Friday, July 25, 2008

"என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!"

"என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!"
எனைச் சேர்ந்து என்னை என்றும் நீ மகிழ்ப்பாய்
எனைவிட்டு என்றும் நீ அகலாது இருப்பாய்
நான் என்ன செய்தும் என்னை நீயும் மறவாய்
என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!

பிழையாவும் செய்தே தினம்வாழும் பேதை
திசைஏதும் அறியாமல் அலைகின்ற கோழை
மழைமேகம் போல எனக்காக வந்து
உழல்கின்ற என்னுன் அருள்தந்து காப்பாய்!

என்பாடல் கேட்டு தினம் மகிழ்ந்திருப்பாய்
நின்பெருமை யாவும் நான் பாட நீ கேட்பாய்
நின்னருளை எனக்குத் தரத் தாமதம் ஏன்
எனைநீயும் மறந்தால் நினக்கேது புகழே!

உனைப் பாடிப்போற்றி தினம் வாழ்ந்திருப்பேன்
நின்புகழைப் பாடி நிதம் என்னை மறப்பேன்
நான் வாழ்வதுந்தன் அருட்கருணையாலே
எனைநீயும் மறந்தால் நான் என்ன செய்வேன்!

நான் வாழ்வதிங்கு உந்தன் அருளினாலே
என்நாளும் இங்கு நிறைவ துன்னருளே
நினை நம்பி வாழும் என்றன் நிலையுணர்ந்து
எனைக் காக்க இங்கு விரைந்தோடி வருவாய்!

மௌனம் ஏனோதாயே மனம் என்ன கல்லோ
ஏது செய்திடினும் நீயே என்றன் புகலே
கவனம் வைத்துக் காப்பாய் கடன்தீர்த்தருள்வாய்
காப்பதுந்தன் கடமை நானும் உந்தன் சேயே!

நாகம் தலைக்கணிந்து நகையாவும் பூட்டி
மேகம் குளிரவைத்து மழைதன்னைக் காட்டி
தாகம் யாவும் தீர்த்து தயையாவும் புரிந்து
மோகம்தவிர்த்து என்னில் நின்னைக்காணச் செய்வாய்!

ஆடிமாதம் வெள்ளி உன்னை நாடி வந்து
தேடியுந்தன் புகழை தினம் பாடி நின்று
நாடிவந்த எந்தன் குறையாவும் தீர்த்து
விடிவெள்ளியாக வெளிச்சங்கள் தருவாய்!

அனைவருக்கும் ஆடி இரண்டாம் வெள்ளி வாழ்த்துகள்!

[என் இனிய நண்பர் திரு. ரவி கண்ணபிரான் சொன்னபடியே இரண்டாம் ஆடி வெள்ளிப் பதிவை "அம்மன் அருளில்" பதிந்திருப்பதால், எனது படைப்பை இங்கே இடுகிறேன்!]

2 பின்னூட்டங்கள்:

Kavinaya Friday, July 25, 2008 1:03:00 AM  

//பிழையாவும் செய்தே தினம்வாழும் பேதை
திசைஏதும் அறியாமல் அலைகின்ற கோழை
மழைமேகம் போல எனக்காக வந்து
உழல்கின்ற என்னுன் அருள்தந்து காப்பாய்!//

அருமையான வரிகள் அண்ணா. அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.

VSK Friday, July 25, 2008 8:49:00 AM  

மிக்க நன்றி, கவிநயா! உங்களுடைய ஆடிவெள்ளிப் பதிவும் பக்தி மணம் கமழ வடிக்கப்பட்டிருக்கிறது. பாராட்டுகள். மூன்றாம் வெள்ளிப் பதிவு நீங்க போடறீங்க அம்ம்னன் அருளில்! நினைவிருக்கிறதுதானே!:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP