Monday, July 28, 2008

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 2

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 2


முதல் பகுதி இங்கே!

இரண்டாம் பகுதி:
1.
ஆசிரியர் மேலும் உரைக்கலானார்:
"யானறிவேன் நன்றாக ப்ரஹ்மன் எதுவென்று"எனவிங்கு நீ நினைத்தால்
அப்போதே நீயதனின் சிறுதுளியும் அறியவில்லை என்றுணர்வாய்
மனிதனோ, கடவுளோ 'இது'வென்று சொன்னதையே நீயும் அறிவாய்
எனவே யான் சொல்லுகிறேன், 'ப்ரஹ்மனை இன்னமும் நீயே தேடு!'

2.
சீடன் சொன்னான்:
'ப்ரஹ்மன் என்பதை இங்கே அறிவேன் என்றே யானும் நினைக்கின்றேன்'
ஆசிரியர் கூறலுற்றார்:
'அதனை நன்கே நானும் அறிவேன் என்றே யானும் எண்ணவும் இல்லை
எனக்கு அதனை அறியாதெனவும் யானும் இங்கு எண்ணவுமில்லை
"அறியவும் இல்லை; அறிந்தும் உளது" என்றே இங்கே எம்மில் எவரோ
தான் உணர்வாரோ, அவரே ப்ரஹ்மனை அறிந்தவர் ஆவார்.

3.
எவரால் ப்ரஹ்மனை அறியாதுளதோ, அவரே அதனை அறிந்தவர் ஆவார்
எவரிதை இங்கு அறிந்தவர் என்பரோ, அவரே அதனை அறியாதவராம்
அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை
அறியாதவரோ அனைத்துமே அறிவார்!


4.
எவ்வொரு நிலையிலும் ப்ரஹ்மனை உணர்வோர் இதனை நன்கே அறிந்தவர் ஆவார்
அவ்வொரு நிலையில் அவரும் இங்கே அழியாநிலையும் அடைவார்
ஆத்மா என்னும் தன்னை உணர்வதால் தைரியம் இங்கே பிறக்கிறது
அதனைப் பற்றிய அறிவை அடைவதால் அழியாநிலையே கிடைக்கிறது

5.
தன்னை ஒருவன் இங்கே அறிந்தால், வாழ்வின் உண்மை புரிந்துவிடும்
இங்கே இதனை அறியாவிட்டால், பேரழிவே வந்து எதிர்கொள்ளும்
தன்னைஇங்கே அனைத்திலும் உணர்ந்து எல்லாம் தானே என்பதை அறிந்து
உலகியலை விட்டுத் துறக்கும் அறிஞர் அழியாநிலையே அடைந்திடுவார்
______________

[வளரும்]

11 பின்னூட்டங்கள்:

Kavinaya Tuesday, July 29, 2008 9:48:00 PM  

//"யானறிவேன் நன்றாக ப்ரஹ்மன் எதுவென்று"எனவிங்கு நீ நினைத்தால்
அப்போதே நீயதனின் சிறுதுளியும் அறியவில்லை என்றுணர்வாய்//

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

VSK Tuesday, July 29, 2008 10:03:00 PM  

நான் ஒன்றும் சொல்லவில்லை கவிநயா!

இருப்பதை மொழிபெயர்த்துத் தருகிறேன்..... எனக்குத் தெரிந்த அளவில்!

அவ்வளவே!

நன்றி.

கோவி.கண்ணன் Tuesday, July 29, 2008 10:15:00 PM  

//அனைத்திலும் உணர்ந்து எல்லாம் தானே என்பதை அறிந்து
உலகியலை விட்டுத் துறக்கும் அறிஞர் அழியாநிலையே அடைந்திடுவார்
//

அத்வைதச் சித்தாந்தம் !!!

//எவரால் ப்ரஹ்மனை அறியாதுளதோ, அவரே அதனை அறிந்தவர் ஆவார்//

நீங்கள் அறிந்தவரா ? அறியாதவரா ?

VSK Tuesday, July 29, 2008 10:59:00 PM  

//நீங்கள் அறிந்தவரா ? அறியாதவரா ?//

அறியாதவன்!

ஆயில்யன் Tuesday, July 29, 2008 11:16:00 PM  

//அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை
அறியாதவரோ அனைத்துமே அறிவார்//

உண்மை

தடம் பார்த்து நடப்பதில் இல்லை வாழ்க்கை!
புது தடம் பதித்து செல்வதில் இருக்கிறது!

VSK Tuesday, July 29, 2008 11:32:00 PM  

சரியாகச் சொன்னீர்கள் ஆயில்யன்!

அதைத்தான் 'தன்னைத் தான் உணர்க!' என முன்னுரையில் சொல்லியிருக்கிறேன்.

அனைவரும் சேர்ந்தே கற்போம்..... அவரவர் வழியில்!
நன்றி.

VSK Tuesday, July 29, 2008 11:35:00 PM  

நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் முதல் வரியில் ஒரு சீலேடை இருக்கிறது!
கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அறிந்தவர்மூலம் அறிவதுமில்லை
அறிந்தவர் 'மூலம்' அறிவதுமில்லை!

jeevagv Wednesday, July 30, 2008 7:57:00 AM  

//அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை//
அறிந்தவர் மூலமாக மற்றவர் அறிவதில்லை - என்பதாகப் புரிந்தது.
அறிந்தவர் 'மூலம்' அறிவதும் இல்லை - இது புரியவில்லையே?

VSK Wednesday, July 30, 2008 8:20:00 AM  

////அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை//
அறிந்தவர் மூலமாக மற்றவர் அறிவதில்லை - என்பதாகப் புரிந்தது.
அறிந்தவர் 'மூலம்' அறிவதும் இல்லை - இது புரியவில்லையே?//

முதல் பொருளைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள்.
இரண்டாவது மூலம் [origin] என்பதைக் குறிக்கும்.
அறிந்துவிட்டோம் என நினைப்பவர் கூட இதன் ஆதியையோ, அந்தத்தையோ அறிவதில்லை என்ற பொருளில்.

திவாண்ணா Wednesday, July 30, 2008 10:24:00 PM  

என்ன செய்வது ! எல்லோருக்குமே ஒரு தியரியாக புரிதல் முதலில் தேவைப்படுகிறது. அப்புறம்தானே அனுபவம்?
சில கொடுத்து வைத்த நபர்களுக்கு தியரி இல்லாமலே அனுபவம் கிடைத்து விடுகிறது. அரிதாகத்தான்!

VSK Wednesday, July 30, 2008 10:55:00 PM  

//என்ன செய்வது ! எல்லோருக்குமே ஒரு தியரியாக புரிதல் முதலில் தேவைப்படுகிறது. அப்புறம்தானே அனுபவம்?
சில கொடுத்து வைத்த நபர்களுக்கு தியரி இல்லாமலே அனுபவம் கிடைத்து விடுகிறது. அரிதாகத்தான்!//

அதற்குத்தான், உப நிஷத்...நெருங்கி வா... எனச் சொல்கிறார்கள்.

நீ எதனை நெருங்கி வருகிறாய் என்பதை வைத்தே உன் அனுபவம் நிர்ணயிக்கப்படுகிறது!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP