Saturday, November 25, 2006

வலைபதிவர் -- சில குறிப்புகள்

''காலம்'' அளிக்கும் சில இனிய பரிசுகள்!
காலன் அளித்த பரிசினை ஏற்று, காலமான அண்ணனைக் காண,
கன்னித்தமிழகம் சென்றிட்ட வேளையிலும்
கணினியில் பரிச்சயமான கனிவான நண்பர்களைக் காண
காலம் அளித்த சில இனிய பரிசுகள்!

கோவி கண்ணன்:

கனிவான மனிதர்
கண்ணுக்கினிய மனையாளுடன்
கண்ணான மகளுடனும்
கனிவோடு வரவேற்று
கருத்தோடு கவனித்து
தனியறையில் எனை அமர்த்தி
தனித்தனியாய் பொருள் கொடுத்து
வகை வகையாய் சமைத்து போட்டு
வெற்றிலை பாக்கும் உடனளித்து
வெளியெங்கும் சுற்றிக் காட்டி
வருகையினை அறிவித்து
வரும் நண்பர்க்கு வழிகாட்டி
இனிதாக முகம் காட்டி
இனியதொரு முத்தமிட்டு
இறுகியெனைக் கட்டியணைத்து
இனிய நட்பின் இலக்கணம் காட்டி
எனைக் கவர்ந்த இனிய நண்பர்.

குழலி:

கருத்தினிலே இசைவில்லை என்றாலும்
முகத்தினிலே அதைக் காட்டாமல்
பல தூரம் பயணம் செய்து
சில நேரம் என்னுடன் கழிக்க
சிறியதொரு பையினிலே
சிவப்பான ஆப்பிள் வைத்து
வெறுங்கையில் வாராமல்
வந்தவரை வரவேற்று
எம்முடன் இருந்து
இனிய உணவருந்தி
இனிதாகப் பேசி எமை மகிழ்வித்து
இனியதொரு மாலையினை
எம்மோடு கழித்திட்ட
இனிய நண்பர்!

வடுவூர் குமார்:

இளைய வயதினர்
இசைவான நல்முகம்
நெற்றியிலே குங்குமம்
நிறைவான சிரிப்பு முகம்
நேரம் ஆகிப்போனாலும்
காத்திருந்த இனியவர்
பார்த்தவுடன் பழகியவர் போல்
ஈர்த்திட்ட எளியவர்
தன்பெருமை பேசாமல்
எனைப் போற்றி மகிழ்ந்தவர்
பாலியலை இன்னும்
முழுதாகப் படிக்கவில்லை என
மனந்திறந்து பேசியவர்!
மீண்டும ஒருமுறை
பார்க்க வேண்டுமென பண்ணியவர்!

விடாது கருப்பு:

மூன்று முறை பேசினாலும்
முகம் காட்ட மறந்தவர்!
எங்கே எனைப் பார்த்துவிட்டால்
தன்கொள்கை மாறிடுமோவென
தயக்கத்தால் தவிர்த்தவர்!
தளர்வில்லா சுறுசுறுப்பாய்
தனித்தமிழில் பேசியவர்!
வேண்டுமென்றே வாராமல்
விருந்தினரைப் பாராதவர்!
அடுத்த முறை வரும் போது
முகம் காட்ட வருவாரோ?

பாலபாரதி:

துடிப்பான இளைஞரிவர்!
அடுக்கடுக்காய்ப் பேசிடுவார்
அளவற்ற செய்ய ஆசை!
ஆனாலும் எண்ணியதைச் செய்திடவோ
திண்ணிய நெஞ்சம் இல்லை.
அளவாகத் திட்டமிட்டு
அதைச் செய்ய நினைத்திட்டால்
அடுத்த முறை பலனுண்டு
ஆண்டவனும் அருளிடுவான்!
செய்ய நினைப்பதோ ஆயிரமாயிரம்
தெளிவாகத் திட்டமிட்டு
தீவிரமாய்ச் செயல்பட்டால்
பண்ணிய பாட்டுக்கும்
பலனிருக்கும் நிச்சயமாய்!

மா.சிவகுமார்:

ஆர்வம் கொப்பளிக்கும்
ஆரவாரமில்லா மனிதர்
ஏதேனும் நல்லது செய்ய
எப்போதும் துடிப்பவர்
பாலியல்பதிவில் சுரத்தில்லையென்று
பட்டென்று சொல்லியவர்!
இது பெற்றோருக்கான பதிவென்று
சொன்னதும் சற்று சமாதானமானார்!
தெரிந்ததைப் பகிர்வதில்
தெளிவாக இருப்பவர்!


லக்கிலுக்:

நீளமான முடியுண்டு
நிறைவான சிரிப்புண்டு
துருதுருக்கும் துணிவுண்டு
பரபரக்கும் எண்ணமுண்டு
தன் போக்கை சற்று மாற்றி
சகலரும் நல்லவரேயென
சற்றே நினைத்திட்டால்
இவரது இன்முகம் எவர்க்குமே சொந்தமென
இனித்திடும் காலம் வெகுதொலைவில்
இல்லையென்பேன்!

முத்து தமிழினி:

நீண்டு வளர்ந்ததோர்
நெடியதொரு உயரம்!
நேரிய முகத்தினிலே
நிறைவான புன்னகை!
தன் மீது கொண்டுள்ள
பாரதியின் தன்னம்பிக்கை!
தெரிந்தவரெனத் தெரிந்தும்
தானாக வலி சென்று
பழகாமல் இருந்தாலும்
பேசியதும் இன்முகம் காட்டி
பணிவாகப் பேசும் குணம்!

விக்கி:

தானாக வந்தங்கு
தன்மையாய்ப் பழகியவர்
வந்திருந்த பதிவர் குழாமில்
மனங்கவர்ந்த நல்ல நண்பர்!

பொன்ஸ்:

கனிவான தமிழச்சி
பொலிவான தோற்றத்தாள்!
நனிவான இன்சொல்லால்
நிறைவாகப் பேசிட்டார்!
வந்தவுடன் கலகலக்கும்
யானை சின்னம் இவர்க்குப் பொருத்தமே!

ஓகை நடராஜன்:

அமைதியான மனிதர்
ஆழம் மிக அதிகம்!
மனதினிலே ஓடுகின்ற
எண்ணமோ மிக வேகம்!
அத்தனையும் அச்சமின்றி
கொட்டிடவோ மிக அவசரம்!

நாமக்கல் சிபி:

வந்தநாள் முதல்
சென்றநாள் வரை
தினசரி தொலைபேசி
பரிவுடன் பேசியவர்!
நேரில் பார்க்க இயலாவிடினும்
மிகவும் பழகியவர் போன்ற
உணர்வை உண்டு பண்ணியவர்!
மனையாளும் மகிழ்வோடு
பேசியது களிப்பான ஓர் அனுபவம்!


சுல்தான்:

துபாயில் சந்தித்த அற்புத மனிதர்
ஒருவேளை தொடர்பு மூலம்
இறைவன் எனக்களித்த அருமை நண்பர்!
தன் வேலை தனை விடுத்து
என் வருகைக்கென காத்திருந்து
சரவணபவனில் உணவளித்து
என் தூக்கம் தனை உணர்ந்து
தன் படுக்கையில் எனைக் கிடத்தி
எனக்காக விழித்திருந்து
என் உறவுடன் எனைச் சேர்த்து
என்னுடனே இரவு வரை
இன்முகமாய் இனிதிருந்து
எனை அனுப்பும் நேரம் வரை
என்னுடனே கூட இருந்து
வந்து சேர்ந்த பின்னும் கூட
நலம் கேட்டு மடல் அனுப்பி
எனைக் கவர்ந்த இனிய நண்பர்

இன்னும் சில பேர்களுண்டு
அவர் பற்றி சொல்ல இங்கு
பதிவின் நீளம் கருதி
பகராமல் விடுகின்றேன்
அதனாலே குறையாக
யாருமிங்கு எண்ணவேண்டாம்!
எல்லாரும் நல்லவரே!

காலமளித்த இனிய பரிசுகளை
பாலமாக எண்ணுகிறேன்
கனிவோடு உன்னுகிறேன்
முருகனுக்கு நன்றி சொல்லி முடிக்கின்றேன்.
.


47 பின்னூட்டங்கள்:

கால்கரி சிவா Saturday, November 25, 2006 8:15:00 PM  

என்ன சார் சென்னையிலா? நம் ராலே நண்பர்கள் திரு விவேக் உட்பட பலர் சென்னையில் தற்போது இருப்பதாக கேள்வி.

என் உடன்பிறப்பு அடுத்த வாரம் சென்னைக்கு விமானமேறுகிறார் ராலேயிலிருந்து

கைப்புள்ள Saturday, November 25, 2006 8:26:00 PM  

ஐயா,
பதிவர்களுடனான தங்கள் நினைவுகளை அழகான கவிதையாக வடித்திருக்கிறீர்கள். சிறப்பாக இருந்தது.

VSK Saturday, November 25, 2006 9:52:00 PM  

திரும்பி வந்தாச்சுங்க, சிவா!

ச்சற்று தாமதமாகத்தான் வலையேற்றினேன்!

நன்றி.

VSK Saturday, November 25, 2006 9:53:00 PM  

இன்னும் சில நினைவுகள் உண்டு.

முடிந்தால் பிறகு எழுதுவேன்.
மிக்க நன்றி, கைப்புள்ள.

ராஜாவிடம் தங்களைப் பற்றிச் சொன்னேன்.

மிகவும் மகிழ்ந்தார்.

கைப்புள்ள Saturday, November 25, 2006 9:57:00 PM  

//ராஜாவிடம் தங்களைப் பற்றிச் சொன்னேன்.

மிகவும் மகிழ்ந்தார்.//

இந்நாளை மிக மகிழ்ச்சிகரமானதாக மாற்றி விட்டீர்கள். ரொம்ப நன்றி சார்.
:)

VSK Saturday, November 25, 2006 10:06:00 PM  

தங்கள் கவிதையை எடுத்துச் செல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.

எதிர்பாராமல் கூப்பிட்டதும் உடனே வரச் சொல்லியதால் பதிவெடுத்துச் செல்ல அவகாசம் இல்லாமல் போயிற்று.

மாயவரத்தான் Saturday, November 25, 2006 10:07:00 PM  

எஸ்கே சார்.. சிங்கப்பூரும் சென்று இருந்திர்களோ?!

குமரன் (Kumaran) Saturday, November 25, 2006 10:11:00 PM  

அப்பாடா. எங்கே இந்தளவு கூட உங்கள் பயணத்தில் சந்தித்த வலைப்பதிவர் நண்பர்களைப் பற்றி சொல்லாமல் விட்டுவிடுவீர்களோ என்றஞ்சினேன்.

நானும் இன்னும் 'கசடற' முற்றிலும் படிக்கவில்லை. வெகு நாட்களாகப் படிக்க வேண்டுமென்று பிரதி எடுத்துவைத்திருக்கிறேன். படிக்க வேண்டும்.

VSK Saturday, November 25, 2006 10:19:00 PM  

எந்நன்றி கொன்றார்க்கும் என ஒரு குறள் படித்திருக்கிறேன், குமரன்!
அதெப்படி போடாமல் இருப்பேன்!
:)

VSK Saturday, November 25, 2006 10:21:00 PM  

ஆமாங்க, திரு.மாயவரத்தான்.

கோவியாரைச் சந்திக்கவென சென்றிருந்தேன்.

கோவி.கண்ணன் [GK] Saturday, November 25, 2006 11:24:00 PM  

//கணினியில் பரிச்சயமான கனிவான நண்பர்களைக் காண
காலம் அளித்த சில இனிய பரிசுகள்!//

எஸ்கே ஐயா,

உங்கள் வருகையால் எனக்கும் நண்பர்கள் குழலி, வடுவூர் குமார் ஆகியோரை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு நானும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.

உலகம் எங்கும் நண்பர்களை ஏற்படுத்த முடிகிறது, சந்திக்க முடிகிறது இதுதான் தமிழ்மணமும், தமிழ் பதிவுலகமும், தமிழும் தரும் பரிசு !

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, November 25, 2006 11:34:00 PM  

மீள் நல்வரவு SK ஐயா (Welcome Back!)

அழகுத் தமிழ் கவிநடையில்
அறிமுகம் செய்தீர் நண்பர்களை!
அருமை அருமையிலும் அருமை!!

எனக்கும் GKவைப் பாக்கணும் என்று நினைத்திருந்தேன்; நீங்க அவர் ஃபோட்டோவையே போட்டு விட்டீர்கள்!! :-) நன்றி!!

மற்ற நண்பர்கள் பல பேரின் ஃபோட்டோக்களை அப்பப்ப பார்த்திருக்கோமே! ஆனாலும் உங்கள் தமிழ் அறிமுகம் இன்னும் அழகாகக் காட்டி விட்டது!

VSK Saturday, November 25, 2006 11:35:00 PM  

போகட்டும் கண்ணனுக்கே!!

ஜோ/Joe Saturday, November 25, 2006 11:39:00 PM  

எஸ்.கே ஐயா!
ஞாயிறன்று நூலகத்தில் சந்திக்க ஆவலோடு தயாராயிருந்தேன் .ஆனால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் .வார நாட்களில் வேலைப்பளு காரணமாக உங்களை சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன் .இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் சந்திப்பேன்.

VSK Saturday, November 25, 2006 11:47:00 PM  

இதுதான் வஞ்சப் புகழ்ச்சி அணி என்பதா, திரு.ரவி!
:))

எனக்கு படம் பதியத் தெரியவில்லை இன்னமும்!

நீங்க கூட தலையால தண்ணி குடிச்சு சொல்லித் தந்தீங்க!

ஒண்ணும் ஏறலை!

படம் எனபது தமிழ் வரிகளால் நான் கிறுக்கியதைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்!

எப்படியாயினும், மிக்க நன்றி!!

VSK Saturday, November 25, 2006 11:51:00 PM  

எனக்கு கூட ஏமாற்றமாகத்தான் இருந்தது, திரு.ஜோ.

அடுத்த முறை ஏமாற்றாமல் இருந்தால் சரி!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, November 26, 2006 12:35:00 AM  

//படம் எனபது தமிழ் வரிகளால் நான் கிறுக்கியதைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்!//

உண்மை; அதைத் தான் சொன்னேன் SK ஐயா!
ஆனால் ஒரு திருத்தம். "கிறுக்கிய" இல்லை!
ஒவ்வொரு பதிவரையும் கண் முன்னே கொண்டு வந்து "நிறுத்திய" உங்கள் தமிழ் வரிகள்!

குழலி / Kuzhali Sunday, November 26, 2006 2:05:00 AM  

எஸ்.கே. அய்யா, தங்களோடு கழிந்த அந்த மாலை நல்ல மாலையாக இருந்தது, வார நாட்களில் சந்திக்க ஆவலாக இருந்தாலும் நேரமனுமதிக்கவில்லை, மீண்டும் சந்திப்போம்....

நன்றி

Unknown Sunday, November 26, 2006 2:26:00 AM  

தங்களைப் போன்ற பண்பாளர்களை சந்திப்பதில் யாருக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.
அடுத்த பயணம் குடும்பத்தாருடன் ஓரிரு நாட்களுக்காவது தங்கிச் செல்ல வாருங்கள்.

பொன்ஸ்~~Poorna Sunday, November 26, 2006 2:52:00 AM  

நன்றி எஸ்கே.. :) யானைச் சத்தம்/ யானை சத்தம்?

ஓகை Sunday, November 26, 2006 7:56:00 AM  

இலவச மனக்கசப்பை இன்னலுற்று சொன்னவர் இனிய நட்புகளின் பட்டியலை மனமகிழ்ந்து சொல்லிட்டார், வாழ்க!

//அத்தனையும் அச்சமின்றி
கொட்டிடவோ மிக அவசரம்!//

அத்தனையும் கொட்ட அவசரம் கொண்டவன்
மெத்தென்ற சொல்லில் மிருதுவாய் சொல்லிட்டார்
அத்தனின் அக்கறை என்றுகொண்டேன் சங்கரனின்
புத்திரன் சொல்லைப் புரிந்து.

(அத்தன்=தந்தை, சங்கரனின் புத்திரன்= சங்கர் குமார்=எஸ்கே,முருகன்)

வடுவூர் குமார் Sunday, November 26, 2006 9:27:00 AM  

சந்திப்பே கவிதையாக!!!
ஏனோ "குணா" ஞாபகம் வந்தது.
மற்றவர்களை சந்திதது பற்றியும் அறியத்தந்ததுக்கு நன்றி.
அடுத்த முறை சந்திப்பை எங்கு வைத்துக்கொள்ளலாம் என்பதை "காலம்" முடிவு செய்யட்டும்.:-))
எவ்வளவு நாள் சிங்கையில் இருப்பேன் என்று தெரியவில்லை.

VSK Sunday, November 26, 2006 1:26:00 PM  

சந்திப்பை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி தெரிவித்ததற்கு மிக்க நன்றி, திரு. குழலி.

VSK Sunday, November 26, 2006 1:27:00 PM  

நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், திரு. சுல்தான்!

கண்டிப்பாக வருவேன், மீண்டும்!

VSK Sunday, November 26, 2006 1:29:00 PM  

'ச்' வந்தா சத்தம் வரும், பொன்ஸ்!

ஆனா, நான் சொன்னது சின்னம், சத்தம் அல்ல!

ஆகவே 'ச்' வராது!

"யானை" சின்னம்
யானைச் சத்தம்!

:))
சரிதானே!!

VSK Sunday, November 26, 2006 1:30:00 PM  

தவறாக எடுத்துக் கொள்ளா[ல்லா]மல், சரியாகப் புரிந்து அதற்கு சந்தக் கவியும் பாடியதற்கு நன்றி, திரு. ஓகை!

VSK Sunday, November 26, 2006 1:32:00 PM  

எங்கிருப்பினும், மனமிருந்தால் மீண்டும் சந்திக்கலாம், திரு. குமார்!

தங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியடைய இன்று சஷ்டி நன்நாளில் முருகனை வேண்டுகிறேன்!

கருப்பு Sunday, November 26, 2006 8:09:00 PM  

மனமிருந்தால் நல்
மார்க்கமுண்டு
எதிரெதிர் துருவமாயினும்
ஒட்டும்
காந்தங்கள் போல நாம்!

கருத்தினில் வேற்றுமை
உள்ளத்தில் ஒற்றுமை
கொஞ்சம் கூடிக்
குலாவியிருந்தால்
இன்னும் தெளிவாகி இருப்போம்.

அடுத்தமுறை வருவீரா?
அக்கறையுடன்
இக்கறையில்
அதே பழைய கருப்பு!

VSK Sunday, November 26, 2006 8:49:00 PM  

குரல் கேட்டு மனம் மகிழ்ந்தேன்
விரல் தொட்டு கைகுலுக்க முடியவில்லை
மனம் இருந்தும் மார்க்கமில்லை
இனம் நம்மைப் பிரித்ததுவோ?

எதுவாயினும் அன்பான உபசரிப்பு
அதுவே குரல் வழியே வந்தது இனிப்பு
அடுத்தமுறை வரும்போதாயினும்
தடுக்காமல் முகம் காட்ட முனைவீரோ!

நன்றி திரு. விடாது கருப்பு.

SP.VR. SUBBIAH Sunday, November 26, 2006 9:27:00 PM  

வரவோ, செலவோ
உறவோ, பிரிவோ
காலம் கொடுப்பதைக்
கனிவுடன் பரிசாக
ஏற்றுக் கொள்ளும்
தேற்றிக் கொள்ளும்
உங்கள் மனம்
உயர்ந்த ஒன்று!
அனைவர்க்கும் அதை
ஆண்டவன் தந்துவிட்டால்
சண்டையேது, சச்சரவேது
அண்டைநாட்டானென்ற பேதமேது
அய்யாநீவிர் வாழ்க!
ஆண்டுநூறு கண்டு வாழ்க!

VSK Sunday, November 26, 2006 9:54:00 PM  

உடல்நலம் சரியில்லை எனக் கேள்விப்பட்டேன் திரு. சுப்பையா ஐயா.
இப்போது சரியாகி விட்டது என அறிகிறேன்.
மிக்க மகிழ்ச்சி.

தங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

- யெஸ்.பாலபாரதி Sunday, November 26, 2006 10:28:00 PM  

//செய்ய நினைப்பதோ ஆயிரமாயிரம்
தெளிவாகத் திட்டமிட்டு
தீவிரமாய்ச் செயல்பட்டால்
பண்ணிய பாட்டுக்கும்
பலனிருக்கும் நிச்சயமாய்!//

தங்களைப் போன்ற அனுபவ முதிர்ச்சியானவர்களின் ஆசியோடும், வழிகாட்டுதலோடும் நிச்சயம் இலக்கை அடைவேன்.
நன்றி

VSK Sunday, November 26, 2006 10:33:00 PM  

//நிச்சயம் இலக்கை அடைவேன்.//


அந்த நம்பிக்கை தங்களுடன் பழகியதில் எனக்குள் வலுப்பட்டது, திரு. பாலபாரதி!

வாழ்த்துகள்!

Sivabalan Monday, November 27, 2006 1:36:00 PM  

SK அய்யா,

சிறிய இடைவெளிக்கு பிறகு வந்துள்ளீர்கள்.

வரும்போதே அழுகு தமிழில வந்துள்ளீர்கள்.

அனைவரின் மனதையும் மகிழ்ச்சியுறசெய்யும் நல்ல தமிழ். நல்ல பதிவு.

நன்றி

VSK Monday, November 27, 2006 2:07:00 PM  

திரு. ரவியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வஞ்சப் புகழ்ச்சி அணியில் பாராட்டு!

"அழுகு" தமிழ் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்!

அவ்வளவு மோசமாகவா எழுதியிருக்கிறேன், சிபா!!?

:))

ஒருவேளை அழகு எனச் சொல்ல வந்து, எழுத்துப்பிழையாயிற்றோ?

எப்படியோ, நன்றி உங்களுக்கு!

:))

Anonymous,  Monday, November 27, 2006 3:46:00 PM  

// மனங்கவர்ந்த நல்ல நண்பர்!


உண்மையிலே இதைவிட பெரிய சந்தோஷம் எனக்கெதுவுமில்லை.

நண்பர்களுக்குள் நன்றி சொல்லக்கூடாதென்பதால் Thanks ;)

-- Vicky

VSK Monday, November 27, 2006 4:04:00 PM  

//நண்பர்களுக்குள் நன்றி சொல்லக்கூடாதென்பதால் Thanks ;)//


:))
Thank you, Vicky!

லக்கிலுக் Tuesday, November 28, 2006 1:02:00 AM  

நன்றி!!!!

எல்லோருக்குமே நல்லவனாக யாராவது கிளாஸ் எடுக்க ரெடியா?

கத்துக்க நான் ரெடி :-)))))

Anonymous,  Tuesday, November 28, 2006 1:20:00 AM  

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் நான் பார்த்துப்பேச விரும்பிய நபர்களில் நீங்களும் ஒருவர். முன்பு ஒருமுறை செல்வனின் பதிவில் நாம் சண்டை போட்டிருக்கிறோம். உங்களை பார்த்து அறிமுகப்படுத்திக் கொண்டதிலும், உங்களின் இப்பதிவைப் படித்ததிலும் மிக்க மகிழ்ச்சி.

VSK Tuesday, November 28, 2006 8:49:00 AM  

எல்லாருக்கும் நல்லவனாக ஒருபோதும் ஆக முடியாது, திரு. லக்கிலுக்!
ஆனால், எல்லாரையும் நல்லவராகக் கருதும் குணம் நமக்கு வர முடியும்.
அதிலிருந்து ஆரம்பித்து, ஒரு சில முடிவுகளை எடுக்கலாமோ எனத்தான் சொல்லியிருந்தேன்.
தவறெனில் மன்னிக்கவும்.

//தன் போக்கை சற்று மாற்றி
சகலரும் நல்லவரேயென
சற்றே நினைத்திட்டால்
இவரது இன்முகம் எவர்க்குமே சொந்தமென
இனித்திடும் காலம் வெகுதொலைவில்
இல்லையென்பேன்!//

VSK Tuesday, November 28, 2006 8:51:00 AM  

எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியே, திரு. தங்கவேல்!

சற்றும் தயக்கமின்றி, செல்வன் பதிவில் இட்ட சண்டையை நினைவுகூர்ந்து நீங்கள் வந்து அறிமுகம் செய்து அளவளாவியது எனக்கு நிறைவைத் தருகிறது.

மிக்க நன்றி.

நாமக்கல் சிபி Tuesday, November 28, 2006 1:04:00 PM  

//நேரில் பார்க்க இயலாவிடினும்
மிகவும் பழகியவர் போன்ற
உணர்வை உண்டு பண்ணியவர்!
மனையாளும் மகிழ்வோடு
பேசியது களிப்பான ஓர் அனுபவம்!
//

எஸ்.கே! நெகிழ்ச்சியாக இருக்கிறது!

உங்களுடன் பேசியதில் நாங்களும் மகிழ்ந்தோம்! சந்திக்க இயலாமல் போனது குறித்து வருத்தமே. ஆனால் அதற்கும் ஒரு நேரம் வரும்! அன்று நாம் சந்திப்போம்!

உம்மை நான் சந்திப்பேன்! நீர் 1511ல் ஒருவர்!

(தமிழ்மணத்தில் பதிவர்களின் தற்போதைய எண்ணிக்கை 1511)

VSK Tuesday, November 28, 2006 1:16:00 PM  

//உம்மை நான் சந்திப்பேன்! நீர் 1511ல் ஒருவர்!//


இதிலும் ஒரு கலாய்ப்பா?
மிக்க மகிழ்ச்சி!

அடுத்த முறை சந்திக்க நானும் ஆவலாயுள்ளேன்.
நன்றி.

நாமக்கல் சிபி Tuesday, November 28, 2006 1:26:00 PM  

//இதிலும் ஒரு கலாய்ப்பா?//

பின்னே!


//அடுத்த முறை சந்திக்க நானும் ஆவலாயுள்ளேன்//

அப்போ இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது சான்றோர்(மனதளவில்) சந்திப்பா?

(கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் போல)

:)

VSK Tuesday, November 28, 2006 1:33:00 PM  

//அப்போ இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது சான்றோர்(மனதளவில்) சந்திப்பா?//

அப்படித்தானே சொல்லியிருக்கிறேன், சிபியாரே!

//நேரில் பார்க்க இயலாவிடினும்
மிகவும் பழகியவர் போன்ற
உணர்வை உண்டு பண்ணியவர்!//

:))

நாமக்கல் சிபி Tuesday, November 28, 2006 1:37:00 PM  

//அப்படித்தானே சொல்லியிருக்கிறேன், சிபியாரே!

//நேரில் பார்க்க இயலாவிடினும்
மிகவும் பழகியவர் போன்ற
உணர்வை உண்டு பண்ணியவர்!//
//

சீரியஸா கேக்குறேன்னு நினைச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்!

:))

VSK Tuesday, November 28, 2006 1:39:00 PM  

நானும் நீங்க கேட்ட அதே தொனியில்தான் சொல்லியிருக்கிறேன், சிபியாரே!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP