Monday, July 28, 2008

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3


முந்தையப் பதிவு இங்கே!

மூன்றாம் பகுதி:
1.
கதையொன்று சொல்கிறேன் கேள்!
ப்ரஹ்மன் ஒருமுறை கடவுளர்க்கு வெற்றி ஈட்டித் தந்தது
ப்ரஹ்மன் தந்த வெற்றியால் கடவுளர் மனமகிழ்ந்தனர்
'உண்மையில் இவ்வெற்றி எம்முடையது; புகழெல்லாம் எமக்கே'
எனத் தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டனர்

2.
அனைத்தும் அறிந்த ப்ரஹ்மன் அங்கே அவர்கள் முன்னே தோன்றியது
வல்லமைவாய்ந்த அப்பேரொளியை அவர்களால் அறியமுடியவில்லை

3 - 6.
ஒளியின் தேவனை அவர்கள் அழைத்தனர்
'அக்கினித் தேவனே! நீ சென்று அது எவரெனக் கேட்டுவா!'
'அப்படியே!' எனச் சொன்ன தீயின் கடவுள் அதனிடம் விரைந்தான்
'யாரடா நீ?' என ப்ரஹ்மன் வினவியது


'அக்கினியென அழைப்பர் என்னை! அனைத்தையும் எரிப்பவன்'[ஜாதவேதன்] என்றான் அக்கினி
'அனைவரும் அறியும் நின்னின் செயல்திறன் என்ன?' என ப்ரஹ்மன் கேட்டது
'பூமியில் இருக்கும் எதையும் எரித்துச் சாம்பலாக்கிடுவேன்' என பதில் வந்தது சருகொன்றை எடுத்து அவன் முன்னே போட்டு,'இதனை எரித்துக் காட்டு' என ப்ரஹ்மன் சொன்னது
தன் திறனனைத்தும் ஒன்றுகூட்டி அக்கினி அதனை எரிக்கமுயன்று முடியாமல் திரும்பியது
அப்பேரொளியிடமிருந்து விலகி கடவுளரை அடைந்தான்
'என்னால் இதனை யாரென அறிந்திட இயலவில்லை' எனச் சொன்னான்.


7 - 10.
காற்றுதேவனை அழைத்த கடவுளர், 'யாரது அதுவென விடைகண்டுவா' என அனுப்பினர்
'அப்படியே!' எனச் சொன்ன காற்றின் கடவுள் அதனிடம் விரைந்தான்
'யாரடா நீ?' என ப்ரஹ்மன் வினவியது
'மாதரிச்வன்' என்னும் காற்றுத்தேவன் என என்னை அழைப்பர்' என்றான் வாயு 'அனைவரும் அறியும் நின்னின் செயல்திறன் என்ன?' என ப்ரஹ்மன் கேட்டது
'பூமியில் இருக்கும் எதனையும் எங்கே வேண்டினும் கொண்டுசெல்பவன் யான்' பதிலிறுத்தான் காற்றுத்தேவன்
சருகொன்றை எடுத்து அவன் முன்னே போட்டு,'இதனை எடுத்துச் செல்' என ப்ரஹ்மன் சொன்னது
தன் திறனனைத்தும் ஒன்றுகூட்டி வாயு அதனை தூக்கமுயன்று அசைக்கக்கூட முடியாமல் திரும்பினான்
அப்பேரொளியிடமிருந்து விலகி, கடவுளரை அடைந்தான் காற்றுத்தேவன்
'என்னால் இதனை யாரென அறிந்திட இயலவில்லை' எனச் சொன்னான்.

11 12.
கடவுளர் அனைவரும் இந்திரனைப் பார்த்து,
'மகவான் என்னும் இந்திரனே! அப்பேரொளி எவரெனக் கண்டுவருக!' என்றனர் 'அப்படியே!' எனச் சொன்ன இந்திரன் அதனிடம் விரைந்தான்
ஆனால் பேரொளி சட்டென மறைந்து சென்றது


ஏதுமறியா இந்திரன் உடனே அங்கே வசிக்கும் அனைவரும் போற்றும் ஒரு பெண்ணிடம் சென்றான்
அவளே உமையாள் ; இமவான் பெற்ற எழில்நிறைச் செல்வி
'என்முன் இருந்து சட்டென மறைந்த அப்பேரொளி எதுவென இயம்பிட வேண்டும்' என வேண்டினான்.

____________________-


[வளரும்]

5 பின்னூட்டங்கள்:

Kavinaya Wednesday, July 30, 2008 9:38:00 PM  

நல்லாருக்கு கதை. அப்புறம்?

VSK Wednesday, July 30, 2008 10:00:00 PM  

நாளை வருங்க!

ஏதோ நீங்களாவது வந்தீங்களே, கவிநயா!

உங்களது முதல் பின்னூட்டத்தின் பொருள் இப்போ புரியுது!

கோவி.கண்ணன் Wednesday, July 30, 2008 10:06:00 PM  

//கேன உபநிஷத்" -- 3 //

"கேன" என்றால் என்ன ?

திவாண்ணா Wednesday, July 30, 2008 10:25:00 PM  

???
:-)
இருக்கேன் சாமி!

VSK Wednesday, July 30, 2008 10:41:00 PM  

அதைத்தாங்க தலைப்பிலேயே சொல்லியிருக்கிறேன்!

'கேன' என்றால் 'எவரால்' எனப் பொருள்

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP