பிள்ளையார் கதை - 3
"பிள்ளையார் கதை" - 3
[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]
கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்
ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்
கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]
பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]
செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஓகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்
திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]
இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]
ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]
கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
*********
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி
எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்
செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]
எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]
சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]
வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]
கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]
நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]
வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்]
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்]
பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து]
கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]
விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]
ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து
ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்
ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்
தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்
[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]
அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்
[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]
இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
[செரு=போர்]
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]
விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி]
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]
மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை]
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்
[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]
கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
[பாண்=கள்]
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]
இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]
**************
[இன்னும் வரும்]
0 பின்னூட்டங்கள்:
Post a Comment