" முருகனருள் முன்னிற்கும் -- 1"
" முருகனருள் முன்னிற்கும் -- 1"
வலைப்பூ நண்பர்களே!
இந்தத் தலைப்பில் எவ்வாறு என் அன்பு முருகன் என்னோடு எப்போதும் என் வாழ்க்கையில் "கூடி இருந்து குளிர்வித்தான்" என்பதனைச் சொல்லலாம் என இருக்கிறேன்.
சிறியது, பெரியது என்னும் வேறுபாடெல்லாம் அவனுக்குக் கிடையாது, அதெல்லாம் நமக்குத்தான் என்பதனை உறுதி செய்யும் நிகழ்வுகள் இவை.
இன்று காலை நடந்த நிகழ்வு ஒன்றே, இதற்கு வித்திட்டது.
இந்தப் பதிவுகளில், உரைநடை, கவிதை இருவகையிலும் கலந்து சொல்லலாம் எனவும் எண்ணியிருக்கிறேன்.
படிப்பதோடு, இதுபோன்ற உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால், மிகவும் மகிழ்வேன்.
இனி, மேற்கொண்டு பீடிகை எதுவும் போடாமல் நிகழ்வுகளுக்குச் செல்வோமா?
_____________________________________________________________________________________
நேற்று வேலைக்கு வழக்கம் போலச் சென்றேன்.
போனவுடன் ஒரு மருத்துவக்குழு கூட்டம் இருந்ததால், அன்றைய 'நாட்பணிகளை' [appointments] கவனிக்க மறந்து போனேன்.
10 மணி அளவில், எனது அறைக்கு வந்தவுடன், செயலர் நினைவு படுத்தினார், இன்று என்னுடன் பணி புரிவோருடன் 11 மணிக்கு வெளியில் மதிய உணவு அருந்த செல்லவேண்டியிருக்கிறது என்று!
அவசர அவசரமாக பாக்கெட்டைத் தடவினால், 'வாலெட்டை' மறந்து வைத்து விட்டு வந்தது தெரிந்தது.
சக மருத்துவர் ஒருவரிடம் ஒரு 20 டாலர் கடன் வாங்கிகொன்டு எப்படியோ மானத்தைக் காப்பாற்றிக் கொண்டேன்!
மறுநாள் திருப்பித் தருகிறேன் என்று வேறு வாகளித்திருந்தேன் அந்த நண்பரிடம்!
திரும்பி வந்து, தற்செயலாக, கணினியில் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது ஒரு உன்மை முகத்தில் அடித்தாற்போல் தெரியவந்தது, கணக்கில் 35 டாலர்களே இருக்கிறது என்பது!
இவ்வளவு குறைவான நிலையில் என் கணக்கு இருந்ததில்லையே எனக் குழம்பினேன்.
அப்போதுதான் நினைவுக்கு வந்தது, எனது இரு மகளகளும் அவசரத்தேவையெனக் கேட்டுக் கொண்டதால், இரு பெருந்தொகைகளை சில தினங்களுக்கு முன் மாற்றியிருக்கிறேன் என்பது!
சரி, எப்படியாவது, அதிலிருந்து ஒரு 20 டாலரை மட்டும் எடுத்து நண்பருக்குக் கொடுத்துவிடலாம் எனத் தேறுதல் செய்து கொண்டேன்.
இன்று காலை, கிளம்பும் போது, என் மகன் 'அப்பா, ஒரு 20 டாலர் 'gas money'[இதற்கு தமிழ்ச் சொல் என்ன?! குமரன், ஜி.ரா., பொன்ஸ் ப்ளீஸ்]] வேண்டும் என்று கேட்டு வைத்தான்.
இருக்கிற 20 டாலரை அவனுக்குக் கொடுப்பதா, இல்லை வாக்களித்தபடி நண்பருக்குக் கொடுப்பதா என ஒரு போராடம்!
சரி, இரு வருகிறேன், நான் ஏ.டி.எம் மெஷினுக்குச் சென்று வந்து தருகிறேன்' எனச் சொல்லிவிட்டு, வழக்கம் போல, 'முருகா! காப்பாத்து!' என ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு, வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தானியங்கிப் பொறி [ATM machine]-க்கு என் வண்டியை எடுத்துச் சென்றேன்.
அந்த சந்தில் திரும்பும் போது, ஒரு வயதான [சுமார் 80 இருக்கும்] ஒரு மூதாட்டி ஒரு வாக்கரைத் [Walker] தள்ளியபடி குறுக்கே கடந்தார்.
அவருக்காக நான் ஒரு முழுமையான நிறுத்தம் செய்த போது, திரும்பி என்னைப் பார்த்து கனிவுடன் சிரித்து, 'மே காட் ப்லெஸ் யூ' எனச் சொல்லிச் சென்றார்.
மனதுக்கு இதமாக இருந்தது.
வங்கி அட்டையை உள்ளே தள்ளி ஒரு 20 டாலரை வெளியில் எடுத்தேன்.
கூடவே அதற்கான ரசீதையும் கக்கியது மெஷின்.
சரி, மீதி 15 டாலர்தானே இருக்கப் போகிறது என்ற அவநம்பிக்கையுடன் பார்த்த எனக்கு மயக்கம் போடாத குறை!
மீதி இருப்பு நாலாயிரத்துச் சொச்சம் எனக் காட்டிச் சிரித்தது அந்த ரசீது!
எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும், என் சம்பளம் 30-ம் தேதி தானே பதியும், என் மனைவியின் சம்பளமும் 25-ம் தேதிதானே என மண்டையைக் குடைந்து கொண்டிருந்தபோது, சட்டென்று நினைவுக்கு வந்தது!
இன்று தேதி 23, வெள்ளிக்கிழமை.
நாளையும், அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாட்கள் என்பதால், என் மனைவின் சம்பளம் நேற்று இரவே, 22-ம் தேதி அன்றே பதிந்திருக்கிறது!
பிறகென்ன!
மறுபடியும் அட்டையை நுழைத்து, தெம்பாக ஒரு 200 டாலரை வெளியிலெடுத்து, வீட்டிற்கு வந்து, மகிழ்வுடன் மகனுக்கும் பணத்தைக் கொடுத்து, நண்பரின் கடனையும் திருப்பிக் கொடுத்து,.....
எல்லாம் இனிதே முடிந்தது!
அந்த மூதாட்டி.....!?
அவரது கனிவான ஆசிச் சொற்கள்!?
வேறு யார்?!
என் அப்பன் முருகன் தான் !
"ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாளகணம் புகழ் வேலவனே !"
[கந்தர் அநுபூதி; பாடல் 38]
'கூதாள மலரை அணிந்தோனே!
வேடர்குல வள்ளியின் தலைவனே!
பேய்களும் துதிக்கின்ற வேலவனே!
வீண் பேச்சுக்ளைப் பேசுபவனும்,
நன்மைஒன்றும் அறியாதவனும்,
தீயவனும் ஆகிய அடியேனையும்
ஒரு பொருட்டாக எண்ணி நீ என்னை
ஆட்கொண்ட விதத்தை எப்படி உரைப்பேன்!'
*************************************************************************************
105 பின்னூட்டங்கள்:
:-)
எஸ்.கே. இப்படி சொல்லத் தொடங்கினால் நிறைய சொல்லலாமே. எங்கெங்கும் இறைவனைக் காணுவதற்கும் அவன் நினைவிலேயே எப்போதும் இருப்பதற்கும் அவன் அருள் வேண்டும். முருகன் அருள் முன்னிற்கிறது எல்லா இடத்திலும்.
என்னுடைய 'முருகன் அருள் முன்னிற்கும்' பதிவைப் படித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் சொல்லுங்கள்; சுட்டியைத் தருகிறேன்.
முதல் பதிவே குமரனா!
தன்யன் ஆனேன்!
நீங்கள் சொல்வது சரிதான்!
ஏதோ சொல்ல வேண்டும் போலத் தோன்றியது!
எப்படி நமக்கு அந்த வேளையில் மலையாகவும், பிறகு அற்பமாகவும் தெரியும் செயல்களை அவன் அப்படி பிரித்துப் பார்ப்பதில்லை என்பதே இதன் நோக்கம்.
சரியில்லையெனில் சொல்லுங்கள்!
நிறுத்திவிடுகிறேன்.
உங்கள் பதிவைப் படிக்கவில்லை!
ஒருவேளை படித்திருந்தால் எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ!
அது சரி, உங்களை ஒரு கேள்வி கேட்டிருந்தேனே, பார்த்தீர்களா?
நல்லதொரு நம்பிக்கைத் தொடராக இருக்குமென நம்புகின்றேன். தொடருங்கள்எஸ்கே.
நன்றி!
எஸ்.கே., இது போல பல சம்பவங்கள் எனக்கு நடந்து உள்ளது.
அதை எல்லாம் பல பதிவாக போடலாம்.
இறைவன் மிக வலியவன். அவன் சோதித்து பாப்பான் ஆனால் கைவிட மாட்டான். இது என் அனுபவத்தில் உணர்ந்தது.
அன்பே சிவம் (முருகன்).
காக்க காக்க கனக வேல் காக்க.
முருகன் அருள் என்றும் முன்னிற்கும். உணர்வதும் உரைப்பதும் அவனருளாலே நடக்கும்.
ஊக்கத்திற்கும், ஆக்கத்திற்கும் மிக்க நன்றி, மலைநாடான் அவர்களே!
அதைத்தான் நானும் வேண்டியிருந்தேன், நாகை சிவா.
தனிப்பதிவோ அல்லது இதிலேயோ சொல்லுங்களேன், உங்கள் அனுபவங்களையும்!
நன்றி.
'மனசு' என்னும் கோயிலில் இருப்பவனை மறக்க முடியுமா?!
மிக்க நன்றி, மனசு அவர்களே!
gas money - எரிபொருள் காசு??
முருகனுக்கு இந்த வாரம் ரொம்ப ஓவர் டைமாயிருக்கும்னு நினைக்கிறேன்.. ஜி.ரா, நீங்க,,... ம்ம்ம்..
உண்மையில்லையா பின்னே?
இவ்வளவு நடந்திருந்தும் எங்களோடு பகிர்ந்து கொள்ள உங்கள் கையையும், தேவையான ஓய்வையும் கொடுத்திருக்கிறானே உங்களுக்கு!
சீக்கிரம் குணமாக மீண்டும் வேண்டிக்கொள்கிறேன், ஜி.ரா.
அவனுக்கு எங்கே ஓவர் டைம்?!
எல்லாம் ஒரே டைம்தான்!
நமக்குதான் சற்று அதிகமாக நினைக்க வாய்ப்பு தருகிறான்!
இப்போ எரிபொருள் விக்கற விலையில, காசெல்லாம் போதாது!
நோட்டு நோட்டாத்தான் வெட்டணும்!
[ஆனாலும், என் மகன் அறைகுறைத் தமிழில் பேச முற்படும் போது, 'அப்பா, காசு வேணும்' என்றுதான் எப்போதும் சொல்லுவான்!!]
:))
இருப்பினும் நல்ல தமிழாக்கம் என்ற முறையிலும், நீங்கள் ஏற்கெனவே 'வெற்றி'யைக் குறித்து சொன்ன ஒரு சொல்லாலும் மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்!!
மிக்க நன்றி, பொன்ஸ்!
'கேஸ்' [Gas]என்பது போல் ஒரே சொல்லில் வராமல் வினைத்தொகையாகத்தன் சொல்ல முடிகிறது, இல்லை?
பிற்சேர்க்கை என்பதாலோ?
//'கேஸ்' [Gas]என்பது போல் ஒரே சொல்லில் வராமல் வினைத்தொகையாகத்தன் சொல்ல முடிகிறது, இல்லை?
பிற்சேர்க்கை என்பதாலோ? //
gas என்பது உண்மையில் வாயு அல்லது காற்று என்பதன் ஆங்கிலப் பதமே அல்லவா? பல காலமாகப் பயன்படுத்தியதால், இதுவும் ஒரு மாதிரி ஆகுபெயராகி, gas fuel வெறும் gas என்று அறியப் படுகிறது..
தமிழில் இன்னும் இவ்வாறு புழங்கத் தொடங்கவில்லை. எனவே தான் ழுழுப் பெயராக, எரிபொருள் என்று சொல்ல வேண்டியுள்ளது. இன்னும், வாகன எரிவாயு என்றும் சொல்லலாமோ? சமைக்கும் எரிவாயு வேறு உள்ளதால், இப்படியும் சுட்ட வேண்டுமே.
money-யைப் பணம் என்றும் தமிழ்ப்படுத்தலாம்.. அது தான் இன்னும் பொருளுடையதாய் இருக்கும்.. எனினும், காசு கேட்பது என்பது நமது பல வருடப் பழக்கமாகி விட்டதால், பணம் கேட்பது கொஞ்சம் குறைவு தான் :)
அன்று கிழவியை சோதிக்க குமரனாய் வந்தான். இன்று கிழவியாய் வந்து உம்மை ஆசிர்வதித்திருக்கிறான். எல்லாம் திருப்புகழ் விளக்கம் ஆரம்பித்த நேரம்.
உங்களது நம்பிக்கை எப்படியோ இருக்கட்டும், அது உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நன்று.
என்னுடைய கேள்வி
அற்புதங்கள் நடப்பதெல்லாம் ஆண்டவன் நற்செயலென்றால்
சீற்றங்கள், சீரழிவுகள், சீர்கேடுகள், துர்மரணங்கள் தற்செயலா ?
//சரியில்லையெனில் சொல்லுங்கள்!
நிறுத்திவிடுகிறேன்.
//
நான் அப்படி சொல்லவில்லையே எஸ்.கே. இப்படிச் சொல்லத்தொடங்கினால் சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்று தான் சொன்னேன்.
என் பதிவின் சுட்டியைத் தனி மடலில் அனுப்புகிறேன். அதனைப் படித்தப் பின் இந்தத் தொடரை இன்னும் ஊக்கமாய் எழுதுவீர்கள்.
உங்கள் கேள்வியைப் பார்த்தேன். வள்ளுவராகிய நீங்கள் கேட்டக் கேள்விக்கு ஒளவையார் வந்து பதில் சொன்னால் தான் சரி என்று விட்டுவிட்டேன். :-) ச்ச்சும்மா. பதில் உடனே தெரியவில்லை. சிந்தித்துவிட்டுச் சொல்லலாம் என்று விட்டுவிட்டேன். அவ்வளவு தான். :-)
//என்னுடைய கேள்வி
அற்புதங்கள் நடப்பதெல்லாம் ஆண்டவன் நற்செயலென்றால்
சீற்றங்கள், சீரழிவுகள், சீர்கேடுகள், துர்மரணங்கள் தற்செயலா ?
//
இல்லை ஐயா. அவையும் இறைவன் செயலே. 'நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும்' என்று எண்ணியிருப்பதுவே ஒரு அடியவன் செய்வது. நல்லவை, தீயவை என்று நாம் எண்ணும் எல்லாமே இறைவன் செயலே. அவை இரண்டின் மூலமும் அவன் நலத்தை நமக்கிழைக்கிறான். அதனால் நம்மில் உள்ள அல்லது நீங்கும்.
SK,
உங்கள் மேல் இருக்கும் மிகுந்த மரியாதை காரணமாகததான் என் எதிர்வினைப் பின்னூடமிடுகிறேன். மன்னிக்கவும்.
இனி உங்கள் பதிவைப் பற்றி..
மிக மிக அபத்தமான (ஆபத்தான) பதிவு.
என்ன சொல்லவருகிரீகள் இதன் மூலம்?!.
நல்ல நிகழ்வு எஸ்.கே.
எதிர்பாராதது என்பர் நாத்திகர்.இறை அருள் என்போர் ஆத்திகர்.
Gas money என்பதற்கு 'எண்ணெய் போட பணம்' என்று சொல்லலாமோ?நேரடி மொழிபெயர்ப்பு உதவாது என தோன்றுகிறது
பொன்ஸ்,
கேஸ்[gas] என்பது கேஸொலின் [gasoline]என்பதன் மருஊ அல்லது சுருக்கம்.
இந்த ஊரில் பெட்ரோல் என்று சொல்லாமல், இப்படித்தான் கேஸொலினைச் சுருக்கி கேஸ் என அழைக்கிறார்கள்.
வாகன எரிவாயு காசு/பனம் என்பது பொருத்தமாக இருந்தாலும், சற்று நீளமாக இருக்கிறது.
செல்வன் கூட ஒரு சொல் சொல்லியிருக்கிறார், 'எண்ணைய் போட பனம்' என்று.
அதுவும் நீளமாக இருக்கிறது.
எனக்கொரு யோசனை.
நம்மூரில், ஊருக்குப் போகும் போது கொடுக்கும் காசை, ஊர்க்காசு என வழங்குவர்.
அது போல, வாகன/வண்டிக் காசு என்பது பொருத்தமாக இருக்குமோ?
கற்றோரின், மற்றோரின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
இ.கொ. அவர்களே,
நல்லாசி வழங்கியதற்கு நன்றி.
பிறிதொரு பதிவில் எலி, பூனையை வைத்துச் சொல்லாடினீர்கள்.
இங்கு கிழவியை வைத்து!
மிக இயல்பாக வருகிறது உங்களுக்கு இந்த சொல்லாட்டம்!
எஸ்.கே அய்யா அவர்களே!
காக்கா உட்கார ATM இல் பணம் விழுந்த கதை புதிதாக இருக்கிறது அருமை!
(உங்களிடம் இருந்து இதைத்தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் என சொல்வீர்கள் எனத்தெரியும்)
மிக்க நன்றி, கோவி. கண்ணன்.
உங்கலது கேள்விக்கு குமரன் சிறப்பாக பதிலிறுத்தியிருக்கிறார்.
என்னுடைய கருத்தும் அதுவே.
இருப்பினும், சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
முதலாவதாக உங்கள் கேள்வி சரியாக இல்லை என்க் கருதுகிறேன்.
அற்புதங்கள் என்றோ, நற்செயல் என்றோ இந்த நிகழ்வை நான் வகைப்படுத்தவில்லை.
ஒரு இக்கட்டான நிலையில், நான் இக்கட்டு என அறியாமையினால் நினைத்த ஒன்றை, அதெல்லாம் இல்லை எனக் காட்டிய ஒரு செயலாகவே நான் கருதினேன்.
நேரடியாக, அறிவு பூர்வமாகச் சிந்தித்தால், இதில் ஒன்றுமே இல்லைதான்.
ஆனால், இருந்த நிலையும், நான் முருகனை வேண்டிய வழக்கமான நிகழ்வும், அந்த மூதாட்டியின் குறுக்கிடும், கனிவுச் சொல்லும், நேற்றைய தினம் கிருத்திகை என்பதும்[நான் பதிவில் சொல்லாமல் விட்டது இது!], பிரச்சினை திர்ந்த நிலையும், இறை நம்பிக்கை உடைய எனக்கு ஒரு தெய்வச் செயலாகத் தோன்றியது.
அவ்வளவே.
என் கண்ணோட்டத்தில் இருந்து சொல்ல முற்பட்டேனே தவிர, யாருடைய நம்பிக்கையையும் தூண்டவோ, சோதிக்கவோ எழுதியதில்லை.
துளசி கோபால் அவர்கள் அண்மையில் சொன்ன ஒரு நிகழ்வு போலப் பதித்து, அதன் மூலம் நான் உணர்ந்ததையும் சேர்த்துச் சொன்னேன்.
நடப்பவை எல்லாமே செயல்கள்தான், இறைவன் பார்வையில்.
செல்வன் கூட அழகாகச் சொல்லியிருந்தார்,
//எதிர்பாராதது என்பர் நாத்திகர்.இறை அருள் என்போர் ஆத்திகர்.//
என்று.
[ நன்றி செல்வன்!]
மைக்கேல் மெக்கார்ட்டி எனும் ஒரு அமெரிக்க கதைசொல்லி சொன்ன ஒரு சொற்றொடர் நினைவுக்கு வருகிறது.
"For non-believers, miracles are just co-incidences;
For the believers, it is God's way of showing off!"
இயற்கைச் செயல் என்பார் சிலர்.
இறைச் செயல் என்பார் சிலர்.
அவரவர் நம்பிக்கைதான் இதில்.
நான் நம்புகிற ஒன்றைச் சொல்ல நான் ஏன் தயங்க வேண்டும் என்பதாலேயே, இந்தப் பதிவு.
துர்ச்செயல் என நீங்கள் குறிப்பிடுவது, ஒரு துர்ச்செயலே அல்ல என்பது என் துணிபு.
விஞ்ஞான ரீதியாக விளக்கம் சொல்வார்கள் சிலர்.
இறைச்சீற்றம் என்பர் வேறு சிலர்.
இறைவன் சீற்றம் கொள்வதேயில்லை என்பது என் கருத்து.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
நடப்பவை யாவும் நன்மைக்கே எனத் தீவிரமாக நம்புகிறேன்.
நான் எழுத நினைத்த வேறு சில நிகழ்வுகளையும் படித்தால், உங்களுக்கு நான் சொல்ல நினைப்பது புரியும் என நம்புகிறேன்.
மேலும் சொல்ல எண்ணுகிறேன்.
ஆனால் பதில் நீண்டுவிட்டதால், இத்துடன், இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.
மேலும் வினா இருந்தால் கேளுங்கள்.
இந்தப் பதிலை, திரு. சிவபாலன் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
மிக தெளிவாகவும், எளிமையாகவும் கோவி.கண்ணன் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி, குமரன்.
எதிர்வினையாயினும், வந்து பின்னூட்டமிட்ட உங்கள் உரிமைக்கும், அன்புக்கும் மிக்க நன்றி, திரு. சிவபாலன்.
உங்களுக்கும் சேர்த்து ஒரு பதில் எழுதியிருக்கிறேன்.
என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
படித்த் பதிலிடவும்.
உங்கள் பார்வையில் அப்படி!
என் பார்வையில் இப்படி!
திரு. கோவி. கண்ணனுக்கு நான் எழுதிய பதிலைப் படியுங்கள்!
மறக்காமல் வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி, 'வவ்வால்' ஐயா.
'பார்வை' சரியாக இருக்க வேண்டுமெனச் சொல்கிறீர்கள்!
இல்லையா, பார்வை அவர்களே!
எல்லாமே பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்பதில் உங்களோடு ஒத்துப் போகிறேன்.
வண்டிக்காக ஆகும் செலவு... வண்டிச்செலவு.
இதுவும் சரியாகத்தான் வருகிறது.
ஆனால், இதுவரை நாம் சொன்ன குறுஞ்சொற்கள் எல்லாமே [நான் நீளமான நேர் பொருட்சொற்களைச் சொல்லவில்லை. பொன்ஸ் கோபித்துக் கொள்ளப் போகிறார்!] சரியான பொருள் தரவில்லை.
சரிதானே!
//அது போல, வாகன/வண்டிக் காசு என்பது பொருத்தமாக இருக்குமோ?
//
எங்கள் ஊரில் வண்டிக்கான செலவை வண்டிச் சத்தம் என கூறுவார்கள். அது பொதுவாக வண்டியின் வாடகையை குறிப்பது என்றாலும், நம் வண்டிக்கான செலவினங்களையும் வண்டிச் சத்தம் எனச் சொல்லலாமே.
கொத்தனார் ஆரம்பிச்சுட்டாரு!
இது எங்கே போய் நிக்கப் போகுதுன்னு தெரியவில்லை!
ஆனால், சும்மா சொல்லக்கூடாது!
ஒப்புக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிரது.
என்ன, நமக்கெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய சொல்லாகவும், ஒரே சொல்லில் நேர் பொருள் வரமுடியாது என்பதால் குறுஞ்சொல்லாகவும் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், இதனையும் வாக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளலாம்தான்!
இன்னும் சில பதிவுகள் வரவேண்டியிருக்கிறது.
குமரன், ஜி.ரா. இப்படி சில பேரிடமிருந்து!
மற்றவரும் சொல்லலாம்!
எல்லாம் வந்தவுடன் வாகெடுப்பு நடத்தி விடலாம்!
என்ன சொல்றீங்க, இ.கொ. ஐயா?!!
:))
SK,
//அல்லது நீங்கும் //
இயற்கை சீற்றங்களால் அழியும் சிறு குழந்தைகளும் அல்லவைகளா.
ஆம் என்றால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
//எல்லாம் வந்தவுடன் வாகெடுப்பு நடத்தி விடலாம்!
என்ன சொல்றீங்க, இ.கொ. ஐயா?!!//
வாக்கெடுப்பா? என்ன பின்னூட்டங்கள் வரணுமா? அப்போ நானும் குமரனும் ஒரே டீம்தான். இந்த டீமின் வரலாறு தெரியும் என்று நம்புகிறேன். :-D
அப்புறம் ஐயா எல்லாம் போடாதீங்க. என் சின்ன பையன் இமேஜையே கெடுத்துடுவீங்க போல இருக்கே.
சிவபாலன்.
Compartmentalized Vision என்று சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் நீங்கள் சொல்வது போல் தான் பொருள் கொள்ள முடியும். என்னுடைய விளக்கத்தைக் கொஞ்சம் நன்றாக இன்னொரு முறை படித்துப் பாருங்கள். நான் சொன்ன 'அல்லது' என்ன என்று விளங்கும். நான் சொன்னது 'நம்மில் உள்ள அல்லது'; அங்கே இயற்கைச் சீற்றங்களால் இறக்கும் சிறு குழந்தைகள் என்று சொல்லவில்லை. அப்படிப்பட்டப் பொருளைக் கொண்டு நீங்களே வருத்தப்பட்டால் என்ன செய்வது?
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அடியவர்களின் பார்வையில் சொல்லப்பட்டது அது. நான் அடியவன் என்றால் என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் இறைவனால் ஏற்பட்டவையே. அவற்றால் எனக்கு நலமே விளைகிறது; என்னுள் இருக்கும் அல்லது நீங்குகிறது; என்ற எண்ணம் இருக்க வேண்டும். அந்த எண்ணம் இருப்பவரிடம் போய் இது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை; இது பெரிய விதயமா என்பதும், உலகப் பேரழிவில் இறக்கும் குழந்தைகள் எல்லாம் அல்லவையா என்பதும் பேசப்பட்டப் பொருளுடன் பொருந்தா நிலையல்லவா?
ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி என்று பேசும் அடியவர்களும் ஆன்மிகவாதிகளும் இயற்கைச் சீற்றங்களின் போது இறைநம்பிக்கை இல்லாதவர்களூடன் சேர்ந்து எல்லாவிதமான உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் 'அல்லது' என்று நினைத்தால் அப்படி செய்வார்களா? கொஞ்சம் சிந்தியுங்கள்.
நிகழ்வுகள் சாதகம் என்றாலும் பாதகம் என்றாலும் அதன் மூலம் எதார்த்தம் என்பது சில வேளைகளில் மறக்கப்படுகிறது.
நாத்திகம்-ஆத்திகம் நாதனின் செயல் என்று ஏற்றுகொள்ளும் ஆத்திகர் எவருண்டு ?
எல்லாம் அவன் செயலென்று சொல்லுவோரும், பல சமயங்களில் பொறுப்பை மறந்து பொறுமை இழப்பது சில சமயங்களில் தெரியவரும் போது, கேள்வி எழுவது இயற்கை என நினைக்கிறேன். அது இறைவன் செயல் என நீங்கள் நினைப்பதாக சொல்கிறீர்கள். இருக்கட்டும். இந்த விவாதத்தை தொடரவிரும்பவில்லை. உங்களுக்கும், திரு குமரனுக்கும் நன்றி.
//
SK,
//அல்லது நீங்கும் //
இயற்கை சீற்றங்களால் அழியும் சிறு குழந்தைகளும் அல்லவைகளா.
ஆம் என்றால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. //
நண்பர் சிவபாலன் அவர்களே!
இதற்கு குமரன் வந்து ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும்.
இருப்பினும் நானும் முயற்சிக்கிறேன்.
'நம்மில் உள்ள அல்லது நீங்கும் எனக் கும்மரன் சொல்லியிருப்பது, இருவகைபடும்.
"நம் ஒவ்வொருவரிடமும்" இருக்கின்ற தீய குணங்கள் ; மற்றும் "னமக்கு" நடக்கவிருக்கும் தீங்குகள்.
நீங்கள் அதனை மாற்றி, 'இயற்கைச் சீற்றத்தால் அழியும் குழந்தைகளும் அல்லவைகளா?' எனக் கேட்டிருக்கிறீர்கள்.
இதனை 'திசை திருப்புதலாகவே நான் கருதுகிறேன்.
என் பதிவின் நோக்கமே 'என்னை' எப்படி கூடி இருந்து குளிர்வித்தான் என்பது பற்றியே!
இதில் அற்புதங்களோ, நற்செயல்களோ கிடையாது.
அடியவனான என்னை எப்படி ஆட்கொண்டு காத்தான், பாடம் புகட்டினான், திருத்தினான், கடிந்தான், தண்டனை கொடுத்தான் என்பது பற்றியே பேச எண்ணினேன்.
இருப்பினும் இதற்கும் பதில் சொல்கிறேன்.
இயற்கைச் சீற்றமோ, இறைச் சீற்றமோ ஒரு குறிப்பிட்ட பகுதியை வேண்டுமானால் தாக்குமே தவிர, ஹிட்லர் இன்னும் மற்றவர் போல, ஒரு இனத்தையோ, அல்லது குழுவையோ தாக்குவதில்லை.
மாணிக்கவாசகர் சொல்லிய புல்லிலிருந்து, பூண்டு, புழு, மரம், செடி, கொடி, கல், மனிதர் வல்லசுரர், தேவர் என யாரையும் விட்டுவைக்காது.
அது ஒரு காரிய காரணங்களுடன் நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.
அவ்வளவுதான்.
இதில் ஒன்றுமறியாப் பாலகரை விட்டிருக்கலாமே, அப்படிச் செய்யாத ஒரு இயற்கை, இறை எதற்கு எனக் கேள்வி எழலாம்.
எழும்.
இதற்கு விடை, நம் யாராலும் அறியப்படாத ஒன்று எனினும், நாம் காணும் நிகழ்வுகளை வைத்து, நாம் தர்க்க ரீதியாக ஒரு முடிவுக்கு வரலாம்.
ஒரு கட்டடம் கட்ட முடிவெடுக்கும்போது, அந்த நிலத்தை சமன் செய்யும் பொது, சுத்தமாக அனைத்தும் தரைமட்டமாக்கப்படும், சமன் செய்யப்படும்.
இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஐயோ, இந்தக்கல் நன்றாக இருக்கிறதே, இந்த மரம் பூத்துக் குலுங்குகிறதே என நினைத்தால் அந்த நிலம் சமன் செய்யப்பட மாட்டாது.
இது ஒரு உதாரணம்தான்.
இது போல இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நீளம் கருதி விடுகிறேன்.
ஒரு சாதாரண நிகழ்வுக்கே இப்படி என்றால், இயற்கை என்னும் சக்தி வாய்ந்த ஒரு கருவி, அதனை இயக்கும் அதைவிட சக்தி வாய்ந்த மேல்நிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
அனைத்தையும் ஆக்குபவனுக்கு, அதனை என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும் என நிச்சயமாக நம்புகிறேன்?
நடைமுறையில் இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.
வேண்டுதல், வேண்டாமை இலான் அவன்!
அவனைச் சார்ந்தால் நமக்கு
யாண்டும் இடும்பை இலாத செயல்களை நிகழ்த்துவான்.!
அவை யாவும் நற்செயல்களாகவோ, அற்புதங்களாகவோ மட்டும் இருப்பதில்லை.
அதில் ஒன்று நம் அழிவாகக் கூட இருக்கும்.
ஆனால் அது அழிவல்ல.
ஆக்கம்.
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
முளையும் பயிர் பிடுங்கப்படுவது, மற்றோர் இடத்தில் பயனுற நடுவதற்கே.!
இதனையும் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கட்டாயப் படுத்த வில்லை.
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் நம்புகிறேன்.
அதனைப் பதிகிறேன்.
நன்றி.
//அப்புறம் ஐயா எல்லாம் போடாதீங்க. என் சின்ன பையன் இமேஜையே கெடுத்துடுவீங்க போல இருக்கே. //
இனிமேல் போடமாட்டேன், இ.கொ. !!
தொடர விரும்பவில்லை எனச் சொன்னதால் வற்புறுத்தவில்லை.
பயனுள்ள உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி, கோவி. கண்னன்.
அதுக்காக வராமெல்லாம் இருந்திடாதீங்க!!
னீங்கள் திறம்படச் சொல்வீர்கள் என நிச்சயமாய் நம்பினேன்.
சற்று முந்திக்கொண்டு நானும் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
மிக்க நன்றி, குமரன்.
//அதுக்காக வராமெல்லாம் இருந்திடாதீங்க!!//
ஹலோ நான் தொடரவிரும்பவில்லை என்பது, இந்த பதிவின் என்னுடைய விவாதங்களைத்தான் மட்டும்தான். ஒட்டுமொத்த உங்களின் பதிவுகளை அல்ல. இந்த பதிவுகளின் ஏனையோரது பின்னூட்டங்களையும், அதற்கான உங்களின் மறுமொழியையும் கண்டிப்பாக படிப்பேன் :)
நம்பிக்கை இருக்கிறது!
இருப்பினும், சுயநலம்!
சொல்லி வைத்தேன்.
:))
நம்புனா கடவுள். இல்லேன்னா கல்.
இதேதான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
நான் கடவுளை நம்பறேன். அதனாலே இப்படித்தான் ச்சின்ன விஷயத்துலேயும்
அருள் செய்வார்னு நம்பறேன்.
நல்லா இருக்கு. நீங்க எழுதுங்க.
அனுபவ விவரிப்பு அருமை.
மேலும், தொடரப்போவதாக தெரிகிறது
படிக்க
ஆவலுடன்
பச்சோந்தி
ஸ். கே. உங்கள் அனுபவம் அதை பகிர்ந்த கொண்ட விதம் அருமை.நம்பிக்கை என்பது அவர்ரவர் தனிப்பட்ட விஷயம்.அதைக் குறை சொல்வது தனிப்பட்ட மனிதரின் விஷயத்தில் தலையிடுவது.இந்த மாதிரி அனுபவம் நிறையபேர்க்கு உண்டு.என்விஷயத்திலும் உண்டு.என்மகன் கலயாண்த்திற்கு(1/05/06)என் குலதெயவமான திருத்தணி முருகன் கோவிலுக்கு 04/05/06 குடும்பத்தோடு வருவதாக வேண்டுதல். ஆனல் 02/05/06 அன்று கல்யாணம் முடிந்த மறுநாள் திடீரென்று என்மனத்தில் தோன்றியது அன்றே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று. உடனே கிளம்பி சென்றுவந்துவிட்டேன். நல்ல முருகன் தரிசனம். மறுநாள் நடந்ததுதான் நம்பிக்கை. அன்று மாலை வீட்டில் போட்டிருந்த மாக்கோலத்தில் கால் வைத்து தவறி வழுக்கி விழுந்தேன். விழும்பொழுது தன்னிச்சையாக மண்டையில் அடிபடக்கூடது என்று திரும்பி இடது பக்கம் திரும்பி விழுந்ததில் இடதுகை எலும்பு முறிந்துவிட்டது. என்னை அந்த செகண்டில் திரும்பச்செய்தது யார்.என் அறிவா அல்லது அறிவைக் கொடுத்த முருகன மண்டையில் அடி பட்டிருந்தால் பதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும் என்று மருட்துவர் சொன்னார்.அன்பன் தி. ரா.ச
SK & குமரன்,
உங்கள் இருவரின் வாதங்கள் நன்றாக வெளிப்பட்டன, அவ்வளவே. வேறொன்றுமில்லை.
SK,
நீங்கள் இதை தொடராக எழுத உத்தேசித்துள்ளீர்கள் என அறிகிறேன். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆகவே இத்தொடரை இனி நான் படிக்க விரும்பவில்லை.
எனினும் உங்கள் வேறு பதிவுகளை நிச்சயம் படிப்பேன் பின்னூடமிடுவேன்.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி!!
மிக்க நன்றி.
மிக்க நன்றி, துளசி கோபால்!
நான் நம்பும் ஜாதி!
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், தி.ரா.ச. அவர்களே! என்றோ, என்றோ சொல்லுவார்கள் சிலர். ஆனால், 'அ[ன்த' சக்திதான் இவ்வாறு செய்யத் தூஊண்டுகிறது என நான் நம்புகிறேன்.
தங்கலது திறந்த கருத்துக்கு நன்றி.
வருவேன் எனச் சொன்னதற்கும் நன்றி, சிவபாலன்.
சிவபாலன். நாங்கள் சொன்னவையெல்லாம் வாதத்திற்காக மட்டும் சொன்னவை அல்ல. அவை அடியவர்களின் மனநிலையிலிருந்து சொன்னவை. நானும் இவற்றை 'Statistical Coincidence' என்று அறிவியல் பூர்வமாக அணுகலாம். அப்படி மட்டுமே அணுகவேண்டும் என்றும் அப்படி அணுகாவிட்டால் அது அபத்தம், ஆபத்து என்று என்னால் சொல்ல இயலவில்லை. ஏனெனில் என் மனநிலை இரண்டிற்கும் நடுவில் இருப்பது. அதனால் இருபுறமும் உள்ள உணர்வுகளை அறிகிறேன். அடியவர்களின் மனநிலை என்று சொன்னேன். அது கூட இல்லை; இது எங்கள் இருவரின் மனநிலையினை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறோம். அதுவும் அவரவர் மனநிலையை அவரவர் பேசியிருக்கிறோம். எல்லா அடியவர்களின் மனநிலையைப் பேசுவதற்கு எங்களுக்குத் (குறிப்பாக எனக்குத்) தகுதியில்லை; முடியவும் முடியாது. என் மனநிலையை எஸ்.கே. உணரமுடியாது. அவர் மனநிலையை நான் உணரமுடியாது. எங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களின் மூலம் மற்றவர் எப்படி உணர்ந்திருப்பார் என்று தொட்டுப் பார்க்க மட்டுமே முடியும். அந்த மாதிரி அனுபவங்களே வராதவர்களும் அப்படிப்பட்ட அனுபவம் கிடைத்திருந்தாலும் உணர்வுகளை அறிவு ஆளவேண்டும் என்று எண்ணுபவர்களும் இந்த மாதிரி பதிவுகளை அபத்தம், ஆபத்து என்று சொல்லுவது இயற்கை.
பொறுமையான, முறையான முதிர்ந்த அனுபத்துடன் கூடிய பதில், குமரன்.
பிறர் மனம் நோகாமல், தன் கருத்தையும் வலியுறுத்தும் இதனைக் கண்டு மகிழ்ந்தேன்.
அனுபவம் தன் வேகத்தில் அவரவர்க்கு போதிக்கும்.
மிக்க நன்றி.
குமரன் & SK,
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
ஆனால், நான் ஏன் அபத்தம், ஆபத்து என்று கூறினேன்?
// முளையும் பயிர் பிடுங்கப்படுவது, மற்றோர் இடத்தில் பயனுற நடுவதற்கே.! //
முதலில் ATM நிகழ்வு கடவுள் செயல் என்று சொன்னீர்கள். இப்பொழுது இயற்கை சீற்றங்களால் அழியும் சிறு குழந்தைகளும் கடவுள் செயல் என்று சொல்கிரீர்கள்.
எங்கு இருந்து எங்கு தாவியுள்ளீர்கள் என நீங்களே பாருங்கள்.
இன்னும் இத்தொடர் போக போக என்ன என்ன எல்லாம் வரும் என்று தெரியவில்லை.
இதை ஆபத்து என்றுதான் சொல்லவேண்டும்.
சிவபாலன்,
கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் கேளுங்கள்.
நிகழ்வு எனக்கு கடவுள் செயலாகப் பட்டது உண்மை.
அதை மட்டுமே பதிந்தேன்.
நீங்கள் கேட்டபின்னரே, இது இயற்கைச்சீற்றத்திற்கும், குழந்தைகள் அழிவுக்கும் தாவியது.
அதற்கும் நானும், குமரனும் அவரவர்க்குத் தோன்றிய பதிலை அளித்தோம்.
அழிவில் பேதம் இருக்க முடியாது.
மனிதனின் செயல்களில் வேண்டுமானால் இருக்கக்கூடும்.
இயற்கை/இறைச் சீற்றம் என வரும்போது, பல்வேறு உயிர்களும் அழிவது, தவிர்க்க முடியாதது.
நம்பிக்கை என வந்துவிட்ட பின், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்பதையும் நம்பித்தான் ஆக வேண்டும். நம்புகிறேன்.
பிறந்த குழந்தை கூட காரணமில்லாமல் உடனே சாகிறது.
நன்றாக இருக்கும் ஒரு மனிதன் திடீரெனச் சாகிறான்.
இதெல்லாம் ஒரு கணக்கின் படியே என நான் நம்புகிறேன்.
'முளையும் பயிர்' சொல்லை நீங்கள் குழந்தைகளோடு சம்பந்தப்படுத்தி, வருந்துகிறீர்கள்.
நான் 'முளையும் பயிர்' என்றது, பிறந்த அனைத்து ஜீவராசிகளையும் சேர்த்தே!
எல்லாமே இறைவன் செயல் எனக் கருதும்போது, இதில் பேதமில்லை என்றும் கருதுவதே முறைமை.
'மானிடர் ஆன்மா மரணமெய்தாது; மறுபடிப் பிறக்கும்' என்ற கண்னதாசனின் கீதை வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
அழிவு, அவலமானதே!
அதிலும், சிறு பிள்ளைகளின் அழிவு, மிகவும் வேதனையானது.
நான் வேதாந்தம் பேச இத்தொடரைத் துவக்கவில்லை.
அன்று காலையில், தொடராக நிகழ்ந்த சில செயல்பாடுகளைக் குறித்த எனது எண்ணமே அந்தப் பதிவு.
என் மடைமையைச் சுட்டிக்காட்டிய ஒரு செயலாகவே எனக்குப் பட்டது.
இது ஒரு சாமானியனுக்கு, சாமானியமாக நடந்த ஒரு நிகழ்வு.
என் மடைமையைக் குறித்து எள்ளிவிட்டுப் போனால் கூட எனக்குச் சம்மதமே!
சட்டென்று இதுபோல நேரங்களில் நினைவுக்கு முருகன் வருகிறான்.
அது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு.
ஏதோ ஒரு முடிவு நிகழ்கிறது.
அதில்ருந்து நான் சற்றுத் தெளிகிறேன்.
அவ்வளவே.
இதோடு, மற்றவற்றைத் தொடுத்து என் எண்ணத்தை சந்தேகிக்காதீர்கள்.
இதுவே நான் வேண்டுவது.
இன்னும் கேளுங்கள்.
நன்றி.
[பி.கு.] அவ்வப்போது நடக்கும், நடந்தபின் எனக்குத் தோன்றும் நிகழ்வுகளை எழுதலாமே என எண்ணினேன். அவ்வளவுதான். வாராவாரம் வரும் தொடர்கதை போல அல்ல!]
SK,
விளக்கத்திற்கு மிக்க நன்றி.
இருவரும் எதிர் முனையில் இருக்கிறோம். அதனால் கருத்தொற்றுமை எற்பட வாய்ப்பில்லை.
உங்கள் நிலை எனக்கு புரிகிறது. அதுபோல் என் நிலையும் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
என்னால் மனவருத்தம் எற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
உங்களில் குமரனருகாமை (குமரனின் அருகாமை) உணர முடிந்தது, நன்றி.
நிச்சயமாக உங்களாலெனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை.இது போன்ற இரு துருவங்களைக் கொண்டுதான், உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதற்கு நாமும் விதி விலக்கல்லவே!
நன்றி.
//இது போன்ற இரு துருவங்களைக் கொண்டுதான், உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது//
எங்கேயோ கேட்ட குரல். அது இங்க தான்.
At 9:41 AM, கோவி.கண்ணன் said…
//நன்றாக காமெடி எழுதுகிறீர்கள் என்பதால் கொஞ்சம் உரிமயோடு சொல்லியிருக்கிறேன்.
தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன். //
உங்கள போய் ஏன் தப்பா நினைக்கப் போகிறேன் ?. எதிர் துருவங்கள் இல்லையென்றால் இயக்கம் இல்லை என்று நம்புகிறவன் நான். ஓத்த கருத்துக்களைவிட எதிர் கருத்துகளைத்தான் அதிகம் வரவேற்பேன். நன்றி. (தத்துவம் தப்பா எடுத்துக்காதிங்க :):):)
http://govikannan.blogspot.com/2006/06/blog-post_115107469421051335.html
துருவங்களும் இணையலாம்!
அதுதான் நம்பிக்கை!
:))
இதிலும் ஒத்திருக்கிறோம்!
சுட்டியதற்கு நன்றி, கோவி.கண்ணன்!
உரிமையின் உணர்தலுக்கும், உள்ளத்தின் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, [வெண்பா]ஜீவா!
எப்படியோ இந்த பதிவிற்கு பின்னூட்டம் போடவேண்டாமென்றிருந்த என் விரதத்தை கலைத்துவிட்டீர்கள். எல்லாம் முருகன் செயல் :)
அடடா நீங்களும் ஏமாந்துட்டீங்களா? நானும் முன்ன இப்படித்தான்... இவரு வெண்பா ஜீவா இல்ல. வேற ஜீவா. அவரு ஜீவ்ஸ் அப்படின்னு போட்டுக்குவாரு. இப்போ என்ன போச்சு. இவரையும் வெண்பா எழுத வெச்சுட்டா போச்சு. எழுதுவீங்கதானே ஜீவா?
//கோவி.கண்ணன் said...
எப்படியோ இந்த பதிவிற்கு பின்னூட்டம் போடவேண்டாமென்றிருந்த என் விரதத்தை கலைத்துவிட்டீர்கள். எல்லாம் முருகன் செயல் :)//
நிச்சயமாக!
அவனன்றி அசைவுகள் ஏது?
//எழுதுவீங்கதானே ஜீவா?//
அதனாலென்ன? அவரை எழுத வெச்சுட்டா போச்சு!
சிவபாலன், கோவி - உங்களுக்கு என்னால் முடிந்த பதில்.
நமக்கு நம்பிக்கையில்லாதவைகளில் உள்ளதெல்லாம் அபத்தமாகத்தான் தெரியும். அது வியப்பல்ல.
இறைவனை நம்புகிற எந்த மதத்தவரும் இயற்கைப் பேரழிவு ஏன் என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாது. ஆனால் நடப்பவையனைத்திற்கும் இறைவனே காரணம் என்பதுதான் நம்பிக்கை. நல்லதோ கெட்டதோ..உலக இயக்கங்களுக்கு இறைவன் காரணம். அவ்வளவுதான். இறைவனை முழுதும் உணர்ந்தால் ஏன் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் மனிதனால் முடியுமா என்று தெரியவில்லை.
வள்ளுவரும் இதைத்தான் யோசிக்கிறார். யோசித்து யோசித்துப் பார்க்கிறார். மீண்டும் மீண்டும். ஒன்றும் புரியவில்லை.
செவ்வியான் கேடும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும் - என்று மட்டும் சொல்லி விட்டுப் போய் விட்டார்.
இதற்குக் காரணத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சொல்ல முடியாது. நல்லதிற்கு இறைவனை நம்பினால், கெட்டதிற்கும் இறைவந்தானே காரணம் என்று கேட்டும் அளவிற்குத்தான் நாத்திகத்திற்கும் அறிவுண்டு. அதற்கு மேல் அல்ல. தற்செயல் நிகழ்வுகள் என்பது சரி? ஆனால் ஏன் என்று சொல்ல நாத்திகத்தால் முடியாது. ஆத்திகத்தாலும் முடியாது. ஆனால் ஆண்டவன் செயல் என்று மட்டும் முடித்துக் கொள்வார்கள்.
வீட்டைக் கூட்டிப் பெருக்கும் பொழுது நூற்றுக்கணக்கில் எறும்புகள் சாகின்றன அல்லவா? அவைகளும் குடும்பம் குட்டிகள்தானே? அது தற்செயல் நிகழ்வா? இல்லையே. எறும்புக்கு எறும்பு பெரியது போல, நமக்கு நாம் பெரியதாகத் தெரிகிறோம்.
அதனால்தான் சமணர்கள் மயிற்பீலி கொண்டு பெருக்கி நடந்தார்கள். அந்தப் பீலிகளைக் கூட பிடுங்க மாட்டார்கள். உதிர்ந்தவைகளை எடுப்பார்கள். வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். பயிறுக்காக வாடுவது கூட மற்றொருவரின் பார்வையில் அபத்தந்தான்.
சொல்ல வருவது என்னவென்றால் எதையும் நல்லதாகவே சிந்தித்துப் பார்ப்போம். எடுப்பது அவன் செயல் என்றால் கொடுப்பதும் அவன் செயலே. அது இன்பமா துன்பமா என்பதுதான் கேள்வி. அதற்கும் ஆண்டவந்தான் விடை சொல்ல வேண்டும்.
இன்னொரு விஷயம்....அதர்மம் நடக்குமிடங்களில் எல்லாம் இறைவன் ஏன் வந்து காப்பதில்லை என்பதற்கு நல்ல பதிலை எந்த மதமும் தரமுடியாது. மதங்கள் இயக்கங்களாகப் போய் விட்டன. அட்டவணை போட்டுச் செய்தால் நல்லது என்ற அளவிற்குத்தான் எல்லா மதங்களும் சென்று கொண்டிருக்கின்றன. பகுத்தறிவு கூட அப்படித்தான் போகிறது. மெய்ஞான வழி நாடி அனைவரையும் அரவணைத்துப் போகிறவர் மிகக்குறைவு. அதுதான் என் வருத்தம்.
//நல்லதிற்கு இறைவனை நம்பினால், கெட்டதிற்கும் இறைவந்தானே காரணம் என்று கேட்டும் அளவிற்குத்தான் நாத்திகத்திற்கும் அறிவுண்டு.//
அடிச்சாரு பாருங்க நெத்தியடி ... இததான் நான் எதிர்ப்பார்த்தேன்... ராகவன் உங்கள் மறுமொழியில் 100% எனக்கு உடன்பாடு உண்டு. அதைவிடுத்து நடக்குறதெல்லாம் நாரயணன் செயல் என்பவர்கள் எல்லோரும் பிச்சைகாரர்களை விரட்டுபவர்களாக இருக்கின்றனர். அதாவது முன்னுக்கு பின்முரண்
எஸ்.கே. இராகவனும் வந்து தெளிவுறுத்திச் சென்று விட்டார். இனிமேல் தயங்காமல் உங்கள் 'அபத்தங்களைத்' தொடராக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். ;-)
SK அய்யா,
வணக்கம்.
"...different men often see the same subject in different lights..." என Patrick Henry அவர்கள் சொன்னது போல் , உங்களுக்கு நடந்த சம்பவங்களை நீங்கள் முருகன் செயல் என சொல்கிறீர்கள். அது முருகப்பெருமான் மீதான உங்களின் அபார பத்தியின் வெளிப்பாடு. அதேநேரம், சிலர் இது சும்மா தற்செயலாக அல்லது எதேச்சையாக நடந்த செயல், இது ஒன்றும் கடவுள் செயல் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களின் கருத்தும் தவறானது என்றும் சொல்வதற்கில்லை. அது அவர்கள் பார்க்கும் விதத்தைப் பொறுத்தது. இதில் யார் சரி யார் பிழை என்று சொல்லமுடியாது.
//நாளையும், அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாட்கள் என்பதால், என் மனைவின் சம்பளம் நேற்று இரவே, 22-ம் தேதி அன்றே பதிந்திருக்கிறது!//
இது வழமையான நடைமுறைதானே! இதில் முருகப்பெருமான் செய்வதற்கு என்ன இருக்கிறது?! :))
ராகவன், எஸ்.கே,
//அதனால்தான் சமணர்கள் மயிற்பீலி கொண்டு பெருக்கி நடந்தார்கள். அந்தப் பீலிகளைக் கூட பிடுங்க மாட்டார்கள். உதிர்ந்தவைகளை எடுப்பார்கள். வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். பயிறுக்காக வாடுவது கூட மற்றொருவரின் பார்வையில் அபத்தந்தான்.//
ஆனால் இந்த காலத்தில் நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் அபத்தமாக கருதப்படுகிறது. எனக்கு என்ன புரியவில்லையென்றால் ஆன்மிகத்திற்கும் அடுத்தவர்களை குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் மனிதன் அழிப்பதுவும் கடவுள் செயலா? மனிதர்கள் மனிதர்களையே.
ஏன், அன்பைக் கொண்டு அது எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தினாலும் பொருமை கொண்டு இறை கோட்பாட்டை கடைபிடித்து நம்பிக்கையற்றருக்கு நம்பிக்கை ஊட்ட இயலுவதில்லை?
வள்ளலார், பயிருக்கே வாடினார் ஆனால் இன்னாலில் எத்தனை மனிதர்கள் மாண்டாலும் பொருள் ஒன்று செயல் ஒன்று என்று வாழ்வது போலல்லாவா இருக்கிறது.
அஹிம்சையுடனே வாழ்ந்து "இறைக் கோட்பாட்டின் படி" ஒருவர் தேசியம், பாதுகாப்பு எனும் வரும் பொருட்டும் கடைபிடித்து சாக முடியுமா, முடியாதா?
தெகா.
1.சாமி இருப்பது உண்மையென்றால் ஏன் ஹிட்லரை படைத்தார்?
2.சாமி இருந்தால் நேற்று ஏன் எனக்கு ஆக்ஸிடன்ட் ஆனது?
3.ஏன் துன்பம்,துயரம் கஷ்டம் வருகிறது?இது இருக்கும்போது காக்காத சாமி இருந்தென்ன போயென்ன?
இதுபோல் கேள்விகளை கேட்டுக்கொண்டு தான் புத்தர் நாட்டை விட்டு வெளியேறி காட்டுக்கு போனார்.அவருக்கு ஒரு பதில் கிடைத்தது.
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பதுவே அந்த பதில்.
ஆசையை ஒழித்தால் துன்பமே கிடையாது.
முடியுமா?
ஆசை அறுமின்,ஆசை அறுமின்,ஈசனோடயினும் ஆசை அறுமின் என்றனர் சித்தர்கள்.
ஈசன் மேல் கொண்ட ஆசையையே அறுக்க வேண்டுமாம்.அது தான் இறுதி நிலையாம்.
அந்நிலையை அடைய முடியுமா?
தெரியலை.
அந்நிலையை அடையும்வரை மாற்று வழி என்ன?
"உன்னை கண்டிப்பா சாமி காப்பாத்துவாரு.அதுக்காக மருந்து சாப்பிடாம இருக்காதே" என்ற பழமொழி தான் துணை.
சாமியும் கும்பிடலாம்,மருந்தும் சாப்பிடலாம்.நோய் குணமான பின் குணப்படுத்தியது மருந்தா,சாமியா என யோசித்துக் கொள்ளலாம்.
நல்ல கருத்துகளை நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள், ஜி.ரா.
கோவி. அல்லது சிவபாலன் வந்து சொன்ன பிறகு சொல்லலாம் எனக் காத்திருந்தேன்.
இப்போது கோவியும்
சொல்லியிருக்கிறார்.
//அதாவது முன்னுக்கு பின்முரண் //
நல்லது எனப் பார்ப்பவன் ஆத்திகன்
நல்லது, கெட்டது எனப் பார்ப்பவன் நாத்திகன்
நல்லது, கெட்டது என்று ஒன்றுமே இல்லை, எல்லாமே 'நடப்பது' எனப் பார்ப்பவன் மெய்ஞானி.
ஆத்திகன் மதங்களால் கட்டுண்டு மயங்குபவன், ஜி.ரா. சொன்னது போல.
நாத்திகன் மதங்களால் நசுக்குண்டு வெறுப்பவன்.
மெய்ஞானி மதங்களால் பாதிக்கப் படாமல், அவற்றின் சாயல் கூட தன் மீது படாமல் நகர்பவன். அதே நேரம், நாத்திகனைத் திருத்தவும் முயல மாட்டான். அதை இந்த ஆத்திகனிடம் விட்டு விட்டு, அவர்கள் போடும் சண்டையைப் பார்த்த வண்ணம் சிரித்தபடியே சென்றிடுவான்.
இதில் என்ன ஒரு வசதி என்றால், ஆத்திகம், நாத்திகம் இரண்டின் மூலமாகவும் மெய்ஞானத்தை அடைய முடியும்!
இதை அறியாமல் வாதப் பிரதிவாதங்கள் செய்பவரைக் கண்டுதான் மெய்ஞானி சிரிக்கிறான்.
//இனிமேல் தயங்காமல் உங்கள் 'அபத்தங்களைத்' தொடராக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். ;-)
//
நிச்சயம் எழுதுவேன், குமரன்.
குறைந்த பட்சம், முடிவில் முருகன் புகழ் பாடும் பாடலைப் படிப்பதற்காகவாவது, எழுதுவேன்.
இந்தச் சண்டையில், ஒருவரும் அதைப் பற்றியே குறிப்பிடவில்லை!!
// அதர்மம் நடக்குமிடங்களில் எல்லாம் இறைவன் ஏன் வந்து காப்பதில்லை என்பதற்கு நல்ல பதிலை எந்த மதமும் தரமுடியாது //
இராகவன், அருமையாக சொன்னீர்கள் .
நன்றி.
வருகைக்கு நன்றி, வெற்றி!
நீங்கள் சொன்னது போல அதில் ஒன்றும் முருகன் செயல் இல்லைதான்!
நீங்கள் சரியாக இன்னொருதரம் படித்தால் புரியும். பணத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு முருகன் அருள் செய்தான் என நான் கூறவே இல்லை.
என் கவலையை, மடைமையை, அர்த்தமற்ற குழப்பத்தை அந்த மூதாட்டியின் ஒரு சொல் மூலம் நீக்கினான் எனத்தான் சொல்லவந்தேன்.
அந்த நிகழ்வு இல்லாமலும் கூட, அன்றையக் காலை கழிந்திருக்கும், இனிதே!
நிதானமாக உட்கார்ந்து யோசித்தால் எவ்வளவு மடத்தனம் என்று தெரியவரும் ஒரு நிகழ்வை, ஒரு இக்கட்டு என நானே நினைத்துக் குழம்பிய போது ஆறுதலாக முகாந்திரமே இல்லாமல் வந்து அவர் சொன்ன சொல்தான் இதில் நான் குறிப்பிட்ட நிகழ்வு.
இதுவே முன்னின்ற அருள் என நம்புகிறேன்.
நன்றி.
தெ.கா.,
உங்களுக்கு விரைவில் விரிவான பதில் அளிக்கிறேன். அதற்குள், குமரன், ஜி.ரா. இன்னும் வேறு யாராவது வருகிறார்களா பார்ப்போம்!
நன்றி.
//நல்லது எனப் பார்ப்பவன் ஆத்திகன்
நல்லது, கெட்டது எனப் பார்ப்பவன் நாத்திகன்
நல்லது, கெட்டது என்று ஒன்றுமே இல்லை, எல்லாமே 'நடப்பது' எனப் பார்ப்பவன் மெய்ஞானி.//
அட இந்த மேட்டர் கூட நல்லா இருக்கே.
//ஆத்திகன் மதங்களால் கட்டுண்டு மயங்குபவன், ஜி.ரா. சொன்னது போல.
நாத்திகன் மதங்களால் நசுக்குண்டு வெறுப்பவன்.
மெய்ஞானி மதங்களால் பாதிக்கப் படாமல், அவற்றின் சாயல் கூட தன் மீது படாமல் நகர்பவன். அதே நேரம், நாத்திகனைத் திருத்தவும் முயல மாட்டான். அதை இந்த ஆத்திகனிடம் விட்டு விட்டு, அவர்கள் போடும் சண்டையைப் பார்த்த வண்ணம் சிரித்தபடியே சென்றிடுவான்.//
என்னை மாதிரி! :-D
//ஆத்திகன் மதங்களால் கட்டுண்டு மயங்குபவன், ஜி.ரா. சொன்னது போல. நாத்திகன் மதங்களால் நசுக்குண்டு வெறுப்பவன்.
மெய்ஞானி மதங்களால் பாதிக்கப் படாமல், அவற்றின் சாயல் கூட தன் மீது படாமல் நகர்பவன்.//
SK,
மிக அருமையான விளக்கம். மீன்டும் SK என நிருப்பித்துள்ளீர்கள்.
//நாத்திகனைத் திருத்தவும் முயல மாட்டான். //
ஏன் ஆத்திகன் திருந்தக் கூடாதா? (பல பேருக்கு நன்மை ஏற்படும்)
சரி என்னுடைய அடுத்த கேள்வி,
இதில் நீங்கள் யார்?
//இந்தச் சண்டையில், ஒருவரும் அதைப் பற்றியே குறிப்பிடவில்லை!!
//
'இந்தப் பாடலை இராகவன் ஏற்கனவே தன் பதிவில் சொல்லிவிட்டாரே' - இது தான் எனக்கு அந்தப் பாடலைப் படித்தவுடன் தோன்றிய எண்ணம். அப்புறம் உங்கள் கதையைப் பற்றிப் பேசப்போக அந்தப் பாடலைப் பற்றிய எண்ணம் ஓடவில்லை.
"நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால்
நாயைக் காணோம்"
என்பது ஒரு சிலேடைத் தொடர்.
கல்லிலே கடவுளையும் காணலாம்
கல்லையும் காணலாம் தானே.
உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். எல்லாம் நன்மைக்கே என்று எந்தச் செயலையும் நினைப்பவர்களுக்கு எதுவுமே துக்கம் தராது.
நீங்கள் அமெரிக்கவில் வாழ்கிறீர்கள் போலிருக்கிறது. ஆக வங்கியில் காசு இல்லை என்பது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை.
ஓவர்ட்ராப்ட் இருக்கும், கிரடிட் அட்டைகள் இருக்கும் எத்தனையோ தீர்வுகள் இருக்கும். இருந்தும் நீங்கள் அவற்ரையெல்லாம் கருதவில்லை.
முருகனருள் கிடைக்கிறது. ஏதோ அலட்டுகிறேன் போலிருக்கிறது. போதும்.
உங்களுக்கு கிட்டாத பட்டமா, இ.கொ.?
இன்று முதல் 'மெய்ஞானி' என்னும் பட்டமும் அளித்தோம்!
சிரித்து வாழ்வீர்!
நன்றி!
நீங்களாவது மருத்துவர். அதனால் 'மெய்'ஞானம் கொண்டவர். அதனால நீங்க மெய்ஞானி. நான் எதோ விளையாட்டுக்கு சொல்லப் போக நீங்க வேற......
இதில் நான் யார் என்ற கேள்வியைத்தான் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், சிவபாலன்!
நிச்சயமாக, நாத்திகனும் இல்லை; மெய்ஞானியும் இல்லை.
இன்னும் நிகழ்பவை எல்லாம் நல்லதற்கே என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்திகன்;
ஆனால் அதே நேரத்தில், மதங்களால் வரும் மயக்கங்களுக்கு உணர்ச்சிவசத்தால் ஆட்படாதவன் ;
இன்னும் மதத்தோடு உறவு கொண்டவன். மதிப்பவன்.
இதுதான் என் ஒளிவு மறைவற்ற, பூசி மெழுகாத பதில்.
'அல்லன' என வருபவைகளை, சொல்பவைகளை எல்லாம் அகற்றிடத் தயங்காதவன் என்பதால்தன் , மே.....லே அப்படிப் போட்டிருக்கிறேன்.
வாங்க, வாங்க, ஜெயபால்!
முதல் வருகைக்கு நன்றி.
நான் வெற்றிக்கு சொன்ன பதிலில் பணம் கிட்டியது முருகனருள் அல்ல, அந்த ஆசிச் சொற்கள், ஆறுதலை அளித்த அந்த நேரம், என் மடைமையைப் போக்கிய நேரம் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.
அமெரிக்காவில் காலை நேர அவசரமும் தெரிந்திருக்கும் உங்களுக்கு!
உங்கள் கருத்துக்கு நன்றி!
அடிக்கடி சந்திப்போம்!!
என்ன அப்படி சொல்லிட்டீங்க, இ.கொ.!
உங்களோட "எதிலும் குணம் காணும் பாங்கு"க்கு நான் ரசிகன்!
நான் 'மெய்' ஏதோ கொஞ்சம் அறிந்தவன்; ஞானியல்ல!
SK அய்யா,
//வருகைக்கு நன்றி, வெற்றி!
நீங்கள் சொன்னது போல அதில் ஒன்றும் முருகன் செயல் இல்லைதான்!//
அய்யய்யோ, நான் சும்மா தமாஷாகச் சொன்னேன். உங்களின் இறை நம்பிக்கையை கேள்விக்கு இடமாக்கவில்லை. ஆண்டவன் இல்லாமல் அணுவும் அசையாது எனும் நம்பிக்கை உள்ளவன் தான் நானும்.
பழனிக்கு ஒரு விசிட் அடிச்சமாதிரி இருக்கு. ஆத்தி, இது ஆத்திகம்!!
//இதில் என்ன ஒரு வசதி என்றால், ஆத்திகம், நாத்திகம் இரண்டின் மூலமாகவும் மெய்ஞானத்தை அடைய முடியும்!
இதை அறியாமல் வாதப் பிரதிவாதங்கள் செய்பவரைக் கண்டுதான் மெய்ஞானி சிரிக்கிறான்.//
...விளக்கம் திருப்திகரமாக இல்லை ...
ஐயா எஸ்கே,
வயதை ஓரளவு யூகிக்க முடிவதால் இந்த 'ஐயா' புரோம்சன். திரு தருமி, திரு ஞானவெட்டியான் ஆகியோர்களுக்கு ஏற்கனவே 'ஐயா' பட்டம் கொடுத்தாகிவிட்டது. அவர்களும் அதை அன்புடன் ஏற்றுக்கொண்டனர்.
விசயம் அதுவல்ல... ஆத்திகன் - நாத்திகன் என்பதற்கு உங்கள் பார்வையில் எனக்கு விளக்கம் தேவைப்படுகிறது. எனக்கு தெரிந்து நாத்திகர் எல்லோரும் இறைக்கொள்கை மறுப்பாளர் என்றே பலரும் சொல்லுகின்றனர். ஆத்திகர்களின் பார்வையில் நாத்திகர்கள் கெட்டவர்கள்.
அதாவது புத்தர், சமணர் எல்லோரும் நாத்திகர்கள் என்றே போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலும் சொல்லப்போனால், இறைக் கொள்கை மறுப்பாளர் நாத்திகர் என்றால் ஒரு இறைக்கொள்கையை மறுத்து வேறு ஒன்றை தோற்றுவிப்பவரும் நாத்திகரே. அந்த வகையில் எல்லா மதத்தலைவர்களுக்கும் 'நாத்திகன்' என்ற பட்டம் பொருந்தும். ஏன் இந்துமத அஸ்திவாரம் ஆதிசங்கரரே உருவ வழிபாட்டை புறந்தள்ளிவிட்டு பிரம்மத்தை நினைக்க செல்வதால் அவரும் நாத்திகரே. பகவத் கீதை முற்றிலும் பேசுவதும் நாத்திகமே ... இந்த பல்வேறு என் தனிப்பட்ட கறுத்துக்களினால் ஆத்திகர்கள் என்பவர் எவரும் இல்லை எல்லோருமே நாத்திகர்கள் என்கிறேன் நான்.
நீங்கள் சொல்லுங்கள் ஆத்திகர்கள் எந்தவிதத்தில் உயர்ந்தவர் ? ஆத்திகர் - நாத்திகர் இதில் யாருக்கு நீங்கள் முதலிடம் கொடுக்கிறீர்கள் ?
கோவி. கண்னன்,
நீங்களாகவே பல நிகழ்வுகளை முடிவு செய்து கொண்டு, என்னைக் கேட்கிறீர்கள்!
"ஆத்திகர்களின் பார்வையில் நாத்திகர்கள் கெட்டவர்கள்"
"எல்லா மதத் தலைவர்களும் நாத்திகர்களே"
"எல்லோருமே நாத்திகர்கள்தான்"
இதெல்லாம் நீங்கள் சொல்வது!
என் கருத்தை நான் வெளிப்படையாக முன்னமே சொல்லிவிட்டேன்.
இதில் யாரும் உயர்ந்தவர் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை.
நாத்திகர் ஆத்திகர் இருவருமே மெய்ஞானத்தை அடையலாம் என்பதுதான் நான் சொல்லுவது!
அப்படி இருக்க, யார் உயர்ந்தவர் எனக் கேட்பதன் பொருள் என்ன?
ஆத்திகன் நிகழ்வதெல்லாம் 'நல்லது' எனவும், நாத்திகன் 'நல்லது கெட்டது' எனப் பிரித்தும், மெய்ஞானி 'நல்லது, கெட்டது என்றெல்லாம் ஒன்றும் இல்லை எல்லாமே, 'நடபது'தான் என்கிறான்' எனச் சொல்லியிருந்தேன்.
அதன்படி, ஆத்திகன் நல்லது என்பதையும் தாண்டி நடப்பது எனவும், நாத்திகன், பிரித்துப் பார்த்து நேரம் கழிப்பதை விடுத்து, நடப்பதைப் புரிந்து கொண்டாலும், இருவருமே மெய்ஞானத்தை அடைய முடியும் என்றும் சொல்லியிருந்தேன்
அவரவர் நம்பிக்கையின்படி, அவரவர் ஆத்திகர்தான்!
மற்ற மதத்தவர்க்கு, அவர் நாத்திகர் ஆக மாட்டார்.
திரு. ஜோஸப் கிருத்தவராகவும், இறையன்பன், ஆசிப் மீரான் முதலானோர் இஸ்லமியராகவும்தன் பார்க்கப்படுவரே அன்றி, நாத்திகர் ஆக மாட்டார்!
மத நல்லிணக்கம் தெரிந்த எவரும் அவர்களை நாத்திகர் எனச் சொல்ல மாட்டார்கள்.
ஆத்திகர்களின் பார்வையில், கடவுள் மறுப்பாளிகள் "அறியாதவராகக்" கருதப் படுவரே அன்றி, "கெட்டவர்" எனக் கொள்ளமாட்டார்.
வன்முறையில் ஈடுபடும் போதுதான், அவர்கள் மாறாகக் கருதப் படுவர்.
ஒரு ஆத்திகன் வந்து, ஒரு நாத்திகனை இழுத்து நெற்றியிலே திருநீறோ, கழுத்தில் சிலுவையோ, இல்லை தலையில் தொப்பி அணிவித்து நமஸ் செய்யவோ வற்புறுத்துவதில்லை.
ஆனால், கடவுள் மறுப்பு என்னும் பெயரில், கோயில் இடிப்[பு, பூனூல் அறுப்பு, குடுமி அறுப்பு என்றெல்லாம் போகும்போதுதன், நாத்திகர்கள் சமூகவிரோதிகள் ஆகிறார்கள்.
மற்றபடி, எனக்கு நிறையவே நாத்திக நண்பர்கள் இருக்கிறார்கள்; ஒரு சிலர் உயிர்த்தோழர்கள் கூட!
நான் இருவரையும் சமமாகவே பார்க்கிறேன், ஒருவர் கருத்தில் மற்றவர் தலையிடாத வரை!
மேற்கூறிய அனைத்தும் என் கருத்து மட்டுமே!!
-
//ஏன் இந்துமத அஸ்திவாரம் ஆதிசங்கரரே உருவ வழிபாட்டை புறந்தள்ளிவிட்டு பிரம்மத்தை நினைக்க செல்வதால் அவரும் நாத்திகரே.//
கோவி.கண்ணன் ஐயா. என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? கீழே உள்ள சுட்டியில் இருக்கும் பதிவில் வந்தப் பின்னூட்டங்களைப் பாருங்கள். நீங்கள் சொல்லியிருப்பது சரியான கருத்து தானா என்று நீங்கள் மறுபரிசீலனை செய்வதற்கு அது உதவும்.
http://bgtamil.blogspot.com/2006/06/16.html
//பகவத் கீதை முற்றிலும் பேசுவதும் நாத்திகமே //
கோவி. கண்ணன் ஐயா. இந்தக் கருத்து என் தலைக்கு மேலே போகிறது (Going Over my Head). உங்களின் 'ஆத்திகம், நாத்திகம்' வரையறைப்படியே பகவத்கீதை முழுக்க முழுக்க ஆத்திகம் தான் பேசுகிறது. ஏன் நீங்கள் அது முற்றிலும் பேசுவது நாத்திகமே என்று நினைக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
//மேற்கூறிய அனைத்தும் என் கருத்து மட்டுமே!!//
ஹை! ஆசை தோசை அப்பளம் வடை! உங்க கருத்து மட்டுமாமே. இது என் கருத்தும்தான்.
Jokes apart, நீங்கள் சொல்லிய கருத்துகளை நான் முழுவதுமாக வழி மொழிகிறேன்.
அடடா! அன்னியமா இல்லாம, நெருங்கி வந்து கருத்து சொல்லியிருக்கீங்களே, ரமணி.!
மிக்க நன்றி!
அப்படியே அந்தத் திருப்புகழையும் பார்த்துட்டு சொல்லுங்க!
//கோவி. கண்னன்,
நீங்களாகவே பல நிகழ்வுகளை முடிவு செய்து கொண்டு, என்னைக் கேட்கிறீர்கள்!
"ஆத்திகர்களின் பார்வையில் நாத்திகர்கள் கெட்டவர்கள்"
"எல்லா மதத் தலைவர்களும் நாத்திகர்களே"
"எல்லோருமே நாத்திகர்கள்தான்"//
திரு. எஸ்கே,
நான் சொல்லவந்தது நாத்திகர் என்பது இறை மறுப்பாளர் என்ற பதம் ஆகாது என்பதுதான். இறை நம்பிக்கையாளர்கள் தங்களை உயர்த்திக் காட்டுவதற்க நாத்திகர் என்ற சொல்லை வைத்திருக்கிறார்கள். இறை என்ற எந்த இறை என்ற கேள்வி வரும். பகுத்தறிவு வாதிகளை நாத்திகர் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல
//
திரு. எஸ்கே,
நான் சொல்லவந்தது நாத்திகர் என்பது இறை மறுப்பாளர் என்ற பதம் ஆகாது என்பதுதான். இறை நம்பிக்கையாளர்கள் தங்களை உயர்த்திக் காட்டுவதற்க நாத்திகர் என்ற சொல்லை வைத்திருக்கிறார்கள். இறை என்றால் எந்த இறை என்ற கேள்வி வரும். பகுத்தறிவு வாதிகளை நாத்திகர் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல...!
//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? கீழே உள்ள சுட்டியில் இருக்கும் பதிவில் வந்தப் பின்னூட்டங்களைப் பாருங்கள். நீங்கள் சொல்லியிருப்பது சரியான கருத்து தானா என்று நீங்கள் மறுபரிசீலனை செய்வதற்கு அது உதவும்.
http://bgtamil.blogspot.com/2006/06/16.html
//
பார்த்தேன், அதில் காஞ்சி பிலிம்ஸ் கேட்ட கேள்விக்கு விளக்கம் இல்லாமல் முற்று பெறாமல் இருக்கிறது.
கோவி. கண்ணன். நான் பார்க்கச் சொன்னதை எல்லாம் விட்டுட்டு அதுல காஞ்சி பிலிம்ஸோட கடைசிப் பின்னூட்டத்திற்கு நான் இன்னும் பதில் சொல்லாம இருக்கிறத மட்டும் சொல்றீங்களே ஐயா? அதுல நானும் அவரும் நிறைய பேசியிருக்கோமே? அதுல நீங்க சொன்ன ஆதிசங்கரர் - உருவ வழிபாடு பத்தி வரலையா? அந்த விளக்கம் போதுமா? இல்லை இன்னும் வேணுமா?
இன்னொரு பின்னூட்டமும் போட்டிருந்தேன் இந்தப் பதிவுல. அது இன்னும் வரலை. ஏன்னு தெரியலை. நீங்க பகவத்கீதையும் முற்றிலும் நாத்திகம் பேசுதுன்னு சொல்லியிருக்கீங்க. அது எனக்குப் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?
கோவி.கண்ணன் ஐயா. காஞ்சி பிலிம்ஸின் கடைசிப் பின்னூட்டத்திற்கும் என் மறுமொழியினைக் கூறிவிட்டேன். இப்போது பார்த்துச் சொல்லுங்கள். விளக்கம் முற்றுப் பெற்று உள்ளதா இல்லையா என்று.
எந்த இறையாயினும், ஏதோ ஒரு இறையை நம்புபவர் அனைவருமே ஆத்திகர் என்றே உணரப்படுவர், கோவி.
தத்தம் இறையை உயர்ந்தவர் எனக் காட்ட வேண்டி, அடுத்தவரைப் பழிப்பரேயன்றி, நாத்திகர் எனத் தூற்ற மாட்டார்.
'அஸ்தி' = இருக்கிறது எனச் சொல்பவர் ஆஸ்திகர்=ஆத்திகர்
'ந அஸ்தி' இருகிறது என இல்லை' என்பவர் நாஸ்திகர்=நாத்திகர்.
எனவே, நாத்திகர் என்றால், இறை மறுப்பாளர் என்றே பொருள் வரும்.
பகுத்தறிவுவாதிகளை நாத்திகர் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்று எதனை வைத்துச் சொல்கிறீர்கள்?
எனக்கும் கூட அது விளங்கவில்லை, குமரன், எதனால் கீதையும் நாத்திகம் பேசுகிறது என்று சொல்கிறாரென்று!
அதற்கு அவர் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டும் குழப்பமாகவே இருக்கிறது.
கோவி., 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!' என்னும்போது கடவுளால் ஒன்றும் செய்ய இயலாது என்ப் பொருள் கொண்டு சொல்கிறீர்கள்!
ஆனால், உண்மையில், சொல்பவன் யார்? கடவுள்!
என்ன சொல்கிறான்;-- ஒரு கடமையைச் செய்கின்ற அளவில் மட்டுமே உனக்கு உரிமை இருக்கிறது.
அது எப்படிப்பட்ட பலனைத் தர வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன் என்று!
இதனை அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்னும் மூன்று வகையில் வைத்துப் பார்த்தாலும் இறயாண்மைன் தீர்க்கம் தெரியவரும்.
அத்வைதம்: நீ, நான் எல்லாமே ஒன்று என்பதால், செய்பவன், பலனைத் தருபவன், பலனை அனுபவிப்பவன் எல்லாமே நான் என்கிற நீதான்!
த்வைதம்: நான் அடியவன், எனக்கு செய்ய மட்டுமே உரிமை, பலனைத் தருபவனும், அனுபவிப்பனும் நீயே! உனக்கே நாம் ஆட்செய்வோம்; உற்றோமே ஆவோம்!
விசிஷ்டாத்வைதம்: இருவேறு நிலலைகளில் நின்று, செய்யும் போது, தாசனாகவும், அளிக்கும்போது எஜமானாகவும் நீயே ஜீவாத்மாவை மாற்றுகிறாய். அப்படிப்பட்ட 'நீ' என்ற ஒருவன் எப்போதுமே நீக்கமற உண்டு,... என்னைத் தவிர்த்து!.
எனவே, கீதை நாத்திகம் பேசுகிறது என்னும் உங்கள் வாதம் தவறு.
நன்றி.
உங்களுக்கும் சேர்த்துத்தான் குமரன்!
//கோவி., 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!' என்னும்போது கடவுளால் ஒன்றும் செய்ய இயலாது என்ப் பொருள் கொண்டு சொல்கிறீர்கள்!
ஆனால், உண்மையில், சொல்பவன் யார்? கடவுள்!
என்ன சொல்கிறான்;-- ஒரு கடமையைச் செய்கின்ற அளவில் மட்டுமே உனக்கு உரிமை இருக்கிறது.
அது எப்படிப்பட்ட பலனைத் தர வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன் என்று!
//
இது நீங்களாவே சொல்லும் விளக்கம். இதற்கு ஏற்கனவே விளக்கம் எழுதிவிட்டேன்.
'எது நடந்ததோ நன்றாகவே நடந்தது' - கீதையின் நடைமுறைத் தத்துவம்... நடந்ததை மாற்ற என்னால் (கட்வுளால்) முடியும் என்று சொல்லவில்லை.
'நடப்பதெல்லாம் நன்மைக்கே' - பாமரத்தத்துவம்
இந்த இரண்டிற்கு எதாவது வேறுபாடு உண்டா ?
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ... ஏற்கனவே தீர்மாணிக்கப் பட்ட ஒன்று நடப்பதைப் பற்றி கீதை பேசுகிறது,
இதையே பாமரர்களும்
'நடப்பது நம் கையிலா இருக்கிறது ... முயற்சி திருவிணை ஆக்கலாம் என்று சொல்கிறார்கள்.
மேலும் எழுதலாம் நேரம் போதவில்லை (நன்றாகவே நடந்தது விட்டது)
மனிதனாக பேசினால் அந்த தத்துவம், நாத்திகம் எனப்படுகிறது - புத்த தத்துவம்
மாமனிதனாக அதாவது ஞானி என்ற அடைமொழியில் பேசினால் அது ஆஸ்திகம் எனப்படுகிறது - சங்கரரின் பஜகோவிந்தம்
இரண்டும் பேசுவது ஒன்றே ... நாத்திகம் நேரிடையாக சொல்வதை ஆத்திகம் அகப்பொருளுடன் இணைத்து குழப்பியே மருந்தாக கொடுக்கிறது. இந்த குழப்பிய மருந்தை மட்டும் புரிந்து கொள்பவர்கள், கைவைத்தியத்தை புரிந்து கொள்வதில்லை. அதனால் குழப்பிய மருந்து தான் உயர்ந்தது என்று சொல்கிறார்கள். நான் குழப்பிய மருந்தை குறைசொல்லவில்லை.
என்னைப் பொருத்தவரை ஆத்திகம் நாத்திகம் இரண்டும் சொல்வது ஒன்றே ... இதில் பக்தியாளர்கள் குழப்பத்தின் காரணமாகவும் இறை அச்சம் காரணமாகவும் பக்தி கண்ணை மறைப்பதால் தெளிவதே இல்லை. இறை நிந்தனை அது இது என்ற இட்டுகட்டுக்களை கட்டி யதார்தம் பேசுபவர்களை நாத்திகர்கள் என்று நகைக்கிறார்கள். இந்த 'நான்' என்பதை உணராதவர்கள் ஆஸ்திகர்களே.
நாத்திகம் தவறான வாதம் என்ற மனநிலையில் இருப்பதால் கீதை நாத்திம் பேசவில்லை என்று குமரனும் நீங்களும் கூற முற்படுகிறீர்கள். ஆத்திகமும் நாத்திகமும் ஒன்றை நோக்கியே போகும் வேறு வேறு தத்துவங்களே. இதில் ஒன்று மற்றொன்றை காட்டிலும் உயர்ந்ததன்று.
//இதில் அற்புதங்களோ, நற்செயல்களோ கிடையாது.
//
படித்தவுடன் அது புரிந்துவிட்டது, ஒரு சாதாரண நிகழ்வில் குமரனை பார்த்த உங்கள் உள்ளத்தில் அவன் தன் சிக்கண்டியை விட்டுவிட்டு அமர்ந்திருப்பானாக!
// //எழுதுவீங்கதானே ஜீவா?//
ஆமாங்க, நான் வெண்பா வாத்தி இல்லை - வெண்பா ஜீவா பதிவுகளை படித்து கத்துக்கவேண்டியதுதான்....
இப்போது நீங்கள்தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்று நீங்களாகவே கற்பித்துக்கொன்டு மயங்குகிறீர்கள்1
நானோ, குமரனோ ஆத்திகம்தான் உயர்ந்தது என்று எப்போதும் சொல்லவில்லை.
//என் கருத்தை நான் வெளிப்படையாக முன்னமே சொல்லிவிட்டேன்.
இதில் யாரும் உயர்ந்தவர் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை.//
இவை இரண்டும் ஒன்றை நோக்கியே போகும் இரு நிலைகள் என்பதையும் நான் ஏற்கேனவே சொல்லிவிட்டேன்.
இதன் மூலம் உங்களுக்கு திருப்தி என்றால், எனக்கு மகிழ்ச்சியே!
அவரவர் மகிழ்ச்சியாக இருக்க அவரவர்க்கு எது சரி எனப் படுகிறதோ, அதைப் பின்பற்றுவதில் ஒன்றும் தவறில்லை, கோவி. கண்னன்.
உங்கள் வழி தவறு என நானோ, குமரனோ சொல்லவில்லை.
ஆனல், நீங்கள்தான் எங்களைக் குறை கூறுவதிலேயெ குறியாய் இருக்கிறீர்கள்1
இது புரிந்தால் சரி!
உளமார்ந்த ஆசிக்கு நன்றி, ஜீவா!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மதியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
வாரியார் சுவாமிகள் எல்லாச் சொற்பொழிவுகளிலும் இறுதியில் பாடும் பாடல்...
100.
vaazththukkal
//இப்போது நீங்கள்தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்று நீங்களாகவே கற்பித்துக்கொன்டு மயங்குகிறீர்கள்//
நான் அப்படிச் சொல்லவில்லை. அந்த பின்னூட்டம் ஒரு தவறான புரிதல் என்றால் அது என் எழுத்து பொருள் கூறுவதில் நேர்ந்த பிழையாக இருந்துவிட்டு போகட்டம். அந்த கடைசி பின்னூட்டம் போட்டதே,
குற்றச் சாட்டுப் போல் கீதை நாத்திகம் பேசுகிறாத ? என்ற கேள்வியில் நாத்திகம் தவறான பாதையை காட்டுவது போல் நீங்கள் உணர்ந்து விட்டதாக ( நானே எண்ணிக் கொண்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்) நினைத்ததன் காரணமாக எழுதினேன். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள்
//வாரியார் சுவாமிகள் எல்லாச் சொற்பொழிவுகளிலும் இறுதியில் பாடும் பாடல்...//
இந்த விவாதத்தையும் முடியுங்கள் என்று சொல்லாமல் சொன்னதற்கு நன்றி, குமரன்!!
:))))
ஒரு முல்லா கதை இன்று எனக்கு மயிலில் வந்தது.
அதனைப் பதிந்து விட்டு முடித்து விடுகிறேன்!1
வணக்கம் எஸ்.கே.
இறைவன் உங்களுக்கு பாட்டியாக காட்சியளித்தார். எனக்கு ஒரு எண்ணம் கொடுத்து உதவினார்.
எனக்கு ஏற்பட்ட இறை அனுபவங்களில் ஒன்று இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு நாள் காலை, வீட்டின் பின்புறத்திற்கு (பேட்டியோ வழியாக கராஜ் கதவு திறந்து செல்ல வேண்டும்) குப்பை மூட்டையை போட வெளியேறினேன்.
அப்போது என் இரண்டு வயது மகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். நான் திரும்பி வரும் போது அவள் வீட்டின் கதவை தாள் போட்டு விட்டாள்.
அது ஒரு கண்ணாடி ஃப்ரென்ச் கதவு. அவளிடம், எத்தனையோ முறை கதவை திற என்று சொல்லியும் அவளுக்கு புரியவில்லை.
என் கணவர் அன்று சில நிமிடங்களுக்கு முன் தான் வேலைக்கு சென்றார். வீட்டிலோ ஒரே சாவி தான். அது என்னிடம் தான் இருக்கும். அப்போது வீட்டில் இருந்தது.
கண்ணாடி கதவு வழியாக தொலைக்காட்சி மேலே பார்த்தால், என் கணவருடைய செல் ஃபோன். அன்று அதை மறந்து வைத்து விட்டார்.
அவர் அலுவலகம் செல்ல 40 நிமிடங்களாவது ஆகும். கணவரை அழைத்தாலும், கதவை (அ) கண்ணாடியை உடைக்கத் தான் வேண்டும். கண்ணாடி போனாலும் பரவாயில்லை. திட்டு யாரு வாங்குவது :).
என் மகளிடம் மீண்டும் மீண்டும் கத்தினேன். அவளுக்கு புரியவேயில்லை. செய்கையிலும், தாளிடம் கை வைத்து, இப்படி தாள் திற என்றும் பல முறை கூறினேன். எடுபடவில்லை. BP தான் உயர்ந்தது.
என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு, பேட்டியோ நாற்காலியில் அமர்ந்தேன். அன்று தெளிவான நீல வானம். வானை நோக்கி, இறைவா எனக்கு உதவு என்று வேண்டினேன் (முருகன் இஷ்ட தெய்வமானாலும் "இறைவா" என்று தான் அழைத்தேன்).
அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. சமையலரைக்கும் பேட்டியோ வழியாக கதவு இருந்தது. ஆனால் அதுவும் தாளிட்டு இருந்தது(ஒரு முறை கூட அந்த கதவை திறந்தது கிடையாது).
ஆனாலும் அதற்கு, சாவி சந்து (கி ஹோல்) இருந்தது. உடனே கராஜ் சென்றேன். அங்கு ஒரு சிறிய கம்பி தென்பட்டது. அதை வைத்து கதவை திறக்க முயன்றேன். முடியவில்லை.
சாவி சந்தை உற்றுப் பார்த்தேன், பின் கம்பியை U வடிவில் மடக்கி திரும்பவும் முயன்றேன். திறந்து விட்டது !. என்னவென்று சொல்ல.ஓடி போய் என் மகளை கட்டிக் கொண்டேன். பின்பு தான் கண்ணீருடன் இறைவனுக்கு நன்றி சொன்னேன். அந்த ஒரு நிமிடன் நான் இறைவனிடம் முறையிட்டதால், இப்படி ஒரு வழியை உடனே காண்பித்தார். இது என் வாழ்வில் மறக்க முடியாத இறை அனுபவம்.
சற்று நீளமாகிவிட்டது. மன்னிக்கவும்.
நன்றி!
இறை அனுபவம் நரியா சொன்ன மாதிரி ஒரு உணர்வு. உணர்ந்தவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்.
சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் கீதா சாம்பசிவம்.
நம்பிக்கியில் தான் உலகே இயங்குகிறது.
அவரவர் அளவின்படி இன்பமோ துன்பமோ அமைகிறது.
முதன்முரை வந்து சொன்னதற்கு நன்றி.
Post a Comment