Tuesday, November 28, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 9

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 9

இன்னா, அண்ணாத்தை காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?" என்று பரிவோடு வரவேற்றான் மயிலை மன்னார்.

"ம்... எல்லாம் முடிஞ்சு அவரும் போய் சேர்ந்துட்டாரு. நானும் ஊர் வந்து சேர்ந்தாச்சு" என்று சொல்லிய என்னைப் பார்த்து,

"தோ, இப்ப இன்னாத்துக்கு கலங்குறே நீ? அல்லாரும் ஒருநாளைக்கு போய்ச் சேர வோண்டியவங்கதான். ஆனா, அதுக்கு முன்னாடி, நாம யாரு, இன்னான்ற அறிவு நமக்கு வரணும். அப்பால, இதெல்லாம் நம்மை ஒண்ணும் பண்ணாது; இந்த சாவைப் பத்தி நாமளும் கலங்க மாட்டோம். இத்தப் பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதை சொல்றேன், அத்த எளுதிக்கோ" என்றான் மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.

அதிகாரம் 36: மெய்யுணர்தல்

"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு." [351]

நாம இந்த ஒலகத்துல பொறக்கறது எது சரி, எது தப்புன்னு சரிவர ஆராய்ஞ்சு பாத்து நடக்கறதுக்காவத்தான்.
ஆனா, நாம இன்னா பண்றோம்?
நெலையில்லாத பொருள் மேல ஆசை வெச்சு ஏமாந்து போறோம்.
இந்தக் காரு, பங்களா, சொத்து, சொகம் இதெல்லாம்தான் சாசுவதம்னு மயங்கறோம்.
இந்த மயக்கம் தீர்ற வரைக்கும் இந்தப் பொறப்புலேர்ந்து நாம தப்ப முடியாது.


"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு." [352]


இந்த நல்லது கெட்டது இத்தெல்லாம் இன்னான்னு புரிஞ்சுகிட்டு, அத்தோட மயக்கம் நீங்கிப் போச்சுன்னா, நல்லது, கெட்டதுன்னு ஒண்ணும் கிடையாது; நடக்கறதுல்லாம் ஒரு நிகழ்வு; அவ்வளோதான்னு புரிஞ்ச தெளிவு வந்திடுச்சின்னா, அப்பால அல்லா இருட்டும் வெலகிப் போயி, சந்தோசம் மட்டுந்தான் நிக்கும் ஒன்னோட. இன்னா நடக்குதோ, அது அல்லாம் ஒன்னோட நன்மைக்குத்தான்னு நெனைச்சுக்கோ. சரியா?

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து." [353]

இந்த ஒலகத்துல இருக்கற எதுவும் ஒனக்கு சொந்தமில்லைன்னு ஒரு நெனைப்பை வளர்த்துக்கோ.
அப்போ இன்னா நடந்தாலும் அது ஒன்னிய பாதிக்காது.
இவன் ஏன் இப்படி செய்ஞ்சான்; அவன் ஏன் அப்பிடி சொன்னான்னு மருகிகிட்டு இருக்க மாட்டே!
அல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் தேடி அலையாதே!
அப்பிடி இருந்தேன்னா, ஒரு தெளிவு பொறக்கும்.
அப்போ வானமே ஒனக்கு வசப்பட்டுரும்.

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாத வர்க்கு." [354]

நீ இன்னாதான் அரிச்சந்திரன் மாதிரி பொய்யே சொல்லாம, புத்தர் மாதிரி அன்பே சத்தியம்னு, கண்ணகி மாதிரி கற்பே பிரதானம்னு, ஒன்னோட அஞ்சு அறிவையும் அடக்கிட்டேன்னு பீத்திகிட்டாலும், இந்த ஒலக மயக்கத்திலேர்ந்து வுடுபடலேன்னா, ஒரு பிரயோசனமும் இல்லை.
சும்மனாச்சுக்கும், முனிவர் மாதிரி இருக்கேன்னு சொல்லி பாவலா காட்டிகிட்டு, இன்னிக்கு சோறு கிடைக்குமா, அடுத்த பங்களா எப்போ வாங்கலாம், எந்த ஷ்டாக்குல எவ்வளோ பணம் போடலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தியின்னா, மவனே, நிச்சயமா ஒனக்கு அடுத்த பொறப்பு கட்டாயமா உண்டு!

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு." [355]

இது ரொம்ப ஈசியான கொறளு.
நீ எத்தைப் பார்த்தாலும், அத்தோட உண்மையான தன்மை இன்னான்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பாக்கக் கத்துக்கணும்.
ஒதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன்.
ஒரு காரு வாங்கற இப்ப.
சும்மாவா வருது!
மொதல்ல டௌன் பேமெண்ட் கட்டணும்; இன்சூரன்ஸ் எடுக்கணும், அப்பால மார்ட்கேஜு கட்டணும் மாசாமாசம்! ஆக்ஸிடெண்ட் ஆவாம ஓட்டணும்.
இத்தினி இருக்கு அதுல.
சும்மனாச்சும், காரோட அளகுல மயங்கி, தகுதிக்கு மீறி வாங்கிட்டேன்னா, ஒன் பொளைப்பு அத்தோட அம்பேல்தான்.
இது மாரி இன்னும் பலானது பலானது சொல்லலாம்!
நீயே புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.
அப்படி பாக்கறதுதான் உண்மையான மெய்யறிவுன்னு சொல்றாரு.

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி." [356]

ஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.
அதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.
அவர் சொல்றதைக் கேட்டுக்க.
அப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.
ஒரு அறிவு வரும்.
அத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ.
அவ்ளோதான்!

"ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு." [357]

மறுபடியும், மறுபடியும் அத்தையேதான் சொல்றாரு ஐயன்.
சரியானபடிக்கா சிந்திச்சு, இந்த மெய்ப்பொருளை உணர்ந்தியானா, ஒனக்கு மறுபிறவின்றதே கிடையாது.

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு." [358]

மறுபடியும் ஒனக்கு பிறவி வேணுமின்னா, இந்த மயக்கத்துலியே கிடந்து பொரளு. என் வூடு, என் மக்கா, என்னோட காரு, பேங்க் பாலன்ஸுன்னு நினைச்சு நினச்சு பொலம்பிகினே இரு. திரும்பி வரலாம். இத்தெல்லாம் திருப்பியும் ஒரு தபா அனுபவிச்சு சாவலாம்.
ஆனா, ஒன்னொட நோக்கம் இத்தெல்லாம் விட்டொளிச்சிட்டு, விடுதலை வேணும்னா, உண்மையான அறிவை ஒனக்குள்ளியே தேடு.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்." [359]

உரிச்சுப் பார்த்தா வெங்காயத்துல ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுவாங்க கேட்டிருக்கேல்லே!
அது போல, அல்லாத்தையும் உள்ளே பூந்து பார்த்தேன்னா, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேங்கறது புரிஞ்சு போவும்.
அப்போ, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேன்னா, ஒனக்கு எது மேலியும் ஒரு ஆசை இல்லாம போவும். சரியா.
அப்பிடி நடந்தேன்னா, எந்த ஒரு தும்பமும் ஒன்னிய வந்து சேராது. இதுவா, அதுவான்னு மயங்க மாட்டே நீ.

இந்தக் கொறளை,

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், சார்தரு நோய்
மற்றழித்துச் சார்தரா."
அப்பிடீன்னு படிக்கணும்.

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்." [360]

இது வரைக்கும் இந்த மயக்கம், மயக்கம்னு சொல்லிகிட்டு இருந்தேன்ல.
அந்த மயக்கம் எதுனால வருதுன்னு இப்போ சொல்றேன் கவனமா கேட்டுக்கோ!
ஒரு பொருள் மேல வைக்கிற ஆசை மொதலாவது.
ஒருத்தர் மேல வர்ற வெறுப்பு, விரோதம், கோவம் ரெண்டாவது.
இதுவோ, அதுவோன்னு மயங்கற மயக்கம் இருக்கே அது மூணாவது.
இந்த மூணும் ஒன்கிட்ட வராம பார்த்துகிட்டியானா , ஒன்னாண்டை ஒரு விதமான தும்பமும் கிட்டக் கூட நெருங்காது.


இந்த அதிகாரத்துக்கு ஏன் மெய்யுணர்தல்னு பேரு வெச்சாரு தெரியுமா?
மெய்யின்னா ஒடம்புன்னு ஒரு அர்த்தம்; உண்மைன்னு இன்னொரு அர்த்தம்.
ஒடம்பைத் தொட்டு வர்றதுதான் மேலே சொன்ன மூணும்.
இந்த ஒடம்புல இருக்கற அந்த அஞ்சறிவுதான் நம்மை இந்தப் பாடு படுத்துது.
அத்த அடக்கக் கத்துகிட்டா, அது ஒரு விதமான மெய்யுணர்தல்.
ஆனா, அது மட்டும் போதாதாம்.
354ஐ திருப்பி ஒரு தபா படி!
அத்தைப் புரிஞ்சுகிட்டியானா, இதையும் தாண்டி, உண்மை நிலையை அறிஞ்சுக்க முயற்சி பண்றதுதான் உண்மையான மெய்யுணர்தல்னு வெளங்கும்.

நல்லபடியா புரிஞ்சுகிட்டு, நல்லா வாள்ற வளியைப் பாரு.

ஒங்க பதிவாளர்கிட்டேயும் இத்த நான் சொன்னேன்னு சொல்லு.
பைசா பொறாத விஷயத்துக்கேல்லாம் தாம் தூம்னு சண்டை போட வேணாம்னு சொல்லு.
சரி, சரி, டீ, வடை சாப்பிடலாம் வா"
என்று உரிமையுடன் அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்!

28 பின்னூட்டங்கள்:

VSK Tuesday, November 28, 2006 7:29:00 PM  

இன்னா, இன்னும் ஆருமே வரலை!

கோவி.கண்ணன் [GK] Tuesday, November 28, 2006 7:43:00 PM  

எஸ்கே ஐயா,

குறள் விளக்கம் அருமை !

//"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு." //

அருமையான குறளுக்கு எளிமையான பொருள் விளக்கம் சிறப்பாக இருந்தது !

நன்றி !

வடுவூர் குமார் Tuesday, November 28, 2006 7:46:00 PM  

சென்னை வந்துட்டு போனதின் விளைவா?
சும்மா பூந்து கலாச்சிரீக்கிங்க!!
இந்த சென்னை பாஷை எங்கெங்கெல்லாம் படிக்கிறேனோ அப்போதெல்லாம் "சோ" எழுதிய "எங்கே பிராமணன்" யில் வரும் ஒரு விளக்கம் தான் ஞாபகம் வரும்."சந்தியா வந்தனம்" பற்றியது.
ஆதாவது சுருக்கமாக,இன்னிக்கு வாழறதை நாளைக்கு வரைக்கும் வைக்காமா,மறந்திட்டீனா,மறு பிறப்பு என்று ஒன்று இருக்கும் போது எதுவும் ஞாபகம் இருக்காது என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளலாமா?

ஜெயஸ்ரீ Tuesday, November 28, 2006 9:11:00 PM  

உங்கள் சகோதரரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வழக்கம் போல மன்னார் கலக்கியிருக்கிறான்..

VSK Tuesday, November 28, 2006 9:15:00 PM  

மிக்க நன்றி, கோவியாரே!

VSK Tuesday, November 28, 2006 9:19:00 PM  

இன்னாங்க!

சென்னைக்கு வர்றதுக்கு முன்னமேயே இப்படித்தாங்க எளுதிகிட்டு இருக்கேன்.

இதெல்லாம் மன்னார் சொல்றது!

அவன் மயிலாப்பூர்தானுங்களே!

நன்றி, வடுவூராரே!

சோ சொன்னது ஒண்ணும் புதுசில்லைன்னு இப்பவாவது தெரிஞ்சுகிட்டீங்கள்லே!

எல்லாம் ஐயன் சொன்னதுதாங்க!

:))

VSK Tuesday, November 28, 2006 9:21:00 PM  

வழக்கம் போல சுருக்கமான பாராட்டுகள்!

ரொம்ப நன்றி, ஜெயஸ்ரீ !

கருப்பு Tuesday, November 28, 2006 10:16:00 PM  

சென்னையின் தமிழில் குறள்களுக்கு விளக்கம் எழுதுகிறீர்கள். பாஷைதான் சென்னையே தவிர குறளின் விளக்கங்கள் அத்தனையும் அருமை.

எதிர்வரும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் இதனை தயாரிக்கும் தங்கள் பணி வாழ்க!

VSK Tuesday, November 28, 2006 10:24:00 PM  

பணி என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிப் பாராட்டியிருக்கிறீகள், திரு. வி.க.

ஏதோ எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன்.
வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி

VSK Tuesday, November 28, 2006 10:37:00 PM  

அனுதாபங்களுக்கும் எனது தாழ்மையான நன்றி, ஜெயஸ்ரீ !

இலவசக்கொத்தனார் Tuesday, November 28, 2006 11:37:00 PM  

இந்த அதிகாரம் என்னவென்று பார்த்தேன். இப்பொழுது படிக்கத் தோன்றவில்லை. மற்றொரு நாள் படிக்கிறேன்.

Unknown Wednesday, November 29, 2006 6:25:00 AM  

'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.' (355)

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.' என்று ஒரு குறள் படித்திருக்கிறேனே!

ஐயன்கூட ஏழு வார்த்தை கொறள்ல இரண்டு வார்த்தையை மட்டும் மாத்திப் போட்டு இன்னொரு குறள்ன்ட்டாரா! இன்னாபா? இன்னாபாது?

//நடக்கறதுல்லாம் ஒரு நிகழ்வு. அவ்வளோதான்னு புரிஞ்ச தெளிவு வந்திடுச்சின்னா, அப்பால அல்லா இருட்டும் வெலகிப் போயி, சந்தோசம் மட்டுந்தான் நிக்கும் ஒன்னோட. இன்னா நடக்குதோ, அது அல்லாம் ஒன்னோட நன்மைக்குத்தான்னு நெனைச்சுக்கோ.

எதுவும் ஒனக்கு சொந்தமில்லைன்னு ஒரு நெனைப்பை வளர்த்துக்கோ.
அப்போ இன்னா நடந்தாலும் அது ஒன்னிய பாதிக்காது//

என்ற இரண்டு கருத்துக்களே வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ போதுமானது. ஐயனோட கருத்தும் மன்னாருடைய கருத்தாழமிக்க விரிவுரையும் அருமை!.அருமையிலும் அருமை!.

பிறந்த நாள் வாழ்த்துக்கள ஐயா! பல்லாண்டு பல்லாண்டு பன்னூறாண்டு வாழ பண்பாளர் எஸ்கேயை வாழ்த்தி பெருமிதம் கொள்கிறேன்.

VSK Wednesday, November 29, 2006 6:32:00 AM  

ஏதேனும் ஒருவகையில் உங்கள் உணர்வுகள் இதனால் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்., கொத்தனாரே!

நாளையென நாளைத் தள்ளிப் போடவேண்டாம்.
நன்றே செய்வோம்; அதனை
இன்றே செய்வோம்!

நல்லதே நடக்கும்!

VSK Wednesday, November 29, 2006 6:35:00 AM  

வாழ்த்துக்கு மிக்க நன்றி, திரு.சுல்தான்!

ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டிருந்தாலும், இரண்டு களங்களும் வெவ்வேறானவை என்பதை உணர்ந்தே ஐயன் அப்படிச் செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.

மற்றபடி, நின்ங்கள் குறிப்பிட்டிருக்கும் அவ்விரு கோட்பாடுகளும் எனக்கும் உடன்பாடானவையே!

மீண்டும் நன்றி!

மலைநாடான் Wednesday, November 29, 2006 6:49:00 AM  

SK!
சென்னைத் தமிழில் மயிலார் மூலம் தரும் விளக்கங்கள் எளிமையாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் சென்னைத் தமிழ் எனக்குப் புரிவது சிரமமாகவே உள்ளது.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

VSK Wednesday, November 29, 2006 9:02:00 AM  

சென்னைச் செந்தமிழ் நடை தங்களுக்கு புரிய கடினமாக இருப்பது குறித்து வருந்துகிறேன்.
ஒன்று நான் நடையை மாற்றாலாம்.
அல்லது நீங்கள் இதைத் தொடர்ந்து படித்து இன்னொரு புதுமொழியைக்[!!] கற்றுக்கொள்ளலாம்!

என்ன சொல்கிறீர்கள், திரு. மலைநாடன்!
:))

பிறகு, இன்னொன்று!
மயிலார் என்று சொன்னால் ஜி.ரா. கோபித்து கொள்ளப்போகிறார்.
அது அவருடையது!
என் நண்பர் மயிலை மன்னார்!!
:))
நன்றி

மலைநாடான் Wednesday, November 29, 2006 9:38:00 AM  

//ஒன்று நான் நடையை மாற்றாலாம்.
அல்லது நீங்கள் இதைத் தொடர்ந்து படித்து இன்னொரு புதுமொழியைக்[!!] கற்றுக்கொள்ளலாம்!//

ஐயையோ! நீங்கள் நடையை மாற்றிவிடாதீர்கள். நான் புதுமொழியொன்றைக் கற்றுக் கொள்கின்றேன்.

//மயிலார் என்று சொன்னால் ஜி.ரா. கோபித்து கொள்ளப்போகிறார்.
அது அவருடையது!
என் நண்பர் மயிலை மன்னார்//

உண்மைதான். நான் அதைக்கவனிக்கவேயில்லை. ஜீ.ராவும் நீங்களும் கோபிக்காவிட்டாலும், மயிலாரும், மயிலைமன்னாரும், கோபித்துக்கொள்வார்கள். மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன். அவர்களிடம்தான்..:))

இராம்/Raam Wednesday, November 29, 2006 9:59:00 AM  

ஐயா,

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

Anonymous,  Wednesday, November 29, 2006 10:28:00 AM  

அண்ணா!
புளக்கர் சொதப்பி அதனுடன் அல்லாடுவதால் தங்கள் பக்கம் வருவது குறைவு.என் பதிவெதுவுமே வருவதுமில்லை. பெரும்பாலும் இனிமேல் வராது. கணனி அறிவு சற்று தேவை!!! அடியேனுக்கதில்லை.
அதலால் பெருந்தொல்லை.
நிற்க!!!! ஓர் பின்னூட்டத்தில் தங்கள் சகோதரர் மறைவு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் ஆத்ம சாந்திக்கும் ;உங்கள்; உற்றார் உறவினர் அனைவர் மன அமைதிக்கும்;;;ஆறுமுகனை வேண்டுகிறேன்.
தங்கள் மயிலை மன்னார் விளக்கங்கள் வெகு ஜோர்;;;;நான் "சோ"....யக்குவின் பரம ரசிகன்; கூவம் நதிக்கரையில்...அருமையான படைப்பு; அவர் கருத்துக்கள் சிலதில் மாறு படினும்; அவர் நகைச்சுவை எழுத்தின் வீச்சு அதிகம்.அதை உள்வாங்குவேன்....
தங்கள் எழுத்தைப் படிக்கும் போது;;;;;அந்த எழுத்து..;;நினைவுக்கு வருகிறது.
யோகன் பாரிஸ்

ஓகை Wednesday, November 29, 2006 12:36:00 PM  

சுல்தான் அவர்களே, எப்பொருள் யார் .. என்ற குறள் அறிவுடைமை அதிகாரத்தில் வருகிறது. அந்தக் குறளில் கேட்டு அறியும் முறை முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது கல்வியையும் உள்ளடக்கியதாகிறது. கற்றதைக்கூட சோதிக்கச் சொல்கிறது. எப்பொருள் எத்தன்மை.... குறளில் காணலும் உணர்தலும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

இன்னா மன்னாரு, காரு கீருன்னு ஒதாரணம் ரொம்ப பலமா கீதே. இன்னா ரொம்ப வளமா? நல்லா வச்சிகீறாருப்பா உன்ன, எஸ்கே. எஞ்சாய்! அப்பப்ப நம்மளயும் கண்டுகோ. இன்னா வர்ட்டா?

ஒன் நிமிட். யோகன் சார், அந்த ஜக்கு தான் இந்த மன்னாரு அப்பால இந்த கெஜா அல்லாருக்கும் வஸ்தாது. இன்னா சார் வர்ட்டா?

கெஜா.

VSK Wednesday, November 29, 2006 12:53:00 PM  

தோடா! வண்ட்டார்டா! நம்ம வஸ்தாது!
கரீட்டா வண்ட்டியே நைனா!
இன்னா குஜிலிக்கா ஒரு வெள்க்கம் குடுத்துக்கீரே மாமூ!

ரொம்ப டாங்ஸ்ப்பா!

முத்துகுமரன் Thursday, November 30, 2006 7:06:00 AM  

எஸ்.கே. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். இப்பொதுதான் கோவியாரின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்.

VSK Thursday, November 30, 2006 8:41:00 AM  

தாமதமாக வந்தாலும் வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு என் நன்றி, திரு. முத்துகுமரன். ['க்' இல்லை!]

ஷார்ஜா வந்தபோது தெரியாமல் போய் விட்டது!

இல்லையெனில் சந்திக்க முயற்சித்திருப்பேன்!

ஓகை Thursday, November 30, 2006 10:22:00 PM  

எனக்கு வர வர பிறந்த நாள் கொண்டாட்டங்களும் வாழ்த்துக்களும் பிடிப்பதைல்லை. அவை ஆண்டுக்கு ஒரு முறை வந்து எனக்கு வயதாவதை சொல்லிக் காண்பிப்பதாக தோன்றும். இவை ஆண்டுக்கு ஒரு முறை வரத்தான் வேண்டுமா? யார் கேட்டா? எஸ்கே, தேவையில்லை என்று சொல்லுங்களேன்.
எனக்கு ஆறுதலாய் இருக்கும்.

இதன் மூலம் ஒரு பதிவுக்கு உங்களுக்கு விஷயம் கிடைத்தால் நான் மகிழ்வேன்.

நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது குழந்தைகளுக்கு மட்டுமே!

VSK Thursday, November 30, 2006 10:34:00 PM  

எனக்கும் உங்கள் கருத்தோடு முழ்ஹு உடன்பாடே, திரு. ஓகை.

ஆனால், இது ஏன் வருகிறது எனக் கேட்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும், இது ஆண்டுக்கு ஒருமுறை வந்துதான் தீரும்!

குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு சொல்லுங்கள்.

அவர்கள்தான் இதில் மிகவும் மகிழ்பவர்கள்!

வயதாவதை எப்படி தடுக்க முடியும்?

அதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.

இருக்கும் வரை வாழ்ந்துவிட்டு, இருப்பவரை மகிழ்ச்சியாய் வைத்தால் அதைவிட இன்பம் வேறேது?

இதை வைத்து நீங்களே ஒரு பதிவு, அல்ல்து கவிதை எழுதாலாமே!

வெற்றி Thursday, November 30, 2006 11:47:00 PM  

SK ஐயா,
கொஞ்ச நாட்களாக நாட்டில் இல்லை. சென்ற இடத்திலும் இணைய வசதிகள் இல்லை. அதனால் உங்களின் இணையத்தளப் பக்கம் வர முடியவில்லை. நிற்க.

தங்களின் சகோதரர் இறைவனடி எய்தியதாக சில பின்னூட்டங்கள் மூலம் அறிந்தேன். சகோதரரின் இழப்புக்கு என் ஆழ்ந்த வருத்தங்களும் அனுதாபாங்களும். நீங்கள் அறியாததா! பிறப்பும் இறப்பும் எம் கையிலா இருக்கிறது? தமிழ்ப்பாட்டி சொன்னது போல் "நமக்கும் அதுவழியே, நாம் போமளவும் எமக்கென்னென் றிட்டுஉண்டிரும்".

இனி பதிவு பற்றி:
உங்களின் குறள் விளக்கத்தில் ஒரு ஐயம். தற்போது குறளை மனப்பாடம் செய்து வருகிறேன். இதுவரையில் கிட்டத்தட்ட 100 குறட்கள் பாடமாக்கி விட்டேன். 351 வது குறளுக்கு நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் மு.வரதராசனார் அளித்த விளக்கத்திலிருந்தும் லேனா தமிழ்வாணன் அவர்கள் சொல்லியுள்ள விளக்கத்திலிருந்தும் முரண்படுகிறது போலத் தெரிகிறது. எனக்கு அவ்வளவாகத் தமிழறிவு இல்லை. சில வேளைகளில் நான்தான் பிழையாக புரிந்து கொண்டேனோ தெரியவில்லை. எதற்கும் அவர்களின் விளக்கத்தை இன்னொமொரு பின்னூட்டத்தில் பதிகிறேன்.

நன்றி.

VSK Friday, December 01, 2006 9:42:00 AM  

ஆமாம், திரு. வெற்றி, சற்று மாற்றித்தான் சொல்லியிருக்கிறென்.

பொருளறியா மயக்கத்தால் சிறப்பில்லப் பிறப்பு வரும் என்று உரைகளில் இருக்கிறது.

எனக்கு அது உடன்பாடாகப் படவில்லை.

"மருளானாம் மாணாப் பிறப்பு" என்ற சொற்றொடருக்கு மயக்கத்தால் மீண்டும் பிறப்பு வரும்; அதிலிருந்து தப்ப முடியாது என்பதாக நான் சொல்லியிருக்கிறேன்.

"மாணாப் பிறப்பு" என்பதை இழிபிறப்பு என்றும், தீராப் பிறப்பு என்றும் கொள்ளலாம்.

நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன், எனக்கு சரியெனப் பட்டதாலும், இன்னும் பொருத்தமாயிருக்கும் என்பதாலும்.

மற்ற அறிஞர்கள் வந்து தெளிவு படுத்தலாம்.

மிக்க நன்றி.
தங்கள் திருக்குறள் முயற்சி வளர வாழ்த்துகிறேன்.
அனுதாபம் தெரிவித்தமைக்கு நன்றி.

அடிக்கடி வாருங்கள்.

"உங்கள்" கதிர்காம முருகனைப் பற்றி இன்று எழுதியிருக்கிறேன்.!
படித்து கருத்து சொல்லவும்!
:))

VSK Friday, December 01, 2006 9:51:00 AM  

மன்னிக்க வேண்டும் திரு யோஹன் -பாரிஸ்!
சற்று கவனக்குறைவால் உங்கள் பின்னுட்டத்தைக் கவனிக்கவில்லை.
:(
அனுதாபம் தெரிவித்தமைக்கு நன்றி.

"இனி வராது உங்கள் பதிவுகள்" எனச் சொன்னது அதிர்ச்சியாய் இருக்கிறது.

எனக்கும் அப்படி ஒன்றும் கணினி அறிவெல்லாம் அதிகம் கிடையாது.
[பொன்ஸைக் கேளுங்கள்! சொல்லுவார்! :)]
நானே எழுதி வரும் போது நீங்கள் நிச்சயம் எழுதலாம்!

மறுபடியும் எழுத முயற்சிக்கவும்.

ஜக்குவின் சாயல் வீசுவதை தவிர்க்க இயலாது.
அவன் ஜாம்பஜார்; மன்னார் மயிலாப்பூர்!

இரண்டுக்கும் இடையே அதிக தூரம் இல்லை!
:))

நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP