பிள்ளையார் கதை - 4
"பிள்ளையார் கதை - 4"
[401-604] திருமுருகன் அவதாரம் 404 முதல் 450 முடியவும், விநாயகசட்டி விரதம் 528 முதல் 569 முடியவும் இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
[திருமுருகன் அவதாரம்]
ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல்
ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம்
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால் [410]
ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி
இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்
புதல்வனைத் தருவோம் போமின் நீர் என
அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும் [420]
ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்
சூரன் செய்யுந் துயர மெல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
[பாவகன்= அக்னி தேவன்]
உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந் [430]
தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமைஆளுடைய உமையா ளுடனே
அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
[தேயு=தீ]
ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப [440]
நீதி யோடு நின்று கையேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்
தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்
கண்ஆறு இரண்டுங் கரம் ஈராறுந்
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்
மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும் [450]
மறுகிய உம்பர் மகிழ்ந்துஉடன்கூடி
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்றுஅனுப்ப
ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத்
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி [460]
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்றுஉதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப
இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு [470]
அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்டு
அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே
அண்ட ரெல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி
மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென [480]
இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம் [490]
புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப
இன்பவாய் இதழ் உமை யான்வென்றேன் என
எம்பெரு மானும் யான்வென்றேன் என
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப [500]
மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை யெரித்தோன் கண்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
தோற்ற நாயகன் வென்றா னென்றும்
ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்குஉருத்து
நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை யுண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே [510]
கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணைவிழி யிழந்தே
[முளரி=சந்திரன்; துளவு=துளசி]
ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
[பாந்தள்= பாம்பு]
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால் [520]
[மருப்பு= கொம்பு, தந்தம்]
திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்
[விநாயகசட்டி விரதம் 524 முதல் 569 முடிய இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]
கம்ப மாமுகத்துக் கடவுள்தன் பெருமையை
[கம்பம்= தூண் போன்ற கால்களை உடையதால் இங்கு யானையைக் குறித்தது]
அம்புவி யோருக்கு அறிவிப் போம் என
உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
[உம்பர்=தேவர்]
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி [530]
[கலிங்கம்= பட்டாடை]
இருபத் தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்
மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினாறு உபசா ரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
இருபது நாளும் இப்படி நோற்று
மற்றைநாள் ஐங்கர மாமுகன் பிறந்த [540]
அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்
பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக் [550]
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி
தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித் [560]
[முத்தளக் கூவிளம்= மூன்று தலைகளுடைய வில்வம், த்ரிதள வில்வம்]
தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள் ளுண்டை
முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என [570]
ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
[விண்டு= விஷ்ணு; பண்டு=பழைய, பழைமை]
உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு விமலன்
கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
[உஞ்ஞை= உஜ்ஜயினி என்னும் அவந்தி]
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப [580]
இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
[மறிகடல்= அலை வந்து திரும்பிச் செல்லும் கடல்]
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத்
தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
[சாங்கு= அம்பு, [அம்பு விட்டு கடலை வற்றச் செய்த இராமன் கதை]]
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி [590]
நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
தானோ வந்தது நகையா னதுவெனத்
[நம்பன்=சிவன்]
தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன்
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் [600]
குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்.
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து
தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே
[தாது மைவண்டு உழும் தாமத் தாமன்= ஆதி சிவன்].
*************
[இன்னும் வரும்]
0 பின்னூட்டங்கள்:
Post a Comment