday, June 13, 2006 8:45:00 PM  

செல்வன்,
தலைப்பைப் பார்த்ததும் தோணினதை எழுதினேன். நல்லா இருக்குன்னு சொல்றீங்க!

தேன்கூட்டில போட்டுட்டேன்னு நினைக்கிறேன்.
மறக்காம ஓட்டும் போடுங்க!!

உங்களுக்கும்தான் பொன்ஸ்!
நீங்க பாராட்டினது ரொம்ப மகிழ்வா இருக்கு!

SK Tuesday, June 13, 2006 8:47:00 PM  

மிக்க மகிழ்ச்சி, சிவபாலன்!
எப்பவும் வந்து பாராட்டுவதைப் பார்க்கையில் மனநிறைவாய் இருக்கிறது!
நன்றி!!

கோவி.கண்ணன் Tuesday, June 13, 2006 9:40:00 PM  

விடைகொடு விடலை பருவமே !

காலையில் குளிக்கும் போது பார்த்த
கால்களில் புதிதாக முளைத்த மயிரை
கண்களுக்குள் காட்டிக் கொடுத்து
கண்டுகொண்டு திடுக்கிட வைத்த நாளா ?

நெருங்கி பேசும் தோழிகளும், அருகில்
மருண்டு விழித்து தயங்கி நிற்க,
காரணம் தேடி கடைசியில் உணர்ந்து
கால்சட்டைக்கு விடை கொடுத்த நாளா ?

ஏதே ஏதோ கனவுகளால் தடைப்பட்ட
போதாத தூக்கத்தால். சூடு அதிகமாகி
சேதமாக முகத்தில் தென்பட்ட பருக்களை
கண்ணாடி காட்டிக் கொடுத்த நாளா ?

அப்பாவின் பைக்கை எடுத்து ஒரு
அரைவட்டம் அடித்து வந்து,
காலரை தூக்கி விட்டு, அப்பாவிடம்
கைத் தட்டல் வாங்கிய நாளே !

SK Tuesday, June 13, 2006 9:48:00 PM  

கோவி,
நீங்கள் எழுதியது அற்புதமாக இருந்தாலும், இதில் குறிப்பிட்ட நிகழ்வுகள் எல்லாம் விடலைப்பருவ துவக்கத்தில் நிகழ்வது அல்லவோ!

உங்கள் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்!

நீங்களும் தேன்கூடு போட்டியில் கலந்து கொள்ளலாமே!

கோவி.கண்ணன் Wednesday, June 14, 2006 12:28:00 AM  

//உங்கள் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்!

நீங்களும் தேன்கூடு போட்டியில் கலந்து கொள்ளலாமே! //

வளர் சிதை மாற்றம்

கால்வலிக்க மிதித்து வெறுத்துப் போகும்முன்பே,
கனிவுடன் கேட்கும்முன்பே, சைக்கிளுக்கு மாற்றாக,
கண்முன் புதுபைக்கை நிறுத்திய தந்தையை,
கட்டிக்கொண்டு காலில்விழுந்து மகிழ்ந்த நாளா ?

கல்லூரியில் கால் பதித்ததும், புதுநட்புடன்
கனவுலகில் மிதந்தபடி, கனநேர இன்பமென
கான்டின் பக்கத்து மறைவில் காற்றுடன்
கலந்த புகையை கனைப்புடன் விட்டநாளோ ?

வீடன்றி வேறறியேனை, தூரத்து சொந்தம் தம்
வீட்டிற்கு அழைக்க, போவென்று சொல்லிவைக்க,
தயங்கியே முதன்முதலில், தந்தைக்கு சொல்லிவிட்டு
தனியாக பேருந்தில் பயணித்த நாளா ?

நட்ட நடுஇரவில் நண்பர் புடைசூழ
கொட்டம் அடித்து, முதன்முதாலாய் இரண்டாம்
ஆட்டம் பார்த்துவிட்டு, சுவரேறி குதித்து
மொட்டை மாடியில் படுத்துறங்கிய நாளா ?

புத்தகத்தில் மயிலிறகு இல்லை இல்லை,
புத்தகத்துள் புத்தகம் மறைத்து வைத்து
பக்கத்தில் எவரும் இல்லையென பார்த்து,
பருவகாலம் அறிந்த கொண்ட நாளா ?

கிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,
வளர்ந்துவிட்ட தன்மகனை ஒருநாள் கைநீட்டியதற்கு,
தளர்ந்துவிட்ட தந்தை மனம்நொந்த வேளையில்
உளர்ந்துவிட்டது அந்நாளிளெம் விடலைப் பருவம்

வவ்வால் Wednesday, June 14, 2006 6:17:00 AM  

அய்யா எஸ்.கே!

இந்த கலக்கு கலக்கினா நாங்க எல்லாம் என்னபண்றது :-))

வெற்றிப்பெற வாழ்த்துகள்!

SK Wednesday, June 14, 2006 7:02:00 AM  

மாற்றத்தை மி அழகான சொற்கட்டில் அமைத்து, வார்த்தைச் சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள்.

நீங்கள் இன்னும் போட்டியில் கலந்து கொள்ளவில்லைதானே!!

:))

SK Wednesday, June 14, 2006 7:05:00 AM  

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க!உங்க பொருள் செறிந்த காதல் கவிதையைப் பார்த்தவுடன் தான் எழுதணும்னே தோணிச்சு! ரொம்ப நன்றி! உங்களுக்கும் என் வாழ்த்துகள்!

தி. ரா. ச.(T.R.C.) Wednesday, June 14, 2006 12:01:00 PM  

பெரியவர்களும் சேர்த்துகொள்ளாமல் சிறியவர்களுடன் சேரவிருப்பமில்லாமல் இருந்த பருவமே விடலைப்பருவம். தி ரா ச

SK Wednesday, June 14, 2006 12:38:00 PM  

சரியாகச் சொன்னீர்கள், ஐயா!

அதைத்தாண்டி வந்த நேரத்தைதான் காட்ட முயற்சித்திருக்கிறேன்.
நன்றி.

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 12:56:00 PM  

நன்றாக இருக்கிறது எஸ்.கே!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

(கலாய்க்காம உமக்கு நான் போடும் பின்னூட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :) )

SK Wednesday, June 14, 2006 1:21:00 PM  

உம்மிடமிருந்து இதற்கு ஒரு கருத்துமே வரவில்லையே என நினைத்தபோது, இப்படி ஒரு வாழ்த்துப்பதிவு!

நன்றி!

//(கலாய்க்காம உமக்கு நான் போடும் பின்னூட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :) )//

அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!

ம்ம்ம்ஹூம்.... எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு நேரடிப்பதிவு உம்மிடமிருந்து வருமென்று!!!

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 1:30:00 PM  

//ம்ம்ம்ஹூம்.... எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு நேரடிப்பதிவு உம்மிடமிருந்து வருமென்று!!!
//

அதென்னங்க எஸ்.கே நேரடிப் பதிவு?
கொஞ்சம் வெளக்கவும்.

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 1:32:00 PM  

//அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!
//

பேசமா அடைப்புக் குறிக்குள்ள இருந்ததை தனிப் பின்னூட்டமா போட்டிருக்கலாம்.

உங்களுக்குன்னு நான் வந்து வாய்ச்சேன்! நான் என்ன செய்ய!
:(

ஜயராமன் Wednesday, June 14, 2006 1:32:00 PM  

அழகான கவிதை.

மனதை உருக்கும் நெகிழ்வான காட்சி கருத்துக்கள்.

விவரம் புரியாத விடலைப்பருவத்தில் தன் சுகமே தன்னை மயக்கி உறவுகளின் உன்னதத்தை உரிமையாக உதாசீனம் செய்து வாழ்க்கையில் கவலை இன்றி பறந்த நாட்கள்.

தங்கள் கவிதையில் மனம் மகிழ்ந்தேன்

நன்றி

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 1:34:00 PM  

//அதான் கடைசி வரியில் கலாய்த்தாச்சே!
//

நமக்கும் உமக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் எஸ்.கே!

ந/உ அல்ல.

நான் கலாய்க்கிறேன். நீர் அங்கலாய்க்கிறீர். கீழே உள்ளது போல்!

//ம்ம்ம்ஹூம்.... எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு நேரடிப்பதிவு உம்மிடமிருந்து வருமென்று!!!
//

SK Wednesday, June 14, 2006 2:47:00 PM  

கலாய்ப்புக் கலப்பு இல்லாத பதிவு, நேரடிப் பதிவு!

இங்கும் 'அடி' என்றால் 'வரி' என்றே பொருள்~!~

[உ-ம்]: விளக்கவும்== நேரடிப்பதிவு, தெரிந்து கொள்ளும் ஆர்வம்
வெளக்கவும் == கலாய்ப்பு! நக்கல்.

பரீட்சைக்குப் போற நெரத்துல கூட கலாய்க்கிறீங்க பாருங்க, இதுதான் 'பின்னூக்கி'!!!

உங்களுக்கா புரியாது, சிபி!??

SK Wednesday, June 14, 2006 2:49:00 PM  

பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. ஜயராமன்.

இந்த நாள் அன்றுபோல் இல்லையே, அது ஏன் நண்பனே!!

SK Wednesday, June 14, 2006 2:55:00 PM  

அது அங்கலாய்ப்பு அல்ல!
தீர்ந்த முடிவு!

எப்படியோ ஒருவருக்கொருவர் இப்படி வாய்த்து விட்டோம்!
இனிதே செல்வோம்!!

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 2:56:00 PM  

//கலாய்ப்புக் கலப்பு இல்லாத பதிவு, நேரடிப் பதிவு!


[உ-ம்]: விளக்கவும்== நேரடிப்பதிவு, தெரிந்து கொள்ளும் ஆர்வம்
வெளக்கவும் == கலாய்ப்பு! நக்கல்.

பரீட்சைக்குப் போற நெரத்துல கூட கலாய்க்கிறீங்க பாருங்க, இதுதான் 'பின்னூக்கி'!!!

உங்களுக்கா புரியாது, சிபி!??

//

நல்ல விளக்கம்! இப்போது தெளிவாக புரிகிறது!

//இங்கும் 'அடி' என்றால் 'வரி' என்றே பொருள்~!~
//

அங்க வந்து படிச்சிட்டீரா!
அப்படியே சந்தோஷ் பேன் பதிவுல உங்ககிட்டயெல்லாம் ஏதோ விசாரிக்கணுமாம்.

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 3:00:00 PM  

//எப்படியோ ஒருவருக்கொருவர் இப்படி வாய்த்து விட்டோம்!
இனிதே செல்வோம்!! //

இனிதே என்பதற்கு இப்படியே என்று பொருளுண்டா?

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 3:24:00 PM  

இதை விடவும் நேரடிப் பதிவுநான் எப்படித்தாங்க போடுறது?

SK Wednesday, June 14, 2006 3:47:00 PM  

இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியவில்லை, சிபி!?!!!

ஆமாம், உங்க ப்ரொபேஷன் சமாச்சாரம் என்ன ஆச்சு?

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 3:53:00 PM  

//இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியவில்லை, சிபி!?!!!//

உடம்பு வளர்ந்துகிட்டே போனா அதிகமாத்தான் தெரியும்.


//ஆமாம், உங்க ப்ரொபேஷன் சமாச்சாரம் என்ன ஆச்சு?//

ப்ரொபேஷன்ல் போட்டவரைத்தான் ஆளையே காணோமே!
ப்ரொபேஷன்லயே விட்டுட்டு பொயிட்டார், சென்று வருகிறேன்னு சிம்பிளா ஒரு பதிவு போட்டுட்டு!

நாமக்கல் சிபி Wednesday, June 14, 2006 4:55:00 PM  

சரிங்க எஸ்.கே! இதையாவது
நேரடிப் பதிவாக ஏற்றுக் கொள்வீரா?

SK Wednesday, June 14, 2006 5:19:00 PM  

இது....இது...இது சொல்லுங்க!
ஒத்துக்கறேன்!
இது நேரடிப் பதிவு!
இதை வெளியே கொண்டுவர,
எத்தனை 'கலாய்ப்புகளைச்' சந்திக்க வேண்டியிருந்தது!!

இருப்பினும் மகிழ்ச்சியே1

மிக நன்று!
மிக நன்று!

SK Wednesday, June 14, 2006 5:24:00 PM  

உள்ளுக்குள்ளே இவ்வளவு வைத்துக்கொண்டு,
சும்மாவேனும்,
கலாய்ப்பிலேயே காலம் தள்ள நினைக்கும்
உங்களைப் பார்த்தால்[!!!]
பொறாமையாய் இருக்கிறது!!!

manu Wednesday, June 14, 2006 8:57:00 PM  

எஸ்.கே.
எல்லோருக்கும் நிகழும் மாற்றங்கள். இவ்வளவு அருமையாகப் பதிவு செய்ததை பார்ப்பது இதுதான் முதல் அனுபவம்.மிகவும் மனதைத் தொடும் வகையில் இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

Ram.K Wednesday, June 14, 2006 9:00:00 PM  

எஸ்கே,

அருமையாக கவிதை வந்துள்ளது.

என் வாழ்த்துக்கள்.

SK Wednesday, June 14, 2006 11:46:00 PM  

உங்களது பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, 'பச்சோந்தி'!

என் பெற்றோரையும் சேர்த்து வாழ்த்தியிருப்பது மனநிறைவைத் தருகிறது, 'மனோ'.
மனமார்ந்த நன்றி!

வெற்றி Thursday, June 15, 2006 12:20:00 AM  

SK அய்யா,
உங்களின் கவிதையை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே எனக்குத் தெரியாது. மிகவும் அருமை. எளிய தமிழ்நடை. படிக்கும் போது படிப்பவர்களின் உணர்வலைகளைத் தூண்டி பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் கவிதை.
உங்கள் தமிழுக்கு நான் பரம இரசிகன்.

நன்றி

அன்புடன்
வெற்றி

SK Thursday, June 15, 2006 12:37:00 AM  

உண்மையில் சொல்லப்போனால், உங்களிடமிருந்து ஏன் இன்னும் பின்னூக்கம் வரவில்லை எனக் காத்திருந்தேன்!

வந்தது!

வளம் தந்தது!

மட்டற்ற மகிழ்ச்சி!

நன்றி!

மனதின் ஓசை Thursday, June 15, 2006 6:39:00 AM  

எளிய நடை.. அழகாக இருக்கிறது...

//பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!

தலை உயர்த்திப் பார்த்தபோது,
கனிவுடன் எனை நோக்கி
'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்
பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!//

இது மட்டும் கொஞ்ஜம் இடிப்பது போல் எனக்கு தோன்றுகிறது...

வெற்றி பெற வாழ்துக்கள்

SK Thursday, June 15, 2006 7:19:00 AM  

மாற்றம் என்பது தானாகவும் நிகழலாம்;
பிறர் மூலமாகவும் உணர்த்தப்பட்டு நிகழலாம்.

பெற்றதாயிடமிருந்து கிடைத்த அங்கீகாரத்தில், விடலைப் பருவம் விடை பெற்றது என சொல்ல விழைந்தேன்.
கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

Suka Thursday, June 15, 2006 9:09:00 PM  

எஸ்கே..

முருமன் படம் ப்ரொஃபைல் ல இருக்கும்போது ஆறு விளையாட்டு பிடிக்காம போகுமா..

http://sukas.blogspot.com/2006/06/blog-post_15.html

இந்த விளையாட்டுக்கு வாங்க.. நான் தான் அநியாயத்துக்கு சுருக்கி எழுதீட்டேன்.. நீங்களாவது நல்லா எழுதுங்க..

tamilatamila Thursday, June 22, 2006 1:09:00 AM  

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.தமிழும் அருமை..
நிகழ்வுகள்களை இன்னும் அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கலாம்!! .வெற்றிப்பெற வாழ்த்துகள்.

யாத்திரீகன் Thursday, June 22, 2006 2:45:00 AM  

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

paarvai Friday, June 23, 2006 7:51:00 PM  

"காசுபணம் பிடுங்கவென்றே படைத்தது போல் எண்ணி
பாசமுடன் ஒருநாளும் பார்க்காமல் புறக்கணித்த
ஆசையான தந்தையிடம் அருகிலே சென்றமர்ந்து
மாசச்சம்பளத்தை பெருமையுடன் அளித்த நாளா?"

இளமைக் காலத்தில் அப்பாக்கள் எல்லோருக்கும்; வில்லன்கள் தான்; அழகாகச் சொல்லியுள்ளீர்கள்;அந்த வயது வரும் போது அவர்கள் அருமையும் புரிவதென்பது, உண்மையே!என் முதல் சம்பளம்" அப்பா;அம்மா" கொடுக்கச்சொன்னது. அக்காவிடம் அவர் சொன்னது; சாமிப்படத்தின் முன்; மறக்க முடியவில்லை. உங்கள் காதல் என்ன?,, பலர் காதல் அப்பிறிக்கேசனும் ; அம்மாவிடம் தான்; என் வாழ்வில் ;எதுவுமே! அப்பிடி இல்லை.
கவிதையும்; சுவை படக் கூறும் ஆற்றலும் இயல்பாக வருகிறது.
யோகன் பாரிஸ்

SK Friday, June 23, 2006 10:04:00 PM  

என் பதிவைப் பாராட்டும் வேளையில், அப்படியே உங்கள் அனுபவத்தையும், கலைத்திறனோடு தமிழில் வடித்த உங்களிடமிருந்து நிறைய அனுபவச் சிதறல்களை தர வேண்டும் என வேண்டுகிறேன்.
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி, திரு. யோகன் - பாரிஸ்!
அப்படியே மறக்காமல் ஓட்டும் போட்டு விடுங்கள்!!
[இது பொன்ஸிடமிருந்து கற்றது!!]

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP