Monday, November 30, 2009

"பிள்ளையார் கதை" -2

"பிள்ளையார் கதை" -2

இலக்கண முறைப்படியே இந்த நூல் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும், படிப்பவர்க்கு வசதியாக, எளிதில் பொருள் உணர்ந்துகொள்ளும் விதமாய், இதனைப் பதம் பிரித்து இங்கு அளிக்கிறேன். இலக்கிய, இலக்கண ஆர்வலர்கள் என்னை மன்னிப்பார்களாக! டிசம்பர் 2-ம் தேதி இந்த விரதம் தொடங்கவிருப்பதால், பதிவுகளை அடுத்தடுத்து விரைவாக அளிக்கிறேன்.

நூல்:

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென

அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப

எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென

எமையா ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு

பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்

பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்

சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று

விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்

பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி

ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை

மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்

பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச

அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து

மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்

பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில

அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான் [50]

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்

கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி

மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்

கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்

பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்

பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்

சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி

வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்

தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என

மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்

சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று

சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி

நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்

மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]

மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து

தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து

ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்

சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து

தவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி

மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்

நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்

கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்

விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்

கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்

பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி

ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்

பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்

பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்

பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்

குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்

திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் [150]

[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்

பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே

சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து

பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்

பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்

திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு

ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக [170]

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க

நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்

செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்

திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு

ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்

பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்

கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்

ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி

ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்

காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து

தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும் [200]
**************
[விரைவில் தொடரும்]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP