Wednesday, April 22, 2009

"வா வா வசந்தமே!" -- 4 [குறுந்தொடர்]

"வா வா வசந்தமே!" -- 4 [குறுந்தொடர்]

[ஒரு கிராமத்து அத்தியாயம்!][முந்தைய பதிவு]


அடுத்த சில தினங்களில் வந்த செய்தி வருத்தமளிப்பதாக இருந்தது.

காட்டுக்குள்ளே சென்றவரைச் சுற்றி வளைத்து கொத்துக் கொத்தாக அடித்து நொறுக்கி சாகடிப்பதாக செய்திகள் வந்தன.

கவலையுடன் இருந்த மாரியும் அவன் கூட்டமும் ஊரிலேயே பெரிய வக்கீலான ஞானசம்பந்தனைப் போய் சந்தித்துத் தங்கள் சோகக்கதையைக் கூறி அழுதனர்.

அவர்கள் சொல்லச் சொல்ல ஞானசம்பந்தனின் கண்கள் கலங்கின. கொஞ்சம் கோபமும் வந்தது அவருக்கு.

'இத்தனை நாள் நீங்கள்லாம் என்ன செய்துகிட்டிருந்தீங்க. உங்க வேலையைப் பார்த்துகிட்டு நீங்கள்லாம் மட்டும் கூடிக் கூடிப் பேசிகிட்டு அக்கடான்னு இருந்துவிட்டு இப்ப வந்து சொல்றீங்களே! இல்லையில்லை, நாங்க சொல்லிகிட்டுத்தான் இருந்தோம்னு சொல்லப் போறீங்க! ஆனா, இது எத்தனை பேருக்குச் சரியாத் தெரிவிச்சோம்னு ஒரு நிமிஷமாவது நினைச்சுப் பார்த்தீங்களா? சரி, சரி. இப்ப அதைப் பத்திப் பேசி என்ன பிரயோஜனம்? நிலைமை ரொம்பவே முத்திப் போன மாதிரி இருக்கு. இப்பவாவது வந்தீங்களே! என்னால ஆனதை செய்யறேன். கவலைப் படாம போங்க.' எனச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

தன்னுடைய ஜூனியரைக் கூப்பிட்டு ஒரு சில உத்தரவுகள் அவசர அவசரமாகப் போட்டார்.

'இன்னும் நாலு நாளைக்கு வேறெந்தக் கேசும் எங்கிட்ட கொண்டு வர வேணாம். உடனே ஒரு பெட்டிஷன் ரெடி பண்ணு. விஷயத்தை நான் சொல்றேன் எழுதிக்கோ!' எனச் சொல்ல ஆரம்பித்தார்.

சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு கணினியை நோக்கி ஓடினார் அந்த வயதான ஜூனியர்!

தனது நண்பரான ஐ.ஜி.யை செல்ஃபோனில் அழைத்து, விஷயத்தை விளக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்.

'எங்களுக்கும் இப்பத்தான் தகவல் வந்தது. அது ஒரு கட்டுப்பட்டி கிராமம். இந்த நூற்றாண்டிலும் போலீசு உள்ளே போகணும்னா அனுமதி வாங்கிகீட்டுத்தான் போகணும்னு ஒரு கட்டுப்பாடு! உதவி பண்ணலாம்னு போனவங்களைக் கூட அடிச்சு விரட்டிட்டாங்களாம். இப்பத்தான் அவங்க கிட்டேருந்து கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு. சி.எம்.பார்வைக்குக் கொண்டு போகணும்னு நானே இருந்தேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க. பார்க்கலாம். என்னால் ஆனதைச் செய்யறேன்' என ஐ.ஜி. வாக்களித்தார்.

'ரொம்ப நன்றிங்க ஜார்ஜ்! நீங்க மனசு வைச்சால் நிச்சயம் ஒரு வழி பிறக்கும்னு நம்பறேன்' எனச் சொல்லி ஃபோனை வைத்தார் ஞானசம்பந்தன்.

**************************

ஐ.ஜி. உத்தரவுக்கிணங்க ஒரு பெரிய போலீஸ் படை அடுத்த இரண்டு தினங்களில், அந்தக் கிராமத்துக்குள் புகுந்தது.

'ஆரைக் கேட்டு போலீஸ் உள்ளே வந்தது ?' எனக் கேட்டவர்களுக்குக் கிடைத்தது நல்ல தடியடி!

வாண்டையார் கோபமாக வெளியே வந்தார்.

'இப்ப இருக்கற ஐ.ஜி. கொஞ்சம் கண்டிப்பானவருங்க. எங்களால எதுவும் செய்ய முடியலை. இந்தக் கலவரத்தை உடனே ஒடுக்கச் சொல்லி எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. நீங்களா கொஞ்சம் இறங்கி வந்தா நல்லது. இல்லைன்னா நாங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்றார் டி.ஐ.ஜி.

'எங்களையே குத்தம் சொல்லுங்க! ‘ஆன்னா ஊன்னா’ உங்களுக்கு இந்தப் பணக்காரங்களைக் கண்டா ஆவாதுதானே! உடனே சட்டம் அது இதுன்னு எதுனாச்சையும் தூக்கிகிட்டு வந்திருவீங்களே! பொளைக்க வளியில்லாத பயலுவ பண்ணின காரியத்தைத் தட்டிக் கேக்க மாட்டீங்களே' எனப் பொரிந்தார் வாண்டையார்.

'அவங்களைப் பிடிக்கறதுக்கும் ஒரு படை போயிருக்கு வாண்டையாரையா! இப்ப எங்களுக்கு யாரு தப்பு பண்ணினாங்கன்றதை முடிவு பண்ற வேலையில்லை. இங்கே நடக்கிற சண்டை சச்சரவை நிறுத்தணும். அதுக்கப்புறமா ரெண்டுதரப்பும் ஒக்காந்து பேசுங்க. நீங்களும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் ஆகணும் ஐயா! மேல்ஜாதி, கீழ்ஜாதின்னு பேசினா சட்டம் அதைச் சகிச்சுகிட்டு இருக்காது இனிமேல்! அப்புறம் உங்க முடிவு' எனக் கறாராகப் பேசிய டி.ஐ.ஜியைத் திகைப்புடன் பார்த்தார் வாண்டையார்.

'அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? இந்த 2009லியுமா இந்தக் கொடுமையை நாம இன்னமும் பண்ணனும்? அதான் காலங்காலமாப் பண்ணி ஒரு இனத்தையே சாய்ச்சிட்டோமே. போதுமே இது! இத்தோட விட்டிருவோமே. இல்லைன்னா, நானே மொத ஆளா நின்னு கொடி பிடிக்க வேண்டி இருக்கும்' என்ற தன் மகனின் குரலைக் கேட்டதும் இன்னமும் ஆடிப் போனார் வாண்டையார்.

'சார்! நாங்க யார் மேலியும் புகார் கொடுக்கப் போறதில்லை. நீங்க அவங்களைப் பிடிச்சீங்கன்னா அவங்க கிட்டேயும் சொல்லிடுங்க. பழையபடி தைரியமா அவங்க இங்கே எங்களோட வாழலாம். அவங்க சுதந்திரத்தில் நாங்க தலையிட மாட்டோம். அவங்கவங்க வாழ்க்கை முறைப்படி வாழ்ந்திட்டுப் போறோம். இதைத் தெளிவா எடுத்துச் சொல்லுங்க. நடந்தது நடந்ததா இருக்கட்டும். இன்மேலியாவது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்.'என்று சொன்ன சத்யாவைப் பெருமையுடன் பார்த்துப் புன்னகைத்தார் டி.ஐ.ஜி.

'அப்ப நாங்க வந்த வேலை ஈஸியா முடிஞ்சிரும்னு நம்பறேன். என்ன சொல்றீங்க வாண்டையார்? இது மாதிரி ஒரு பையனைப் பெத்ததுக்காகவே நீங்க செஞ்ச தப்பையெல்லாம் கூட விட்டுரலாம் போலிருக்கே' எனச் சொல்லிச் சிரித்தார் டி.ஐ.ஜி. மணவாளன்.

வேறு வழியில்லாமல் வாண்டையாரும் சிரித்தார்!

*****************************

'இதோ பாருங்கப்பா! ரெண்டு பக்கமும் நல்லாக் கேட்டுக்கோங்க! இனிமே யாரும் அடிதடி, சண்டைன்னு போகக் கூடாது!

ரெண்டு பக்கமும் நியாயமும் இருக்கு; தப்பும் இருக்கு! காலங்காலமா பழகிப்போன ஒரு முறையிலியே ஊறிப்போனவர் வாண்டையார். அவர் சரின்னு நினைச்ச சில கட்டுப்பாடுகளை மீற அவரால முடியலை. அதேபோல, எத்தனை நாளைக்குத்தான் இந்த அவலம்னு நீங்க நினைச்சதுலியும் தப்பில்லை. நியாயந்தான் அதுவும்! ஆனால், அதுக்காக நீங்க ரெண்டு பேரும் எடுத்த வழிமுறை அவ்வளவு சரியானதாப் படலை. எனக்குத் தெரியும் நீங்க அதுக்கு ஒரு நியாயம் வைச்சிருப்பீங்கன்னு. ஆனால், வன்முறை,.... அது விரும்பியோ, விரும்பாமலோ,... எப்படிச் செய்தாலும் வன்முறை தவறுதான். அதை ரெண்டு பேருமே பண்ணியிருக்கீங்க. யார் அதிகமாச் செய்தாங்கன்னு பட்டியல் போடத் தேவையில்லை. எப்படிப் பார்த்தாலும் அது தப்புத்தான்!

ஆனால், இப்ப வளர்ந்து வரும் இளைய தலைமுறையைப் பார்க்கறப்ப, நம்பிக்கை வருது. வாண்டையார் ஐயா பையன் சத்யா பேசினதைக் கேட்டப்ப, எனக்கு ரொம்பவுமே பெருமையா இருக்கு. இது மாதிரி சிந்தனைங்கதான் இப்போதையத் தேவை! எத்தனை நாளைக்குத்தான் அடிச்சுகிட்டே இருக்கறது? நாளைக்கு நம்ம பசங்க நம்மளைப் பார்த்து, கேள்வி கேட்கும்போது என்ன சொல்லி இதையெல்லாம் நியாயப் படுத்த முடியும்னு நினைக்கறீங்க. நாம போட்ட சண்டையையேவா அவங்களும் தொடரணும்னு நினைக்கறீங்க? உலகம் வளர்ந்துகிட்டே வர்ற அதே நேரத்துல, ரொம்பவே சுருங்கிகிட்டும் இருக்கு. எவ்வளவோ முன்னேற்றங்கள் எல்லா இடத்துலியும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பசங்க அதையெல்லாம் அனுபவிக்காம, வெட்டிகிட்டும், குத்திகிட்டும் சாகணுமா? சொல்லுங்க! அப்படி ஒரு வழியையா அவங்களுக்கு விட்டுட்டுப் போகப் போறோம்?

சரி, இப்ப சொல்லுங்க, உங்க பசங்கள்ல எத்தனை பேரை இந்தச் சண்டையைத் தொடர, அனுப்ப நீங்க தயாரா இருக்கிங்க? ஒண்ணு ரெண்டு கைதான் உயருது! அப்போ, மத்தவங்க யாரும் தன் பிள்ளையை அனுப்பத் தயாரா இல்லை! சரிதானே! உங்க பிள்ளைங்க சாகக்கூடாது. மத்தவங்க அடிச்சுகிட்டு சாகலாம்னா, அது என்னப்பா நியாயம்? நான் சொல்றது விளங்குதா?

இப்ப நான் சொல்றதைக் கவனமா ரெண்டு பக்கமும் கேளுங்க.

நடந்தது எல்லாம் நடந்து போனதா இருக்கட்டும். இனிமே ஒத்துமையா இருக்கணும். அதுக்காக உங்க ரெண்டு பேரையும் கட்டிக் குலாவச் சொல்லலை. அவங்கவங்க பிழைப்பை அவங்கவங்க பாருங்க. யாரும் எங்கியும் சுதந்திரமாப் போய் வரலாம். தடையே இல்லாம. நினைச்சா அமெரிக்காவுக்குக் கூட அனுப்பலாம்!உங்க வசதிக்குத் தக்க வாழ்க்கையை நீங்களே அமைச்சுக்கலாம். வீணாத் தகராறு பண்ணாம முன்னேறதுக்கான வழியைப் பாருங்க! இதுக்கெல்லாம் சம்மதம்னா சொல்லுங்க. இல்லைன்னா சட்டம் அதுக்குத் தெரிஞ்ச வழியில் என்ன செய்யணுமோ அதைச் செய்யறோம்.'
என ஒரு நீண்ட உரையாற்றி நிறுத்தி சுற்றுமுற்றும் பார்த்தர் ஞானசம்பந்தன்.

காவல்துறையின் வேண்டுகோளின்படி, சமரசம் செய்துவைக்க அவர் அழைக்கப் பட்டிருந்தார்.

வாண்டையார் மனசில்லாமல் சிரித்தார்.

சுடலை தலையைக் குனிந்தபடி மோவாயைச் சொறிந்தான்.

எங்கும் மௌனம்!

கூட்டத்தில் ஏதோ ஒரு குழந்தை வீறிட்டு அழுதது.

காற்று வீசாமல் மரங்கள் கூட இவர்கள் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பதுபோல் அசைவற்று இருந்தன.

தொண்டையைச் செருகிக் கொண்டு ஒரு இளம்பெண் மாராப்பைச் சரி செய்தபடி எழுந்தாள்.

'ஐயா! நான் பேசலாமுங்களா?' எனச் சற்று பயத்துடன் சன்னமான குரலில் கேட்டாள்.

'சொல்லும்மா! அதுக்குத்தானே நாங்க வந்திருக்கோம். யாருக்கும் பயப்படாம சொல்லு. உன் பெயர் என்ன?' என அன்புடன் அழைத்தார் டி.ஐ.ஜி.

'எம்பேரு சொக்கிங்க! சேரியில இருந்து வரேங்க. நீங்க சொன்னதையெல்லாம் கேட்டேனுங்கோ! போதுங்க இந்தப் பொலம்பல் வாள்க்கை. சோத்துக்கு வளியில்லாம, நோவு நொடிக்குக் கூட எங்கியும் போவ முடியாம, புருசன் பொளைச்சு வருவானா, பையன் உசுரோட இருக்கானான்னு நிச்சயமில்லாம தெனந்தெனம் செத்துகிட்டிருக்கோங்க. எங்களுக்கு மாட மாளிகைல்லாம் வேணாங்க. இருக்க ஒரு எடமும், துண்ண சோறும், மானமா வாள ஒரு ஊரும் இருந்தாப் போறுங்க. எங்க ஒடம்புலியும் வலு இருக்கு. ஒளைச்சு சாப்புடுவோம். எங்களை மனுசங்களா மதிச்சு நடத்தினா மட்டும் அதுவெ பெரிய ஒதவிங்க. எங்களுக்கு வேற ஒண்ணும் வேண்டாம் இந்த ஒதவி மட்டும் பண்ணுங்கையா! நாங்க வேற ஒண்ணும் கேக்கலை' எனக் கதற அரம்பித்தாள்.

'ஆமாங்க! ஆமாங்க! எங்களுக்கு அது மட்டும் போதுங்க' என இன்னும் சிலர் எழுந்து குரல் கொடுத்தார்கள்.

டி.ஐ.ஜி. நெகிழ்ந்து போனார்.

வாண்டையார் கூட மேல்துண்டால் தன் கண்களை ஒற்றிக் கொண்டார்!!

சத்யா ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் சென்று, அவள் அருகில் சென்று, அன்பாகச் சிரித்தான்.

பெரிய வூட்டுப் புள்ள வந்து நம்முடன் சரிசமமாகப் பழகுவதைப் பார்த்த கூட்டம் உற்சாகம் கொண்டது!

'அப்புறம் என்னையா யோசனை? சரிதானே?' எனக் கேட்டார் டி.ஐ.ஜி.

'இனிமே சொல்றதுக்கு என்னங்க இருக்கு. அதான் நமக்கு அடுத்த தலைமுறை கூடிப் பேசி சொல்லிட்டாங்களே! நீங்க சொல்றதுக்கு கட்டுப் படறோம். மொதல்ல கொஞ்ச நாளு கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக சரியாயிடும். நடந்ததையெல்லாம் நெனைச்சா வெக்கமாத்தான் இருக்கு' என்றார் வாண்டையார்.... கம்மிய குரலில்.

தன் கண்களையே நம்பமுடியாமல் சத்யா பெருமையுடன் தந்தையைப் பார்த்தான்.

சுடலையும் திடுக்கிட்டு, ஒருவித ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து வணங்கினான்.

'ஐயா! நாங்களும் தெரியாத்தனமா தப்பு செஞ்சிருக்கோம். அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க' என தழுதழுத்தான்.

'நல்லது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல எனக்கு சந்தோஷமே! இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்க இந்த ஊருக்கு வெளியுல இருப்போம். ஒண்ணும் அசம்பாவிதம் நடக்காம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. நல்லபடியா இருங்க.' என்றபடி எழுந்தார் டி.ஐ.ஜி.

கூடவே ஞானசம்பந்தனும் எழுந்தார். சத்யாவிடம் நேராகச் சென்று அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்!

'உன்னுடைய உறுதியான முடிவினால்தான் இது நடக்க முடிந்தது. உனக்குத்தான் நன்றி சொல்லணும்' என்றார். சத்யா பணிவுடன் சிரித்தான்.

'நீயுந்தாம்மா!உன்னோட பேச்சும் ரொம்ப உருக்கமா இருந்தது' என சொக்கியைப் பார்த்துச் சிரித்தார்

'இன்னைக்கு ராத்திரி உங்க எல்லாருக்கும் நம்ம வீட்டில்தான் விருந்து. எல்லாரும் வந்திரணும்! அட! சன்னாசி, சுடலை நீங்களும் தான்ப்பா. உங்க ஆளுங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வந்திருங்க' என அன்பாக வேண்டுகோள் விடுத்தார் வாண்டையார்.

'அட! என்னையா எங்களைப் போயி அளைச்சுகிட்டு! என்ன வேலை செய்யணுமோ சொல்லுங்க! நாங்க செய்யறோம்.' என முன் வந்தான் சுடலை.

மாலைத் தென்றல் இதமாக வீசியது!

மரங்கள் 'ஓம்'ஓம்!' என்பது போல் அசைந்தன!


****** நிறைந்தது********

இது கதை அல்ல! என் கனவு எனச் சொல்லலாம்! இலங்கையிலும் இப்படி ஒரு மனமாற்றம் அனைவரிடத்திலும் வந்தால் நன்றாக இ
ருக்குமே என வேண்டுகிறேன்.... என் முருகனிடம்!!
நல்லது நடக்கட்டும்!
படித்த அனைவருக்கும் என் நன்றி!
***************************************

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP