Sunday, April 19, 2009

"வா வா வசந்தமே!" [ஒரு கிராமத்து அத்தியாயம்!]


"வா வா வசந்தமே!" -- 1

[ஒரு கிராமத்து அத்தியாயம்!]
[இது ஒரு குறுந்தொடர்! இதைப் படிக்கையில் வேறு ஏதாவது உங்கள் நினைவுக்கு வரும் என நான் எண்ணுகிறேன். அப்படி வந்தால் அது மகிழ்ச்சியே! இறுதியில் என் கருத்தைச் சொல்கிறேன்!]


அமைதியான அழகான சிறு கிராமம் எனக் கதைகளில் வர்ணிப்பதைப் போலத்தான் அந்தக் கிராமமும் இருந்தது.

இயற்கை வளங்கள் நிரம்பியிருக்க, வயல்களும், வரப்புமாய், ஏரிகளும் குளங்களுமாய், கனி தரும் மரங்களுமாய் பூத்துத்தான் குலுங்கியது.

ராஜபாண்டி வாண்டையார்தான் ஊரிலேயே பெரிய பண்ணையார்!

முக்கால்வாசி நிலங்கள் அவருக்குத்தான் சொந்தம்.

அவரது சாதி சனங்களே அங்கு அதிகமாகவும் இருந்தனர்.

எல்லா கிராமங்களின் சாபக்கேடு போல, ஊருக்கு சற்று தள்ளி, சேரியில் அடிமை சனங்களின் அவலம்.

வாண்டையார் சொல்லே வேதவாக்கு.

அவரை மீறி ஒரு வார்த்தை பேசக்கூட அதிகாரம் எவனுக்கும் இல்லை.

அவர் வீசியெறியும் நெல்லுக்கும், காசுக்கும் அடிபணிந்தே இந்த சனங்களும் வாழவேண்டியிருந்தது ஒரு சமூகக் கொடுமை.

எதிர்த்துப் பேச திராணி இல்லாமல் கூனிக் குறுகிக் குமுறிக் கொண்டிருந்தது சேரி சனம்.

சுடலையும் அவர்களில் ஒருவன் தான்.

ஆனால், வித்தியாசமானவன்.

நம்ம சனங்க மட்டும் அடிமையாவே இருக்கணுமான்னு மனதுக்குள் புழுங்கி, அவ்வப்போது சில பெருசுகளிடமும் தன் ஆத்திரத்தைக் கொட்டுவான்.

'உங்களுக்கெல்லாம் மூளையே மழுங்கிப் போச்சு பெருசுங்களா! அவரு வேணுமின்னா இந்த ஊருலியே பெரிய பணக்காரரா இருக்கலாம். இருந்திட்டுப் போவட்டும். அதுக்காவ, நம்மளையெல்லாம் இப்பிடி நடத்தணும்னு இன்னா கணக்கு? அவங்களுக்குள்ள ஓடுற ரெத்தந்தானே நமக்குள்ளியும் ஓடுது? அந்தத் தெரு வளியா நடந்து போவக்கூடாது, அப்பிடியே போணும்னாலும் செருப்பைக் களட்டிக் கக்கத்துல வைச்சுகிட்டுத்தான் போவணும். சட்டை போட்டு நடக்கக் கூடாது. தலையைக் குனிஞ்சுகிட்டுத்தான் பதில் பேசணும். இன்னாங்கடா நாயம் இது? ஒரு நாளு இல்லாட்டி ஒரு நாளு நான் கேக்கத்தான் போறேன்' என்றவனை வருத்ததோடும், ஒருவித அச்சத்துடனும் பார்த்தாங்க பெருசுங்க.

சன்னாசி தான் முதலில் பேசினான். அவன் தான் கொஞ்சம் அதிக வயசானவன்.

தொண்டையைச் செருமிக் கொண்டே கையிலிருந்த சுருட்டை ஒரு இழுப்பு இழுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

'இப்ப இன்னா ஆயிப் போச்சு ஒனக்கு? மூளை கீளை மளுங்கிடுச்சா? அவுகல்லாம் எத்தினி பெரிய மனுசங்க! காலங்காலமா இப்பிடித்தானே வாள்ந்துகிட்டு பொளைப்பை ஓட்டிகிட்டிருக்கோம்? அந்த மவராசன் ஏதோ அப்பப்ப பார்த்துக் குடுக்கறதால நம்ம வண்டி ஓடுது. அத்தையும் கெடுத்துருவே போலிருக்கே நீ? எதுத்துக் கேட்டா இன்னா நடக்கும் தெரியுமா? கட்டி வைச்சு ஒதைப்பாங்க. ஊரை விட்டே தொரத்திருவாங்க. ஏன்? தலையையே சீவினாக்கூட சீவிடுவாங்க. அவங்க பலம் அப்பிடி. நாமள்ளாம் பாவப்பட்ட சனங்க. இது இப்பிடித்தான்னு தலையில எளுதிட்டான் மேல இருக்கறவன். பேசாம போடறதைப் பொறுக்கிகிட்டுப் போறதை விட்டு, இன்னாமோ அடாவடியாப் பேசுறியே! நீ பண்றதால நம்ம அல்லார் பொளைப்புமே சீரளிஞ்சிரும். நெனைப்புல வைச்சுக்க' எனச் சற்றுக் கண்டிப்புடனேயே சொன்னார்.

'ஆமா! நீங்க வேற எப்பிடிப் பேசுவீங்க. காலாகாலமா அவன் செருப்பை நக்கி நக்கி, அடிமைப் புத்தி ஒடம்புல ரொம்பவே ஊறிப் போச்சு உங்களுக்கெல்லாம்! உங்ககிட்ட போயி நாயம் கேக்க வந்த என்னைச் சொல்லணும்' என உறுமினான் சுடலை.

'என்னல, பேச்சு ரொம்பவே நீளுது. நாவை அடக்கிப் பேசு ராஸ்கோல்' எனச் சீறினான் சன்னாசி.

வயது எழுபதைத் தாண்டியும், கறுத்த அந்த தேகத்தின் வலு இன்னும் குறையாமலேதான் இருந்தார்.

'இப்ப அண்ணன் இன்னா சொல்லிட்டாருன்னு இப்பிடிக் கூவுறே பெருசு நீ? அவரு சொன்னதுல இன்னா தப்பு? அவனுக சோறு மட்டுமா போடறாங்க. அப்பப்ப நமக்குப் புள்ளைங்களும் கெடுக்கறானுவளே! நம்ம பொண்ணுங்க எத்தினி பேரை சீரளிச்சிருக்கானுவ. அதை கேக்க நாதியில்ல. இவரை அடக்க வந்திடுவீங்களே!' என முன்னுக்கு வந்தான் பாளையம். அவன் பின்னாலே அவனை ஆமோதிப்பது போல இன்னும் சில இளைஞர் கூட்டம்.

'இவங்ககிட்டப் போயி இதையெல்லாம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை அண்ணே! நீங்க வாங்க. நாம எதுனாச்சும் செய்யணும் இதுக்கு' என சுடலையைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தார்கள்.

'ம்ம்ம்! நா பாக்காத கூத்தா? இவனுக வயசுல எனக்குந்தான் இந்த ரோசம் இருந்திச்சு.எல்லாம் போகப் போக சரியாயிரும். கொஞ்சம் அடிபட்டதும் புத்தி வரும்' எனத் தன் சுருட்டைத் தொடர்ந்தான் சன்னாசி.

மறுநாள், அந்த அநியாயம் நடந்தது!
********************


[தொடரும்]

6 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, April 19, 2009 9:54:00 PM  

:))

நல்லத் தொடருக்கான அறிகுறி தொடக்கத்திலேயே தெரிகிறது.

//மறுநாள், அந்த அநியாயம் நடந்தது!
//

கேப்டனை அனுப்பி தடுத்து நிறுத்த முயற்சி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

VSK Sunday, April 19, 2009 10:47:00 PM  

நன்றி!!
:))))))))))))

Unknown Monday, April 20, 2009 2:39:00 AM  

ஒரு நல்ல பழைய படத்தின் ஆரம்ப காட்சிகளை சொன்னது போல் இருக்கிறது.

VSK Monday, April 20, 2009 8:43:00 AM  

//ஒரு நல்ல பழைய படத்தின் ஆரம்ப காட்சிகளை சொன்னது போல் இருக்கிறது//

இப்போதும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் தொடரும் அவலமே இது நண்பரே!.

கோவி.கண்ணன் Monday, April 20, 2009 9:26:00 PM  

//இப்போதும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் தொடரும் அவலமே இது நண்பரே!.//

நகர்புறங்களிலும் திருநீரை ஒரு அடி உயரத்தில் இருந்து உள்ளங்கையில் தூக்கிப் போடுவது நடக்குதே ஸ்வாமி.

VSK Monday, April 20, 2009 10:41:00 PM  

எல்லா மட்டங்களிலும் எல்லாராலும் இந்த அவலம் தொடர்கிறது இப்பவும் எனவே சொல்லியிருந்தேன். அதையே நீங்களும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.
எவர் செய்யினும் குற்றம் குற்றமே!
நன்றி கோவியாரே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP