Thursday, April 09, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 24. "குறிப்பறிதல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 24. "குறிப்பறிதல்"
"டேய் மாரி! இன்னா அங்க நின்னுகிட்டு பம்மிகிட்டிருக்கே! சரி, சரி, போயி, அண்ணிகையில நான் சொன்னேனு ஒரு ஐயாயிரம் ரூவா வாங்கிக்க! பலூன் வாங்கக் கொடுக்கச் சொன்னாருன்னு சொல்லு. ஒளுங்கா தங்கச்சி நிச்சயார்த்தத்தி நடத்தி முடி! இன்னா பாக்கற! அல்லாம் எனக்குத் தெரியும்!
சந்தோசமாப் போய்வா! நானும், அண்ணியும் வருவோம் கண்டிப்பா!" என்றதும் மலர்ந்த முகத்துடன் விரைந்தோடிய மாரியைப் பார்த்தபடியே ஆச்சரியமாக மன்னாரைப் பார்த்தேன்!

"இன்னா? இப்ப ஒனக்கு இன்னா பிரச்சினை? இதெல்லாம் எப்படி எனக்குத் தெரியும்னுதானே? இதுக்குப் பேருதான் குறிப்பறிதல்னு சொல்லுவாங்க! போன வாரம் நம்ம கபாலியாண்டை இவன் புலம்பிட்டிருந்தது காதுல வுளுந்தது.
'தங்கச்சிக்கு நிச்சயார்த்தம் வைச்சிருக்கேன். அண்ணங்கிட்ட எப்பிடிக் கேக்கறதுன்னு தெரியலைன்னு சொல்லிகிட்டிருந்தான். இப்ப வந்ததிலேருந்து மேலுங் கீளுமாப் பாக்கறானே தவிர ஒரு வார்த்தையும் பேசலை! அதான் அப்பிடிச் சொன்னேன்! ஒர்த்தன் கண்ணைப் பார்த்தே ஆரு, இன்னான்னு சொல்லிறலாம், தெரியுமா? இதைப் பத்தி நம்ம ஐயன் கூட ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு. கேக்கறியா? எனக்கும் இப்ப வேலை ஒண்ணுமில்லை! நாயரே! ஷ்ட்ராங்கா ரெண்டு டீயும், நாலு மசால் வடையும் அனுப்பி வையுப்பா!"
எனச் சொல்லி என்னை அன்புடன் பார்த்தான் மயிலை மன்னார்!

'அட! இதையும் புரிஞ்சுகிட்டானே! நாம குறள் விளக்கம் எழுதி மாசக்கணக்கா ஆச்சே!’ன்னு சந்தோஷத்துடன், 'கரும்பு தின்னக் கூலியா' என நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!அதிகாரம் - 71 "குறிப்பறிதல்"

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்


மாறாநீர் வையக்கு அணி. [701]

எதுத்தாப்புல நிக்கறவன் ஒண்ணுமே பேசலைன்னாலும், அவன் மனசுல இன்னா நினைச்சுக்கினு இருக்கன்றத ‘டக்’குன்னு கண்டுபுடிக்கறவன், எப்பவும் கடல் சுத்தியிருக்கற இந்த ஒலகத்துக்கே ஒரு நகை போலன்னு ஐயன்
சொல்றாரு.

இதுல ஏன் நகையை ஒதாரணமா சொன்னாருன்னுதானே கேக்க வறே? இரு, இரு! சொல்றேன்!

எங்க பார்த்தாலும் தண்ணி! அதாம்ப்பா கடலு! அதுக்கு நடுவுல தம்மாத்தூண்டுக்கு நெலம் இருக்கு.
அதுக்குள்ள இம்மாங் கூட்டமா நாமல்லாம் இருக்கோம்! அவனவனுக்கு ஆயிரம் நெனைப்பு! அடுத்தவன் இன்னா நெனைக்கறான்னே தெரியாம, அல்லாடுதுங்க சனமெல்லாம்! இதுக்கு நடுவுல இத்த நல்லாப் புரிஞ்சுக்கறவன் தனிச்சு நிக்கறான்னு சொல்றதுக்கு, இந்த இடத்துல நாம ஒடம்புல போடற நகையை ஒதாரணமா சொல்றாரு! ஏன்னா, அதானே ஒரு ஆளைப் பார்க்ககொள்ள, கண்ணுல பளீருன்னு படுது! அதை வைச்சுத்தானே ஒரு ஆளையே எடை போடறோம்! இன்னா, வெளங்குதா?


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். [702]

போன குறள்ல நகைன்னு சொன்னாரா? இதுல அதுக்கும் மேல ஒரு படி போயி, அவன் தெய்வத்துக்கே சமம்ன்றாரு ஐயன்! கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாம், அடுத்தவன் மனசுல நெனைக்கறதை குறிப்பறியவனை
தெய்வத்துக்கு ஈடுன்னு வைச்சுக்கோன்றாரு இதுல!

ஏன்? தெய்வந்தான் இது மாரி, நாம நெனைக்கறதையெல்லாம் புரிஞ்சுகிட்டு, ’கொடுக்கறதா, வேண்டாமா, இல்லை, இவன் நெனைக்கறதை நிறைவேத்தலாமா, வேண்டாமா’ன்னு முடிவு பண்ணுது! நீ நினைக்கறதைப்
புரிஞ்சுகிட்டேன்றதாலியே, அத்த செஞ்சிரும்னு கியாரண்டி கிடையாது! தெரியுமில்ல!:))

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். [703]

இப்ப எனக்கு இந்த மாரி அடுத்தவன் நெனைக்கறதைப் புரிஞ்சுக்க முடியலைன்னு வைச்சுக்க! ஆனா, அந்த அறிவு ஒங்கிட்ட இருக்குதுன்னு எனக்குத் தெரியவருது... அட! சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேம்ப்பா!
அதான் ஒனக்குக் கிடையாதுன்னு தெரியுமே! ஒரு ஒதாரணத்துக்கு வைச்சுப்போம்! சரியா....இப்ப நான் இன்னா பண்ணனும்னு ஐயன் சொல்றாரு இங்க! ஒன்னிய என்னோட கூட்டு சேர்த்துக்கணுமாம் நான்! அதுக்கு
விலையா நீ என் கையைக் கேக்கிறியா? சரின்னு வெட்டிக் கொடுத்தாவது ஒன்னைச் சேர்த்துக்கணுங்கறாரு!
ஒரு ராசா எப்படியாப்பட்ட மந்திரியைத் தன்னோட வைச்சுக்கணும்னு சொல்றதுக்காவ, ”அமைச்சியல்”ல இத்த எளுதியிருக்காருன்னாலும், இப்ப, இந்தக் காலத்துக்குக் கூட இது ரொம்பவே பொருத்தமாயிருக்கும்!

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு. [704]


ஒனக்கு இருக்கற கையி,காலு, கண்ணு,மூக்குதான் எனக்கும் இருந்தாலும், இந்த குறிப்பறியதுன்ற கொணம் மட்டும் எங்கிட்ட இல்லாங்காட்டி, நீ என்னை விட ஒசந்தவன்றாரு ஐயன். அவ்ளோ முக்கியமாம் இந்த அறிவு!

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண். [705]

ஒடம்பு ஒண்ணா இருக்கறதைப் பத்தி சொன்னவரு, இப்போ குறிப்பா ஒரு ’பார்ட்’டைப் பத்திச் சொல்ல வராரு!
இந்தக் குறிப்பறியதுக்குத் தேவையானது கண்ணு! அது பாக்கற பார்வையிலியே இன்னா சாமாச்சாரம்னு கண்டுக்கலாம்! அதுனால, இந்தக் கண்ணால அப்பிடி இன்னா, ஏது விசயம்னு புரிஞ்சுக்க முடியலைன்னா,
ஒனக்கு ரெண்டு கண்ணுங்க ஒம் மூஞ்சியில இருந்தும் பிரயோசனம் இல்லைன்றாரு!

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம். [706]

ஏன் கண்ணைப் பத்தி அப்பிடி சொன்னாருன்னு ஒனக்கு டவுட்டு வருதில்ல? 2009-ல கேனத்தனமா நீ இப்பிடி நெனைப்பேன்னு அப்பவே அவரு குறிப்பறிஞ்சிட்டாரு!![சிரிக்கிறான்!]

கண்ணு எங்கே இருக்கு? மொகத்துல தானே? அதான் அடுத்தாபல,இந்தக் குறளை வைச்சாரு!
இப்ப, கண்ணாடி முன்னாடி போயி நிக்கறே நீ! அது இன்னா காட்டும்? ஒம் மொகரையைத்தானே?
அதே போலத்தான் ஒருத்தன் மனசுக்குள்ள இன்னா நெனைச்சுகினு இருக்கான்றத, அவன் மொகமே காட்டிக் கொடுத்திருமாம்!
அதுக்குத்தான் நம்ம கண்ணால, அவன் மொகத்தைப் பார்த்து, கண்டுக்கணும்!
இந்தக் குறள்லேர்ந்து ஒனக்கு இன்னும் இன்னாத் தெரியுது, சொல்லு? வள்ளுவர் காலத்துல கண்ணாடி இல்லை!
அதான் பளிங்குன்னு சொல்லியிருக்காரு! வெளங்குதா? [மேலும் சிரிக்கிறான்!]

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும். [707]

மொகம் ஏன் அவ்ளோ முக்கியம்னு இன்னும் கொஞ்சம் சொல்றாரு இதுல!
இப்ப, ஒனக்கு ஒடம்புல ஒரு காயம்! வலிக்குது! இன்னா பண்றே நீ? மொகத்தை அஸ்டகோணலா வைச்சுகிட்டு, ஐயோ, அம்மா, அப்பா!ன்னு கத்தறே! இது வெளியில இருக்கற வலியினால வருது!
நீயே ரொம்ப சந்தோசப் படற மாரி, ஒரு விசயம் கேக்கறே! ஒடனே இன்னா பண்றே? மூஞ்சி அப்பிடியே பூவாட்டமா மலருது! பல்லெல்லாம் காட்டி சிரிக்கறே! மனசு வருத்தப் படற மாரி கேட்டாக்க,... அதே மூஞ்சி இப்ப அளுது வடியுது!
இப்பிடி, மனசுல நாம இன்னா நெனைக்கறோமோ, அத்தயெல்லாம் அப்பிடியே காட்டற அறிவு இந்த மொகத்துக்கு மட்டுமே ஜாஸ்தியா இருக்குன்றதாலதான் இதுக்கு இத்தினிப் பெருமை!


முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின். [708]


இப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்திரிச்சுன்னு வைச்சுக்க! இன்னார்கிட்டப் போய் நின்னாக் கரியம் கெலிக்கும்னு நெனைச்சு அவர் வூட்டாண்ண்டை போய் நிக்கறே! ஒம் மொகத்தைப் பர்த்ததுமே, ’இன்னாடா! இன்னா சமாச்சாரம்! எதுனாச்சும் பிரச்சினையா? அந்த மேக்காண்டை வயலுக்குத் தண்னி வோணுமா? சரி, சரி, போய் கணக்குப்புள்ளையைப் பாரு. நாஞ்சொன்னேன்னு சொல்லு! அல்லாம் சரியாப் பூடும்’னு சொல்றாரு! ஒனக்கா ஆச்சரியமா இருக்கு! ’நான் ஒண்ணுமே சொல்லைலியே! இவருக்கு எப்பிடி அத்தினியும் தெரிஞ்சுது’ன்னு வாயைப் பொளக்கறே! அதான் ஆருக்கு இன்னா தேவைன்னு அவரோட குறிப்பறிஞ்சு சொல்ற சாமர்த்தியம்!
அப்படியாப்பட்ட மனுசங்க முன்னாடி நிக்கறதே போதும், அதுலியே ஒன்னோட கஸ்டம்லாம் விடிஞ்சிரும்னு சொல்றாரு ஐயன்!


பகைமையும் மேன்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின். [709]

ஏற்கெனெவே சொன்னதைத்தான் இதுலியும் திரும்பவும் வந்து சொல்றாரு. அதான் அவரு டெக்னிக்குன்னு நான் முந்தியே ஒங்கையுல சொல்லிருக்கேன்ல!

ஒருத்தனோட கண்ணை மட்டுமே பார்த்து, இவன் நம்மளோட சேக்காளியா இல்லை எதிரியான்னு கண்டுபிடிச்சிருவானாம் இந்த வகை தெரிஞ்ச ஆளு!

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற. [710]

ஒரு பெருசுகிட்ட போய் பலான விசயம் சொல்லலாம்னு போறே! சொல்லவும் ஆரம்பிக்கறேன்னு வையி! அப்பிடி சொல்றபோ, அந்தப் பெருசோட கண்ணையே பார்க்கச் சொல்றாரு ஐயன்!

நீ சொல்ற விசயம் அவருக்கு ஏத்ததா இல்லியான்னு அந்தக் கண்ணுங்களைப் பார்த்தே நீ உஷாராயிரலாம்! பிடிச்சிருக்கா, மேல போ! இல்லையா, அப்பிடியே ஜகா வாங்கிக்க! ஒன்தலை தப்பிக்கும்!

இதை ஒரு ராசாகிட்ட பேசறப்ப, ஒரு மந்திரி செய்ய வேண்டிய காரியம்னு இதுல சொன்னாலும், இப்ப இருக்கற தலைங்களுக்கும் இது நல்லாவே பொருந்துதா இல்லையா சொல்லு!' எனக் கேட்டுச் சிரித்தான் மயிலை மன்னார்.

எழுதி முடித்து, டீ, வடை எல்லாம் சாப்பிட்ட பின்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்த இருந்த மன்னார், திடீரென என் பக்கம் திரும்பி, 'நீ இன்னும் கெளம்பிலியா? ஓஓ! ஒனக்கு இன்னும் ஒரு டவுட்டு இருக்குல்ல?' என்றதும் இரண்டாம் முறையாக மீண்டும் அதிர்ந்து போனேன்!

'அட! இவம்பாட்டுக்கு, பலூன் வாங்கன்னு சொல்லி அக்காகிட்ட பணம் வாங்கிகன்னு மாரிகிட்ட சொல்ட்டானே. இதை வைச்சு எவனாச்சும் அண்ணியை ஏமாத்திட்டா இன்னா பண்றதுன்னுதானே யோசிக்கறே?
அதெல்லாம் ’சீக்ரெட்’ வார்த்தைப்பா! ஒரு நாலைஞ்சு வார்த்தை காலையிலியே சொல்லிட்டு வந்திருவேன் ஒங்க
அண்ணி கையுல! அத்த வைச்சு அவ புரிஞ்சுப்பா. இன்னிக்கு சொன்னது நாளைக்குக் கிடையாது! இப்ப தீர்ந்திச்சில்ல டவுட்டெல்லாம்! கெளம்பு! கெளம்பு!' என விரட்டினான், சிரித்துக் கொண்டே!


குறிப்பறிந்து சொல்லும் ’மயிலை மன்னாரை நண்பனாக அடைந்தது எவ்வளவு பெரிய அணிகலன் எனக்கு!’ என வியந்துகொண்டே அருகில் வந்த ஆட்டோவில் ஏறினேன்!

****************************

வள்ளுவர் புகழ் வாழ்க!

8 பின்னூட்டங்கள்:

Unknown Friday, April 10, 2009 12:46:00 AM  

நீண்ட நாட்களு;குப்பின் மன்னாரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி டாக்டர்.

முதல் குறளில் 'அணி'யை அணிகலனாகத்தான் பொருள் படுத்த வேண்டுமா?

இது சும்மா வருகை பின்னூட்டம். முழுதாகப் படித்து உள் வாங்கி திரும்பவும் வாரேன்

VSK Friday, April 10, 2009 11:37:00 AM  

அணி (p. 12) [ aṇi ] , s. ornament. அலங்காரம்; 2. order, regularity, ஒழுங்கு; 3. a file of soldiers, a row, a division of an army, படை வகுப்பு; 4. rhetoric அணியிலக்கணம்; 5. greatness, பெருமை; 6. garland, மாலை; 7. goodness, நன்மை.

மேற்கண்ட பொருள்களில் முதலில் இருந்ததே பொருத்தமாக இருந்தது.

மேலும் என்னிடம் இருக்கும் உரைகளிலும் இதுவே சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி, நண்பரே!

கோவி.கண்ணன் Sunday, April 12, 2009 11:02:00 PM  

நீண்ட நாள்களுக்கு பெறவு மன்னாரு. நல்லா இருக்கு.

குறிப்பரியும் திறன் மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன்

வடுவூர் குமார் Monday, April 13, 2009 4:50:00 AM  

அதை வைச்சுத்தானே ஒரு ஆளையே எடை போடறோம்!
போச்சுடா!
எங்காளுக்கு இன்னும் கொஞ்சம் எடை கூடனுமாம்.:-)

VSK Monday, April 13, 2009 8:52:00 AM  

நன்றி கோவியாரே!
சில விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இருப்பது ஒரு தனித் தன்மை [] எனச் சொல்வார்கள்.
நாய்களுக்கு மோப்ப சக்தி, பறவைகளுக்குப் புயல் பற்றிய எச்சரிக்கை உணர்வு இவையெல்லாம் அவைஉயிர் பிழைக்கவென கொடுக்கப்பட்ட சக்திகள்.
அது குறிப்பறிதலின் கீழ் வருமா எனத் தெரியவில்லை.

VSK Monday, April 13, 2009 8:53:00 AM  

//போச்சுடா!
""எங்காளுக்கு"" இன்னும் கொஞ்சம் எடை கூடனுமாம்.:-)

அப்போ, உங்க பாடு ஆபத்துதான் திரு.குமார்!:))))

நன்றி.

குமரன் (Kumaran) Wednesday, May 06, 2009 7:02:00 PM  

மன்னாரு சொன்னதுல ஒரு ஐயம். அடுத்தது காட்டும் பளிங்குன்னு ஐயன் சொன்னதுனால அந்தக் காலத்துல பளிங்குல உருவத்தைப் பாத்திருக்காங்கங்கற செய்தி மட்டும் தானே இருக்கு. கண்ணாடி அந்தக் காலத்துல இருந்ததில்லைங்கறது வெறும் ஊகம் தானே; ஏதோ ஒன்று இருந்தது என்று சொன்னால் இன்னொன்று இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

VSK Thursday, May 07, 2009 8:59:00 AM  

//மன்னாரு சொன்னதுல ஒரு ஐயம். அடுத்தது காட்டும் பளிங்குன்னு ஐயன் சொன்னதுனால அந்தக் காலத்துல பளிங்குல உருவத்தைப் பாத்திருக்காங்கங்கற செய்தி மட்டும் தானே இருக்கு. கண்ணாடி அந்தக் காலத்துல இருந்ததில்லைங்கறது வெறும் ஊகம் தானே; ஏதோ ஒன்று இருந்தது என்று சொன்னால் இன்னொன்று இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?//

உறுதியாக எதையுமே சொல்ல முடியாது குமரன். அது மன்னாரின் கருத்து. அவ்வளவுதான்!:))
கண்ணாடின்னே சொல்லியிருக்கலாமே, ஏன் பளிங்குன்னு சொல்லணும்னு சிந்திச்சதால வந்த கருத்து!!
மேலும்கண்ணாடி பெல்ஜியம் நாட்டிலிருந்து வந்த ஒன்றுதானே! நமது கண்டுபிடிப்பு இல்லையே!
இதை அப்படியே லூஸுல விட்டுருங்க!
வேறு யாராவது வந்து இது தவறு என நிரூபித்தால், ஏற்றுக் கொள்ள தயக்கமே இல்லை!
நன்றி குமரன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP