Monday, November 30, 2009

"பிள்ளையார் கதை"

"பிள்ளையார் கதை" -1

வருகின்ற டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!
இந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு!
விநாயகப் பெருமானுக்கான விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர்.
இதனை விளக்கும் "பிள்ளையார் கதை" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்.

இதனை எழுதியவர் திரு.வரத பண்டிதர் என்னும் புலவர். திரு. வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.
இவரது செய்யுள் நூல்கள்: சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம், அமுதாகரம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை.

ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட இந்நூலைப் படித்துப் பாராயணம் செய்து விரதம் அனுஷ்டிப்போர் எண்ணற்றவர்.
அனைவருக்கும் விநாயகர் அருள் கிட்ட வேண்டி இதனைத் துவங்குகின்றேன்.

யாவினும் நலம் சூழ்க!
"கணபதி எல்லாம் தருவான்!"
*********************
சிவமயம்
விநாயகர் மகிமை

பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.

சிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் அச்சிறச் செய்தார் என்பர். அச்சிறு பாக்கம் இன்றும் உளது.
பாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் சிந்தியாமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர்.

ஒளவையார் பூசையை ஏற்றுக் கயிலை சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே! சேரமான் குதிரை கயிலை சார ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால்,
“கிழவியுங் காதம், குதிரையுங் காதம்”
என்றார் முன்னோர். நன்மை நாடொறும் நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக.
சுபம்.

விநாயகர் விரதம்
மக்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.

“வின்னாமம் புகல்கின்ற மக்கமதி ஆறாம் பக்கம்”
என்பதால் அறியலாம் (வில் - தனுர்மாசமான மார்கழி) யாழ்ப்பாணத்தில் இருபத்தொருநாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர் பலர் இன்றுமுளர். ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நு}ல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர்.

பிள்ளையார் கதையை அன்புடன் இவ்விரத நன்னாட்களில் படிப்பது புண்ணிய மாகும். பகை நோய்கள் நீங்க, வென்றி, எடுத்த காரிய சித்தி, திடகாத்திரம் முதலிய சிறப்புக்கள் உண்டாகும்.

கணபதி துணை.

பிள்ளையார் கதை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

'சரஸ்வதி துதி'

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்

பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
[அரில் = குற்றம்.]
****************
[விரைவில் தொடரும்]

5 பின்னூட்டங்கள்:

VSK Monday, November 30, 2009 9:12:00 PM  

டிச. 2-ம் தேதிக்குள் இதனை முழுதுமாக இட எண்ணம். எனவே, பதிவுகள் அடுத்தடுத்துத் தொடரும். பொறுத்தருள்க!

கோவி.கண்ணன் Monday, November 30, 2009 9:24:00 PM  

//விநாயகசட்டி விரதம் //

கந்தசட்டி விரதம் என்று கூட யோகன் பாரிஸ் அண்ணன் தெரிவித்தார்.

நான் சஷ்டி என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன். இது என்ன சட்டி எனக்கு புரியவில்லை. தமிழ்படுத்தும் போது இப்படி சட்டி ஆகிவிடுமா ? அப்படி என்றால் பரவாயில்லை.

VSK Monday, November 30, 2009 9:30:00 PM  

சஷ்டி என்பதைச் 'சட்டி' எனச் சொல்வது வழக்கம் கோவியாரே!
நன்றி.

VSK Monday, November 30, 2009 9:30:00 PM  

கஷ்டம் என்பதைக் 'கட்டம்', இஷ்டம் என்பதை 'இட்டம்', என்றெல்லாம் எழுதுவாங்களே!

VSK Tuesday, December 01, 2009 8:03:00 AM  

ஒரே நாளில் தொடர்ந்து இட்டதாலோ என்னவோ, இதன் தொடர் பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் வரவில்லை. வலது பக்கம் இருக்கும், சுட்டிகளை அழுத்தி, 6 பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன். நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP