Tuesday, June 20, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"அன்பு வலைப்பூ நண்பர்களே!
வணக்கம்.
ஆத்திகம் எனத் தலைப்பு வைத்தும், இன்னும் ஒரு பதிவும் அது பற்றிப் போடவில்லையே என ஒரு குறை மனத்தில் இருந்து கொண்டே வந்தது!
நண்பர்கள் குமரனும், இராகவனும், செல்வனும் வேறு திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்!
திருப்புகழுக்குப் பொருள் சொல்லேன் எனவும் சொன்னார்கள்!
திருப்புகழுக்கு பொருள் சொல்லுவது என்பதை விடுத்து, அப்பொருள் வருமாறு எளிய நடையில், கவிதையாகச் சொல்லலாம் என ஒரு கருத்து பதிந்தது, மனத்தில்!
ஆகவே, 'அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி' முழு முதற்கடவுளாம் விநாயகனின் திருப்புகழோடு இதனைத் தொடங்குகிறேன்.
குற்றம், குறை எதுவானாலும், நடை கடினமாக இருந்தாலும், உடனே சொல்லி என்னைத் திருத்துமாறும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!

1. கைத்தல நிறைகனி... [விநாயகர் துதி]


ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன......தனதான

.......பாடல்......

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்

கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை

மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.

.....விளக்கம்.....

//கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்//


இருகைகளில் நானேந்தி மனமுவந்துஅளிக்கின்ற
பழம், அப்பம், பொரி அவல் இவையனைத்தையும்,
துதிக்கையால் வாரி விருப்பமுடன் உண்ணுகின்ற
வேழமுகத்தானின் திருவடியை மிக விரும்பி,

//கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்//


இறைநூலைக் கற்கின்ற அடியவரின் சித்தத்தில்
நிறைவாக நீங்காது வாழ்கின்ற தெய்வமே!
குறைவின்றித் தருகின்ற கற்பகத் தருவே!- என
நிறைவாக உனை வாழ்த்த, வினையெல்லாம் விரைந்தோடும்.

//மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை//


ஊமத்தை மலருடனே, பிறைநிலவும் சடை தரித்த
அழிக்கின்ற தொழில் செய்யும் சிவன் மகனும்,
போருக்குச் செல்கின்ற வலுவான தோளுடையவனும்,
மதயானை போல்கின்ற பலத்தினை உடையவனும்,

//மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே//


மத்தளம் போலொரு பெரு வயிறு படைத்தவனும்,
உத்தமியாம் பார்வதியாள் செல்வனாம் கணபதியை
தேன் துளிர்த்துப் பூத்திருக்கும் புதுமலர் கொண்டு
நானிங்கு வணங்கிப் பதமலர் பணிவேனே!

//முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே//


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் நூல்வகையை
பயில்வதற்கு மனமிரங்கி, மலைகளிலே முதன்மையான
மேருவென்னும் மாமலையில், முதன்முதலில் எழுதிவைத்த
மூத்தவனே! முதன்மையானவனே! முழுமையானவனே!

//முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா//


நின்னை வணங்காமல், திரிபுரத்தை அழிக்க எண்ணி
போர்புரிய விரைந்துசென்ற சிவனாரின் திருத்தேரின்
முன்னச்சு முறிந்து, பொடிப்பொடியாய் போகச் செய்த
தன்நிகரில்லா வீரனே! தீரனே! சூரனே!

//அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி//


தினைப்புனத்தில் குறத்தியினைத் தேடிச்சென்று
அவள்மீது மையல்கொண்டு மனம் வருந்தி
நடைநடையாய் நடந்து சென்ற தம்பியாம்
சுப்பிரமணியன் துயர் தீர ஆனையாய் முன் தோன்றி.

//அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.//


குறமகளைப் பயமுறுத்தி சிறியவனிடம் செல்லவைத்து
எதிர்த்து வந்த அனைவரையும் திறத்தாலே வெருளவைத்து
அப்போதே அங்கேயே அவளை இளையவனுக்கு மணம் முடிக்க
அருள் செய்த பெருமகனே! பெரியவனே! பெருமாளே!

52 பின்னூட்டங்கள்:

G.Ragavan Wednesday, June 21, 2006 12:45:00 AM  

திருப்புகழைத் தித்திக்கும் செந்தமிழில் அருணகிரி செப்பியதைத் தீந்தமிழில் பைந்தமிழில் எளிமையாக விளக்கத் தொடங்கியிருக்கின்றீர்கள். முருகப் பெருமான் திருவருளால் அனைத்தும் சிறக்கட்டும்.

G.Ragavan Wednesday, June 21, 2006 12:47:00 AM  

// //முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே//

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் நூல்வகையை
பயில்வதற்கு மனமிரங்கி, மலைகளிலே முதன்மையான
மேருவென்னும் மாமலையில், முதன்முதலில் எழுதிவைத்த
மூத்தவனே! முதன்மையானவனே! முழுமையானவனே! //

இங்குதான் ஒரு ஐயம். இந்த முற்படு கிரி என்பதைப் பொதிகை என்றுதான் நான் இதுகாறும் நினைத்துக் கொண்டு வந்திருந்தேன். முருகப் பெருமான் திருவருளால் தமிழ் தோன்றியது பொதிகையில்தானே.

நாகை சிவா Wednesday, June 21, 2006 1:59:00 AM  

"ஆனைமுகத்தானே போற்றி!"

அருமை அருமை. மிகவும் அருமையாக உள்ளது. வாழ்க நீ. வளர்க உன் ஆன்மிக தொண்டு.

பாடலுக்கு ஆன விளக்கம் மிகவும் அருமை. இது நீங்கள் கொடுக்கும் விளக்கமா. இல்லை வேறு எவரும் கூறும் விளக்கமா?

//மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை//

இந்த வரிகளை கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா? மதியம் என்பது இங்கு எதை குறிக்கிறது?

மணியன் Wednesday, June 21, 2006 2:59:00 AM  

ஆகா, அருமையான துவக்கம், அழகான விளக்கம். அருணகிரி ஒரு பாடலிலேயே எத்தனை கதைகளை கொண்டுவந்து விட்டார்... மகாபாரதம் எழுதியது, திரிபுரம் எரித்தவன் தேரச்சு முறிந்தது, குறவள்ளி முருகன் காதலில் உதவி புரிந்ததென்று.
தொடருங்கள்.

குமரன் (Kumaran) Wednesday, June 21, 2006 6:24:00 AM  

மிக மிக அருமை எஸ்.கே. திருப்புகழுக்குப் பொருளுரைக்கத் தொடங்கியதற்கு மிக்க நன்றி. அப்படியே இந்தப் பாடலை எம்.எஸ். பாடியிருக்கிறாரே அந்தச் சுட்டியையும் கொடுத்துவிட்டால் மிக நன்றாக இருக்கும். முடிந்தால் கரிமுகன் படத்தையும் போடுங்கள்.

திருப்புகழ் அமுதம் என்றாலும் முதலில் படிப்பவர்களுக்கு அது கடினமாக இருப்பது போல் தோன்றும். அந்த நினைப்பை மாற்றுவதற்காக பதம் பிரித்து எழுதினால் படிப்பவர்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும். அசைக்காக அப்படியே எழுதுவதை விட பதம் பிரித்து எழுதுவதே இக்காலத்தவர்க்குத் திருப்புகழ் போன்ற பழந்தமிழ் நூற்கள் மேல் ஆர்வம் உண்டாக்குவதற்குச் சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) Wednesday, June 21, 2006 6:24:00 AM  

தொடர்ந்து விருந்து கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏமாற்றிவிடாதீர்கள்.

SK Wednesday, June 21, 2006 9:02:00 AM  

முன்னதாக வந்து, முழுமையாகப் பாராட்டி, வாழ்த்தியதற்கு நன்றி, இராகவன்!

SK Wednesday, June 21, 2006 9:18:00 AM  

திருப்புகழ் பற்றிய சில விளக்க நூல்களைப் படித்து, என் நடையில் சற்று மாற்றிக் கொடுக்க முனைந்திருக்கிறேன், நாகை.சிவா.

'மத்தம்' என்பது ஊமத்தம் பூக்களையும், மதியம் என்பது நிலவையும் குறிக்கும் சொற்கள்!

'மாசில் வீணையும், மாலை மதியமும்' என அப்பரும் பாடியிருக்கிறார்.

வேறொரு பாடலுக்கான விளக்கத்தில், 'மத்தம்' என்பதற்கு, 'கங்கை நீர்' என குமரன் விளக்கம் கொடுத்திருந்தார்.

'ஆனால், நான் புரட்டிய நூல்களில், 'ஊமத்தம்பூ' என்றே போட்டிருந்தது.

சுடலையாண்டி, அங்கு பூக்கும் பூவைத்தானே அணியமுடியும்!

ஊமத்தஞ்செடி இருக்கும் இடமும் அதுவென்பதால், எனக்கு இதுதான் பொருத்தமாகப் பட்டது.

'மற்பொரு திரள் புய' ஒரு தொடராகவும், 'மதயானை' மற்றொரு தொடராகவும் வரும்.

சிலர் இரண்டையும் சேர்த்து பலம் பொருந்தியவன் என்று பொருள் சொல்வார்கள்.

ஆனால், எனக்கென்னவோ, இரண்டையும் சேர்த்துச் சொல்வது சரியாகப் படவில்லை.

வலுவான மற்போர் செய்பவனுக்கு இருக்கும் தோள்களைப் போன்ற புயங்களை உடையவனே என்றும்,

மதயானை போன்ற மூர்க்கத்தனமான வேகத்தை உடையவனே என்றும் சொல்கிறார்.

இதற்கு முந்தைய வரிகளைப் பார்த்தால், அடியவரின் துன்பங்களை விரைந்து வந்து அழிப்பவனே என்பதை 'அடியவர் வினை கடிது ஏகும்' என்று சொல்லியிருப்பதோடு ஒப்பிட்டால் இது விளங்கும்.

பாராட்டுகளுக்கு நன்றி.

SK Wednesday, June 21, 2006 9:20:00 AM  

ஆமாம்! மனனமாகச் சொல்லி வரும்போது கவனிக்காத பொருளெல்லாம் விளங்கும்படி அருணகிரிநாதர் அமைத்திருப்பதை, நானும் உங்களைப் போன்றே வியந்தேன், மணியன்!

nanRi.

SK Wednesday, June 21, 2006 9:27:00 AM  

பாராட்டுக்கு நன்றி.
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்!
இருப்பினும் வெட்கமின்றி, மீண்டும் சொல்கிறேன், குமரன்!
எனக்கு இந்த சுட்டி கொடுப்பது, படம் போடுவது போன்ற செயல்களெல்லாம் செய்யும் வழி தெரியாது!
"செல்வ"முருகனைத்தான் நாட வேண்டும்!! :)).

எளிய செயல்பாட்டு முறையினை 'படிப்படியாக' [!!] யாரேனும் விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

பதம் பிரித்து எழுதுவது பற்றிய தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

அடுத்த பாடலிலிருந்து முயலுகிறேன்.

SK Wednesday, June 21, 2006 9:34:00 AM  

நானும் சற்று யோசித்தேன், இதனை எழுதும் போது.

ஆனால், கந்தபுராணத்தில் 'மேருவைத் தாண்டி தென்புலம் செல் என சிவபெருமான் பணித்த போது, உயர்ந்து நின்ற அம்மலையின் ஆணவத்தை அடக்கிய போது, அம்மலையில் எழுதியதாக வந்தது நினைவிற்கு வந்து என் ஐயத்தை நீக்கியது.

மேலும், 'முற்படு கிரி' எனச் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது, ஆதி மலையான மேருமலைதான் சரியெனவும் பட்டது.

வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள்,இராகவன்.

தி. ரா. ச.(T.R.C.) Wednesday, June 21, 2006 11:47:00 AM  

ஆறுமுகத்தானிடம் சற்று மாறுமுகத்துடன் இருந்த நீர் இப்போது பாருமுகமாகிட்டது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. கவிதை நடை இனிமை, எளிமை, புதுமை,வளமையாகவும் உள்ளது.படிக்க காத்து இருக்கிறோம். உமக்கு முருகன் முன்னேமட்டும் அல்ல பின்னேயும் இருபக்கத்திலேயும் நீக்கமற நிலைத்து நிற்பான்.அன்பன் முருகனைப்பற்றி யார் படினாலும் நான் அழைப்பில்லாமலே வந்து வாழ்த்துவேன் அன்பன் தி ரா ச

G.Ragavan Wednesday, June 21, 2006 12:49:00 PM  

// SK said...
திருப்புகழ் பற்றிய சில விளக்க நூல்களைப் படித்து, என் நடையில் சற்று மாற்றிக் கொடுக்க முனைந்திருக்கிறேன், நாகை.சிவா.

'மத்தம்' என்பது ஊமத்தம் பூக்களையும், மதியம் என்பது நிலவையும் குறிக்கும் சொற்கள்!

'மாசில் வீணையும், மாலை மதியமும்' என அப்பரும் பாடியிருக்கிறார்.

வேறொரு பாடலுக்கான விளக்கத்தில், 'மத்தம்' என்பதற்கு, 'கங்கை நீர்' என குமரன் விளக்கம் கொடுத்திருந்தார்.

'ஆனால், நான் புரட்டிய நூல்களில், 'ஊமத்தம்பூ' என்றே போட்டிருந்தது.

சுடலையாண்டி, அங்கு பூக்கும் பூவைத்தானே அணியமுடியும்! //

மத்தம் என்பது ஊமத்தம்தான். கங்கையை எப்படிக் குறிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. ஊமத்தம் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே.

G.Ragavan Wednesday, June 21, 2006 12:53:00 PM  

// SK said...
முன்னதாக வந்து, முழுமையாகப் பாராட்டி, வாழ்த்தியதற்கு நன்றி, இராகவன்! //

முத்தமிழும் முருகப் பெருமானின் தனிச்சொத்து. அதை அள்ளி அள்ளிப் பருகியவர் அருணகிரி. அவர் சொல்லியதைக் கிள்ளிப் பருகிறவன் நான். அப்படியிருக்க....அவர் திருவாய்மொழிகளுக்குப் புகழ் சேர்க்கும் அவையில் அங்கமாவதற்குக் கொடுத்தல்லவா வைத்திருக்க வேண்டும். அதிலும் முன்னின்றது முருகன் அருளன்றி வேறேது!

இலவசக்கொத்தனார் Wednesday, June 21, 2006 1:00:00 PM  

கவிதை விளக்கம் கவனமாய்த் தந்தால்
செவிவழி சீக்கிரம் செல்லும் - தவிக்கும்
ஒருவனின் தாகத்தைத் தீர்த்திடும் நீர்போல்
திருப்புகழ் தீஞ்சுவை தேன்

இலவசக்கொத்தனார் Wednesday, June 21, 2006 1:01:00 PM  

//அப்புன மதனிடை.....இபமாகி//

இந்த அடியில் வரும் வார்த்தைகளுக்கு கொஞ்சம் விளக்கமாய் பொருள் தாருங்களேன்.

நாகை சிவா Wednesday, June 21, 2006 1:01:00 PM  

அருமையான விளக்கம். விரிவாக விளக்கியதற்கு நன்றி எஸ்.கே.

G.Ragavan Wednesday, June 21, 2006 1:07:00 PM  

// SK said...
நானும் சற்று யோசித்தேன், இதனை எழுதும் போது.

ஆனால், கந்தபுராணத்தில் 'மேருவைத் தாண்டி தென்புலம் செல் என சிவபெருமான் பணித்த போது, உயர்ந்து நின்ற அம்மலையின் ஆணவத்தை அடக்கிய போது, அம்மலையில் எழுதியதாக வந்தது நினைவிற்கு வந்து என் ஐயத்தை நீக்கியது.

மேலும், 'முற்படு கிரி' எனச் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது, ஆதி மலையான மேருமலைதான் சரியெனவும் பட்டது.

வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள்,இராகவன். //

ஆணவத்தில் எழுந்தது விந்திய மலை. பொதிகைமலை அல்ல.

தமிழ் இலக்கணம் தோன்றியது பொதிகை என்பதே நம்பிக்கை. முத்தமிழுக்குமான இலக்கணத்தை முற்படு பொதிகை மலையில் முற்பட (அனைத்து மொழிகளுக்கும் முன்னால்) எழுதிய முதல்வோனே என்று பொருள் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

G.Ragavan Wednesday, June 21, 2006 1:10:00 PM  

// இலவசக்கொத்தனார் said...
//அப்புன மதனிடை.....இபமாகி//

இந்த அடியில் வரும் வார்த்தைகளுக்கு கொஞ்சம் விளக்கமாய் பொருள் தாருங்களேன். //

ஒரு அவசரக்குடுக்கை நான் :-)

அப் புனம் அதன் இடை - அந்தப் புனத்தின் இடையில்
இபமாகி - ஆனையாகி

சரியா S.K?

SK Wednesday, June 21, 2006 1:24:00 PM  

//ஆணவத்தில் எழுந்தது விந்திய மலை. பொதிகைமலை அல்ல.

தமிழ் இலக்கணம் தோன்றியது பொதிகை என்பதே நம்பிக்கை. முத்தமிழுக்குமான இலக்கணத்தை முற்படு பொதிகை மலையில் முற்பட (அனைத்து மொழிகளுக்கும் முன்னால்) எழுதிய முதல்வோனே என்று பொருள் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. //

நானும் விந்தியமலையைத்தான் மேருமலை எனச் சொன்னேன்; பொதிகையை அல்ல.

பொதிகையில் தமிழ் வளர்த்தார்.

நீங்கள் சொல்லும் விளக்கமும் மறுக்கக் கூடியதாக இல்லை.

நான் பொருள் பார்த்த நூலில், மேருமலை என்றுதான் இருந்தது

மாக்லையில் வீட்டிற்குப் போனதும், கந்தபுராணம் பார்த்துச் சொல்கிறேன்.

SK Wednesday, June 21, 2006 1:30:00 PM  

ஆறுமுகத்திடம், மாறுமுகமாகினால், போகுமிடம் ஏது?
வேறுமுகமாய் சற்று புத்தி போனதால் நேர்ந்த நிகழ்வு இது.
கோரும்வரம் தந்திடும் ஆறுமுகனையே இனி புகழ்ந்திடுவோம்!

நன்றி, தி.ரா.ச. ஐயா.

SK Wednesday, June 21, 2006 1:35:00 PM  

இ.கொ.,
நீங்கள் பாடிய வெண்பா அரிவுரையாகவும் இருக்கிறது;
பாராட்டாகவும் தோன்றுகிறது !
இரண்டும் எனக்குச் சரியே!
மிக்க நன்றி.

உங்கள் கேள்விக்கு இராகவன் அளித்த விளக்கம் போதுமென நினைக்கிறேன்.

மேலும் வேண்டுமெனில் சொல்லுங்கள்.

சரியாகச் சொல்லியிருக்கிறிர்கள், இராகவன்.

SK Wednesday, June 21, 2006 1:35:00 PM  

மீண்டும் நன்றி, நாகை.சிவா.

வெற்றி Wednesday, June 21, 2006 1:43:00 PM  

SK அய்யா,
மிகவும் அருமை. உங்களின் இப் பதிவு பற்றி நிறையச் சொல்ல, கேட்க பல சங்கதிகள் உண்டு. ஆனால் இன்னும் சில மணித்தியாலங்களில் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதால், வரும் திங்கட்கிழமை ஆறுதலாக வந்து சொல்கிறேன். நன்றி.

வெற்றி Wednesday, June 21, 2006 1:58:00 PM  

SK அய்யா,
தயவு செய்து எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என் ஆன்மீகக் குரு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் இத் திருப்புகழுக்கு வழங்கிய விளக்க உரை musicindiaonline.com ல் வைத்திருக்கிறார்கள். அதற்கான முகவரியை இங்கே தருகிறேன். தயவு செய்து உங்கள் பதிவில் இந்த இணைப்பைச் சேர்த்து விடுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது போல், என் ஆன்மீகக் குரு வாரியார் சுவாமிகளின் குரலில் அவர் அளித்த விளக்கத்தை நான் கேட்டு இன்பமுற்றது போல் எல்லோரும் கேட்டு மகிழ உதவும். மிக்க நன்றிகள் அய்யா. மீண்டும் திங்கட்கிழமை தொடர்பு கொல்கிறேன்.

வாரியார் சுவாமிகளின் விளக்க உரைக்கான முகவரி:

http://www.musicindiaonline.com/p/x/HVpg5s.7IS.As1NMvHdW/

SK Wednesday, June 21, 2006 2:03:00 PM  

'நீ வருவாயென நான் எதிர்பார்ப்பேன்
வரும்வழியில் விழி பார்த்திருப்பேன்'
என்ற பாடல் நினைவுக்கு வந்தது, வெற்றி!

தங்கள் பயணம் 'வெற்றி'யாக வாழ்த்துகள்!

இலவசக்கொத்தனார் Wednesday, June 21, 2006 2:03:00 PM  

எஸ்.கே.

பாராட்டுதான். உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வரவில்லை.

ஜிரா விளக்கம் நன்றாகப் புரிந்தது. இபம் என்றால் யானை என அறியாததால்தான் நான் விளக்கம் கேட்டது.

இது போன்று அதிகம் வழக்கில் இல்லாத சொற்கள் வரும் பொழுது தயவாய் பொருள் கூறுங்கள்.

நன்றி.

SK Wednesday, June 21, 2006 2:07:00 PM  

கரும்பு தின்னக் கூலியா?
உங்கள் விருப்பம் போலவே சேர்த்து விட்டேன், வெற்றி.

கொல்லாமல் கொள்ளுங்கள்!!
:))

பொன்ஸ்~~Poorna Wednesday, June 21, 2006 2:10:00 PM  

எஸ்.கே,
:-) அம்புட்டுதேன் நம்ம கான்ட்ரிப்யூஷன்..

சரி சரி.. சுட்டிக் கொடுப்பது, படம் காமிக்கிறதெல்லாம் பின்னால தனிமடல்ல வரும். கூடியவரை சுலபமாச் சொல்ல முயல்கிறேன். அதுக்கு மேல உங்க முருகன் எப்படியும் பார்த்துக்கிடப் போறாரு :)

SK Wednesday, June 21, 2006 2:14:00 PM  

நல்ல ஆலோசனை.
என் நடையில் எழுதிவிட்டு, இறுதியில் அருஞ்சொற்பொருள் என ஒன்று சேர்த்து விடுகிறேன்.
நன்றி.

SK Wednesday, June 21, 2006 2:17:00 PM  

நீங்கள்லாம் வந்ததே பெருசு!
அந்த கான்ட்ரிப்யூஷனே போதுங்க.
இதுமாதிரி பதிவுலயும் கான்ட்ரிப்யூஷன் பண்ண வைக்கவும், முருகன் பார்த்துக் கொள்வான்,....உங்களை!

வவ்வால் Wednesday, June 21, 2006 2:19:00 PM  

அய்யா எஸ்.கே.

பழம் நீ யப்பா பழனியப்பா ..தமிழ் ஞானப் பழம் நீ யப்பா !

இதில் எல்லாம் எனக்கு பரிச்சயம் இல்லை இனி இங்கே இருந்து தான் படித்து துவங்க வேண்டும்.

மேரு மலை பற்றி மட்டும் ஒன்று ,மேரு மலையின் மீது உள்ளது தான் கைலாயம்.ஈரேழு பதினான்கு உலகம் என்று சொல்வார்களே அதில் வரும் மேல் உலகம் ஏழும் இருப்பது மேரு மலையின் மீதே எனப்படித்தேன்.அங்கே தான் இந்திரனின் சொர்க்க லோகம் ,குபேரனின் அமராவதி நகரம்,கந்தர்வர்களின் புவர்லோகம் ,எமலோகம் என அனைத்தும் உள்ளதாக சொல்கிறார்கள்.

SK Wednesday, June 21, 2006 2:34:00 PM  

குமரன் சொல்லியபடி பதம் பிரித்த பாடல்!

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடி பேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் என வினை கடிது ஏகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மற்பொரு திரள் புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா

அத் துயர் அது கொடு சுப்பிரமணி படும்
அப் புனம் அதன் இடை இபமாகி

அக் குறமகளுடன் அச் சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே!

SK Wednesday, June 21, 2006 2:55:00 PM  

ஜி.ரா.,

இப்போது நினைவுக்கு வருகிறது.

அகத்தியர் தமிழை வளர்த்தது பொதிகையில்தான்!

ஆனால், இங்கு நாதர் பாடிப் போற்றுவது விநாயகரை!

விநாயகரிடமிருந்து அகத்தியர் தமிழை வாங்கி வந்ததாக கந்தபுராணத்தில் இருக்கிறது.

எனவே,
"முற்படு கிரிதனில்== மலைகளுக்கெல்லாம் முதன்மையாய் இருக்கின்ற மேரு மலையில்,

முத்தமிழ் அடைவினை== மூன்று தமிழின் முடிவான முறைமையை,

முற்பட எழுதிய முதல்வோனே"
என்று சொல்கிறார்.

SK Wednesday, June 21, 2006 3:01:00 PM  

'வவ்வால்',
மேரு பற்றி நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.

வவ்வால் Wednesday, June 21, 2006 4:01:00 PM  

அய்யா எஸ்.கே அவ்ர்களே!

//'மேருவைத் தாண்டி தென்புலம் செல் என சிவபெருமான் பணித்த போது, உயர்ந்து நின்ற அம்மலையின் ஆணவத்தை அடக்கிய போது, அம்மலையில் எழுதியதாக வந்தது நினைவிற்கு வந்து என் ஐயத்தை நீக்கியது.

மேலும், 'முற்படு கிரி' எனச் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது, ஆதி மலையான மேருமலைதான் சரியெனவும் பட்டது.//

நீங்கள் கூறியது மேரு மலையல்ல என சொல்லவே முன்னர் பின்னூட்டம் இட்டேன் ,ஆனால் தாங்கள் அதனை வேறுப்பொருளில் எடுத்துக்கொண்டீர்கள்.

//ஆணவத்தில் எழுந்தது விந்திய மலை. பொதிகைமலை அல்ல.//

விந்திய மலை தான் அகத்தியர் தாண்டி வந்த மலை என ராகவனும் கூறியுள்ளார் ,எனவே மேரு மலையை தாண்டி வரவில்லை அகத்தியர்.

முற்படு மலை என்பதில் பெரிய புவியியல் உண்மையை சொல்லியுள்ளார்கள். விந்திய மலைத்தொடர் தான் இந்தியாவில் உள்ள மலைகளிலேயெ வயது முதிர்ந்த பழமையான மலை என்று புவியியல் வல்லுனர்கள் சொல்லியுள்ளார்கள்.இமய மலைதான் உலகத்திலேயே மிக இளமையான மடிப்பு மலைத்தொடர்.
(கலக்குறதுகுனே எனக்கு இப்படிலாம் மேட்டர் மாட்டிக்குது எப்படி அது :-)) )

செல்வன் Wednesday, June 21, 2006 4:11:00 PM  

எஸ்.கே
அருமையான முயற்சியை துவக்கியிருக்கிறீர்கள்.அதுவும் ஆத்திசூடிய தேவனை போற்றிய முதல் பாடலுடன்.

எக்காரியத்தையும் செய்யும் போது இறைவன் பெயரால் செய்ய வேண்டும் என்பதே கீதையில் கண்ணன் காட்டிய கர்ம வழி.பிள்ளையாரை வணங்கி அதன் பின்னரே காரியத்தை செய்யவேண்டும் என இருப்பதும் கர்மயோகம்தான்.

அவ்வையார் சிறந்த பிள்ளையார் பக்தை.குழந்தைகளுக்கான நீதிக்கதையின் தலைப்பையே பிள்ளையார் என்றல்லவா வைத்திருக்கிறாள்?(ஆத்தி சூடி)

SK Wednesday, June 21, 2006 7:06:00 PM  

ஔவையார் எப்போதுமெ அரிய பெரிய கருத்துகளை மிகச் சிரிய முறையில் சொன்னதை மிக அழகாக அவ்ர் போலவே சொலிய செல்ல்வனே!
உமக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!
ஆத்திசூடி என்பதற்கு அருமையான பொருள் சொன்ன செல்வனே, உமக்கு நன்றி!

SK Wednesday, June 21, 2006 10:32:00 PM  

கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போமா, வவ்வால் அவர்களே?

இங்கு, நான் சொன்னது மேருமலை.

ஜி.ரா.சொன்னது பொதிகை மலை.

அவர் சொன்னது அகத்தியரைக் குறித்து என்று,
அதற்காக நான் கொண்டு வந்த மலை,[நான் அனுமன் இல்லை!!] விந்தியமலை.

இதுவரை சரியா?

இந்தத் திருப்புகழ், விநாயகரைப் பற்றியது.

இதில் பொதிகை மலை வரத் தேவையில்லை என்பதைக் குறிக்கவே,
நடுவில் விந்திய மலையைக் கொண்டு வந்தேன்.

[நடுவில்தான் விந்தியமலை இருக்கிறது என்பது வேறு விஷயம்!]

நல்லதமிழில் சொல்லப் போனால்,
இரு புலங்களுக்கு இடையே,[புலம்]
முளைத்த மலை என்பதாலேயே,
"விந்திய" மலை எனப் பெயர் பெற்றது.

இதில் அகத்தியரைக் கொண்டு வந்து "குழம்ப" வேண்டாம் எனவே அவ்வாறு பதிலிறுத்தேன்.

புராணங்களைப் படித்திருக்கிறீர்கள் என்பது உங்களின் பல மறுமொழிகளினின்று தெரிகிறது.

என்ன, கொஞ்சம் ஆழமாகப் படிக்கவில்லையோ என அஞ்சுகிறேன்!

இப்போது, நிகழ்வுக்கு வருவோம்.

"முற்படு கிரி" என அருணகிரியார் சொல்லியிருக்கிறார்.

அதன்படிப் பார்த்தால், முதன்முதல் தோன்றிய மலையினைக் குறிப்பிடுகிறார்.

இதில் ஒன்றும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

சரிதானே!

புராணங்களைப் பார்த்தால்,
மேரு, தக்ஷிண மேரு என இரண்டு மலைகளே முதலில் இருந்தன.

மஹாமேரு என்பது நீங்கள் குறிப்பிட்ட கைலாயம் அடங்கிய மஹா மலை.

அங்குதான் சிவபெருமான் ஹிமவானின் மகளாகிய பார்வதியைத் திருமணம் புரிந்தார்.

அதற்கு அனைவரும் வந்ததால்.....,
வடமேரு உயர்ந்து,
தென்புலம் தாழ்ந்தது.

சரியா?

இரண்டாவது, தக்ஷிணமேரு என அழைக்கப்படும் விந்தியமலை.

இதுவும், உங்கள் கூற்றுப்படி மிகவும் ஆதியான உயர்ந்த மலை!

அப்போது, சிவபெருமான் அகத்தியரை பார்த்து,
தக்ஷிணமலையைத் தாண்டி[விந்திய மலை]
தென்புலம் செல்லப் பணித்தார்.

அகத்தியரும் அவ்வாறே வரும்போது,

தானே உயர்ந்தவன் எனும் செருக்குற்ற,

விந்தியமலையை அழுத்தித்
தென்புலம் வந்தார்.

பொதிகைமலையை அடைந்தார்.

தமிழைப் பரப்பினார்.

இதெல்லம்,இந்தப் பாடலில் வரும் சொற்றொடருக்குச் சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள்!

ஏனென்றால்,
இங்கு பேசப்படுவது,
விநாயகரைப் பற்றி!

அகத்தியரைப் பற்றி அல்ல!

புராணங்களைப் படித்தால் தெரிய வரும்....,

விநாயகர்தான் முதன்மொழியாம் தமிழ்மொழியை மூன்று வகைப்படுத்தி, மேருவில் எழுதினார் என்பது!
.
இதனையே, குறிப்பால்,
ஔவையாரும்,
[பொன்ஸ் அல்ல!!]
"நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா"
என வேறு யாரையும் வேண்டாமல்,
முழுமுதற் கடவுளாம் விநாயகரை வேண்டினார்.

மேலும். ,

'முற்படு கிரி' எனும் போது...,

அது முதன்முதலாய்த் தோன்றிய மலையையே குறிக்குமேயல்லாது,
வேறொன்றைக் குறிக்காது.

உங்கள் கருத்துப்படியும்,

மேருவும், தக்ஷிணமேருவும் மட்டுமே முற்படுகிரிகள்.

முதலாவதில், விநாயகர் எழுதினார்.

அவரிடமிருந்து அதைப் பெற்று,
அகத்தியர்,

இரண்டாவதைத்[தக்ஷிணமேரு, விந்தியமலை] தாண்டி,

அதன் அகந்தையை அடக்கித் தென்புலம் வந்து,

பொதிகைமலையில் அமர்ந்து,
தமிழைப் பயிற்றுவித்தார்.

இந்தப் பாடல் விநாயகரைப் பற்றியது,

அகத்தியரை அல்ல என்பதால்,

மேரு என்பதே முற்படு கிரி எனக் கொள்க!

இன்னும் விளக்கம் வேண்டுமெனில் கேளுங்கள்!

'கலக்குதல்' என்பதற்குத்,

திறனாய்ச் சொல்லுதல்,
குழப்புதல்
என்ற இரு பொருளுண்டு!!

SK Thursday, June 22, 2006 12:30:00 AM  

முன்பு செல்வன், தன் பதிவில் நீங்கள் வாதம் செய்தபோது சொன்னதுதான் நினைவுக்கு வருகிரது.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
'முற்படு மலை' குறித்த உங்கள் [வி]வாதம் மிக அருமை.!!

மீன்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இது மலை குறித்த வாதம் அல்ல;
விநாயகரைக் குறித்தே!!

அகல உழுதின், ஆழ உழுதல் நன்று!

வவ்வால் Thursday, June 22, 2006 6:43:00 AM  

அய்யா எஸ்.கே

உங்கள் பதிலுக்கு நன்றி இது வரை யாரும் அளிக்கத அளவு பொறுப்புடன்!!?? நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்.

paarvai Friday, June 23, 2006 7:09:00 PM  

அன்பு எஸ்.கே!
"திருப்புகழைப் பாடப்பாட வாய்மணக்கும்;எதிர்புகளை முருகா உன் வேல் தடுக்கும்" - உங்களால் மீண்டும், முருகன் புகழைப் படிக்கும் புண்ணியம்; கிட்டியுள்ளது.
இது வரை ஊமத்தம்பூ; வழிபாட்டுக்குதவாதது;எனும் எண்ணத்துடன்; இருந்தேன். உங்கள் விளக்கத்தால், இது "சிவப்பூ" என அறிந்து மகிழ்ந்தேன்.புதிய விடயங்களைப் பகிரும் போது;சந்தோசம்..;;இதுவரை ஆத்மீகத்தில் குமரனும்;ராகவனும் இப்போ எஸ் கே 'சண்முகக் கடவுளா?).பிள்ளையார் சாப்பாட்டுப் பிரியரா??? ஔவையும்;அருணகிரியாரும்;;;சாப்பாடு கொடுத்துக் கேட்கிறார்கள் அருள்!; ஓ;;;அதுதான் தொந்தியும் பெருத்திருக்கோ!
தொடரட்டும். அமெரிக்காவில் இருந்து தமிழ் மழை!!!
யோகன் பாரிஸ்

SK Friday, June 23, 2006 9:57:00 PM  

மிக அழகாக சூக்குமமாய் பிள்ளையாருக்கு அவ்வையும்,
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நான்கும் கலந்து கொடுத்து சங்கத்தமிழ் மூன்றும் தா எனக் கேட்டதை அழகுற விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி, திரு. யோகன் -பாரிஸ்.

நாமக்கல் சிபி Thursday, June 29, 2006 10:47:00 AM  

எஸ்.கே!

மிக அருமையான பணியை ஆரம்பித்திருக்கிறீர்கள். முதற்கண் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

தாமதாகத்தான் பார்க்கிறேன். ஆனால் இனி தொடர்ந்து படிப்பேன்.

முருகனைப் பற்றிப் பாடுவதும், பேசுவதும், கேட்பதும் இனிமையான ஒன்றே!
அடுத்த வாரம் பழனிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். தங்களுக்கும் சேர்த்து பிரார்த்திக்கிறேன்.

SK Thursday, June 29, 2006 12:04:00 PM  

ஒருவித அச்சத்துடனே[!!] தான் மயிலைத் திறந்தேன்.

ஆகா... எல்லோரும் படித்துப் பின்னூட்டம் போட்டு அடுத்த பாடலும் போட்டாச்சு.
இவர் வந்து இதைத் திறக்கிறாரே என நினைத்தவாறே திறந்தவனை, உனக்காக வேண்டுவேன் எனச் சொல்லி நெகிழ வைத்து விட்டீர்கள்!

அடுத்ததையும் படித்துக் கருத்து சொல்லுங்கள்!

உடம்பு இப்போது சரியாகி விட்டதா?

யாரோ எதோ ஜுரம் . காய்ச்சல் என்று சொன்னார்களே!

திதிக்கும் பழனி!

ஜயராமன் Thursday, June 29, 2006 1:10:00 PM  

தித்திக்கும் திருப்புகழை தங்கள் புனித தமிழால் அலங்கரித்து அதை எங்களுக்கு பரிமாறியதற்கு என் மனமார்ந்த நன்றி

எல்லோர் பின்னூட்டங்களையும் பார்த்துக்கொண்டிருந்ததில் இன்னொரு லாபம். எல்லா தமிழ் ஆன்மீக செல்வங்களும் சேர்த்து ஒரு ரத்தின மாலையாக இந்த பதிவு உருவாகியிருக்கிறது. மேலும் தங்களின் பதிவுகள் தொடரட்டும்.

நன்றி

நாமக்கல் சிபி Thursday, June 29, 2006 1:25:00 PM  

//ஒருவித அச்சத்துடனே[!!] தான் மயிலைத் திறந்தேன்//

என்னடா இது! இந்த வாரம் நாம் (எஸ்.கே) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோமோ என்றுதானே?

:)

//உடம்பு இப்போது சரியாகி விட்டதா?

யாரோ எதோ ஜுரம் . காய்ச்சல் என்று சொன்னார்களே!
//

ஆமாம். கடந்த வாரம் முழுக்க ஜுரம்தான். ஏதோ ஜூரமெல்லாம் இல்லை. சளி காய்ச்சல்தான். இப்போது குணமாகிவிட்டது. நன்றி.

உங்களிடம் கொத்தனார் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

SK Thursday, June 29, 2006 1:31:00 PM  

மிக்க நன்றி, ஜயராமன். தங்கலது உளமார்ந்த பாராட்டுகளுக்கு

அடுத்ததையும் [அ.அ.தி.- 2] படித்துக் கருத்து சொல்லுங்கள்!

SK Thursday, June 29, 2006 1:37:00 PM  

இரண்டுக்கும் பதில் ...
ஆமாம்!!

நலமானது குறித்து மிக்க மகிழ்ச்சி.

இனிமேல் பழைய வேகத்துடன்[:((] உங்களைப் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!

நாமக்கல் சிபி Thursday, June 29, 2006 1:45:00 PM  

//இனிமேல் பழைய வேகத்துடன்[:((] உங்களைப் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!
//

:))

ஆன்மீக தொடர்பாக எழுதும்போது அங்கே கலாய்த்தலுக்கு இடமேது!
அப்புறம் கனவில் வந்து நம்மளை கலாய்த்து விடுவார் அல்லவா!


இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் கந்தன் கருணை படம் பார்த்தபோது கூட தங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டேன்.

நரியா Saturday, July 01, 2006 6:01:00 PM  

வணக்கம் எஸ்.கே.
அருமையான விளக்கம். இந்த பாட்டும், "நாத விந்து" பாட்டும், பிள்ளையார் மற்றும் முருகனுக்கு தினமும் பாடுகிறேன். அர்த்தம் தெரியாமல் சொல்லும் ஸ்லோகங்கள் போல இப்பாட்டினையும் பாடி வந்தேன்.

இந்த பாட்டிற்கு விளக்கம் கிடைத்துவிட்டது. "நாத விந்து"கும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
வாழ்க தமிழ். வளர்க உங்கள் சேவை!

நன்றி!

இராமநாதன் Wednesday, September 06, 2006 11:18:00 AM  

அருமை எஸ்.கே. இப்போதுதான் முதலிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பலதடவை கேட்டுள்ள பாட்டு. ஆனால் பொருளை புரிந்துகொள்ள முயற்சியே எடுத்ததில்லை. திருப்புகழா..என்னிக்கு படித்து.. என்னிக்கு புரிந்து.. இது விடிஞ்சா மாதிரிதான் என்று சோர்வுடன் மூடிவைத்த சமயங்கள் பல.

உங்கள் விளக்கம் பார்த்தவுடன் பொருள் எளிதாகப் புரிகிறது. நடுவில் நடக்கும் விவாதங்களில் புது விஷயங்களும் அறியக்கிடைக்கின்றன.

நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP