Tuesday, April 21, 2009

"வா வா வசந்தமே!" -- 3 [குறுந்தொடர்]

"வா வா வசந்தமே!" -- 3 [குறுந்தொடர்]

[ஒரு கிராமத்து அத்தியாயம்!]

[முந்தைய பதிவு]

அன்றிரவுதான் அந்தப் பயங்கரம் நடந்தது!

நள்ளிரவு தாண்டிய கொஞ்ச நேரத்தில், சேரிக் குடிசைகள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

அலறிக் கொண்டு வெளியில் வந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது ஒரு கூட்டம்.

பெண்கள் கதறக் கதற ஒரு ஓரமாக அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

சின்னஞ்சிறுசுகளும் தப்பவில்லை இந்தக் கொடூரத்திலிருந்து.

எல்லாம் ஒரு சில மணி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.

விடிந்ததும் அந்த இடம் ஒரு மயானம் போலக் காட்சியளித்தது.

தப்பிப் பிழைத்தவர்கள், வலியினால் முனகிக் கொண்டிருந்தார்கள்.

மானம் மறைக்கக் கூடத் துணியில்லாமல் மரத்துக்குப் பின்னால் நின்ற பெண்கள் விசும்பி அழுது கொண்டிருந்தனர்.

மலைப்பகுதியில் தங்கியிருந்து கருக்கலில் சேரிக்குத் திரும்பிய சுடலையைக் கண்டதும், சன்னாசி ஆவேசமானான்.

அவன் தோள் மீது தன் துண்டைப் போட்டு முறுக்கி, 'இப்ப சந்தோசமாடா உங்களுக்கெல்லாம். மானமா கஞ்சியோ கூளோ குடிச்சுகிட்டு எங்க பொளைப்பைப் பாத்துகிட்டிருந்தோம். இன்னாமோ புரட்சி பண்றேன்னிட்டு இப்பிடிப் பண்ணீட்டீங்களேடா பாவிப் பசங்களா! இனிமே நாங்க எங்க போறது?' எனக் கதறினான்.

அமைதியாக அனைத்தையும் கவனித்த சுடலை நிதானமாக சன்னாசியைப் பார்த்தான்.

'இனிமே நீங்க இங்க இருக்கறது சரியில்ல. நேத்து ராத்திரி கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டோம். இனிமே இது நடக்காது. போலீசுகிட்ட போயி உபயோகமில்ல. அவங்க நமக்கு சாதகமா என்னிக்குமே இருந்ததில்ல. இப்ப நான் ஒரு முடிவு சொல்றேன். கேட்டுக்கோங்க. எங்கூட வரலாம்னு நினைக்கறவங்க வாங்க. நான் பாதுகாப்பு தர்றேன். இங்கியே இருக்கறதுன்னாலும் சரி. வாண்டையாரைப் பகைச்சுக்காம இருங்க. அது முடியாதவங்க, இந்த சேரியில இருக்க வேண்டாம். வேற எங்கியாவது போயிப் பொளைச்சுக்கோங்க. எல்லாம் சரியானதுக்கப்புறமா வந்துக்கலாம். சீக்கிரமே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிரலாம்.' எனச் சொல்லி காயமடைந்தவர்களைக் கவனிக்கச் சென்றான் சுடலை.

அவனைத் தொடர்ந்து ஒரு கூட்டம் சேரத் தொடங்கியது.

அவர்களை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தான் சுடலை.

எஞ்சியிருந்த கூட்டம் இருப்பதை ஒழுங்கு செய்ய முனைந்தது.


*******************


அடுத்த சில நாட்கள் சம்பவம் ஏதுமில்லாமல் கழிந்தன.

'சுடலை எங்கே இருக்கான்னு ஆருக்காச்சும் தெரியுமாலே!?' என வினவினார் வாண்டையார்.

'தெரியலீங்க! அந்த மலைக்காட்டுக்குள்ளதான் எங்கியோ இருக்காங்கன்னு தெரியுது. ஆனா, அந்தப் பக்கமே போக முடியலீங்க' என்றார் கணக்குப்பிள்ளை.

'சரி. எதுக்கும் நீ நம்ம பக்கத்து ஊர்க்காரனுக்கும் சொல்லிவிடு. அவனும் கூடமாட இருந்தா காரியம் சுளுவா முடிஞ்சிரும்' எனச் சொல்லி விஷமமாகச் சிரித்தார் வாண்டையார்.

சட்டெனப் புரிந்துகொண்ட கணக்குப் பிள்ளை,'அட! அது கூட நல்ல யோசனைதானுங்க ஐயா! அவங்க மேலியும் கை வைச்சிருக்கானுங்கன்னு சொல்லிக்கறாங்க. அதுனால அவிங்களும் கோவமாத்தான் இருக்காங்க' எனச் சிரித்தார்.

'இதெல்லாம் தெரியாமலா நான் சொல்லுறேன். நீ விரசலா ஆளனுப்பு அவங்களுக்கு' என எழுந்தார்.

கணக்குப் பிள்ளை கிளம்பினார்.

******************

கணக்குப் பிள்ளை வரவில்லை.

அவர் பிணம்தான் வந்தது.

'நிறுத்தாவிட்டால் அடுத்தது நீதான்!' என ஒரு கடிதம் மார்பில் செருகப்பட்டு!

துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

வாண்டையாருக்கு லேசாக உதறல் கண்டது.

'போலீசுக்குச் சொல்லி விடலாமுங்களா? அவிங்க வந்தா ஈசியா புடிச்சிருவாங்க' என்றவர் பக்கம் திரும்பி எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

நிறைய விஷயம் நடந்திருச்சு. தப்புத்தண்டா நாமளும் நிறையப் பண்ணியிருக்கோம். இப்பப் போயி அவங்களைக் கூப்பிட்டா ஆதியிலேருந்து குடைவாங்க. நம்ம குட்டெல்லாம் வெளிப்பட்டிரும். அதுனால, இப்ப வேண்டாம்.' பார்க்கலாம். பக்கத்து ஊர்க்காரனும் வந்திட்டா சீக்கிரமா முடிச்சிரலாம். அப்புறம் பிரச்சினை ஒண்ணுமில்லை' எனத் தெம்பாகச் சொன்னார்.

**********************

'அடுத்த ஊர்க்காரனும் சேர்ந்துகிட்டானாமில்ல! இப்ப என்ன பண்றது? நடந்ததையெல்லாம் விவரமா போலீசுக்குத் தெரியப் படுத்தணும் . அப்பத்தான் ஒரு நல்ல வளி பொறக்கும். இப்ப யாரு அதைச் செய்யறது' எனக் கேட்டான் பாளையம்.

நம்ம சனங்க சிலபேரு வெளியூருக்குப் போயிருக்காங்கல்ல. அவிங்ககிட்ட தகவல் சொல்லி அனுப்பணும். அவிங்கதான் இதை எப்பிடியாவது போலீசுக்குத் தெரியப் படுத்தணும்' எனத் தீர்மானமாகச் சொன்னான் சுடலை.

அதைச் செயல்படுத்த இருவர் கிளம்பிச் சென்றார்கள்.

சற்று நேரத்தில் அந்த இடத்துக்கு அருகில் ஒரு நாட்டு வெடிகுண்டு வந்து வெடித்தது!

'இனிமே இங்க தங்கி இருக்கறது ஆபத்து. பொண்டு புள்ளைங்கள்லாம் திரும்பிப் போயிடுறீங்களா? ஏன்னா, அதை வைச்சு ஆராச்சும் தப்பாப் பேசிறக் கூடாதுன்னு பாக்கறேன்' எனக் கவலையுடன் கேட்டான் சுடலை.

உங்க கூட வந்தாச்சு. அது ஊருக்கெல்லாம் தெரியும் இப்ப. அங்க போனா என்ன நடக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அந்தக் கொடுமையை அனுபவிக்கறதுக்கு, உங்க கூட செத்தாலும் சாவத் தயார் நாங்க. நாங்க போறதா இல்லை. நாங்க உங்க கூட இருக்கறது தொல்லைதான் உங்களுக்குன்னு தெரியும். ஆனா எங்களுக்கும் வேற போக்கிடம் எங்கே? இங்கியே இருந்திடறோம்.' எனச் சொன்ன அவர்களை ஒரு மதிப்புடன் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான் சுடலை.

'சரி, அப்ப எல்லாரும் ஒண்ணா வாங்க. பிரிஞ்சிராதீங்க. வளி தப்பிட்டா கஷ்டம்' எனச் சொல்லி இன்னும் ஆழ்காட்டுக்குள் ஊடுருவினான் சுடலை.

குண்டுவெடிச் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

**********************

'ஈனப் பொளைப்பாப் போச்சே நம்ம நிலைமை' என்றான் மாரி.

'என்ன சொல்ல வர்றே?' என எதிர்க் கேள்வி போட்டான் காத்தமுத்து.

வழக்கமாகச் சந்தித்துக் கொள்ளும் அந்த டீக்கடையில்தான் அவர்கள் கூடியிருந்தார்கள்.

'என்னத்தைச் சொல்றது. சேரியில இருக்க முடியாம அடிச்சுத் தொரத்தினாங்க. வேற இடத்துக்குப் போயி பொளைச்சுக்கோங்கன்னு சுடலை சொன்னதைக் கேட்டு இங்க வந்து கஞ்சிக்கு ஏதோ வளி பண்ணிகிட்டு கொளந்தை குட்டிங்களக் காப்பாத்திகிட்டு இருக்கோம். ஆனா, மனசு முளுக்க அங்கியேதான் கெடந்து அல்லாடுது. சேரியில இருக்கறவங்க நல்லா இருக்காங்களா இல்லியான்னும் தெரியல. காட்டுக்குள்ள போனவங்க கதி இன்னான்னும் தெரியல. அங்கேருந்து வர்ற சேதிங்களும் சொகமா இல்ல. தோ, நம்ம கருப்பனும், வெள்ளையனும் அங்கேருந்து வந்து சொன்ன சேதிய எல்லாரும் கேட்டீங்கதானே' என்றான் மாரி.

'ஆமா, அதுக்கென்ன பண்ணச் சொல்றே இப்ப. நீயும் நானும் வேணுமின்னா அங்கே போயி அவங்களுக்கு எதுனாச்சும் ஒத்தாசை பண்ணலாம்னா, அதுனால இன்னா லாபம்? நாமளும் அவிங்களோட செத்துத்தான் போவோம். இல்லைன்னா அடிபடுவோம். நம்ம புள்ளைங்க வருமா? இல்ல, அனுப்பித்தான் வைப்போமா? அவிங்கள்லாம் இங்கியே பளகிட்டாங்க. அங்க திரும்பவும் சேரிக்கே போக சம்மதிப்பாங்களா? இங்க ஏதோ ஒரு வளி பண்ணிட்டோம். அதுவே நெலைச்சு இருக்குதான்னு பாடுபடணுமே தவிர இருக்கறதை கெடுத்துகிடணுமா?' என்றான் இசக்கி.

'இப்ப இன்னா நாயம் சொல்றே நீ? அதுக்காக நம்ம சனம் அப்பிடியே அளிஞ்சு போகட்டும்னு விட்டுரலாமா? அது தப்பில்லியா' என்றான் கருப்பன் கோபமாக.

'அப்பிடி ஆரு சொன்னாங்க? அவிங்கள அப்பிடியே விட்டுருவோமா? எதுனாச்சும் பண்ணத்தான் வேணும்' என கருப்பனை சாந்தப் படுத்தினான் காத்தமுத்து.

'சரி, ஆகவேண்டியதப் பாப்பம். இந்த விசயம் இன்னும் ஊர்ரு ஒலகத்துக்கெல்லாம் சரியாத் தெரியல. அப்பிடியே அரைகுறையாத் தெரிஞ்சவனும் ஏதோ நம்ம மேலதான் முளுத் தப்பும்ன்ற மாரி பேசறான். அதுக்கு எதுனாச்சும் வளி பண்ணனும். எப்பிடி செய்யலாம்னு சொல்லுங்க' என்றான் மாரி.

'மொதல்ல இது போலீசுக்குத் தெரியணும். கேக்க ஆளில்லைன்னுதான் வாண்டையான் ரொம்பவே துள்றான். அவிங்க போனாக்க நெலமை சீராகும்னு படுது. அதான் சுடலையும் சொல்லி வுட்டிருக்கான். மொதல்ல இந்த சண்டையை நிப்பாட்டிட்டு, ரெண்டு பக்க சனமும் இன்னா சொல்றாங்கன்னு கேட்டு, ஒரு தீர்வு வரணும். அப்பத்தான் அங்க இருக்கறவங்களுக்கு நிம்மதி. நமக்குந்தான்' என்றான் வெள்ளையன்.

'அதுக்கு அந்த வாண்டையாரு சம்மதிக்கணுமே! அப்பத்தானே நடக்கும். அவரு அவ்வளோ சுளுவா விட்டுக் குடுத்த்ருவாரா?' எனக் கேட்டான் இசக்கி.

'ஆமா, சொல்ல வைக்கணும். அதுக்குத்தான் போலீசு வேணும்ன்றது. எத்தினி நாளைக்குத்தான் அடிமையாவே நம்ம சனம் இருந்து அளியறது? நாம ஒண்ணும் அவிங்க நெலத்தக் குடுன்னு கேக்கலியே. எங்களையும் மான்மா பொளைக்க வுடுங்கடான்னுதானே கேக்கறோம். நம்மள அடிமையா நடத்தாம செய்யற வேலைக்கு காசை ஒளுங்க கொடுத்து, நம்மளையும் சமமா நடத்தினா நாம ஏன் குத்தம் சொல்லப் போறோம். நம்ம புள்ளைங்க நல்லாப் படிக்கணும். நம்ம வளக்கத்தை வுடாம இருக்கறதுக்கு அனுமதிக்கணும். வேற இன்னா வோணும் நமக்கு. அதுக்கப்புறம் அவனவன் பாடு. பொளைக்கறதும், வாள்றதும். இன்னா நான் சொல்றது!' என்றான் மாரி.

'சரிப்பா. இப்ப இதை ஆரு, எப்பிடி செய்யறது?' எனக் கேட்டான் வெள்ளையன்.

'வேற ஆரு? நாமதான் செய்யணும். நம்ம சேரி சனத்துக்கு இதுக்கு வளியே இல்லை. சுடலை சொன்னான்னா அது இப்ப எடுபடாது. நாமதான் இங்க வந்து மானமா எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போவாம இருக்கோம். ஊருக்குள்ளியும் நமக்கு ஒரு நல்ல பேரு இருக்கு. அத வைச்சுத்தான் நாம் செய்யணும். மொதல்ல ஒரு நல்ல வக்கீலாப் பாப்பம். நாம நேரடியா சொன்னா நம்புவாங்களோ மாட்டாங்களோ' என மாரி சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.

********************************

[நாளை வசந்தம் வரும்!??]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP